Thursday 25th of April 2024 10:57:40 AM GMT

LANGUAGE - TAMIL
-
நாங்கள் ஒன்றிணைந்தால் ராஜபக்ச அரசை தோற்கடிக்கலாம்;  ரணில்!

நாங்கள் ஒன்றிணைந்தால் ராஜபக்ச அரசை தோற்கடிக்கலாம்; ரணில்!


நாம் ஒன்றிணைந்து செயலாற்றினால் ராஜபக்ச அரசைத் தோற்கடிக்க முடியும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

யக்கலவில் நேற்று நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"இலங்கையின் மிகவும் பழமைவாய்ந்த கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கடந்த காலப்பகுதியில் நடைபெற்ற 15 பொதுத்தேர்தல்களிலும் போட்டியிட்டிருக்கின்றது. நாட்டில் வேறெந்தவொரு கட்சிக்கும் இத்தகைய வரலாறு இல்லை. ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தமையால் இந்தத் தேர்தலில் வெற்றிபெற்று எவ்வாறேனும் நாடாளுமன்றத்துக்குள் நுழைய விரும்புகின்றோம் என்று சிலர் நினைக்கின்றார்கள். ஆனால், இந்தத் தேர்தலுக்கு எவ்வாறேனும் நேரடியாக முகங்கொடுக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாக இருந்தது.

இவ்வாறானதொரு நிலையில் கொரோனா வைரஸ் பரவலால் நெருக்கடி நிலையொன்று உருவாகும் என்று எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. கட்சியை விட்டுச் சென்ற சிலர், கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் முன்னரே அறிந்திருந்தால் கட்சியிலிருந்து பிரிந்து சென்றிருக்க மாட்டோம் என்று இப்போது என்னிடம் கூறுகின்றார்கள். ஏனெனில் இந்தப் பாரதூரமான நெருக்கடி நிலைக்கு முகங்கொடுக்கக்கூடிய இயலுமை ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாத்திரமே இருக்கின்றது.

இம்முறை பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் கட்சிக்குள் காணப்பட்ட பிரச்சினைகளுக்கும், கட்சிக்கு வெளியில் காணப்பட்ட பிரச்சினைகளுக்கும் முகங்கொடுக்க வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது. எது எவ்வாறெனினும் தற்போது நாங்கள் 16 ஆவது தடவையாகவும் பொதுத்தேர்தலில் போட்டியிடுகின்றோம்.

இம்முறையும் அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டு பயணிப்பதற்கு நான் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன். பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட விரும்புபவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்குவதற்குத் தயாராக இருந்தேன். ஆனால், யானை சின்னத்திலேயே களமிறங்க வேண்டும் என்றும், அதனை மாற்றமுடியாது என்றும் குறிப்பிட்டேன்.

எனினும், குறித்தவொரு பகுதியினர் கட்சியிலிருந்து வெளியேறிச் சென்றுவிட்டு, தற்போது அவர்களே உண்மையான ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்கள் என்று கூறுகின்றனர். எமது ஐக்கிய தேசியக் கட்சி இலங்கையின் பல்வகைமைத்தன்மையை - அதாவது சிங்கள பௌத்தர்கள் உள்ளிட்ட அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சியாகும்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சிங்கள பௌத்த அடிப்படையைக் கொண்ட கட்சி. இவ்விரு கட்சிகளுக்கும் இடையிலேயே இம்முறை வாக்குகள் பிரியும். வெள்ளையர்கள் இன அடிப்படையில் பிளவுபடுத்திய எமது நாட்டின் பல்வகைமைத்தன்மையை ஏற்பதன் ஊடாகவே அதனை மீண்டும் ஒன்றிணைக்க முடியும். நாட்டின் தலைவர் அனைத்து இன, மதங்களைச் சேர்ந்த மக்களையும் ஒரே விதமாகக் கையாளத் தெரிந்தவராக இருக்கவேண்டும்.

பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கும் அதேவேளை, ஏனைய அனைத்து இன மக்களும் தமது மதத்தைப் பின்பற்றுவதற்கும் மொழியைப் பயன்படுத்துவதற்குமான இடைவெளியை வழங்கவேண்டும். அனைத்து இனத்தவரையும் ஒன்றிணைத்துக்கொண்டு இலங்கையர் என்ற அடிப்படையில் ஒன்றாக முன்னெடுக்கும் பயணத்திலேயே சிங்கள இனத்தின் பாதுகாப்பு வலுவடையும்.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்திருக்கின்றன ரவூப் ஹக்கீம், திகாம்பரம், மனோ கணேசன், ரிஷாத் பதியுதீன் போன்றோர் 'தம்மை வெட்டினாலும் பச்சை நிறமே ஓடும்' என்று கூறுவார்களா? நிச்சயமாக இல்லை. ஆனால், அவர்கள் அனைவரும்தான் உண்மையான ஐக்கிய தேசியக் கட்சியினர் என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஐக்கிய தேசியக் கட்சியின் வரலாற்றில் பல்வேறு பிரச்சினைகள், முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள போதிலும் எவரும் பிரிந்து சென்று இவ்வாறு தனிக்கட்சியை உருவாக்கவில்லை. அது ஐக்கிய தேசியக் கட்சியினரின் நடைமுறையல்ல. நாம் ஒன்றிணைந்து செயலாற்றினால் இந்த அரசைத் தோற்கடிக்க முடியும்" - என்றார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE