Friday 29th of March 2024 08:16:22 AM GMT

LANGUAGE - TAMIL
நா.யோகேந்திரநாதன்
எங்கே தொடங்கியது இனமோதல் - 12 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இனமோதல் - 12 (வரலாற்றுத் தொடர்)


1816ல் மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டு தோல்வியடைந்த சதிப்புரட்சி, 1817 – 1818 காலகட்டத்தில் இடம்பெற்ற ஊவா வெல்லசக் கிளர்ச்சி என ஆரம்பிக்கப்பட்ட கிளர்ச்சிகள் மீண்டும் கண்டிய நிலப்பிரபுத்துவ மன்னராட்சியைக் கொண்டுவருவதற்கான போராட்டங்களாகவே அமைந்திருந்தன. அதையடுத்து இடம்பெற்ற போராட்டங்களும் ஆங்கில ஆட்சிக்கெதிராக எழுச்சி பெற்றபோதிலும் அதே நோக்கத்தையே கொண்டிருந்தன. ஆனால் 1848ல் இடம்பெற்ற ஆங்கில ஆட்சிக்கெதிரான போராட்டங்கள் இலங்கையின் சுயாட்சியை நோக்கியதாக அமைந்திருந்ததுடன் அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிரான மக்கள் போராட்டமாக மகிமை பெற்றிருந்தது.

அந்நிய ஆக்கிரமிப்பின் மிகவும் சூட்சுமமான ஆயுதமான மதமாற்றம் எமது பாரம்பரிய மொழி மதம், கலாச்சாரம் என்பவற்றைச் சிதைக்கும் வல்லமை கொண்டதாக அமைந்திருந்த காரணத்தால் மதமாற்றத்துக்கு எதிரான போராட்டமும் அந்நிய ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தது. ஆனால் இனமதவாத சக்திகளால் மதமாற்றத்திற்கொதிரான நியாயமான போராட்டம் மதம் மாறியவர்களுக்கு எதிரான போராட்டமாக மாறி கொட்டாஞ்சேனைக் கலவரம் என அழைக்கப்படும் பேரழிவுக்கு வழிகோலியது. அதுமட்டுமின்றி இன்று வரை கோலோச்சும் இனமத விரோத உணர்வுகளின் அடித்தளமாகவும் விளங்கியது.

வட இலங்கையில் மதமாற்றத்திற்கு எதிரான போராட்டங்கள் ஆறுமுக நாவலர் தலைமையில் சொற்பொழிவுகள், விவாதங்கள், பிரசுரங்களை வெளியிடுதல் பத்திரிகை வெளியிடுதல், இந்து ஆங்கிலப் பாடசாலைகள் நிறுவுதல் போன்ற வழிமுறைகள் மூலம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன. தென்னிலங்கையிலும் குணாநந்த தேரர் தலைமையில் மதமாற்றத்துக்கு எதிரான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் ஒல்கொட்டின் வருகையின் பின் பௌத்த ஆங்கிலப் பாடசாலைகள் நிறுவுவது பௌத்த மதத்தின் மேன்மையை விளக்கி நூல்களை வெளியிடுவது போன்ற வழிகளில் விரிவுபடுத்தப்பட்டு வடக்கைப் போன்றே தெற்கிலும் காத்திரமாக அமைந்திருந்தன.

எனினும் ஆங்கில ஆட்சியாளர்களினதும் கிறீஸ்தவ மத நிறுவனங்களினதும் மேலாதிக்கப் போக்கு காரணமாக சிங்கள இனமத வெறியர்கள் மதம்மாற்றப்பட்டோருக்கு எதிரான உணர்வுகளை வளர்ப்பதற்கு வாய்ப்பு உருவாகியது.

அமெரிக்காவின் சிக்காகோ நகரில் இடம்பெற்ற சர்வதேச மதமகாநாட்டில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய இந்துமத தத்துவங்களின் மேன்மை பற்றிய உரை, இந்தியாவில் ராம் மோகன் ராய் என்பவரால் பிரம்மோசமாயம் என்ற ஆன்மீக அமைப்பு நிறுவப்பட்டு இந்து மதத்திலுள்ள மூட நம்பிக்கைகளுக்கு எதிரான போராட்டங்கள் என்பனவற்றால் கவரப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரியும், வழக்கறிஞரும், ஊடகவியலாளருமான கேணல் ஒல்கொட் இந்து பௌத்த மதங்கள் பற்றிய அக்கறை கொள்ள ஆரம்பித்தார். அவர் இந்தியா வந்து 1875ல் பிரமஞான சங்கமென்ற ஒரு அமைப்பை உருவாக்கினார். அவர் பாலி சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்று இந்து பௌத்த நூல்களை அவற்றின் மூல மொழிகளிலேயே கற்று ஆய்வு செய்து அம்மதங்களின் மறுமலர்ச்சிக்கு வழிகோரினார். இதன் தலைமையகம் 1878ல் இந்தியாவிலுள்ள அடையார் என்ற இடத்துக்கு மாற்றப்பட்டது.

மிசனரிகளுக்கும் பௌத்த பிக்ககளுக்குமிடையே இடம்பெற்ற பாணந்துறை விவாதத்தின் போது பிக்குகளால் முன்வைக்கப்பட்ட ஆணித்தரமான கருத்துகளால் கவரப்பட்ட ஒல்கொட் 1880ல் கொழும்புக்கு வந்து தீபத்துறாமய விகாரையில் குணாநந்த தேரரை சந்திக்கிறார். 1880 மே மாதத்தில் அவரொரு பௌத்தராக மதம்மாறிக் கொண்டார். அத்துடன் இலங்கையின் பிரம்மஞான சங்கத்தின் கிளையை நிறுவி பௌத்த மத மறைக்கல்வியை ஊக்குவித்ததுடன் நூல்களை வெளியிட்டு பௌத்தத்தின் மேன்மையை மேற்குலகுக்கும் பரப்பினார். 15 பௌத்த ஆங்கிலக் கல்லூரிகளையும் 400 பௌத்த பாடசாலைகளையும் நிறுவி கல்வி மூலம் மதமாற்றும் மிசனரிமாரின் தந்துரோபாயத்தை முறியடித்தார்.

பிரம்மஞான சங்கத்தின் தலைமையில் ஒல்கொட் அவர்களின் முயற்சியால் மதமாற்றத்துக்க எதிரான காத்திரமான நடவடிக்கைகள் மெற்கொள்ளப்பட்ட போதிலும் சிங்கள பௌத்த மதவெறியர்களால் கிறீஸ்தவர்களுக்க எதிரான வன்முறைகள் ஆங்காங்கே முடுக்கி விடப்பட்டன. மது ஒழிப்பு மாட்டிறைச்சி உண்பதற்கு எதிரான பிரசாரங்கள் மூலம் கிறீஸ்தவ மதத்திற்கு மதமாறியவர்கள் இலக்கு வைக்கப்பட்டனர்.

1883ல் தீபத்துறாமய விகாரையில் புதிதாக நிறுவப்பட்ட பத்தர் சிலைக்கு கண்வைக்கும்; விழாவை பிரமாண்டமான முறையில் நடத்த மித்தட்டுவ குணாநந்த தேரர் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடுகளை மேற்கொண்டார்.

ஏற்கனவே 1872ல் கொச்சிக்கடையிலிடம்பெற்ற பெரஹர ஊர்வலத்தின் மீதும் 1880ல் மாதம்பிட்டியில் இடம்பெற்ற பெரஹர மீதும் சில விசமிகளால் கல்லெறித் தாக்குதல் நடத்தப்பட்டும் முகத்துவாரத்தில் ஊர்வலத்தைச் செல்லவிடாது பாதை தடுக்கப்பட்டும் முறுகல் நிலை நிலவியது. இந்நிலையில் பொலிசார் கண்வைக்கம் விழா ஊர்வலத்துக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியிருந்த போதிலும் ஆங்கில சுகாதார அதிகாரி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதெனக் கூறி அனுமதியை ரத்துச் செய்தார். எனினும் மார்ச் 31ம் திகதி நள்ளிரவு ஆராதனை முடிவுற்ற பின் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

பெரிய வெள்ளி குருத்தோலை ஞாயிறு ஆகிய தினங்களில் பௌத்தர்களின் பெரஹரவை நடத்த அனுமதிக்க வேண்டாமென மிசனரிகளின் திருத்தூதர் மாசிலாமணி என்பவர் பொலிசாரிடம் வலியுறுத்தினார். எனவே பெரிய வெள்ளியன்று இடம்பெறவிருந்த ஊர்வலம் தடைசெய்யப்பட்டது. ஆனால் 20.03.1883 ஞாயிறு இரவு 12 மணி பூசை முடிவடைந்த பின் பெரஹரவுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

அதே வேளையில் பெரஹரவை உயிhத்த ஞாயிறன்று நடத்த குணாநந்த தேரருக்கு மகாராணியால் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் ஊhவலத்தில் ஒரு குரங்கு சிலுவையில் அறையப்பட்ட நிலையில் கொண்டுவருவதாகவும் அது தேவமாதாவை அவமதிக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்படுவதாகவும் கத்Nதூலிக்க மக்கள் மத்தியில் வதந்திகள் பரப்படுகின்றன. இன்னொருபுறம் பெரஹர ஊர்வலத்தை தாக்க கத்தோலிக்கர்கள் ஆயுத பாணிகளாக காத்திருப்பதாகவும் ஊர்வலத்தினர் மத்தியில் வாந்தி பரப்பப்படுகிறது. எனவே ஊர்வலத்தில் வந்த பெண்கள் சிறுவர்கள் நீக்கப்பட்டு கொட்டன்கள், கத்திகளால் ஆயுத பாணிகளாக்கப்பட்டவர்களுடன் ஊhவலம் தொடர்கிறது.

பொரலையிலிருந்தும் கொல்லு;பிட்டியிலிருந்தும் புறப்பட்ட பௌத்தர்களின் இரு ஊர்வலங்களும் மருதானையில் ஒன்றிணைகின்றன. 1000ற்கு மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஊர்வலத்தை குழப்ப மருதானையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைகின்றன. ஊர்வலம் ஆட்டபாட்டங்களுடன் கொட்டாஞ்சேனை நோக்கி ஆரவாரத்துடன் நகர்கிறது.

ஊர்வலம் கொட்டாஞ்சேனை லூசியா மாதா கோவிலை அண்மித்த போது மதா கோவில் மணி யாரோ ஒருவரால் ஒலிக்கப்படுகிறது. ஊர்வலத்தில் வந்தவர்கள் அது தங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு விடுக்கப்பட்ட கட்டளையாகக் கருதி மாதா கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்தவர்கள்மேல் தாக்குதல்களை மேற்கொள்கின்றனர். கத்தோலிக்கர்களும் எதிர்த்தாக்குதலுக்கு தயாராக இருந்த நிலையில் பெரும் கலகம் மூள்கிறது.

இக்கலவரத்தில் ஜூன்நைதே என்ற சிங்கள பௌத்தர் கொல்லப்படுகிறார். மேலும் பன்னிரண்டு பௌத்தர்கள் ஒரு பொலிசார் உட்பட முப்பது பேர் படுகாயமடைகின்றனர்.

அதே நேரத்தில் தீபத்துறாமய விகாரையை எறியூட்டவும் அரச அனுசரணையுடன் சிங்கள பௌத்தர்கள் மேல் தாக்குதல்களை மேற்கொள்ளவும் நீர்கொழும்பிலிருந்து 3000 கத்தோலிக்கர்கள் வந்து கொண்டு இருப்பதாகவும் வாந்தி பரவுகிறது.

எனவே பௌத்த சிங்கள இனவெறியர்கள் கத்தோலிக்கர்களை தேடித்தேடி வேட்டையாட ஆரம்பிக்கின்றனர். மேலும் கலவரம் பலாங்கொடை கண்டி ஆகிய பகுதிகளுக்கும் பரவி கத்தோலிக்கர்கள் தேடித்தேடி தாக்கப்படுகின்றனர். நாட்டிலுள்ள பல தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்படுகின்றன. கத்தோலிக்கர்கள் பெருமழிவுகளை சந்தித்த பின்பே ஆங்கில ஆட்சியாளர்கள் இராணுவச் சட்டத்தை அமுலுக்கு கொண்டு வருகின்றனர். மூன்று நாட்களின் பின்பே கலவரங்கள் கட்டுக்குள் கொண்டுவரப்படுகின்றன.

கொட்டாஞ்சேனையில் வசித்தவர்கள் துறைமுகத் தொழிலாளர்களாக விளங்கியவர்களும் புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்களில் மூட்டை தூக்குபவர்களாக பணியாற்றியவர்களுமான கத்தோலிக்கர்கள், நீர்கொழும்பில் வசிக்கும் கத்தோலிக்கர்கள் என அனைவருமே தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கொட்டாஞ்சேனைக் கலவரம் ஒரு மதக்கலவரமாக அமைந்திருந்த போதிலும் அதற்குள் தமிழர்களுக்கு எதிரான இனக்குரோதம் இழையோடியிருப்பதை அவதானிக்க முடியும். 1848ல் உருவான பெரும் புரட்சி இனமத பேதங்களை புறந்தள்ளி மக்கள் புரட்சியாக ஆங்கில ஆட்சிக்கெதிராக உருவெடுத்தபோதிலும் காலங்காலமாக சிங்கள மக்கள் மத்தியில் ஊட்டப்பட்ட இனமத குரோத உணர்வு காரணமாக அப்போது உருவாக்கப்பட்ட அந்நிய ஆதிக்கத்துக்கு எதிரான இனமத ஐக்கியம் சிதைக்கப்பட்டு 1883ல் மதம்மாறி மக்களுக்கெதிரான போராட்டமாக மாற்றப்பட்டது.

1883ல் விதைக்கப்பட்ட இனமதகுரோத உணர்வுகள் இன்றும் நிலைத்து நின்று வலுப்பெற்று தேசிய இனங்களுக்கான ஐக்கியம் உருவாக முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலைமையை உருவாக்கியுள்ளது. 1883ல் கத்தோலிக்கருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மதவன்முறைகள் 1915ல் முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறைகளாக மாறி மீண்டுமொரு பெரும் ரத்தக்களரியை உருவாக்கியது.

அப்போது விதைக்கப்பட்ட இன மத மேலாதிக்க வெறி காரணமாக 1958, 1977, 1983, 1988 ஆகிய ஆண்டுகளில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டு பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலிகொள்ளப்பட்டதுடன் ஏராளமான சொத்துக்கள் சூறையாடப்பட்டன. வர்த்தக நிலையங்கள் குடியிருப்புகள் வாகனங்கள் என்பன எறியூட்டப்பட்டு பேரழிவு ஏற்படுத்தப்பட்டது.

இன்றுவரை இனமத மேலாதிக்கமே சிங்கள அரசியலில் மூலதனமாக விளங்கி வரும் துர்ப்பாக்கியமான நிலைமை இலங்கையின் மீதான சாபக்கேடாக விளங்கி வருகிறது.

தொடரும்

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE