Friday 19th of April 2024 03:30:38 PM GMT

LANGUAGE - TAMIL
-
எங்கே தொடங்கியது இன மோதல் - 13 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 13 (வரலாற்றுத் தொடர்)


“உலகை ஆக்கிரமிக்கும் ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் மிசனரிமாரை நாடுநாடாக பைபிளைக் கையில் கொடுத்து அனுப்பும் போது கூடவே மதுப் போத்தல்களையும், துப்பாக்கி ரவைகளையும் அனுப்பி வைக்கின்றனர். மனிதர்களின் சிந்தனையை மழுங்கடிக்க மதுவும், கொன்று குவிக்க ரவைகளும் பயன்படுத்தப்படுவதன் மூலம் ஆக்கிரமிப்பு உறுதிப்பட்டது”.

ஒல்கொட் அவர்களுடன் இணைந்து பௌத்த மதத்தின் மறுமலர்ச்சிக்குப் பணியாற்றிய ஏ.ஈ.புல்லன்ஸ் அவர்கள் 25.03.1899 அன்று கொழும்பில் நடத்திய, “நான் ஏன் பௌத்தனானேன்”, என்ற பிரசித்திபெற்ற உரையில் குறிப்பிடப்பட்ட முக்கியமான விடயமாகும். உலகை ஆக்கிரமிக்கும் ஏகாதிபத்திய சக்திகள் உள்@ர் மக்களின் பாரம்பரிய தேசிய உணர்வுகளை மழுங்கடித்து அவர்களிடம் அடிமை மனப்பான்மையை உருவாக்க மதத்தையும், ஆயுத வன்முறைகளையும் பயன்படுத்தி வருகின்றனர் என்பதை அவர் அவ்வுரையின் மூலம் தெளிவுபடுத்தினார்.

இலங்கையில் 1865ல் பிறந்த கிறிஸ்தவப் பறங்கியரான இவர் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றபோதே பொதுவுடமை, ஜனநாயகம், தாராளவாதம் போன்ற கொள்கைகளால் கவரப்பட்டார். அவர் 1887ல் நாடு திரும்பிய பின்பு 1888ல் தன்னை ஒரு பௌத்தனாக மதம் மாற்றிக் கொண்டார். அதன் காரணமாக அவர் கல்வி கற்ற சென்ற். தோமஸ் கல்லூரி, கல்லூரியின் கௌரவ மனிதர்கள் பட்டியலிலிருந்து அவரை நீக்கியது.

இவர் ஒரு பௌத்தனாக மாறியது மட்டுமின்றி தொழிலாளர்களின் உரிமைகள், பெண் விடுதலை போன்ற முற்போக்கான விடயங்களிலும் தீவிர அக்கறை காட்டினார். இவர் 1888ல் ஒரு ஆங்கிலப் பத்திரிகையை ஆரம்பித்து மிஷனரிகளின் மதமாற்று முயற்சிகளுக்கெதிரான கருத்துப் போரை முன்னெடுத்தார். 1889ல் புறக்கோட்டையில் அமைக்கப்பட்ட பௌத்த ஆங்கிலப் பாடசாலையின் அதிபராகப் பொறுப்பேற்கிறார். இதுவே பின் நாட்களில் மருதானை ஆனந்தாக் கல்லூரியானது.

1890ல் மருதானையில் அப்பாடசாலை ஆனந்தாக் கல்லூரியாகத் திறக்கப்பட்ட போது அதில் கேர்ணல் ஒல்கொட், ஏ.ஈ.புல்ஜென்ஸ், சேர்.பொன் இராமநாதன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். சிங்கள பௌத்த மறுமலர்ச்சியில் இனமத பேதமின்றி அனைவரும் பங்கு கொண்டமையின் வெளிப்பாடாகவே அதைப் பார்க்க முடியும். இதையடுத்து புல்ஜென்ஸ் 1890ல் பௌத்த பாடசாலைகளின் முகாமையாளராக நியமிக்கப்படுகிறார்.

1892ல் கிறீஸ்தவ பாடசாலைகளுக்கு ¼ மைல் தூரத்துக்குள்ளே அமைந்துள்ள ஏனைய பாடசாலைகளுக்கான அரச உதவிகள் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாகப் பௌத்த பாடசாலைகள் பாதிக்கப்பட்டன. இத்திட்டத்துக்கெதிராகப் புல்ஜென்ஸ் கடுமையான போராட்டங்களை நடத்தி அத்திட்டத்தை வாபஸ் பெற வைத்தார்.

கேர்ணல் ஒல்கொட் தொடர்ந்து மேற்கொண்டு வந்த பௌத்த மறுமலர்ச்சி நடவடிக்கைகளில் ஏ.ஈ.புல்ஜென்ஸ் இணைந்து சொற்பொழிவுகள், ஊடகம் என்பவற்றின் மூலம் கடுமையாக உழைத்தார்.அது மட்டுமின்றி ஒல்கொட்டால் நிறுவப்பட்ட பௌத்த ஆங்கிலக் கல்லூரிகளையும் நாடுபரந்தளவில் அமைக்கப்பட்ட பௌத்த பாடசாலைகளையும் திறம்பட நிர்வாகித்து மிஷனரிகள் கல்வியைப் பயன்படுத்தி மேற்கொண்ட மதமாற்ற முயற்சிகளை முறியடித்தார்.

1880ல் ஒல்கொட் பௌத்த அறக்கட்டளையை நிறுவிய போது லெட் பீற்றர் என்ற கிறீஸ்தவ பாதிரியார் ஒல்கொட் புல்ஜென்ஸ் ஆகியோரின் வேலை முறைகளால் கவரப்பட்டு அவர்களுடன் தானும் ஒருவராக இணைந்து கொள்கிறார். 1883ல் பிரம்மஞான சங்கத்தில் உறுப்பினராக மாறிய லெட் பீற்றர் மதமாற்றத்திற்கு எதிராகவும் பௌத்த மத மறுமலர்ச்சிக்காகவும் தீவிரமாக உழைக்கத் தொடங்கினார்.

கேர்ணல் ஒல்கொட், ஏ.ஈ.புல்ஜென்ஸ், லெட் பிட்டர் ஆகியோர் ஆக்கபூர்வமான முறையில் மதமாற்றத்துக்கு எதிரான போராட்டத்தை ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிரான நடவடிக்கைகளாகவும் தேசிய இன மத பாரம்பரியங்களைப் பாதுகாக்கவும், புனரமைக்கவுமான பாதையாகவும் வெற்றிகரமாகக் கையாண்டு வந்த வேளையில் சில பௌத்த சிங்கள இனவெறியர்களால் அது கத்தோலிக்க மக்களுக்கு எதிரான போராட்டமாகத் திசைதிருப்பப்பட்டது.

ஆரம்ப கட்டத்தில் தீபத்துறாமய விகாராதிபதி குணானந்த தேரர் ஹிக்கடுவ சுமங்கல தேரர் ஆகியோர் ஆறுமுக நாவலரின் பாதையில் சொற்பொழிவுகள், விவாதங்கள், பிரசுரங்கள் என்பன மூலம் மதமாற்றத்துக்கு எதிரான போராட்டத்தை நியாயமான வழியில் முன்னெடுத்த போதிலும் அது பின்னாட்களில் இன வெறியர்களால் வன்முறைமயப்படுத்தப்பட்டது அதற்கு சிற்சிறி மலல்லகொட போன்றவர்களின் “நீதிக்கான அரசனின் புத்தகம்”, என்ற நூல் பற்றிய பிரசுரங்களும், பௌத்த அரசனின் வருகை பற்றி ஏற்படுத்தப்பட்ட கற்பனைக் கனவுகளுமே காரணமாய் அமைந்தன.

இதுவே 1883ன் கத்தோலிக்க மக்களுக்கெதிரான கொட்டாஞ்சேனைக் கலவரமாக வெடித்தது. இக்கலவரம் காரணமாக நாடு முழுவதும் பல தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டதுடன் கொட்டாஞ்சேனை, பலாங்கொட, நீர்கொழும்பு, கண்டி போன்ற பல பிரதேசங்களில் கத்தோலிக்க மக்கள் மீது தாக்குதல்கள் பெருமளவு கட்டவிழ்த்துவிடப்பட்டன. எனினும் ஆங்கில அரசு இராணுவச் சட்டத்தை அமுல்படுத்தி கலவரத்தை அடக்கியது.

ஒல்கொட் குழுவினர் இத்தகைய வன்முறைகளுடன் உடன்படாத போதிலும் கூட கொட்டாஞ்சேனைக் கலவரம் காரணமாகக் குற்றஞ் சாட்டப்பட்டவர்களைப் பெருமுயற்சியால் காப்பாற்றுகின்றனர். ஒல்கொட் ஆங்கில ஆட்சியாளர்களுடன் கடுமையான வாதங்களை மேற்கொண்டு சிங்கள பௌத்த தரப்பினரை நியாயப்படுத்தினார்.

1883ல் இடம்பெற்ற கொட்டாஞ்சேனைக் கலவரமும் பிரம்மஞான சங்கத்தினரின் நடவடிக்கைகளும் கத்தோலிக்கராகப் பிறந்த டெவிட் என்ற பெயருடன் கல்கிசை சென்ற் தொமஸ் கல்லூரியில் கல்வி பயின்று கொண்டிருந்த தொன் டேவிட்டை கவர்கின்றது. அதன் காரணமாக அவர் 1884ல் கல்வியை இடைநிறுத்தி சென்ற் தோமஸ் கல்லூரியிலிருந்து வெளியேறி பிரம்மஞான சங்கத்தில் இணைந்து கொள்கிறார்.

ஆரம்பத்தில் இவருக்கு ஒல்கொட், புல்ஜென்ஸ் லெட் பீட்டர் ஆகியோரின் ஆங்கில உரைகள், கட்டுரைகள் என்பனவற்றைச் சிங்களத்தில் மொழிபெயர்க்கும் பணி வழங்கப்படுகிறது. 1886-1890 வரை லெட் பீட்டர் ஆனந்தாக் கல்லூரியின் அதிபராகப் பதவி வகித்தார். அக்காலப்பகுதியில் ஆனந்தாக் கல்லூரி சிங்கள பௌத்த பேரெழுச்சியின் மையமாகத் திகழ்ந்தது.

சோமபால பிரேமச்சந்திர பெரேரா என்ற கிறீஸ்தவர் ஒருவர் பௌத்தராக மதம்மாறியதுடன் பிரம்மஞான சங்கத்தால் நடத்தப்பட்ட சரசவசந்தேசய என்ற சிங்களப் பத்திரிகைக்கு கட்டுரை எழுதி வந்தார். அத்துடன் பிரம்மஞான சங்கத்தின் பணிகளில் இணைந்து சேவை செய்தும் வந்தார். 1890ல் அப்பத்திரிகையின் முகாமையாளராக நியமிக்கப்பட்ட பெரேரா அதன் முகப்பு வாசகமாக ‘பௌத்தர்களின் குரல்’ என்ற சுலோகத்தை பொறித்தார். அதன் பின்பு அவர் அதன் ஆசிரியராக நியமிக்கப்பட்ட பின்பு பத்திரிகை பௌத்த மறுமலர்ச்சி என்ற கட்டத்தைத் தாண்டி மற்றைய இனங்கள் மீதான வெறுப்பை உருவாக்கும் கருவியாக மெல்ல மெல்ல மாற ஆரம்பித்தது.

அப்படியான ஒரு போக்கு ஏற்பட அநகாரிக தர்மபாலாவால் கொடுக்கப்பட்ட அழுத்தங்களே காரணமென கருதப்பட்டது. எனினும் இத்தகைய போக்கு காரணமாக ஏற்பட்ட முரண்பாடுகள் பெரேராவை பத்திரிகையை விட்டு வெளியேறவேண்டிய நிலைக்குத் தள்ளியது.

1908ல் எச்.எல்.பெரேரா, டீ.பி.ஜெயதிலகவுடன் இணைந்து தினமின என்ற பத்திரிகை ஆரம்பிக்கிறார். இது சிங்கள பௌத்த பிரசாரம் என்ற போர்வையில் ஏனைய இனங்களுக்கு எதிரான வெறுப்பையும் குரோதத்தையும் உருவாக்கும் பணியில் இறங்கியது.

இவ்வாறு சிங்கள பௌத்த மறுமலர்ச்சியின் திசை வலிந்து மாற்றப்பட்ட நிலையில் ஒல்கொட் வெறுப்புற்று நாட்டைவிட்டு வெளியேறுகிறார். அவர் மீண்டும் நாடு திரும்பவில்லை. அதேபோன்று 1990ல் சிங்கள பௌத்த மறுமலர்ச்சியின் மூலவர்களில் ஒருவரான லெட் பீட்டர் மேல் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. அது நிரூபிக்கப்படாத பட்சத்திலும் லெட் பீட்டரும் விரக்தியடைந்து நாட்டை விட்டு வெளியேறுகிறார்.

இந்நிலையில் அநகாரிக தர்மபாலவின் கை ஓங்குகிறது. பெரேரா நோய் வாய்ப்பட்டு பத்திரிகையை இயக்க முடியாத நிலையில் அதை டீ.ஆர்.விஜயவர்த்தன விலைக்கு வாங்கி நடத்த ஆரம்பிக்கிறார். அதுவே வளர்ச்சியடைந்து தற்சமயம் லேக் கவுஸ் நிறுவனமாக உயர்ந்துள்ளது.

அதே வேளையில் பெரேராவின் சிஷ்யரான பியர்தாச சிறிசேன என்பவரால் பௌத்த சிங்கள என்ற பத்திரிகை வெளியிடப்படுகிறது. இது பச்சையாக இனவாத வெறியூட்டும்படி வெளியிடப்படுகிறது. ஏனைய இனங்களின் இன, மத, கலாச்சாரப்பற்றுள்ள நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி சிங்களவர்கள் அவை தொடர்பாக அக்கறையற்றவர்கள் எனக் குத்திக்காட்டி ஏனைய இனத்தவர்கள் மீது வன்முறைகளைத் தூண்டும் வகையில் அப்பத்திரிகை அநகாரிக தர்மபாலாவின் கருத்துக்களை வெளியிட்டு வந்தது.

மது, மாட்டிறைச்சி என்பவற்றிற்கெதிரான போராட்டம் என்ற போர்வையில் மாட்டிறைச்சி உண்பவர்களைக் கேவலமானவர்கள் எனப்பிரசாரம் செய்ததன் மூலம் கிறீஸ்தவர்கள் மீதும் முஸ்லீம்கள் மீதும் வெறுப்பூட்டும் வகையில் இப்பத்திரிகை கருத்துகளை வெளியிட்டு வந்தது. அதேநேரத்தில் கள்ளுத்தவறணைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு சாராய வியாபாரிகள் ஆதரவு வழங்கினார்கள் என்பதிலிருந்து இவர்களின் மது ஒழிப்பின் உள்நோக்கத்தை அறிய முடிகிறது.

தேசிய மொழி மதம் கலாச்சாரம் எனபவற்றைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் இனமத வெறி இயக்கமாகத் திசைதிருப்பப்பட்டதுடன் அதை ஆரம்பித்த மூலவர்களும் தூக்கியெறியப்பட்டனர்.

இதன் பலன் 1915ல் முஸ்லீம்களுக்கு எதிரான கலவரமாக வெடித்து முஸ்லீம்களுக்கு பேரழிவை ஏற்படுத்தியது மட்டுமன்றி சிங்களவர்களையும் மரண தண்டனை முதற்கொண்டு பல இன்னல்களுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலையை ஏற்படுத்தியது.

எப்படி 1883ல் மதமாற்றத்துக்கு எதிரான நியாயமான போராட்டம் கத்தோலிக்க மக்களுக்கு எதிரான கலவரமாக மாற்றப்பட்டதோ அவ்வாறே 1915ல் பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் முஸ்லீம்களுக்கு எதிரான பெரும் வன்முறைக் கலவரமாக மாற்றப்பட்டது. மகாவம்சம் எழுதப்பட்ட கி.பி 5ம் நூற்றாண்டிலிருந்து எந்தவொரு முற்போக்கான விடயங்களும் இனமத வெறியாக மாற்றப்பட்டு பேரழிவாக உருவாக்கப்பட்டமையை வரலாறு முழுக்கக் காணமுடியும். அதன் காரணமாக இன்று வரை இனமதவெறியே சிங்கள அரசியல்வாதிகளின் அரசியல் மூலதனமாக கையாளப்பட்டு வருவதை அவதானிக்க முடியும்.

தொடரும்

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE