Wednesday 24th of April 2024 07:11:17 PM GMT

LANGUAGE - TAMIL
-
எங்கே தொடங்கியது இன மோதல் - 14 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 14 (வரலாற்றுத் தொடர்)


“மகாவம்சத்தின்படி காலம் காலமாக தமிழர்கள் ஆக்கிரமிப்பாளர்களாகவே விளங்கிவந்துள்ளனர். அதேபோன்றே முஸ்லீம்களும் பொருளாதார அடிப்படையிலான ஆக்கிரமிப்பாளர்களே. இந்தியர்களும் அவ்வாறானவர்களே. அதேவேளையில் ஆங்கிலேயர் படுமோசமான எதிரிகள்”

ஆங்கில ஆட்சியாளர்களின் அனுசரணையுடன் வேகமாகவும் வலிமையுடனும் மிஷனரிகளால் மேற்கொள்ளப்பட்டு வந்த மதமாற்று நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களையும் பௌத்த சிங்கள மறுமலர்ச்சி இயக்கத்தை முன்னெடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் திசைமாற்றி தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இந்தியர்களுக்கும் எதிரான இயக்கமாக மாற்றிய கைங்கரியம் அநகாரிக தர்மபால தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் இவை ‘பௌத்த சிங்களய’ என்ற பத்திரிகை மூலம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டு வந்த அநகாரிக தர்மபாலவவின் வாசகங்களாகும்.

தங்கள் புனிதமான பௌத்த சிங்கள மறுமலர்ச்சி இயக்கம் இனக்குரோத நடவடிக்கைகளாக மாற்றப்பட்ட நிலையில் ஒல்கொட், புல்ஜென்ஸ், லெட்பீட்டர் முதலியோர் விரக்தியுற்று நாட்டைவிட்டு வெளியேறிவிட்டனர். அவர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்பவேவில்லை.

1906ல் ‘பௌத்த சிங்களய’ பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட பின்பு ஏனைய இனங்களுக்கு எதிரான வெறுப்புணர்வு பிரசாரம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்தது. அப்பத்திரிகை மூலம் மாட்டிறைச்சி உண்பவர்கள் இழிவானவர்களென அநகாரிக தர்மபால மேற்கொண்ட பிரசாரத்தை ஒல்கொட் ஏற்றுக்கொள்ளவில்லை. கத்தோலிக்கர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் எதிரான இத்தகைய பிரசாரங்களை உடன் நிறுத்தும்படி வலியுறுத்தினார். மேலும் புத்தர் ஞானம் பெற்றதாக கருதப்பட்ட புத்தகாய இந்துமதபீட தலைவரான சங்கராச்சாரியாரின் கட்டுப்பாட்டிலேயே அப்போது இருந்து வந்தது. அங்கு செல்லும் இந்து மக்களும் புத்தரை இந்து மதக் கடவுள்களுக்கு சமமாக வணங்கி வந்தனர். இந்த நிலையில் 1891ல் புத்தகாயவை பௌத்த நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அநகாரிக தர்மபாலாவால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்து பௌத்த மத தத்துவங்களை முதன்மைப்படுத்தி இனமத ஐக்கியத்தை உருவாக்கவும், மதங்களுக்கிடையேயான சமரச உணர்வை மேம்படுத்தவும் பிரம்மஞான சங்கத்தை கட்டிவளர்த்த ஒல்கொட் இவ்விரு விடயங்களிலும் அநகாரிக தர்மபாலாவுடன் முரண்பட்டார். அதைக்காரணம் காட்டி ஒல்கொட் துரோகி என மக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறே பௌத்த ஆங்கிலப் பாடசாலைகளை திறம்பட நிர்வகித்து அவற்றை பௌத்த கலாச்சார மையங்களாக நிலைப்படுத்திய லெட்பீட்டர் மீதும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இருவரும் விரக்தியுற்று வெளியேறிய நிலையில் அநகாரிக தர்மபால தன்னை ஒரு சிங்கள மக்களின் வீர நாயகனாக தோற்றப்படுத்தும் வகையில் தமிழர்களையும் முஸ்லீமு;களையும் கேவலமானவர்களெனவும், இழிந்தவர்களெனவும் திட்டுவது மட்டுமின்றி அவர்கள் தமது மத கலாச்சார நடவடிக்கைகளை பின்பற்றுவதைச் சுட்;டிக்காட்டி அவர்கள் இனப்பற்றுமிக்கவர்களெனவும் சிங்களவர்கள் சோம்பேறிகளாக பின்னடைந்தவர்களெனவும் தனது இனத்தையே திட்டி உசுப்பேற்றி வந்தார். அவ்வகையில் ஏனைய இனங்கள் மீது பொறாமையூட்டி அதன் மூலம் வெறுப்பை வளர்ப்பதில் தீவிரம் காட்டினார். இவர் ‘பௌத்த சிங்களய’ பத்திரிகையில் “பிரித்தானியர்களுக்கு ஜேர்மனியர்கள் எப்படியோ சிங்களவர்களுக்கு முஸ்லீம்களும் அப்படியே. சிங்களவர்களைப் பொறுத்த வரையில் முஸ்லீம்கள் இனத்தாலும் மொழியாலும் மதத்தாலும் அந்நியர்களே. பௌத்த சமயம் இல்லாவிட்டால் சிங்களவர்களுக்கு மரணம் மட்டுமே எஞ்சியிருக்கும். முஸ்லீமு;களுக்கு எதிராக முழுத்தேசமுமே எழுச்சி பெற்றுவிட்டது”இ எனப்பகிரங்கமாகப் பிரகடனம் செய்தார். மேலும் சிங்கள ஜாதிய என்ற பத்திரிகை மூலம் அவர் முஸ்லீம்களுடனும் கொச்சியர்களுடன் வர்த்தகம் உட்பட சகல கொடுக்கல் வாங்கல்களையும் சிங்களவர்கள் நிறுத்தவேண்டுமேன அறைகூவல் விடுத்தார்.

ஏற்கனவே வடஇந்தியாவிலிருந்தும் ஆப்கானிஸ்தானிலிருந்தும் வர்த்தக நோக்கத்துடன் இங்கு வந்து குடியேறிய முஸ்லீம்களுடனும், 8ம் நூற்றாண்டில் கடல் வணிகம் மூலமாக இங்கு குடியேறிய முஸ்லீம்களுடனும் கரையோர சிங்கள வர்த்தகர்களால் போட்டிபோட முடியவில்லை. அதேபோன்று ஆங்கிலேயர்கள் தேயிலைத் தோட்டங்கள் அமைத்த காரணத்தால் தங்கள் நிலங்களை இழந்த கண்டிய பிரபுக்களுடன் நகர்ப்புற வர்த்தகங்களில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. எனவே அவர்கள் அநகாரிக தர்மபாலவின் முஸ்லீம் எதிர்ப்பு பிரசாரங்களுக்கு பலவிதங்களிலும் ஆதரவு வழங்கி வந்தனர்.

இன்னொருபுறம் ஆப்கானிய வடஇந்திய முஸ்லீம்கள் மேற்கொண்டு வந்த வட்டித்தொழில் காரணமாக அவர்கள் மீது வெறுப்புணர்வை சிங்கள மக்கள் மத்தியில் இலகுவாக ஏற்படுத்த முடிந்தது. அவ்வகையில் 1886ல் இடம்பெற்ற சிங்கள முஸ்லீம் கலவரமும், 1890ல் இடம்பெற்ற களுத்துறை அரச மரக் கலவரமும் குறிப்பிடத்தக்கவையாக இருந்தபோதிலும் உரிய நேரத்தில் ஆங்கில அரசு நடவடிக்கை எடுத்த காரணத்தால் அவை நாடுமுழுக்கப் பரவவில்லை. எனினும் பௌத்த சிங்களய, சிங்கள ஜாதிய போன்ற பத்திரிகைகள் மூலமாகவும் மாட்டுவண்டி ஒன்றில் மாட்டிறைச்சி உண்பதற்கெதிராக, மதுப்பாவனைக்கு எதிராகவும் சுலோகங்கள் தாங்கி நாடெங்கும் ஊர்வலம் சென்றதன் மூலமும் முஸ்லீம்களுக்கும் கிறீஸ்தவர்களுக்கும் எதிரான பிரசாரங்கள் சிங்கள மக்களை வெறுப்பூட்டும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

1ம் உலக யுத்த காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவிய நிலையில் முஸ்லீம் வியாபாரிகள் பொருட்களை அதிக விலையில் விற்று மேற்கொண்ட கருப்புச்சந்தை வியாபாரம் காரணமாகவும் முஸ்லீம்கள் மீது ஏற்படுத்தப்பட்ட வெறுப்பு மேலும் வலுவடைந்தது. இன்னொருபுறம் முஸ்லீம் வட்டிக்காரர்கள், வட்டிப்பணத்துக்காக சிங்களவர்களின் காணிகளை அபகரித்ததாகவும், சிங்களப் பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்துவதாகவும் வதந்திகள் பரப்பப்பட்டன.

கண்டி கம்பளை ஆகிய பகுதிகளில் முஸ்லீம்களின் வர்த்தக நிலையங்கள் குடியிருப்புகள் அமைந்த பிரதேசங்களில் பல பள்ளிவாசல்கள் அமைக்கப்பட்டன. மகாபராக்கிரமபாகுவால் அமைக்கப்பட்ட 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த வறக்காகொட விகாரையின் பெரஹரா செல்லும் பாதையிலும் இரு பள்ளிவாசல்கள் அமைக்கப்பட்டன. வறக்காகொடவிலிருந்து கம்பளை கங்காதிக்க விகாரை வரையிலான பெரஹர செல்லும் பாதையில் இரு பள்ளி வாசல்களும் ஒரு தேவாலயமும் அமைந்திருந்தன. அதன்படி பள்ளிவாசல், தேவாலயம் என்பன அமைந்துள்ள பகுதிகளில் பெரஹரா செல்லும்போது இருபுறங்களிலும் 100 யார் தூரத்துக்கு அமைதிகாக்க வேண்டும் என உடன்படிக்கையொன்று ஏற்படுத்தப்பட்டிருந்தது. 1907 தொடக்கம் 1911 வரை எவ்வித பிரச்சினையும் ஏற்படவில்லை. 1912ல் உடன்படிக்கை ரத்துச் செய்யும்படி தலதா மாளிகையின் நிலாமை வழக்குத் தொடுத்தார். நீதி மன்றம் அக்கோரிக்கையை ஏற்க மறுத்து அமைதி காக்கும் தூரத்தை 100 இலிருந்து 50 ஆகக்குறைத்து தீர்ப்பளித்தார். அதற்கு இருதரப்பினரும் உடன்படவில்லை.

1915ம் ஆண்டு மே மாதம் ஊர்வலம் பள்ளிவாசலின் முன்பு அமைதி பேணாது சென்ற போது பள்ளிவாசலில் இருந்து கல்லெறி மேற்கொள்ளப்பட்டது. அதில் ஆரம்பித்த மோதல்கள் மெல்ல மெல்ல வரிவடைந்து நாடெங்கும் பெரும் கலவரமாக வெடித்தது.

கண்டிக் கலவரம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இக்கலவரம் நாடுமுழுவதும் பரவி 38 முஸ்லீம்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். 3000 இற்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள், குடியிருப்புகள் என்பன அழிக்கப்படுகின்றன. ஆங்கில அரசு, இராணுவச் சட்டத்தை பிரகடனம் செய்து பல சிங்களத் தலைவர்களை கைது செய்கிறது. சிலருக்கு மரண தண்டனையும் நிறைவேற்றப்படுகிறது. அநகாரிக தர்மபால வீட்டுக்காவலில் வைக்கப்படுகிறார்.

சிங்கள பௌத்த மறுமலர்ச்சி இனங்களுக்கு எதிரான கலவரமாக 1883ல் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் அது 1815ல் முஸ்லீம்களுக்கு எதிரான இனவழிப்பு கலவரமாக முன்னெடுக்கப்பட்டது. இன்று நிலவும் சிங்கள பௌத்த பேரினவாதத்தினதும் ஏனைய இனங்கள் மீதான மேலாதிக்கம் செலுத்தும் இனவெறிப் போக்கும் அத்தகைய கலவரங்கள் மூலம் கருக்கொண்டு தற்சமயம் விஸ்வரூபம் எடுத்துள்ளதென்பதை அவதானிக்கமுடியும்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE