Thursday 28th of March 2024 10:41:08 AM GMT

LANGUAGE - TAMIL
-
எல்லா இன மக்களையும் மூட்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதில் ராஜபக்சவினர் வல்லவர்கள் - கல்குடாவில் சஜித்!

எல்லா இன மக்களையும் மூட்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதில் ராஜபக்சவினர் வல்லவர்கள் - கல்குடாவில் சஜித்!


"முஸ்லிம்களையும் தமிழர்களையும் மூட்டி விடுகின்ற அல்லது முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் மூட்டி விடுகின்ற அல்லது முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் மூட்டி விடுகின்ற அல்லது எல்லா இன மக்களையும் மூட்டி விட்டு வேடிக்கை பார்க்கின்ற விடயத்தில் ராஜபக்ச அரச தரப்பினர் கெட்டிக்காரர்கள்; வல்லவர்கள்." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

"எனக்கு அதிகாரம் கிடைக்கின்றபோது அலரிமாளிகையிலோ, ஜனாதிபதி மாளிகையிலோ தங்கியிருக்கமாட்டேன். உங்களில் ஒருவனாக இருந்து நாட்டின் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப்போகின்றேன்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர் எம்.எஸ்.எஸ். அமீர் அலியை ஆதரித்து இன்று சனிக்கிழமை ஓட்டமாவடியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"எமது கட்சி மற்றைய கட்சி போலில்லை. கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் வெறும் வாய்ச்சாடல்களால் பேசுகின்ற கட்சி இல்லை. எமது கட்சி கடந்த காலத்தில் நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சியின் அடிப்படையில் நாங்கள் மற்றக் கட்சிகள் அல்லாது வெல்லுகின்றோமா தோல்வி அடைகின்றோமோ என்று பார்ப்பது கிடையாது. எங்களுக்குத் தேவை மக்களை சந்தோசமாக வைத்துக்கொள்ள வேண்டும் எனும் எதிர்பார்ப்புதான்.

இந்த நாட்டில் ஒருசில அரசியல்வாதிகள் என்ன செய்யப் பார்க்கிறார்கள் என்றால் கெளதம புத்தருடைய போதனைகளுக்கு மாறாக அவர்களுடைய அரசியல் இலாபத்துக்காக பெளத்த மதத்தில் கூறப்படாத சில விடயங்களைத் திரிபுபடுத்தி இனங்களுக்குடையில் முரண்பாடுகளைத் தோற்றுவித்து அவர்களுடைய சந்தர்ப்பவாத அரசியலை செய்யப் பார்க்கின்றார்கள்.

புத்த பெருமான் எல்லோருமே நல்லாக இருக்க வேண்டும், எல்லோரும் நீடூழி வாழ வேண்டும் எல்லோரும் சந்தோசமாக வாழவேண்டும் என்றுதான் சொன்னாரே தவிர ஒரு சமூகத்தை மாத்திரம் அவர் கோடிட்டுக் காட்டவில்லை.

உண்மையாக ஒரு பெளத்தன் எந்தவொரு கட்டத்திலுமே ஜாதி, மத பேதத்தைப் பேசத் தயாராக மாட்டான், பேச முன்வரமாட்டான். புத்த மதத்தைப் பொறுத்தவரையில் இந்த நாட்டில் அரசியல் அமைப்பிலே அதற்கென்று கெளரவமான இடம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் இருக்கின்ற அரசமைப்புச் சட்டத்தில் பெளத்த மதம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகின்றது. அதுபோல் மற்ற மதங்களும் கெளரவமாக மதிக்கப்பட வேண்டும் என்று இந்த நாட்டில் இருக்கின்ற அரசமைப்பு மிகவும் தெட்டத்தெளிவாக கூறுகின்றது.

எங்களுடைய வெற்றியின் பின்னால் இந்த நாட்டிலே உள்ள அரசமைப்புக்கு முரண்படாத வகையில் நாட்டிலுள்ள எல்லா மதங்களையும் விசேடமாக சிறுபான்மை சமூகத்தையும் அரவணைத்துக்கொண்டு நாங்கள் எங்களுடைய அபிவிருத்தியையும், வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்கவுள்ளோம்.

எங்களுடைய அரசில் ஜாதி, பேதம் கிடையாது. அதற்கான சந்தர்ப்ங்களுக்கு நாங்கள் இடம் கொடுக்கமாட்டோம் என்பதனை மிகவும் தைரியமாகச் சொல்லுகின்றேன்.

அதேபோன்று எந்தவிதமான பயங்கரவாத நிகழ்ச்சி நிரலுக்கும் இந்த நாட்டில் வாழுகின்ற யாராக இருந்தாலும் அதற்கு நாங்கள் இடம் வழங்கப் போவதில்லை என்பதைக் கூறக் கடமைப்பட்டவனாக இருக்கின்றேன்.

இந்த நாட்டில் இன, மத பேதமில்லாமல் பயங்கரவாதம் இல்லாமல் அதுபோன்று இனங்களுக்கிடையே முரண்பாடு இல்லாமல் நல்லதொரு சமூதாயத்தை உருவாக்கிக் கொள்வதற்கான வேலைத்திட்டத்தை எங்களுடைய ஆட்சிக்காலத்தில் முன்னெடுப்போம் என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

இப்போது இந்த நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற ராஜபக்ச அரசு இந்த நாட்டை வழிநடத்திக்கொண்டு செல்ல முடியாத ஒரு இக்கட்டான நிலையில் இருக்கின்றது என்பது உங்களுக்குத் தெரியும்.

அவர்கள் ஒன்றில் கெட்டிக்காரர்கள். அதாவது முஸ்லிம்களையும் தமிழர்களையும் மூட்டி விடுகின்ற அல்லது முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் மூட்டி விடுகின்ற அல்லது முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் மூட்டி விடுகின்ற அல்லது எல்லா இன மக்களையும் மூட்டி விட்டு வேடிக்கை பார்க்கின்ற விடயத்தில் அவர்கள் வல்லவர்கள் என்பதை உங்களுக்கு நான் சொல்லத் தேவையில்லை.

உங்களுக்கு நன்றாகத் தெரியும் கொரோனா வைரஸா முஸ்லிம் சமூகத்தில் உள்ளவர்கள்தான் பரப்புகின்றார்கள் என்கின்ற ஒரு புரளியைக் கிளப்பிவிட்டு அதற்குள்ளே அவர்கள் அரசியல் செய்யப் பார்த்தார்கள். இந்த நாட்டிலே முஸ்லிம் பிரஜைகள் மிகவும் மோசமானவர்கள் என்று சொல்லப் பார்த்தார்கள்.

கல்குடா மக்களுக்கு நான் ஒன்றைக் கூறுகின்றேன். நீங்கள் எந்தவித அச்சத்துக்கும் அப்பால் 'தொலைபேசி'யை வெல்ல வையுங்கள் நாங்கள் இந்தப் பிரதேசத்தில் எந்தவித வித்தியாசமும் இல்லாமல் வேலைத்திட்டங்களை செய்யவுள்ளோம்" - என்றார்.

இந்தக் கூடடத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் ஸாலி, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை, கிழக்கு மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE