Thursday 25th of April 2024 07:57:45 AM GMT

LANGUAGE - TAMIL
-
கொரோனா ஒழிப்பில் கவனம் குவிந்துள்ளதால்  டெங்கு  மரணங்கள் அதிகரிக்கலாமென எச்சரிக்கை!

கொரோனா ஒழிப்பில் கவனம் குவிந்துள்ளதால் டெங்கு மரணங்கள் அதிகரிக்கலாமென எச்சரிக்கை!


கொரோனா வைரஸ் தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் முழு உலகமும் கவனம் செலுத்திவரும் நிலையில் டெங்கு நோய் அபாயம் அதிகரித்து வருவதாக சுகாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தென் கிழக்கு ஆசிய நாடுகளான சிங்கப்பூா், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் டெங்கு நோய் தீவிரமாகப் பரவி வருகிறது.

18 இலட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா தொற்று நோயாளிகளைக் கொண்டுள்ள பிரேஸிலில் சுமார் 11 இலட்சம் போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 400 பேர் டெங்கு நோயால் உயிரிழந்துள்ளதாக பான் அமெரிக்கன் சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

லத்தீன் அமெரிக்க நாடுகளான கியூபா, சிலி, கோஸ்டரிகா போன்ற நாடுகளிலும், இந்தியா, பாகிஸ்தான் போன்ற தெற்கு ஆசிய நாடுகளிலும் பருவமழை தொடங்கியிருப்பதால் அந்தப் பகுதிகளில் டெங்கு பரவல் தீவிரமடையும் அபாயம் நிலவி வருகிறது.

கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்ட வடமேற்கு பாகிஸ்தான் பகுதியில் டெங்கு ஒழிப்பு செயற்பாட்டுக்கென ஒதுக்கப்பட நிதி கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காகச் செலவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டின் இளம் மருத்துவா்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவிலும், பல்வேறு நகரங்களில் வழக்கமாக டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் சுகாதாரப் பணியாளா்கள், தற்போது கொரோனா தொற்று நோய் கட்டுப்பாட்டுப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா்.

இவ்வாறான செயற்பாடுகள் டெங்கு நோய்க்கு எதிரான போராட்டத்தில் உலகெங்கும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

கொரோனா தொற்று அச்சம் காரணமாகவும் சமூக முடக்கல்களாலும் பெரும்பாலானவா்கள் நாள்முழுவதும் வீடுகளிலேயே முடங்கியுள்ளமையும் டெங்கு பரவலுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

லத்தீன் அமெரிக்கா போன்ற பகுதிகளில் நுளம்புகளின் இனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தியதன் மூலம் மட்டுமே டெங்கு காய்ச்சல் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டது.

ஆனால், தற்போதைய நிலையில் அந்த நடவடிக்கைகளுக்கான வாய்ப்பு குறைந்துள்ளதால் டெங்கு அபாயம் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

டெங்குக் காய்ச்சல் ஏற்பட்டவா்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும். ஆனால், ஏற்கெனவே கொரோனா நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிக்கும்போது உயிரிழப்பு விகிதமும் அதிகரிக்கக் கூடும் என்று நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE