Tuesday 16th of April 2024 07:01:46 PM GMT

LANGUAGE - TAMIL
-
6 வாரங்களில் 80 இலட்சம் பேருக்கு கொரோனா;  ஒன்றரை மாதங்களில் இருமடங்காக அதிகரித்தது!

6 வாரங்களில் 80 இலட்சம் பேருக்கு கொரோனா; ஒன்றரை மாதங்களில் இருமடங்காக அதிகரித்தது!


கடந்த 6 வாரங்களில் கொரோனா தொற்று இருமடங்காக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தொற்றுநோய் குறித்து மீளாய்வுகளைச் செய்வதற்காக ஜூலை-30 வியாழக்கிழமை அவசரக் குழுவை மீண்டும் கூட்டவுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் நேற்று செய்தியாளா்களிடம் கூறினார்.

கடந்த ஜனவரி-10 ஆம் திகதி கொரோனா தொற்று நோயை சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. ஜூலை-30 ஆம் திகதி அவசர நிலை அறிவிக்கப்பட்டு 6 மாதங்கள் ஆகின்றன. இவ்வாறான நிலையிலேயே அவசரக் குழுவை மீண்டும் கூட்டவுள்ளதாக கெப்ரேயஸ் கூறினார்.

இதுவரை கிட்டத்தட்ட 16 மில்லியன் கொரோனா தொற்று நோயாளா்கள் உலகெங்கும் பதிவாகியுள்ளனர். உலகளவில் 640,000 போ் இறந்துள்ளனா் எனவும் கெப்ரேயஸ் இணையவழி செய்தியாளா் சந்திப்பில் தெரிவித்தார்.

சர்வதேச சுகாதார ஒழுங்குமுறைகளின் கீழ் உலகளாவிய சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்ட ஆறாவது சந்தர்ப்பம் இதுவாகும். ஆனால் தற்போதைய தொற்று நோய் நெருக்கடி முன்னொருபோதும் இல்லாத வகையில் மிகவும் கடுமையானது என்று அவர் கூறினார்.

தொற்றுநோய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது எனவும் தெரிவித்த அவா், கடந்த ஆறு வாரங்களில், உலகளாவிய மொத்த தொற்றுக்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.

எனினும் பல நாடுகளில் கொரோனா தொற்றை அடக்கி, உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் தேவையான அடிப்படை நடவடிக்கைகள் கூட எடுக்கப்படவில்லை.

தொற்று நோயாளிகளைக் கண்டறிந்து தனிமைப்படுத்தல், பரிசோதனைகளை அதிகரித்தல், தொடர்புத் தடமறிதல் என்பன இந்த நோயைக் கட்டுப்படுத்துவதில் முக்கியமானவை.

இந்த ஆலோசனையை கவனமாகவும் தொடர்ச்சியாகவும் பின்பற்றிய கம்போடியா, நியூசிலாந்து, ருவாண்டா, தாய்லாந்து, வியட்நாம், பசிபிக் மற்றும் கரீபியன் தீவுகள் போன்றன பெரிய அளவிலான தொற்றுப் பரவலைத் தடுப்பதில் வெற்றி கண்டுள்ளன.

கனடா, சீனா, ஜேர்மனி மற்றும் கொரியா குடியரசு போன்ற நாடுகள் தொற்று நோயைக் சிறப்பாகக் கையாண்டு கட்டுப்படுத்தியுள்ளன எனவும் உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்தார்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE