Friday 29th of March 2024 02:28:45 AM GMT

LANGUAGE - TAMIL
-
செல்வத்துக்கு இம்முறை பாடம் புகட்டுவர் மக்கள்:  சிவாஜி !

செல்வத்துக்கு இம்முறை பாடம் புகட்டுவர் மக்கள்: சிவாஜி !


"செல்வம் அடைக்கலநாதன் 20 வருடங்கள் இராஜாபோல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருக்கின்றார். பல வழிகளில் சுகபோகங்களை அனுபவித்து வருகின்றார். இம்முறை மக்கள் அவருக்குத் தக்க பாடம் புகட்டுவார்கள்."

- இவ்வாறு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ்.மாவட்ட வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் வீட்டில் சாராயத் தவறணை நடந்துகொண்டிருக்கின்றது. இங்கே இருக்கின்ற வேட்பாளர்கள் சாராயத் தவறணையை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். அங்கே விபசாரம் நடக்கின்றது. அப்படியானால் வீட்டையும் உடைத்து இவர்களை ஊரை விட்டே ஓட ஓடத் துரத்தவேண்டும்" எனவும் அவர் வலியுறுத்தினார்.

வவுனியாவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"தலைவர் கைகாட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு; அதனால் வாக்களிக்கவேண்டும் என்கிறார்கள். அப்படியானால் ஜெயசிக்குறு நடவடிக்கையில் பங்கெடுத்த கருணாவைத் தலைவர் பிரபாகரன் அன்று பாராட்டியிருந்தார். அவருக்கு விருதும் வழங்கப்பட்டது. அப்படியானால் தலைவர் கைகாட்டிய கருணாவை நீங்களும் நாங்களும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றோமா? அதுபோலவே கூட்டமைப்பும் வீட்டுச் சின்னமும் இருக்கின்றன.

செல்வம் அடைக்கலநாதன் சொல்கின்றார் வீட்டைக் காப்பாற்ற வேண்டுமாம். தேர்தல் தோல்வியுடன் இந்தியா சென்ற அவரை வசந்தன் எம்.பி. இறந்தபின்னர் நாம் போய் அழைத்து வந்தோம். இன்று 20 வருடங்கள் இராஜாபோல் பதவியில் இருக்கின்றார். இம்முறை மக்கள் அவருக்கு வழங்கும் தீர்ப்பை நீங்கள் பார்ப்பீர்கள்.

இந்த வீட்டில் சாராயத் தவறணை நடந்துகொண்டிருக்கின்றது. இங்கே இருக்கின்ற வேட்பாளர்கள் சாராயத் தவறணையை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். அங்கே விபசாரம் நடக்கின்றது. அப்படியானால் வீட்டையும் உடைத்து இவர்களை ஊரை விட்டே ஓட ஓடத் துரத்தவேண்டும்.

தமிழரசுக் கட்சியை விட்டு நீங்கள் வரமாட்டீர்கள் என்று ரெலோ கூட்டத்தில் சண்டையிடுவார் வினோநோகராதலிங்கம். அவரிடம் கேட்கிறேன் பழசுகளை மறந்துவிட்டீர்களா. அத்துடன் விட்டு விடுகின்றேன். ஏனெனில் இம்முறையும் நீங்கள் தோல்விதான். அதனால் உங்களைப் பெரிதாக அடிக்க விரும்பவில்லை.

மாவை சேனாதிராஜாவுடன் 45 வருடங்கள் அரசியலில் ஈடுபட்டவன் நான். தனிப்பட்ட முறையில் அவர் நல்லவர். ஆனால், முதுகெலும்பில்லாதவர். டம்மியான பொம்மை அவர். நடைமுறையில் தமிழரசுக் கட்சியின் தலைவராகவும், கூட்டமைப்பின் தலைவராகவும் சுமந்திரனே செயற்படுகின்றார்.

அது தொடர்பில் வாய் திறக்க அங்கத்துவக் கட்சிகள் தயாரில்லை. ஏனெனில், இவர்களில் பலர் சுமந்திரனிடம் அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட ரீதியாகவும் கடமைப்பட்டிருக்கின்றார்கள். மறுக்க முடியுமா அவர்களால்?

சின்னப்பொடியன் தம்பி மயூரன் சுமந்திரனுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினார். இன்று சார்ள்ஸ் நிர்மலநாதனுடன் கூட்டுச் சேருவதற்காகச் சமரசமாகின்றார். அதுபோலவே சிவமோகனும் தமிழரசுக் கட்சியில் சேர்ந்தார். இந்தத் துரோகங்கள் எல்லாம் எங்கே போய் முடியப்போகின்றது. இவர்களுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும்.

சுமந்திரனின் வடமராட்சி வீட்டில் ரணிலுக்கு இளநீரும் நுங்கும் வெட்டிக்கொடுத்தனர். ஆனால், மக்களுக்கு எதனைப் பெற்றுக்கொடுத்தனர். மற்றையவர் மகளின் பிறந்த தினத்துக்கு ஐனாதிபதியை அழைத்து கேக்வெட்டினார். இதுபோல் ஊரவர் வீட்டு பிள்ளைகளை நினைத்தார்களா?

ரிஷாத் பதியுதீன் கோரப்பிடிக்குகுள்ளே வன்னி சிக்கியிருக்கின்றது. அவருக்கு ஆயிரக்கணக்கான தமிழர்கள் வாக்களித்துள்ளார்கள். இனிமேல் ஒருவரினது வாக்குக்கூட ரிஷாத் அணிக்கு வழங்கப்படக்கூடாது.

ஐயா மஸ்தான்கூட படுகொலையாளர்களான கொலைகாரக் கும்பலுக்கு ஆதரவு வழங்குகின்றார். நீங்கள் செய்யும் மாட்டு வியாபாரமும் கொலைதான். எனவே, ஓய்வுபெற்றுவிட்டு மாட்டிறைச்சியைக் கொழும்புக்கு அனுப்பும் வழியைப் பாருங்கள். அரசியலில் உங்களுக்கு இடமில்லை.

சில முன்னாள் போராளிகளும் கூட்டமைப்புடன் நிற்கின்றார்கள். அவர்கள் குறுக்கால வந்தார்களோ நேராக வந்தார்களோ தெரியவில்லை. நாம் போராளிகளையும், போராட்டத்தையும் மதிக்கின்றோம். ஆனால், நீங்கள் கோட்டாவுடன் நிற்கிறீர்கள், மஹிந்தவுடன் நிற்கிறீர்கள். தற்போது கூட்டமைப்புடன் நிற்கிறீர்கள். சரியான இடத்தில்தான் நிற்கிறீர்கள். ஏனெனில் எல்லாமே ஒன்றுதான்.

எமது மக்கள் நெருக்கடியான நிலையில் தற்போது இருக்கின்றார்கள். எனவே, சரணாகதி அரசியலை நாம் செய்யமுடியாது. இந்தநிலையில் கூட்டமைப்புக்கு வாக்களித்தால் விளக்குப்பிடித்துக்கொண்டுபோய் கிணற்றுக்குள் விழுவதாகவே அர்த்தம்.

இன்று திருகோணமலையில் சம்பந்தன் தோற்கடிக்கப்பட்டு எமது வேட்பாளரான ரூபன் வெற்றிபெறுவதற்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. சம்பந்தன் தலைமையில் இருக்கின்ற இந்த அணி அலிபாபாவும் நாற்பது திருடர்களைப்போலவே வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளனர். எனவே, தமிழ் மக்கள் தெளிவான தீர்ப்பை வழங்கவேண்டும்" - என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE