Monday 25th of January 2021 09:45:45 AM GMT

LANGUAGE - TAMIL
-
அவுஸ்திரேலியாவில் பல வாரங்களாக அவசர  மருத்துவ சிகிச்சை மறுக்கப்படும் தமிழ் அகதி பிரியா!

அவுஸ்திரேலியாவில் பல வாரங்களாக அவசர மருத்துவ சிகிச்சை மறுக்கப்படும் தமிழ் அகதி பிரியா!


இந்தியப் பெருங்கடலில் அவுஸ்திரேலிய கட்டுப்பாட்டில் உள்ள கிறிஸ்துமஸ் தீவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் புலம்பெயர்ந்த குடும்பத்தின் தாயார் பிரியா முருகப்பனுக்கு ஒரு மாதத்திற்கும் மேலாக முறையான மருத்துவ சிகிச்சை மறுக்கப்பட்டதாக குடும்ப வழக்கறிஞர்களும் நண்பர்களும் தெரிவித்துள்ளனர்.

இரண்டு வாரங்களுக்கும் மேலாக கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட பிரியா, இறுதியாக ஜூலை 19 அன்று கிறிஸ்துமஸ் தீவிலிருந்து மேற்கு அவுஸ்திரேலியாவின் பேர்த்திற்கு (Perth) சுமார் 2,700 கிலோமீட்டர் தொலைவில் கொண்டு செல்லப்பட்டார்.

அப்படியிருந்தும், இறைச்சி ஆலையில் பணிபுரியும் கணவர் நடேஸ் மற்றும் இரண்டு மகள்களான 4 வயதான கோபிகாவும் 3 வயதான தருணிக்காவும் அவருடன் வெளியேற அனுமதிக்கப்படவில்லை.

பிரியா முருகப்பன் தனது குடும்பத்துடன் மத்திய குயின்ஸ்லாந்து கிராமப்புற நகரமான பிலோலா (Biloela) வில் வசிக்கும் தொழிலாளர் வர்க்க குடும்பத்தினர் மத்தியில் பரவலான ஆதரவு இருந்தபோதிலும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் விடியற்காலையில் அவர்கள் வீட்டிலிருந்து கைதுசெய்யப்பட்டு, பிரதமர் ஸ்கொட் மொறிசன் அரசாங்கத்தால் தொடர்ந்து தடுத்து வைத்து இழிவுபடுத்துவதோடு, நாடுகடத்த முயற்சிக்கிறது.

தாராளவாத-தேசிய அரசாங்கம் பிரியாவுக்கு அவசர மருத்துவ சேவையை மறுப்பது என்பது, முந்தைய தொழிற் கட்சி அரசாங்கத்தைப் போலவே, அது கடுமையாக அமுல்படுத்திய அகதிகளுக்கு எதிரான பிற்போக்குத்தனமான கொள்கை பற்றிய மற்றொரு குற்றச்சாட்டு ஆகும். அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்கள் அகதிப் படகுகளை விரட்ட இராணுவத்தை பயன்படுத்தியுள்ளதுடன் மற்றும் புகலிடம் கோருவோர் அனைவரையும் தொலைதூர தீவுகளில் தடுத்து வைத்துள்ளன.

குடும்பத்தின் வழக்கறிஞர்களான கரினா ஃபோர்ட் (Carina Ford) சிறப்பு ஒளிபரப்பு சேவை (SBS) செய்தியிடம், ஜூன் நடுப்பகுதியில் இருந்து பிரியாவுக்கு வலி இருந்தது என்றும், சிறிய கிறிஸ்துமஸ் தீவில் உள்ள மருத்துவமனையால் வழங்கமுடியாத அவசரமான CT scan தேவை என்றும் தெரிவித்தார்.

"இந்த scan தேவையா என்பது குறித்து முன்னரே [ஜூன் நடுப்பகுதியில்] ஒரு விவாதம் இருந்தது," என்று ஃபோர்ட் SBS இடம் கூறினார். ஆனால் "அதை ஆரம்பத்தில் செய்யக்கூடாது என்று திணைக்களத்தால் ஒரு முடிவு எடுக்கப்பட்டதால், அவரின் உடல்நிலை மேலும் அதிகரித்தளவில் மோசமாகியது."

நோயின் அறிகுறிகள் தொடர்ச்சியான வாந்தி மற்றும் இடைவிடாத வலியின் நிலையை எட்டியதாக பிரியா SBS இடம் கூறினார். "சமீபத்திய நாட்களில், நான் என் மூக்கு வழியாகவும் வாந்தியெடுத்துக் கொண்டிருந்தேன்," என்று பிரியா கூறினார். தடுத்துவைக்கப்பட்டவர்களுக்கு வெளிநாடுகளில் மருத்துவ சிகிச்சை அளிக்கும் தனியார் நிறுவனமான சர்வதேச சுகாதார மருத்துவ சேவைகளிடம் (International Health and Medical Services - IHMS), பிரியாவுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கிறிஸ்மஸ் தீவு மருத்துவமனையின் மருத்துவர்கள் கோரினர்.

"கிறிஸ்மஸ் தீவு மருத்துவமனையின் மருத்துவர்கள் IHMS மருத்துவர்களுடன் சண்டையிட்டதால் தான் இந்த சிகிச்சையை நான் அவசரமாகப் பெற்றேன்." என்றார் பிரியா. "எனக்கு உடல்நிலை சரியில்லாத ஒவ்வொரு முறையும், IHMS மருத்துவர்கள் ஒருபோதும் என்ன பிரச்சனை என்றுகூட அடையாளம் காண முயற்சிக்கவில்லை, அவர்கள் எனக்கு பனடோல் மற்றும் வலி நிவாரணி மருந்துகளை மட்டுமே கொடுத்தார்கள்" என்றார்.

அரசாங்கத்தின் அவுஸ்திரேலிய எல்லைப்படை, தனது மகள்களுக்கு வீடியோ அழைப்புகளைச் செய்வதிலிருந்து இப்போது தடுத்து வருவதாக பிரியா கூறினார். அவரது குடும்பத்தினருக்கு Wi-Fi கிடைப்பது மறுக்கப்பட்டதால், அவரால் சாதாரண தொலைபேசி அழைப்புகளை மட்டுமே செய்ய முடிந்தது. "எல்லைப் படை அனுமதி அளித்திருந்தால், நான் எனது மகள்களுடன் வீடியோ அழைப்பில் பேச முடியும். அவர்களுடன் பேசும்போது குறைந்தபட்சம் நான் என் குழந்தைகளின் முகங்களையாவது பார்க்க முடியும்" என்றார்.

குடும்பத்தின் சுதந்திரத்திற்காக பிலோலா மக்களால் நடத்தப்பட்ட பிரச்சாரத்தின் தலைவரும் குடும்ப நண்பருமான ஏஞ்சலா ஃபிரெடெரிக்ஸ் ஊடகங்களுக்கு பேட்டியளித்தபோது, பிரியாவை அவுஸ்திரேலிய பெருநிலப்பகுதிக்கு கொண்டு செல்லுமாறு ஒரு மருத்துவர் வலியுறுத்தியதாக கூறினார்.

"கிறிஸ்மஸ் தீவில் ஒரு அற்புதமான மருத்துவர் கொதித்தெழுந்து, அவரை திரும்பவும் தடுப்பு மையத்திற்கு அனுப்புவதற்காக வைத்தியசாலையில் இருந்து வெளியே அனுப்ப மறுத்துவிட்டார்," என ஃபிரெடெரிக்ஸ் கூறினார். மருத்துவர் அவரை நான்கு முறை பார்த்த பின்னர் இந்த முடிவை எடுத்தார். மேலும் "அவர் பெறும் பராமரிப்பில் திருப்தி அடையாது, பெருநிலப்பகுதிக்கு அவர் செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தினார்".

பிரியாவின் மனச்சுமையின் தாக்கமடைந்த நிலைமையை ஃபிரெடெரிக்ஸ் விவரிக்கிறார். "அவர் இப்போது நிறுவனத்தின் SERCO காவலர்களுடன் தனியாக பெருநிலத்தில் இருக்கிறார் ... மூன்று வயதான சிறுமி தருணிக்கா தனது தாயாரிடமிருந்து பிரிந்திருப்பதால் நம்பமுடியாத துன்பத்தில் உள்ளதுடன், என்ன நடக்கிறது என்று அவளுக்கு புரியவில்லை." என்றார்.

கடந்த வியாழக்கிழமை, இந்த கொடுமைக்கு அரசாங்கத்தின் நேரடி ஆதரவு அம்பலமானது. உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் (Peter Dutton) 2GB வானொலியில் குடும்பத்தை தனிப்பட்ட முறையில் கண்டித்தார். பிரியாவுக்கு பெர்த் நகரத்திற்கு வருவதற்காக மத்திய அரசு தனிப்பட்ட விமானத்தை வழங்கியது மற்றும் அவரது பரிசோதனைகளில் மருத்துவ பிரச்சினைகள் எதுவும் இல்லை என்று அவர் கூறினார்.

குடும்பம் எதிர்கொள்ளும் பயங்கரமான நிலைமைகளுக்கு பிரியா மற்றும் நடேசை குற்றம் சாட்டிய டற்ரன் பின்வருமாறு கூறினார்: “இது அவர்களால் சொந்தமாக உருவாக்கப்பட்ட நிலைமை, இது நகைப்புக்குரியது, இது அவர்களின் குழந்தைகளுக்கு நியாயமற்றது. மேலும் இது இந்த நடைமுறையை குறுக்கறுக்கலாம் என்ற ஒரு மிகமோசமான செய்தியை மற்றவர்களுக்கு அனுப்புகிறது”.

நீதிமன்றங்கள் மூலம், குடும்பம் "வேடிக்கையான விளையாட்டுகளை விளையாடுவதாக" டற்ரன் குற்றம்சாட்டினார். "அவர்கள் அகதிகள் அல்ல, அவர்கள் தங்க முடியும் என்பதை உறுதிப்படுத்த அவர்கள் சட்டப்புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு தந்திரத்தையும் பயன்படுத்தினர்." இது புகலிடம் கோருவோரின் அகதி அந்தஸ்தை மறுக்கும் அரசாங்கத்தின் முடிவுகளை எதிர்த்து மேல்மனுச்செய்ய அவர்களுக்குள்ள அடிப்படை சட்ட உரிமைகள் மீதான வெளிப்படையான தாக்குதலாகும்.

டட்டனின் தாக்குதல் குடும்பத்தின் தற்போதைய நீதிமன்ற வழக்கு விசாரணையின் மீது நேரடியாக தாக்கம் செலுத்துகிறது. அவர்கள் நாடுகடத்தப்படுவது நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்று ஒரு மத்திய நீதிமன்ற நீதிபதி ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தார். ஏனெனில் இளைய மகள் தரூணிக்காவின் ஒரு பாதுகாப்பு குடியுரிமை விண்ணப்ப விசாரணை நியாயமற்றமுறையில் மறுக்கப்பட்டுவிட்டது.

மேல்முறையீட்டு தீர்ப்பிற்காக குடும்பம் இன்னும் காவலில் உள்ளது. அரசாங்கம் ஏப்ரல் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்கிறது. அதே நேரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து குடும்பம் மேல்முறையீடு செய்து வருகிறது. ஏனெனில் தரூணிக்காவிற்கு அவரின் குடியுரிமை விண்ணப்பம் குறித்து தானாகவே விசாரிப்பதற்கு உரிமை இல்லை.

குடும்பத்திற்கு எதிரான டட்டனின் கண்டனம் யதார்த்தத்தை தலைகீழாக்குகின்றது. உண்மையை கூறுவதானால், குடும்பம் புகலிடம் கோருவதற்கான உரிமையை மறுத்து அவர்களை மீண்டும் இலங்கைக்கு கட்டாயப்படுத்தி அனுப்ப “புத்தகத்தின் ஒவ்வொரு தந்திரத்தையும்” பயன்படுத்த அரசாங்கமே முயன்றது.

கடைசி நிமிட நீதிமன்ற உத்தரவு, இலங்கைக்கு உடனடியாக நாடுகடத்தப்படுவதை நிறுத்தியதால் பிரியாவும் அவரது குடும்பத்தினரும் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கிறிஸ்மஸ் தீவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரசாங்கத்தின் துன்புறுத்தல்களில் இருந்து தப்பி, முறையே 2013 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் பிரியா மற்றும் நடேஸ் வெவ்வேறு நேரங்களில் அவுஸ்திரேலியா வந்தடைந்தனர்.

பிலோலா நகர மக்கள் இக் குடும்பத்தை பாதுகாப்பதற்காக ஒரு தொடர்ச்சியான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர். இது தேசிய மற்றும் சர்வதேச ஆதரவை உருவாக்கியுள்ளது. இக்குடும்பம் அவுஸ்திரேலியாவில் தங்க அனுமதிக்கக் கோரிய ஒரு மனுவில் 200,000 க்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர். மேலும் நாடு முழுவதும் பல ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டுள்ளனர்.

புகலிடம் கோருவோர் மீதான இரு கட்சி தாக்குதலை சாதாரண மக்கள் ஆதரிக்கிறார்கள் என்ற முக்கிய கட்சிகள் மற்றும் பெருநிறுவன பத்திரிகைகளின் இடைவிடாத கூற்றுக்களை இந்த பிரபலமான பதில் மறுத்துள்ளது. பிலோலா இறைச்சி ஆலையில் உள்ள நடேசின் சக தொழிலாளர்கள் மற்றும் ஊரில் உள்ள பிற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்தினரும் வலுவான ஆதரவாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

2012 ஆம் ஆண்டில், கடந்த தொழிற் கட்சி அரசாங்கம் முன்னர் படகில் வந்த புகலிடம் கோருவோர் அனைவரையும் அகதி குடிவரவு அனுமதிக்கு விண்ணப்பிப்பதில் இருந்து தடுத்தது. இது அவர்களை ஒரு நிலையற்ற சட்டநிலையில் வைத்திருந்தது. இதன் மூலம் சமூகத்தில் வாழவும் வேலை செய்யவும் இன்னும் அனுமதிக்கப்படுகையில், ஆனால் எப்போதும் நாடுகடத்தப்படும் அச்சுறுத்தல் அவர்களின் தலையின் மேல்தொங்கிக்கொண்டிருக்கிறது.

ஜூலை 2017 இல், தற்போதைய தேசிய-தாராளவாத அரசாங்கம் தொகையாக நாடுகடத்தப்படுவதை நோக்கி நகர்ந்தது. மொத்தமாக சுமார் 7,500 புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்த நிலையில் சிக்கியுள்ளனர். அப்பொழுது குடிவரவு மற்றும் எல்லை பாதுகாப்பு அமைச்சராக இருந்த டட்டன் அவர்கள் அனைவரையும் “போலி அகதிகள்” என்று பெயரிட்டார்.

இந்த நச்சு சூழ்நிலையின் விளைவாக, குடும்பத்தினரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும் மார்ச் 2018 இல் விடியற்காலையில் நடத்தப்பட்ட சோதனையில், அவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். அவர்கள் இவ்வாறு நடத்தப்படுவது குறிப்பாக மனிதாபிமானமற்றது மற்றும் அரசியல்ரீதியாக பழிவாங்கும் செயலாகும். அவர்கள் தங்கள் வீட்டிலிருந்து பிரிக்கப்பட்டு, பிலோலாவில் உள்ள அவர்களின் முக்கிய ஆதரவு எதுவும் இல்லாது செய்யப்பட்டுள்ளனர். கிறிஸ்துமஸ் தீவு அவர்களின் சொந்த ஊரிலிருந்து கிட்டத்தட்ட 5,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தஞ்சம் கோருவோர் வேறு எவரும் தற்போது அங்கு தடுத்து வைக்கப்படவில்லை, அவர்களை மனித தொடர்புகளிலிருந்து தனிமைப்படுத்துகிறார்கள்.

இந்த தண்டனை அணுகுமுறை உலகளவில் அகதிகள் மீதான சர்வதேச தாக்குதலின் ஒரு பகுதியாகும். ஐரோப்பாவில், முட்கம்பிகள் மற்றும் அகளிகளை எதிர்கொள்ளும் சிறை முகாம்களில் பல்லாயிரக்கணக்கானோர் தவிக்கின்றனர். அமெரிக்காவில், 23,000 க்கும் மேற்பட்ட தடுத்துவைக்கப்பட்ட குடியேற்றவாசிகளில் COVID-19 மரணங்கள் தொடர்கின்றன. முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்புமுறைக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாகவும், முதலாளித்துவத்தால் உலகம் போட்டியிடும் தேசிய அரசுகளாக பிரிக்கப்படுவதற்கும் எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாகவும், அகதிகள் பாதுகாப்பிற்கு சர்வதேசரீதியாக தொழிலாளர்கள் முன்வரவேண்டும்.


Category: உலகம், புதிது
Tags: ஆஸ்திரேலியாபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE