Friday 29th of March 2024 12:52:16 AM GMT

LANGUAGE - TAMIL
.
கோட்டா-TNA இணைவின் முன்னோட்டமே ஜனநாயகப் போராளிகளின் இணைவு! வவுனியாவில் சி.வி.வி. தெரிவிப்பு!

கோட்டா-TNA இணைவின் முன்னோட்டமே ஜனநாயகப் போராளிகளின் இணைவு! வவுனியாவில் சி.வி.வி. தெரிவிப்பு!


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோட்டா அரசுடன் இணைவதற்கான முதற் சமிக்ஞையே ஜனநாயக்ப் போராளிகளின் இணைவு என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் வவுனியாவில் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்றையதினம் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்.....

தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்ட வரலாற்றில் வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டுவைக்கப்படும் நாளாக இன்றைய நாள் அமைகின்றது. இன்றைய நாள் மிகவும் ஒரு முக்கியமான செய்தியை அரசாங்கத்துக்கும் சரவ்தேச சமூகத்துக்கும் தமிழ்மக்கள் சொல்லுகின்ற ஒரு நாளாக அமைகின்றது.

தொடர்ந்தும் எமது மக்களுக்கு எதிராக ஒரு இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டு வருகின்ற நிலையிலும், எட்டப்பட்ட எல்லா ஒப்பந்தங்களுமே அரசாங்கங்களினால் தொடர்ச்சியாக கிழித்து எறியப்பட்டுவருகின்ற நிலையிலும், இனப்பிரச்சினை என்ற ஒன்றே இந்த நாட்டில் இல்லை என்று தற்போதைய அரசாங்கம் குருட்டுத்தனமான பொறுப்பற்ற கருத்துக்களை முன்வைத்துவரும் நிலையிலும் எமது பிரச்சினைக்கு ஒரு நிரநத்ர தீர்வினை அடையும் பொருட்டு ஒரு கருத்துக்கணிப்பை நடத்துமாறு நாம் சரவ்தேச சமூகத்தினை கோருகின்றோம்.

நன்கு, ஆராய்ந்து, சிந்தித்தே நாம் இந்த வேண்டுகோளை முன்வைக்கின்றோம். சாத்வீக போராட்டம் மட்டுமல்ல கடந்த 10 வருடங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட சரணாகதி அரசியல் கூட சிங்கள அரசாங்கங்களின் மனக்கதவுகளை திறக்கவில்லை. அவர்களின் எண்ணங்களிலும் செயற்பாடுகளிலும் இம்மியளவும் மாற்றம் ஏற்படவில்லை. இந்த நிலையில், வரலாற்று பட்டறிவில் இருந்தும், முரண்பாடுகளுக்கு தீர்வுகாணும் சர்வதேச சமூகத்தின் சமகால அணுகுமுறைகள் அடிப்படையிலும் சர்வதேச சமூகத்திடம் ஒரு கருத்துக்கணிப்பை எமதுமக்கள் மத்தியில் நடத்தி எமது மக்கள் எத்தகைய ஒரு தீர்வினை விரும்புகிறார்கள் என்பதனை அறிந்து நிரந்தரமான ஒரு தீர்வினை ஏற்படுத்துமாறு நாம் அவர்களை கோருவதைதவிர வேறுவழியில்லை.

நாகரிகம் வளர்ச்சியடைந்து, சரவ்தேச மனித உரிமைசட்டங்கள், பிராமணங்கள் என்பவை நிறுவனமயபப்டுத்தப்பட்டு, தகவல் தொழில்நுட்பம் வளரச்சியடைந்துள்ள இந்த 21 ஆம் நூற்றாண்டில் உலகின் மூத்த குடிகளில் ஒன்றான தமிழ் இனம் இலங்கையில் திட்டமிட்ட இனஅழிப்புக்கு உட்படுத்தப்பட்டு இருந்த இடம் தெரியாமல் அழியும் நிலைமையை இந்தியா, சரவ்தேச சமூகம் மற்றும் ஐ.நா ஆகியவை இனிமேலும் அலட்சியயமாக பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

பல நாடுகளில் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை தீர்ப்பதற்கு, நடைமுறை சாத்தியமான, சரவ்தேச சட்டபிரமானங்களுக்கு உட்பட்ட மிகச்சிறந்த ஒரு வழிமுறைதான் கருத்துக்கணிப்பு நடத்துவதாகும். யுத்தம் நடைபெற்றபோது எமது பிரச்சினையில் தலையீடு செய்த நாடுகளும், மத்தியஸ்தம் செய்ய முன்வந்த நாடுகளும் இன்று யுத்தம் முடிவடைந்த பின்னர் எம்மை ஒரு ஆபத்தான நிலைமையில் விட்டுவிட்டு ஒதுங்கிநிற்பதன் மூலம் பெரும்தவறை இழைத்துள்ளன.

30 வருடகால யுத்தகாலத்தில் நாம் இழந்த நிலங்களை விட கூடுதலான நிலங்களை கடந்த 10 வருடங்களில் நாம் இழந்துவிட்டோம். அரச இயந்திரங்கள் யாவும் எமக்கு எதிரான கட்டமைப்பு, கலாசார ரிதியான படுகொலைக்காக முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஆகவே, தமிழ்மக்கள் சர்வதேச சமூகத்தின் உடனடியான தலையீட்டை தற்போது கோருகிறார்கள். எனவே கருத்து கணிப்பு ஒன்றை நடத்துவதற்கான முன்னெடுப்புக்களை சர்வ்தேச சமூகம் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக இந்திவுடன் இணைந்து சமாதான பேச்சுவார்த்தைகளில் அனுசரணை வழங்கிய இணைத்தலைமை நாடுகள் காத்திரமான தலையீடு ஒன்றை செய்வதற்கான தார்மீக பொறுப்பை கொண்டிருக்கின்றன. கருத்துக்கணிப்பு அடிபப்டையிலான தீர்வு ஒன்றை கொண்டுவருவதற்கு காலதாமதம் ஏற்படும்பட்சத்தில் சரவ்தேசகண்காணிப்புடன் கூடிய இடைக்கால தீர்வு ஒன்றை அவசரமாக கொண்டுவந்து மனித உரிமை மீறல்களை தடுப்பதுடன், போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களை வலுவூட்டும் நடவடிக்கைகளை அவர்கள் எடுக்கவேண்டும் என்றும் இநத் தேர்தல் விஞ்ஞாபனம் கோருகின்றது.

இதயசுத்தியுடனான சமாதான முன்னெடுப்புக்களையும் பேச்சுவார்த்தைகளையும் நாம் என்றும் ஆதரிப்போம். ஆனால், அவை இந்தியா அல்லது வேறு ஒரு நாட்டின் மத்தியஸ்துடன் நடைபெற வேண்டும் என்பதே எமது எதிர்பாரப்பு.

இது தமிழ்மக்களின் வரலாற்று ரீதியான ஒரு பட்டறிவின்பாற்பட்ட ஒரு படிப்பினை ஆகும்.

இனி, நான் தமிழ் மக்கள் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள் பற்றி சிறிது குறிப்பிட விரும்புகிறேன்.

சில தினங்களுக்கு முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்துள்ள சில கருத்துக்கள் எமது மக்களை குழப்பி அரசியல் இலாபம் தேடும் வகையில் அமைந்துள்ளன. அவரது பொய்யான தகவல்களையும் கருத்துக்களையும் எமது மக்கள் நம்பி ஏமாந்த ஒரு காலம் இருந்தது. ஆனால், எமது மக்கள் இனியும் ஏமாறப்போவதில்லை. அவர்கள் விழித்துக் கொணடுவிட்டார்கள்.

ஆட்சியாளர்கள் பெருமளவில் பணங்கொடுத்து பற்பல உதிரிக் கட்சிகளை வாங்கி வாக்குகளை பிரித்து தமிழ் தேசிய கூட்டமைப்பை தோற்கடிக்க சதி செய்வதாக சுமந்திரன் ஒரு கதையை கூறியிருக்கிறார். அரசாங்கம் கோடி கோடியாக பணம் கொடுத்து பல கட்சிகளை வடக்கு கிழக்கில் போட்டியிட வைத்திருக்கின்றது என்பது உண்மை. ஆனால், அதன் நோக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பை தோற்கடிப்பதற்காக அல்ல.

ஆட்சியாளர்களின் கருத்துக்களையும் செயற்பாடுகளையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்துக்களையும் செயற்பாடுகளையும் கவனமாக ஆராய்ந்து பாரத்தலே இந்த நடவடிக்கைகளுக்கு காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெறுவதையே அரசாங்கம் விரும்புகிறது என்பதை இலகுவில் புரிந்து கொள்ளலாம். பொதுஜன பெரமுனவின் முக்கிய தலைவர்களான ஜி.எல்.பீரிஸ், கெஹேலிய ரம்புக்வல ஆகியோர் வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தெற்கில் தமது கட்சியான சிறிலங்கா பொதுஜென பெரமுனவுமே வெல்லும் என்று வெளிப்டையாகவே கூறியிருக்கின்றார்கள்.

இது தெற்கில் தமது கட்சியையும் வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பையும் வெல்ல வைக்கும் ஒரு உளவியல் உத்தி.

தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற வேண்டும் என்று ஆட்சியாளர்கள் விரும்புவதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன. மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் எதிர்காலத்தில் சரவ்தேச சமூகத்திடம் இருந்து கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் என்று எதிர்பாரக்கப்படும் இன்றைய நிலையில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது போர்க் குற்றம் என்ற சர்வதேச பொறியிலிருத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு அப்போதைய அரசாங்கத்துக்கு உதவியது போன்ற உதவிகளை எதிர்காலத்தில் தானும் அதனிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்றே நினைக்கின்றது.

இலங்கையின் பங்கு பற்றுதல் இன்றி சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடக்கவிருந்த நிலையில் இலங்கைக்கு எதிராக சரவ்தேச சமூகம் பொருளாதார தடைகளை ஏற்படுத்தும் நிலையில், ராஜபக்ஷக்களுக்கு எதிராகப் பயண தடைகளை ஏற்படுத்தும் நிலையில் எவ்வாறு நல்லாட்சி அரசாங்கம் இலங்கையைப் பாதுகாத்துக் கொண்டது என்பது பற்றி முன்னாள் வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர பத்திரிகை ஒன்றுக்கு அண்மையில் வழங்கியுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச போர்க்குற்ற விசாரணையை இலங்கையின் கைகளுக்குத் தாங்களே துணிந்து கொண்டு வந்ததாக அவர் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முழுமையான ஒத்துழைப்பு இன்றி இது நடைபெற்று இருக்கவேமுடியாது.

அத்துடன், கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்ட ஐனநாயகப் போராளிகள் கட்சியினர் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பை வெற்றி பெற வைப்பதற்காக ஆட்சியாளரக்ளினால் எந்தவித நிபந்தனைகளும் இன்றி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வேலை செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் தயவில் வெளிப்படையாகவே இயங்கும் ஜனநாயக போராளிகளின் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் வெளிப்படையாக கைகோர்த்திருப்பது தேர்தல் முடிவடைந்த பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பானது மகிந்த - கோத்தா அரசில் இணைவதற்காக முன்கூட்டியே உடன்படிக்கை ஒன்று ஏற்கனவே எட்டப்பட்டிருப்பதையே கட்டியம்கூறி நிற்கிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனப்படுகொலைக்கான சர்வதேச சுயாதீன விசாரணை பற்றி எதையும் தெளிவாக குறிப்பிடாமையும் இதனை மேலும் உறுதிப்படுத்துகின்றன.

ஒரே நாட்டுக்குள்ளே தான் தீர்வு என்பதை நாம் வெளிப்படையாக விஞ்ஞாபனத்தில் சொல்லியும், சமஷ்டி என்றால் பிரிவினை என ராயபக்சக்கள் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று சுமந்திரனே தனது வாயால் ஒப்புக்கொண்டிருக்கிறார். இது ஒருபுறத்தில் பொதுஜன பெரமுன கூடுதல் வாக்குகளை பெறுவதற்கு உதவும் அதேவேளை, எதுவுமே இல்லாத தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை தமிழ் மக்கள் பிழையாகப் பார்பப்தை தவிர்பதற்கான அரசாங்கத்தின் உதவியாகவும் இது இருக்கக் கூடும்.

சிங்கள மக்களில் கணிசமானோர் இணங்காத எந்தத் தீர்வும் நிலையானதலல். இதைச் சொல்லாமல் அரசியல் செய்பவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள். என்றும் சுமந்திரன் கூறி இருக்கிறார். இதன்மூலம் சுமந்திரன் என்ன கூறுகிறார் என்றால், சிங்கள மக்கள் இணங்கும் ஒரு தீர்வினைத் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திடம் கோரும் என்பதைத்தான். தமிழ் மக்களுக்கு இந்தத் தீர்வுதான் வேண்டும் என்று தமிழ் மக்களின் வரலாறு, பூர்வீகமர, சட்டரீதியான சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை எடுத்துக்கூறி சிங்கள மக்களை அதற்கு இணங்க வைக்க வேண்டும் என்று சிந்திக்காமல், சிங்கள மக்கள் இணங்கும் ஓர் தீர்வினை எமது மக்கள் மத்தியில் திணிக்க முயலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கபட நாடகத்தை மக்கள் அறிந்துகொள்ளவேண்டும்.

சிங்கள மக்கள் இணங்கும் ஒரு தீர்வினை பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதற்காகத் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு புதிய அரசியல் யாப்பு தயாரிக்கும் யோசனையில் பௌத்தத்துக்கு முன்னுரிமை அளிப்பதற்கும் ஒற்றை ஆட்சிக்குப்பட்ட தீர்வுக்கும் ஒத்துக்கொண்டதுடன் வடக்கு கிழக்கு இணைப்பை வலியுறுத்தவும் தவறியது.

ஆனால், எமது அணுகுமுறை என்னவென்றால் சிங்கள மக்கள் இணங்கும் ஒரு தீர்வை அல்ல சிங்கள மக்களை நாம் இணங்கச் செய்யும் ஒரு தீர்வினையே பெறுவது பெற்றுக் கொள்வதுதான். அதற்காகத்தான் நான் எதற்கும் அஞ்சாமல் எமது பூர்வீகம், வரலாறு, எமது சுயநிரண்ய உரிமை, நாம் ஏன் ஒரு தேசம், நாம் ஏன் சிங்களவர்களை விட இநத் நாட்டுக்கு கூடுதல் சொந்தக்காரர் என்பவற்றை எல்லாம் கூறிவருகின்றேன். அவ்வாறு கூறியதால்த்தான் இரண்டு நாட்களுக்கு முன்னர் பொலிசார் வந்து என்னைக் கேள்வி கேட்டனர்.

இவ்வாறு தனது உரையில் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: க.வி.விக்னேஸ்வரன், இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE