;

Sunday 9th of August 2020 02:19:02 AM GMT

LANGUAGE - TAMIL
-
தமிழர்களுக்கான தீர்வை ஐ.தே.க. அரசே வழங்கும்; விஜயகலா மகேஸ்வரன்!

தமிழர்களுக்கான தீர்வை ஐ.தே.க. அரசே வழங்கும்; விஜயகலா மகேஸ்வரன்!


ராஜபக்ஷவினரின் தரப்பு உட்பட தென்னிலங்கை கட்சிகள் பேரினவாதத்தை வெளிபடுத்தி வருகின்ற நிலையில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.கவினால் மட்டுமே தமிழர்களுக்கான நியாயமான அரசியல் தீர்வையும் அபிலாஷைகளையும் பூர்த்தி செய்ய முடியும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார்.

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

கேள்வி:- யாழ்.தேர்தல் களத்தில் தேசியக் கட்சிகளை நிராகரிக்க வேண்டுமென்ற கோஷம் மேலெழுந்தமையானது உங்களின் வெற்றிக்கு குந்தகமாகியுள்ளதா?

பதில்:- முதலாவதாக, யாழ்ப்பாணத்தில் எனது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட மக்கள் கடந்த காலத்தைப் போன்று எம்முடனேயே கைகோர்த்திருக்கின்றனர். ஆகவே, இந்தக் கோசங்கள் தோல்வியின் விளிம்பில் உள்ளவர்களால் வெளிப்படுத்தியவையாகவே கொள்ள வேண்டியுள்ளது. மேலும், ஐக்கிய தேசியக் கட்சியானது கடந்த இரு தசாப்தங்களாக யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தனது பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தியே வருகின்றது. 2000ஆம் ஆண்டு எனது கணவர் மகேஸ்வரன் முதன்முதலாக ஐக்கிய தேசியக் கட்சியில் களமிறங்கியிருந்தார். 2000ஆம் ஆண்டு மற்றும் 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் அவர் யாழ்ப்பாணத்தில் வெற்றி பெற்றிருந்தார். பின்னர் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கொழும்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

அவரது மறைவையடுத்து 2010ஆம் ஆண்டு நான் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டிருந்தேன். மக்கள் என்னை நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்திருந்தனர். 2015ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் நான் முன்னரைவிட அதிகூடிய வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்தேன். கடந்த நான்கரை வருடங்கள் நல்லாட்சி அரச காலத்தில் குடாநாட்டு மக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கியிருந்தேன். ஆகவே, எனது சேவைகளை மக்கள் அங்கீகரிப்பது நிச்சயமானது. இவ்வாறான வெற்றுக்கோசங்களுக்குள் அவர்கள் விலைபோக மாட்டார்கள்.

கேள்வி:- சஜித் பிரேமதாஸ தலைமையிலான அணியினர் கட்சியிலிருந்து வெளியேறி தனித்துப் போட்டியிடுகின்றமையானது பின்னடைவுகளை ஏற்படுத்துவதாக இல்லையா?

பதில்:- சிறுகுழுவினரே வெளியேறிச் சென்றிருக்கின்றார்கள். ஐக்கிய தேசியக் கட்சியானது மூவின மக்களையும் அரவணைத்து ஸ்தாபிக்கப்பட்ட முதலாவது அரசியல் கட்சியாகும். அதற்கென்ற பாரம்பரியங்களும், கொள்கைகளும் தனித்துவமானவை. ஆகவே, சிறுகுழுவினரின் வெளியேற்றம் ஆலமரமாக இருக்கும் ஐ.தே.கவை ஒருபோதும் பாதிக்காது. அதேபோன்று வடக்கிலும் எந்தவிமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அதுபற்றி நாம் அதிகம் அலட்டிக்கொள்ளவும் தேவையில்லை.

கேள்வி:- ராஜபக்ஷ தரப்பினர் பதவிக்கு வந்து ஏழு மாதங்களாகின்ற நிலையில் தற்போதைய ஆட்சி தொடர்பில் தங்களின் பார்வை எவ்வாறாகவுள்ளது?

பதில்:- போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னரும் கூட போர்க்கால சூழல் வாழ்வதைப் போன்றே கடந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் தமிழ் மக்கள் வாழ்ந்தனர். பின்னர் 2015இல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சியில் ஏற்படுத்தப்பட்ட ஜனநாயக வெளியின் காரணமாக சிறுபான்மை மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் அச்சமின்றி நிம்மதியாக வாழ்ந்து வந்தனர்.

ஆனால், தற்போது அந்த நிலைமை முழுவதுமாக மாறியுள்ளது. இறுதிப் போரின்போது உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டிப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டு ஜனநாயக விழுமியங்கள் பின்பற்றப்படாதவொரு சூழலே ஏற்பட்டிருக்கின்றது. விசேடமாக வடக்கில் சிவில் நிர்வாகத்துக்குப் பதிலாக படையினரே வடக்கில் நிர்வாகத்தை நடத்துவது போன்ற நிலைமைதான் உள்ளது.

கேள்வி:- கடந்த ஆட்சிக்காலத்திலும் வடக்கு, கிழக்கில் படையினரின் பிரசன்னம் காணப்பட்டதே?

பதில்:- போர் இடம்பெற்ற பகுதிகளில் தேசிய பாதுகாப்பின் நிமிர்த்தம் படையினர் நிலை கொண்டிருந்தனர். ஆனால், மக்களின் நடமாடும் சுதந்திரத்தைப் பறிக்கவில்லை. அச்சமூட்டும் அடக்குமுறைகளை மேற்கொள்வில்லை. ஆனால், தற்போது நிலைமைகள் தலைகீழாக மாறியுள்ளன.

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான ஏ - 9 பாதையில் புதிதாக சோதனைச் சாவடிகள் முளைத்துவிட்டன. முன்னாள் போராளிகள், பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வீடுகளுக்கு முன்னறிவிப்புக்கள் இன்றி இராணுவம் நேரடியாகச் செல்கின்றது. விசாரணை என்ற பெயரில் அவர்களை அச்சமூட்டுகின்றது. வடக்கு சீருடை, சிவில் உடை தரித்த படைகளால் நிறைந்துள்ளது.

கேள்வி:- கடந்த ஆட்சிக்காலத்தில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு வழங்கப்படுமெனக் கூறினாலும் அது நடைபெறாது காலங்கடத்தப்பட்டுள்ளதல்லவா?

பதில்:- அவ்வாறு இல்லை. இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காகப் பல்வேறு தளங்களில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பொறுப்புக்கூறலை மையப்பபடுத்தி நிலைமாறுகால நீதிப்பொறிமுறைகள் முன்னகர்த்தப்பட்டன. பொருளாதாரத் திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டன. புதிய அரசியலமைப்புக்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு இடைக்கால அறிக்கை வரையில் சென்றிருந்தது.

இருப்பினும் அந்தச் செயற்பாடுகளுக்கெல்லாம் ராஜபக்ஷவினரும், பின்னர் கூட்டரசைக் கலைத்து அவருடன் இணைந்து கொண்ட மைத்திபால சிறிசேனவும் திட்டமிட்டு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தினர். தென்னிலங்கையில் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை இனவிரோதியாகச் சித்தரித்து பிரசாரங்களை மேற்கொண்டனர்.

இத்தகைய நெருக்கடியான நிலைமைகள் இருந்தபோதும் ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டில் இனப்பிரச்சினை தீர்க்கப்படாதுள்ளது. அதற்குரிய தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதனைப் பகிரங்கமாகவும் தெரிவித்து வந்தார்.

தற்போதுகூட, ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐ.தே.க.வினாலேயே தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வு வழங்கப்படும் என்பது உறுதியான விடயமாகின்றது. ஆகவே, ஐ.தே.க. ஆட்சி உருவாகுவதில் தமிழ் மக்களும் பங்காளியாக வேண்டும். எனவேதான் வடக்கிலிருந்து ஐ.தே.கவின் பிரதிநிதித்துவங்கள் பலமாக நாடாளுமன்றத்துக்குச் செல்ல வேண்டியமை இன்றியமையாததாகின்றது. இதனைத் தமிழ் மக்கள் நன்குணர்ந்துகொள்ள வேண்டும்.

கேள்வி:- வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உட்பட பல கட்சிகள் பிரிந்து போட்டியிடுகின்றன. இதனால் ஐ.தே.கவின் யாழ்.மாவட்ட பிரதிநிதித்துவம் பாதிக்கப்படுமா?

பதில்:- தமிழ்த் தலைமைகள் இவ்வாறு பிளவுபட்டமை கவலைக்குரிய விடமாகும். அரசியலுக்காக இவ்வாறு பிளவுபட்டவர்கள் எவ்வாறு தமிழ் மக்களின் நலன்களை மேம்படுத்தும் வகையில் செயற்படப் போகின்றார்கள் என்றொரு கேள்வி எழுகின்றது. ஆகவே, தமது அரசியல் சுயநலன்களைக் கருத்தில்கொண்டு செயற்பட்டால் அது தமிழ் மக்களின் எதிர்காலத்துக்குப் பாதகமாகவே அமையும்.

யாழ்.மாவட்டத்தைப் பொறுத்தவரையில் பிரிந்து நின்று போட்டியிட்டாலும் தமிழ்ப் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்படும். ஆனால், ஏனைய பகுதிகளில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்துக்குப் பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போதைய நிலையில் ஜனாதிபதியும் அரசாங்கமும் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிப்பதற்கும் பிரிவினைகளை ஏற்படுத்தவதற்கும் முனைந்து வருகின்றார்கள். அத்தகையதொரு நிலையில் இவ்வாறான பிளவுகள் அரசாங்கத்தின் நோக்கத்துக்குச் சாதமாகவே அமைந்துவிடும் ஆபத்துள்ளது.

மேலும் கடந்த காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகள், கோரிக்கைகள் என்ற வருகின்றபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து குரல் கொடுத்திருக்கின்றேன்; செயற்பட்டிருக்கின்றேன். அவ்விதமாக கட்சி ரீதியான வேறுபாடுகளைத் தவிர்த்து மக்களை மையப்படுத்திய பொது வேலைத்திட்டங்களில் ஒன்றிணைய வேண்டியது மிகவும் அவசியமானதாகின்றது.

கேள்வி:- ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளிகளான ஈ.பி.டி.பி., ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி உள்ளிட்டவை தனித்துக் களமிறங்கியுள்ளமை தேசிய கட்சியான ஐ.தே.கவுக்கு குடாநாட்டில் சவாலாக இல்லையா?

பதில்:- இவை அனைத்துமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. தேர்தல்களில் இத்தகையவர்கள் போட்டியிட்டாலும் அனைவரும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு முண்டுகொடுப்பவர்களாகவே இருப்பார்கள். பொதுஜன பெரமுனவின் ஆலோசனைக்கு அமையவே இவர்கள் தனித்தனியாகக் களமிறக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் ராஜபக்ஷவினரின் முகவர்கள் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கைபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE