Thursday 28th of March 2024 09:59:56 AM GMT

LANGUAGE - TAMIL
.
கொரோனா 2-வது அலையில் திணறும் இலங்கை: ஒரே நாளில் 300 பேருக்கு தொற்று! (அருவியின் விசேட தொகுப்பு)

கொரோனா 2-வது அலையில் திணறும் இலங்கை: ஒரே நாளில் 300 பேருக்கு தொற்று! (அருவியின் விசேட தொகுப்பு)


கொரோனா 2-வது அலை தாக்கத்தில் சிக்கியுள்ள இலங்கையில் ஒரே நாளில் 300 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் தொற்று அபாயம் மேலும் அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்கான முதலாவது இலங்கையர் இனம் காணப்பட்டு இன்று நான்கு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரையான நாட்களில் அதிகூடிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்ட நாளாக நேற்றைய நாள் அமைந்துள்ளது.

கடந்த ஜனவரி-1 ம் திகதி சீனப் பெண்மணி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில் சுமார் 100 நாட்களின் பின்னரே (11-03-2020) இலங்கையில் 2வது தொற்றாளர் அதேவேளை முதலாவது இலங்கையர் ஒருவர் இனம் காணப்பட்டிருந்தார.

அதேவேளை மே-27 ம் திகதி 150 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டிருந்தமையே கடந்த 4 மாதங்களில் அதி கூடிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்ட நாளாக அமைந்திருந்தது.

அதன் பின்னர் அண்மைய நாட்களில் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய இலங்கையர்களிடையே புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டு வந்த போதிலும் உள்ளுரில் யாருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கவில்லை.

இந்தப் பின்னணியில் இலங்கை அரசு சர்வதேச அளவில் பல பாராட்டுகளை பெற்று வந்ததாக கூறப்பட்டு பெருமைகொள்ளப்பட்ட நிலையில் வெலிக்கடை சிறைக் கைதி ஒருவர் மூலம் மீண்டும் இலங்கை முடக்க நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் 3 மாதங்கள் தங்கியிருந்த நிலையில் வெலிக்கடை சிறைக்கு திரும்பியிருந்த கைதி ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் உள்ளவர்கள் மற்றும் வெலிக்கடை சிறையில் உள்ள கைதிகள் உள்ளிட்டவர்களிடம் பி.சி.ஆர். பரிசோதனை கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வெலிசறை கடற்படை முகாமிற்குள் புகுந்த கொரோனா 900 இற்கு அதிகமான கடற்படையினரை தாக்கி ஓய்ந்து கொண்டிருக்கும் நிலையில் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்குள் நுழைந்து தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது.

அதுமாத்திரமல்லாது அங்கு ஆலாசகராக பணியாற்றிவந்த 27 வயதுடைய பெண் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை இலங்கையில் சமூகப் பரவல் நிலைக்கு கொரோனா வைரஸ் தொற்று செல்லக்கூடும் என்ற அபாய நிலையை தோற்றுவித்துள்ளது.

குறித்த பெண் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தியுள்ளதுடன் சமூகத்தில் பலதரப்புடனும் பழகியும் உள்ளதால் அதன் தாக்கம் இனி வரும் இரு நாட்களில் உணரப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதன்போதே நேற்றைய தினம் (ஜூலை-10) 300 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தை சேர்ந்த உதவியாளர்கள் மூவர் உட்பட 286 பேர் உள்ளடங்குவதாகவும் மற்றுமொருவர் வெலிகட சிறைச்சாலை கைது ஒருவர் எனவும் ஏனையவர்களில் 9 பேர் இந்தியாவில் இருந்தும், 3 பேர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்தும் மற்றுமொருவர் பாகிஸ்தானில் இருந்து வருகை தந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் 342 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், பி.சி.ஆர் பரிசோதனை தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் வைத்திய அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 300 தொற்றாளர்களை தொடர்ந்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2454 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 1980 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது, 463 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கை எதிர்காலத்தில் மட்டுப்படுத்தப்படும் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலமையின் அடிப்படையில் தனிமைப்படுத்தல் முகாம்களில் போதிய அளவு வசதி இல்லாத காரணத்தால் இவ்வாறு மட்டுப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் 472 பேர் இருப்பதுடன் 204 அதிகாரிகள் சேவை செய்வதாகவும் புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்கான பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

அத்துடன் அங்கு சேவையாற்றிய 90 பேர் விடுமுறைகளுக்காக தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் கடுகெலியாவ தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளான கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கடமையாற்றிய ஆலோசகரின் தந்தைக்கு கொரோனா தொற்று இல்லை என புத்தளம் மாவட்ட சுகாதார பரிசோதகர் வைத்தியர் தினூஷா பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE