Thursday 18th of April 2024 02:26:59 PM GMT

LANGUAGE - TAMIL
.
அரசின் தொண்டையில் சிக்கிய முள்ளாக கொரோனா 2-வது அலை! (அருவியின் சிறப்பு தொகுப்பு)

அரசின் தொண்டையில் சிக்கிய முள்ளாக கொரோனா 2-வது அலை! (அருவியின் சிறப்பு தொகுப்பு)


சிறந்த தடுப்பு நடவடிக்கைகளால் கொரோனா தொற்று பரவலை வெற்றிகரமாக(?) கட்டுப்படுத்திய நாடு என்ற பெயரையும் புகழையும் பெற்றுக் கொண்ட இலங்கை அரசாங்கத்தின் தொண்டையில் சிக்கிய முள்ளாக கொரோனா 2-வது அலை பெரும் அவதியை ஏற்படுத்தி வருவதை உணரமுடிகிறது.

எப்பாடு பட்டேனும் பாராளுமன்றத் தேர்தலை நடத்திவிட வேண்டும் என்ற நிலைப்பாடு மேலாங்க கொரோனா கட்டுப்பாடுகள் கட்டம் கட்டமாக தளர்வுக்கு கொண்டு வரப்பட்டது. ஈற்றில் நாடு வழமைக்கு திரும்பும் வகையில் அனைத்து விதமான கட்டுப்பாடுகளும் விலக்கிக் கொள்ளப்பட்டது.

சுதந்திரமான, அச்சுறுத்தல் அற்ற நிலையில் தேர்தலை நடத்த வேண்டும் என்ற சட்டரீதியான காரணத்தை மெய்ப்பிக்கும் வகையில் இந்த தளர்வு நிலை அனுமதிக்கப்பட்டதன் விளைவே இன்றைய அவதிக்கு பிரதான காரணம் என முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளை கூட ஜீரணிக்க முடியாது அரச தரப்பினர் தடுமாறி வருவதை அவதானிக்க முடிகிறது.

ஒற்றை தொற்றாளர் இனம் காணப்பட்ட கையோடு பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவித்தும் ஊரடங்கு பிறப்பித்தும் பல்வேறு கட்டுப்பாடுகளை பிரயோகித்து நாட்டை முடக்கிய இதே அரசு இன்று மௌனமாக இருக்கிறது.

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலைய எல்லை தாண்டி நாட்டின் பலபாகங்களிலும் தடம் பதித்து கொரோனா வைரஸ் தொற்றானது விரிவாக்கம் பெற்று வரும் இன்றைய அபாய நிலையில் காட்டிவரும் விடாப்பிடியான நிலைப்பாடானது, கொரோனா அச்சுறுத்தல் முற்றிலுமாக நீங்கவில்லை என மருத்துவத்துறையினர் உள்ளிட்ட பல தரப்பினர் அறிவுறுத்தியும் தளர்வு நிலையை ஏற்படுத்து எது காரணமாக இருந்ததே அதே காரணமே தற்போதைய கள்ளமௌனத்திற்கும் காரணமாகும்.

நிலமை கட்டுக்குள் உள்ளதாக ஒருபக்கம் அறிவிப்புகள் வெளிவரும் நிலையில் கொரோனா 2வது அலை குறித்த எச்சரிக்கையும் மறுபுறம் விடுக்கப்பட்டே வருகிறது. அரசின் இந்த இரட்டை நிலைப்பாடானது மக்களின் கைகளில் கொரோனாவை எதிர்கொள்ளும் பாரிய பொறுப்பை திணிப்பதாகவே அமைந்துள்ளது.

இவ்வாறு இலங்கை அரசின் தொண்டைக் குழியில் சிக்கிய முள்ளாக கொரோனா 2-வது அலை மாறியுள்ள நிலையில், எப்பாடு பட்டேனும் தேர்தல் திகதி வரை நாட்டை முடக்குவதனை தவிர்க்க நினைக்கும் முனைப்பானது எதுவரை மேலோங்கிய நிலையில் இருக்கும் என்பது அடுத்துவரும் நாட்களில் குறிப்பாக ஒரு வாரத்திற்கு பின்னரான நிலமையே தீர்மானிக்கப்பபோகிறது. அதுவரை இந்த இரட்டை நிலைப்பாடு தொடரலாம்.

கிளிநொச்சி, யாழ்ப்பாணம் வரை வந்து தலைகாட்டிச் சென்றுள்ள கொரோனா அச்சுறுத்தல்!

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கடமையாற்றும் கம்பஹாவைச் சேர்ந்த இராணுவ சிப்பாய்க்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட தடமறியும் விசாரணை நடவடிக்கையின் மூலம் அவரது சகோதரி கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்க கழகத்தின் தொழில்நுட்ப பீட வளாகத்தில் பயில்வதாக தெரியவந்தது.

அதுதவிர கடந்த 8ம் திகதியே கம்பஹாவில் இருந்து குறித்த மாணவி தொடரூந்து மூலமாக மதவாச்சி வந்து அங்கிருந்து பேருந்தில் கிளிநொச்சி வந்துள்ள தகவலும் வெளிவந்தது. இதையடுத்து கிளிநொச்சி வளாகம் உடனடியாக மூடப்பட்டு அங்கிருந்த குறித்த மாணவி உள்ளிட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டதுடன் வளாகத்திற்குள் யாரையும் நுழைய தடைவிதிக்கப்பட்டிருந்தது.

குறித்த மாணவியிடம் பெறப்பட்ட உயிரியல் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் தொற்று இல்லை என உறுதிப்படுத்தியுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் நேற்று தெரிவித்திருந்தார்.

அதே போன்று கைதடியில் செயற்பட்டுவரும் யாழ் பல்கலைக் கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தில் கல்வி பயிலும் பொலனறுவையை சேர்ந்த மாணவிக்கு காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டதை அடுத்து நோயாளர் காவு வண்டி மூலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

அவருக்கும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தியுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் நேற்று தெரிவித்திருந்தார்.

இவ் அறிவிப்பானது வடமாகாண மக்களை ஆறுதல் படுத்தியிருந்தாலும் தற்போதைய நிலையின் வீரியத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. தடமறியும் விசாரணை மூலமும் நோய் அறிகுறி வெளிப்பாட்டின் மூலமும் மேற்குறித்த இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவை கடந்து கொரோனா அபாயமுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எவரெவர் இங்கு வந்து செல்கின்றார்களோ யார் அறிவார்?

கந்தகாடு தொடர்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை - 800!

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் என இனம்காணப்பட்ட 800 பேர் வரை தற்போது தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத கடற் போக்குவரத்து நடவடிக்கைகள் மூலம் வட மாகாணத்திற்கு பேராபத்து!

சட்டவிரோத கடற்போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடுவோர் மூலமாக வட மாகாணத்தில் கொரோனா தொற்று பரவுவதற்கான ஏது நிலைகள் காணப்படுகின்ற போதிலும் சம்பந்தப்பட்ட துறையினர் அதனை கட்டுப்படுத்தவோ தடுக்கவோ எவ்வித முன்முயற்சிகளையும் எடுத்திருப்பதாக அறியமுடியவில்லை.

குறுகிய இலாபமீட்டும் எண்ணத்தில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தம்சார்ந்த சமூகத்திற்கு பெரும் கேட்டினை ஏற்படுத்தி வருகின்றனர் எனபதை அறிந்தும் பூணைக்கு யார் மணி கட்டுவது என்ற போக்கில் அவ்வாறானவர்கள் தொடர்புடைய மக்கள் அமைப்புகளும் மக்கள் பிரதிநிதிகளும் கண்டும் காணாதிருந்து வருகின்றனர்.

நேற்றும் 19 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது!

இலங்கையில் நேற்றும் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதையடுத்து மொத்த தொற்று 2665 ஆக அதிகரித்துள்ளது.

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்துடன் தொடர்புபட்டதாக நேற்றைய தினம் மேலும் 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு திரும்பிய மேலும் 6 பேருக்கு தொற்று உறுதி!

வெளிநாடுளில் இருந்து அண்மையில் நாடு திரும்பியவர்களில் மேலும் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஓமான் நாட்டில் இருந்து நாடு திரும்பிய 4 பேருக்கும், ஐக்கிய இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய இருவருக்குமாக இவ்வாறு 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குணமடைந்தோர் - 1988!

கொரோனா தொற்று உறுதியாகியிருந்த நிலையில் நேற்று பேர் குணமடைந்து வெளியேறியுள்ள நிலையில் இதுவரை குணமடைந்து வெளியேறியவர்களது எண்ணிக்கை 1988 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள் - 658!

இதையடுத்து நாடு முழுவதும் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை 658 ஆக உயர்வடைந்துள்ளது.

உயிரிழப்பு - 11!

கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 11 ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE