;

Wednesday 21st of October 2020 04:01:17 AM GMT

LANGUAGE - TAMIL
-
பாமர மக்களின் பல்கலைக்கழகமாக நாட்டுக்கூத்துக்கள் - நா.யோகேந்திரநாதன்

பாமர மக்களின் பல்கலைக்கழகமாக நாட்டுக்கூத்துக்கள் - நா.யோகேந்திரநாதன்


காத்தவராயன் கூத்தில் அண்ணாவியாராக விளங்கியவரும், அக்கூத்தை இன்றைய காலகட்டத்திற்கேற்ற வகையில் நவீனப்படுத்தி மேடையேற்றிவந்தவரும் நாட்டுக்கூத்து மோடியிலேயே களத்தில் காத்தான், சாவை வென்ற சரித்திரம் போன்ற கலைப்படைப்புகளை யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும் பல தடவைகள் மேடையேற்றி புகழ் பெற்றவருமான புதுவை அவர்கள் கூறிய வார்த்தைகள் தான் “பாமர மக்களின் பல்கலைக்கழகம் நாட்டுக்கூத்துக்கள்” என்பதாகும்.

அவர் அப்படிக் கூறியமைக்கான ஆணித்தரமான காரணங்கள் உண்டு. அந்த நாட்களில் எழுத வாசிக்ககூடத் தெரியாத பாமர மக்கள் கூட, அவர்கள் ஆண்களாயிருந்தாலென்ன பெண்களாயிருந்தாலென்ன மகாபாரதம், இராமாயணம், சிலப்பதிகாரம், அரிச்சந்திரன் கதை, நந்தனார் சரித்திரம் போன்ற புராண இதிகாசங்களை அக்கு வேறு ஆணி வேறாகத்தெரிந்து வைத்திருந்தனர். ஒவ்வொரு பாத்திரங்களையும், அவர்களின் குணங்களையும் தெளிவாக அறிந்து வைத்திருந்தனர்.

அவர்கள் இவற்றையெல்லாம் பாடசாலையிலோ அல்லது ஒரு குருவிடமோ கற்றுக்கொள்வதில்லை. நாட்டுக்கூத்துகளே அவர்களுக்கு இவற்றையெல்லாம் கற்றுக்கொடுத்தன. புதுவை அன்பன் அவர்கள் தற்சமயம் “காத்தவராயன் கூத்து”, “நவீன நாடகங்கள்”, என்பவற்றில் கூடுதலான அக்கறை காட்டியபோதிலும் ஒரு காலத்தில் வடமோடிக்கூத்தில் நடித்து புகழ் பெற்றவர். அந்த நாட்களில் இவர் வீர அபிமன்யுவாக நடித்ததால் மக்கள் இவரை அபிமன்யுவாகவே பார்த்தனர்.

இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன்பு வடமோடிக்கூத்துகள் எவ்வாறு மக்கள் கலையாக மக்களுடன் இரண்டறக் கலந்திருந்தது என்பதையும், அந்தக் கிராமமே கூத்தின் பங்காளிகளாக விளங்கியமை பற்றியும் அவரிடம் அறியமுடிந்தது.

புத்தூர் பகுதியில் வீரஅபிமன்யு சந்திரகுமாரன், பூதத்தம்பி, கர்ணன் போன்ற வடமோடிக்கூத்துகள் ஆடப்பட்டு வந்தன. உடும்பிட்டி, இமையாணனைச் சேர்ந்த சின்னக்குட்டியே அண்ணாவியாராக கூத்துகளைப் பழக்கி வந்தார். சின்னையா என்பவரே மத்தளம் வாசிப்பார். அண்ணாவியாரே தாளமும் போட்டு பிற்பாட்டும் பாடுவார்.

சினிமாப்பாணி நாடகங்களின் வருகை காரணமாக நாட்டுக்கூத்துகளில் ஒரு தொய்வு ஏற்பட்டது. அதே நேரத்தில் எமது பாரம்பரியக் கலைகளை அழியவிடக்கூடாது என்ற நோக்கத்துடன் தாமு கந்தையா, புதுவை அன்பன் உட்படச் சில இளைஞர்கள் ஒன்றிணைந்து “வீர அபிமன்யு” வடமோடிக்கூத்தை மேடையேற்ற முடிவெடுத்தனர். தாமு கந்தையா ஒரு போராளி என்பதும், 1983ல் வெலிக்கடையில் கொல்லப்பட்ட தமிழ் கைதிகளில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த நாட்களில் இமையாணனில் முத்தையா என்றொரு அண்ணாவியார் மட்டுமே வடமோடி தெரிந்தவர்களில் உயிருடனிருந்தார். அவருக்கும் வயது 75 என்பதுடன் இரு கண்களும் தெரியாது. கூத்துப் பிரதி பனையோலை ஏடுகளிலேயே இருந்தது. ஆனால் கூத்து ஆரம்பம் முதல் முடிவு வரை ஒவ்வொரு வரியும் அண்ணாவியார் முத்தையாவுக்கு மனப்பாடமாக இருந்தது.

அண்ணாவியார் முத்தையாவிடம் சில தனித்திறமைகள் இருந்தன. பாடும்போது ஒரு வார்த்தை பிசகினாலும் கூட அதைக் கண்டு பிடித்து திருத்திவிடுவார். அவருக்கு கண்கள் தெரியாத போதிலும் கூட நடிகர்களின் கால் மிதிக்கும் ஓசைகள் கொண்டும், குரலின் ஓசையைக் கொண்டும் ஆட்டம், நடிப்பு என்பவற்றைப் புரிந்து கொண்டு திருத்தும் அவரின் ஆற்றல் பலரையும் வியப்பில் ஆழ்த்தும்.

புத்தூர் இமையாணன் பகுதிகளில் வடமோடிக்கூத்துகள் வட்டக்களரி முறையிலேயே ஆடப்பட்டு வந்தன. புத்தூர் அண்ணமார் கோவிலில் இப்போதும் நாலு பெரும் பூவரச மரங்கள் உண்டு. அவை ஒரு காலத்தில் கூத்துக்கள் ஆடும் களரி (கூத்தாடும் களம்) அமைப்பதற்காக நடப்பட்டு பேணப்பட்டு வந்தவையாகும். அவற்றுக்கு நடுவிலேயே கூத்துக்கள் இடம்பெறும். முன்னைய காலங்களில் வட்டக்களரியில் இடம்பெற்ற இக்கூத்துக் காவோலைகள் (அதாவது காய்ந்து மரத்திலிருந்து விழும் பனையோலைகள்) எரிக்கப்பட்டு அதன் வெளிச்சத்திலேயே கூத்துகள் நடைபெறும். எனவே கூத்துப் பழக ஆரம்பித்த நாட்களிலிருந்த அந்த ஊரிலுள்ள ஒவ்வொரு குடும்பங்களும் காவோலைகளைச் சேகரிக்க ஆரம்பித்துவிடுவார்கள். இரவு முழுவதும் கூத்து இடம்பெறுமாதலால் தொடர்ந்து காலை வரை எரிப்பதற்கான பெருந்தொகைக் காவேலைகள் தேவைப்படும். அடுத்த காலகட்டத்தில் கூத்துக்கள் பந்தங்களின் வெளிச்சத்தில் இடம்பெற்றன. களரியில் நாலுமூலைகளிலும் கால்கள் நடப்பட்டு அவற்றில் சட்டிகள் வைக்கப்பட்டு பழையதுணிகளைக் கொண்டு, இலுப்பெண்ணை ஊற்றி பந்தங்களை கொளுத்துவார்கள். அடுத்த கட்டத்தில் “காஸ்லைட்” என அழைக்கப்படும் ஆளுயர விளக்குகள், அதன் பின்பு “பெற்றோமாக்ஸ்”, தற்சமயம் மின்சார விளக்குகள் என ஒளியமைப்பில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுவிட்டன.

அதேபோன்று பல இடங்களில் மேடையமைப்புமுறை படச்சட்ட மேடையாக (நீள்சதுர) மாறிவிட்டாலும் இன்னும் சில இடங்களில் வட்டக்களரி மேடையே பின்பற்றப்பட்டு வருகின்றன. வட்டக்களரியில் “பார்வையாளர்கள்” நான்கு பக்கமும் அமர்ந்திருப்பதால், நடிகர்களும் நான்கு பக்கங்களையும் நோக்கி நடிக்கவேண்டும். அது பட்ச்சட்ட மேடைக்கு கொண்டுவரப்படும் போது ஒரு பக்க பார்வையாளர்களுக்கு ஏற்றவிதமாக மாற்றியமைக்கவேண்டும். பாரம்பரிய அண்ணாவிமார் அதை விரும்பாத போதிலும் கால மாற்றத்திற்கேற்ப ஆட்டங்களில் சில மாற்றங்களைச் செய்து படச்சட்ட மேடையிலும் அளிக்கை செய்கின்றனர்.

ஒரு நல்ல நாள் பார்த்து கொப்பி கொடுத்தல் சடங்கு இடம்பெறும். அதற்கு ஊர்மக்கள் எல்லாரும் கூடி பொங்கிப்படைத்து வணங்கி கூத்து எவ்வித தடங்கலுமின்றி நிறைவேற ஆசி வேண்டி வேண்டுதல் இடம்பெறும். பின்பு ஒவ்வொரு பாத்திரங்களுக்குரிய பாட்டுக்கள் வசனங்கள் தனித்தனியாக எழுதப்பட்டு அண்ணாவியாரால் நடிகர்களுக்கு வழங்கப்படும். நடிகர்கள், வெற்றிலையில் தட்சணை வைத்துக் கொடுத்து கொப்பிகளை வாங்குவார்கள். அன்று தொடக்கம் வாரத்தில் ஒரு முறையோ, இரு முறையோ தொடர்ந்து பழக்கம் இடம்பெறும்.

இதில் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால் ஒருவர் கூத்தில் ஒரு பாத்திரத்தை நடித்தால் அவரே வருடாவருடம் தொடர்ந்து நடிப்பார். அவரின் பின் அவரது மகன், பின்பு பேரன் என அப்பாத்திரம் அந்தக்குடும்பத்துக்கு வெளியே போகாது. சொத்துரிமையைக் கட்டிக்காப்பது போன்று இந்த உரிமையும் பெரும் சொத்தாகக் கருதப்பட்டு பாதுகாக்கப்படும். கூத்துப் பழகும் நாட்களிலேயே அந்த இடத்தில் ஊர்மக்கள் கூடி விடுவர். அவர்கள் அங்கு பார்வையாளர்களாக மட்டுமின்றி, ஆலோசகர்களாகவும் செயற்படுவதுண்டு.

பெரும்பாலும் புத்தூரில் ஆடிப்பூரத்திலன்று அண்ணமார் கோவிலடியிலேயே வருடாவருடம் இடம்பெறுவதுண்டு. இதில் இன்னுமொரு சிறப்பு கூத்துப்பார்ப்பதற்கென அயலூர்களிலுள்ள உறவினர்கள், நண்பர்கள் வண்டில் கட்டி வந்து சேருவார்கள். அவர்களை வரவேற்று விருந்தளித்து கூடிக்குலவி கூத்து அங்கே உறவுகளை மேலும் மெருகூட்டும் ஒரு விழாவாகவும் விரிகிறது.

ஒரு காலத்தில் சில முக்கிய நடிகர்கள் தங்கள் வீடுகளிலேயே ஒப்பனையை செய்து கொண்டு உறவினா புடைசூழ ஊர்வலமாக கூத்தரங்கை வந்தடைவார்கள். அந்த நேரங்களில் மக்கள் அவர்களை அந்தப்பாத்திரமாகவே பார்ப்பார்கள். முதலில் எல்லா நடிகர்களும் களரிக்கு வந்து அண்ணாவியார் தலைமையில் காப்பு , அதாவது இறை வணக்கம் பாடுவார்கள்.

முதலில் வரவுப்பாடல் மூலம் பாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படும். வடமோடியில் இந்த வரவுப்பாடலையே அண்ணாவியாரே பாடுவார். ஆட்டத்தருக்களை அவர் இசைத்துக்கொடுக்க நடிகர்கள் பாடல்களை பாடி ஆடி நடிப்பார்கள்.

வரவுப்பாடல் பாத்திரம் களரியில் பிரவேசிக்க முன்பு விருத்தப்பாடலாகவும், வந்த பின்பு தருக்களாகவும் அமையும். காட்சிகள் பற்றிய விபரிப்புகள் அகவற்பா வடிவில் அமையும். அகவற்பா, விருத்தம் என்பன இணைந்து வரும்போது கொச்சகப்பா என்பார்கள். பாத்திரங்களின் பாடல்கள் துரிதம், மத்திமம், மந்தம் என தேவைகளுக்கேற்ற வகையில் தாழிசை, கொச்சகம், அகவல் என்பவற்றுடன் கூத்துக்கே உரிய சிந்து, கர்நார்த்தம், இசலி போன்ற மெட்டுக்களில் அமைந்திருக்கும். அக்காலங்களில் காட்சியமைப்பு என எதுவும் செய்யப்படுவதில்லை.

ஆனால் கூத்துக்கலையின் சிறப்பம்சம் காட்சிகளையும், காட்சிச் சூழல்களையும் பாடல்களே விபரிக்கும். இதில் நடிகர்களின் அபிநயமும் சேரவே காட்சி கற்பனையில் தோன்றும். புத்தூர் பகுதியில் பல கூத்துக்கள் ஒரு காலத்தில் ஆடப்பட்டபோதிலும் வீரஅபிமன்யுவே இன்று வரை நிலைத்து நிற்கிறது. உடுப்பிட்டி இமையாணன் கலைஞர்களுக்கும், புத்தூர் கலைஞர்களுக்கும் வடமோடிக்கூத்தினூடான உறவுகள் பல தலைமுறைகளாக நிலவிவந்ததை அறியமுடிகிறது. புத்தூருக்கு அயலூரான வாதரவக்கையில் பப்பரவாகன் கூத்து ஆடப்பட்டு வந்தமையும், நீர்வேலியில் வசந்தன் கூத்து தனித்துவமாக விளங்குவதையும் அறியமுடிகிறது.

எமது இனத்தின் கலாச்சார அடையாளமாக கூத்துக்கள் பாதுகாக்கப்பட்டு, அபிவிருத்தி செய்யப்பட்டு பேணப்படவேண்டும் என்பதில் நாம் ஒவ்வொருவரும் அக்கறை காட்டவேண்டும்.

நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கைபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE