Thursday 25th of April 2024 06:57:56 AM GMT

LANGUAGE - TAMIL
.
கைமீறிய நிலையை நோக்கி நகரும் கொரோனா 2வது அலை! (அருவியின் சிறப்பு தொகுப்பு)

கைமீறிய நிலையை நோக்கி நகரும் கொரோனா 2வது அலை! (அருவியின் சிறப்பு தொகுப்பு)


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று 2வது அலையின் ஆரம்ப நிலையே பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. நாட்டின் பல பாகங்களிலும் சமூக தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளதால் இலங்கை மறுபடியும் முற்று முழுதான முடக்க நிலையை நோக்கி நகர்ந்து வருவதை அவதானிக்க முடிகிறது.

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் தொடங்கிய கொரோனா 2வது அலையின் தாக்கம் நாட்டின் பல பாகங்களிலும் உணரப்பட்டு வருகிறது. கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் ஆலாசகர்களாக கடமையாற்றிய பலர் விடுமுறையில் சென்றுள்ள நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றதை அடுத்தே நாடு பெரும் அபாயநிலையை எதிர்நோக்கியுள்ளது.

மாரவில பகுதியை தொடர்ந்து இராஜாங்கனை பிரதேசத்தில் இனம் காணப்பட்ட ஆலோசகர்கள் மூலம் சமூகத்தின் பல்வேறு தரப்பினர் தனிமைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் மேலும் பல பாகங்களில் பலர் இனம் காணப்பட்டு வருகின்றனர்.

கண்டியில் அடியெடுத்து வைத்தது கொரோனா!

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்டு வந்த கண்டி குண்டகசாலை பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருடன் நெருக்கமான தொடர்புகளில் இருந்த 40 பேர் முதல்கட்டமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

காலியில் நுழைந்தது கொரோனா!

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்ட காலி ஹபரதுவ பகுதியைச் சேர்ந்த மற்றொருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. காலி ஹபரதுவ பகுதியைச் சேர்ந்த 35 வயதான இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரது தாய் மற்றும் மனைவி உள்ளிட்ட அயல் வாசிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவரது மனைவி அப்பிரதேசத்தில் உள்ள கோனாபினுவல பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றி வரும் நிலையில் தொற்று உறுதியாவதற்கு முன்னர் 2 நாட்கள் பாடசாலைக்கு கடமைக்கு சென்று திரும்பியுள்ளமை தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவரும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் அம்முடிவு கிடைக்கும் வரை ஆசிரியை நெருங்கிப் பழகிய 25 ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வடக்கின் எல்லையை தொட்டது கொரோனா!

கந்தகாடு இராணுவ முகாமில் பணியாற்றும் வவுனியா மடுகந்தைப் பகுதியைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவர் வீடு சென்று திரும்பிய நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து உடனடியாக அவரது குடும்ப உறுப்பினர்கள் நால்வர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து தொடர்புடையவர்களை இனம் காணும் பணி நடைபெற்று வரும் நிலையில் தனிமைப்படத்தலுக்கு உள்ளாக்கப்படுவோரது எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

தமிழர் தலைநகரையும் விடாத கொரோனா!

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்டு வந்த, திருகோணமலை மாவட்டம் கந்தளாய் அக்போபுர பகுதியைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

3 பிள்ளைகளின் தந்தையான 36 வயதுடைய குறித்த இராணுவ சிப்பாய் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கடமையாற்றிய நிலையில் விடுமுறையில் வீடுதிரும்பியிருந்த போது காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மனைவி பிள்ளைகள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டதுடன் அவரது பயண விபரங்களின் அடிப்படையில் தொடர்புபட்டவர்களை இனம்காணும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இராணுவ சிப்பாய் அண்மைய நாட்களில் பல இடங்களுக்கு சென்று நடமாடியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் அங்கங்கெல்லாம் தொடர்பு பட்டவர்களை இனம்காணும் தடமறியும் நடவடிக்கையில் பெரும் சவால் காத்திருப்பதாக அவதானிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரத்தினபுரியிலும் அடியெடுத்து வைத்தது கொரோனா!

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் ஆலோசகர்களாக செயற்பட்டு வந்த மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இரத்தினபுரி, குருவிட்ட, அஹலியகொட பகுதிகளைச் சேர்ந்த மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மீண்டும் அரச அலுவலகங்கள் மூடப்படுவது குறித்து ஆலோசனை!

அரச அலுவலகங்கள் ஒரு வாரத்திற்கு மூடப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இன்றும் அது குறித்த இறுதி முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

தற்காலிகமான மீண்டும் மூடப்படன அரச தனியார் பாடசாலைகள்!

அரச, தனியார் பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் என்பன இன்று முதல் ஒரு வாரத்திற்கு தற்காலிகமாக மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பொதுத் தேர்தல்-2020 வாக்களிப்பில் முதல் தடங்கல்!

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்டிருந்த அனுராதபுரம் இராஜாங்கனை பிரதேசத்தை சேர்ந்த இராணுவ அதிகாரி ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அங்கு சமூகப்பரவல் நிலையின் முதலாவது கட்ட பாதிப்பு உணரப்பட்டு வருகிறது.

இதனால் இராஜாங்கனை பிரதேசம் உள்ளடக்கிய நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தபால் மூல வாக்களிப்பு மறு திகதி குறிப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடற்படையை தொடர்ந்து கொரோனாவுக்கு சிக்கும் இராணுவத்தினர்!

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் ஆலோசகர்களாக கடமையாற்றிய நிலையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு வருபவர்களில் பலர் இராணுவத்தை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் எனத் தெரியவரும் நிலையில் இராணுவ கட்டமைப்புக்குள் கொரோனா பரவல் சென்றுள்ளதா என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கொரோனா தொற்று உறுதியான இராணுவத்தரப்பினர் அண்மைய நாட்களில் இராணுவ முகாம்களுக்கு சென்றோ அல்லது வேறு வகைகளில் சக இராணுவத்தினருடன் தொடர்பு பட்டோ இருப்பார்களாயின் மிகப்பெரும் அனர்தத்தை நோக்கி நாடு தள்ளப்படும் அபாயம் ஏற்படும்.

நேற்றும் 104 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது!

இலங்கையில் நேற்றும் 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதையடுத்து மொத்த தொற்று 2615 ஆக அதிகரித்துள்ளது.

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தை சேர்ந்த மேலும் 76 பேருக்கு தொற்றுஉறுதி!

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து சேனபுர புனர்வாழ்வு நிலையத்திற்கு மாற்றப்பட்டவர்களில் 76 பேருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து கந்தகாடு தனிமைப்படுத்தல் மையத்தை சேர்நதவர்களில் கொரோனா தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை 431 ஆக அதிகரித்துள்ளது.

கந்தகாடு தொற்றாளர்களுடன் தொடர்புபட்ட மேலும் 18 பேருக்கு தொற்று உறுதி!

கந்தகாடு தொற்றாளர்களுடன் தொடர்புபட்டிருந்தவர்களில் மேலும் 18 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

நாடு திரும்பிய மேலும் 10 பேருக்கு தொற்று உறுதி!

வெளிநாடுளில் இருந்து அண்மையில் நாடு திரும்பியவர்களில் மேலும் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொலாரஸ் நாட்டில் இருந்து நாடு திரும்பிய 5 பேருக்கும், பங்களாதேசில் இருந்து நாடு திரும்பிய 2 பேருக்கும், ஈரானில் இருந்து நாடு திரும்பிய 2 பேருக்கும், ஐக்கிய இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் தொற்று உறதியாகியுள்ளது.

குணமடைந்தோர் - 1981!

கொரோனா தொற்று உறுதியாகியிருந்த நிலையில் நேற்று ஒருவர் குணமடைந்து வெளியேறியுள்ள நிலையில் இதுவரை குணமடைந்து வெளியேறியவர்களது எண்ணிக்கை 1981 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள் - 623!

இதையடுத்து நாடு முழுவதும் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை 623 ஆக உயர்வடைந்துள்ளது.

உயிரிழப்பு - 11!

கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 11 ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE