Friday 19th of April 2024 09:09:32 PM GMT

LANGUAGE - TAMIL
-
வட்டுமோடிக் கூத்தாக “தர்மபுத்திரன்” - நா.யோகேந்திரநாதன்

வட்டுமோடிக் கூத்தாக “தர்மபுத்திரன்” - நா.யோகேந்திரநாதன்


வட்டுக்கோட்டையில் ஆடப்பட்டுவரும் நாட்டுக்கூத்துக்கள் வட மோடிக்கூத்துகளுக்குரிய பொதுவான அம்சங்களைக் கொண்டிருந்த போதிலும் தாளக்கட்டுக்கள், ஆட்டங்கள், சொற்பிரயோகங்கள் என்பவற்றில் சில தனித்துவமான அம்சங்களைக் கொண்டிருக்கின்றன. எனவே இதை வட்டுமோடி என அழைக்கின்றனர்.

இந்த வட்டுமோடி கூத்துகளில் தருமபுத்திரன், விராடன் கூத்து, குருக்கேத்திர நாடகம் பரம்பரை பரம்பரையாக ஆடப்பட்டு வருபவையாகும். இந்த மூன்று கூத்துக்களும் மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றில் தருமபுத்திரன் முழு மகாபாரதக்கதையைக் கொண்டதாகவும், குருக்கேத்திரன் கூத்து பாண்டவர் வனவாசக் காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களைக் கொண்டு அமைந்தவையாகும். தருமபுத்திரன் மகாபாரதக் கதையை முழுமையாகக்கொண்டிருப்பதாலும், ஏனையவை பாரதக் கதையின் பகுதிகளைக் கொண்டிருப்பதாலும் தருமபுத்திரன் கூத்து முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதே வேளையில் அளிக்கை விடயத்தில் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுக்காத அளவுக்கு நாட்டுக்கூத்துகளுக்குரிய தரம் பேணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

வட்டுக்கோட்டையில் தர்மபுத்திரன் கூத்து எப்போது முதலில் ஆடப்பட்டதென்றோ, அல்லது எங்கிருந்து கொண்டு வரப்பட்டதென்றோ சரியான தகவல்கள் இல்லை. ஆனால் இப்பாடல்கள், ஆட்டங்கள் என்பன ஒழுங்கற்ற முறையில், உதிரிகளாக உழைக்கும் மக்களால் பாடப்பட்டும் ஆடப்பட்டும் வந்ததாகவும் அறிய முடிகிறது. ஆனால் அவை கூத்து வடிவமாகவோ அல்லது கதைகூறும் பாட்டு நிகழ்வாகவோ அக்காலங்களில் இடம்பெற்றதாகத் தெரியவில்லை.

இக்காலத்தில் 1760ம் ஆண்டு காலப்பகுதியில் மானிப்பாயைச்சேர்ந்தவரும், வட்டுக்கோட்டை மணியகாரனாகப் பணியாற்றியவருமான பண்டிதர் சுவாமிநாத முதலியார் அங்குமிங்கும் சிதறிக்கிடந்த பாடல்கiளைத் தேடி மெருகு படுத்தி மகாபாரதக் கதைக்கு ஏற்றவிதத்தில் மூலக்கதை மாறாது தொகுத்தெடுத்து ஒரு கூத்து வடிவப்பிரதியை உருவாக்கினார். அதைக்கூத்தாக அரங்கேற்ற அவர் பலரை நாடியபோதும் எவரும் சம்மதிக்கவில்லை. இறுதியில் மத்தளம் கட்டுவதிலும், மத்தளம் வாசிப்பதில் வித்துவானுமாகிய வேலுப்பிள்ளை என்பவர் தர்மபுத்திரன் கூத்தை முதன்முதலாக 1765ம் ஆண்டு சுவாமிநாத முதலியார் தலைமையில் இலுப்பையடி அம்மன் கோவிலில் பொங்கல் பூசை வைத்து வணங்கிய பின்பு சட்டம் கொடுத்து முதலியாரால் நடிகர்களுக்கு பணமுடிப்பும் வழங்கப்பட்டது. பாத்திரங்களுக்குரிய பகுதிகளின் எழுத்துப்பிரதிகளே சட்டம் எனச் சொல்வார்கள்.

அந்த நாட்களில் நான்கு பக்கங்களிலும் மக்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் கூத்து வட்டக்களரியிலேயே இடம்பெறும் நடுவில் ஒரு கமுகமரம் நடப்பட்டு நான்கு பக்கமும் கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டு கூத்தாட்ட அரங்கு அமைக்கப்படும் ஆடுகளத்திலிருந்து சற்றுத்தொலைவு வரை ஒரு பாதை அமைக்கப்பட்டுப் பாதையின் முடிவில் வெள்ளை கட்டி ஒரு மறைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கும். அங்கேயே ஒப்பனைகள் இடம்பெற்று நடிகர்கள் தங்கள் நேரம் வரும்போது ஆடுகளத்திற்கு வருவார்கள்.

ஆரம்ப காலங்களில் நடிகர்கள் ஒப்பனை, ஆடை அலங்காரம் என்பவற்றை தமது வீட்டிலேயே மேற்கொண்டு சிறிது நேரம் உறவினர்கள் முன் தங்கள் பாத்திரங்களை ஆடிக்காட்டி விட்டுப் பின் உறவினர்கள் புடை சூழ கூத்தரங்கு நோக்கி வருவதுண்டு. ஒவ்வொரு பாத்திரமும் அந்தந்த குடும்பத்துக்கான உரிமைச் சொத்தாகக் கருதப்படுவதால் தந்தைக்குப் பின் அவர் மகனும், மகன் இல்லையேல் சகோதரனும் என்ற வகையில் கூத்துப்பாத்திரம் பரம்பரைச்சொத்தாக பாத்திரங்களின் பெயரே நடிப்பவர்களுடன் சேர்ந்து விடுவதுண்டு. குறிப்பாக இயமன் வல்லிபுரம், தருமர் கந்தையா போன்று பெயர்களுடன் பாத்திரப் பெயர்களும் கலந்துவிடும். அவ்வாறே குடும்பப் பெயர்களும் சகுனி குடும்பம், விராடன் குடும்பம், விதுரன் குடும்பம் என வழக்கில் வந்துவிடும் வழக்கமும் உண்டு. அவ்வகையில் ஒருவர் ஒரு பாத்திரத்தை ஏற்று நடித்தால் அது அவரின் உறவினர் அனைவருக்குமே பெருமைக்குரிய விடயமாக் கருதப்பட்டது. காலப்போக்கில் ஒப்பனையுடன் வீட்டிலிருந்தே கூத்துக்களம் நோக்கி உறவினர்களுடன் ஊர்வலமாக வரும் வழமை அற்றுப்போக, கூத்துக்களத்துக்கு அருகில் அமைக்கப்படும் மறைப்புக்கட்டிய இடத்திலேயே ஒப்பனைகளை மேற்கொண்டு பாத்திரங்களின் முறை வரும்போது களரிக்கு வரும் வழமையாக மாற்றம் பெற்றது.

வீடுகளிலிருந்து ஒப்பனை செய்துவரும் காலங்களிலும் சரி, அரங்கமைந்த இடத்தில் ஒப்பனை செய்தாலும் சரி முதலில் அனைவரும் அண்ணாவியாரின் தலைமையில் அம்மன் வாசலையடைந்து காப்பு பாடிப் பின் காலெடுத்து ஆடிய பின்பே கூத்தர்கள் மறைவிடம் வந்து களரிக்கும் செல்லத்தயாராவார்கள்.

கட்டியக்காரனே பாத்திரத்தின் பெருமையைக் கூறி பாத்திரத்தின் வரவைப் பிரகடனம் செய்பவனாக முதல் ஆட்டத்தை ஆரம்பித்து வைப்பான்.

ஆடுபவர் மேடையில் தோன்றியதும் அவரை கௌரவிக்கும் முகமாக சால்வை போர்த்தி பணமுடிப்பு வழங்குவார்கள். அவை கூத்தர்களுக்கு வழங்கப்பட்டாலும் அவை அண்ணாவியாருக்கே உரியன. அதேவேளை ஆடுனர்களின் உறவினர்கள் தங்கள் கூத்தர்களுக்கு கோப்பி, சோடா, பாகு போன்ற பானங்களை வழங்கி உற்சாகப்படுத்துவார்கள். அதேவேளை கூத்து இடம்பெறும் நாளில் கூத்தர்கள் எவரும் மது அருந்தக்கூடாது என்பது கண்டிப்பான கட்டுப்பாடாகும். அக்கட்டுப்பாட்டை மீறினால் அவர் கூத்திலிருந்து விலக்கப்படுவதுடன் ஊரில் இடம்பெறும் சபைகளிலும் ஒதுக்கப்படுவார். கூத்தர் ஆடும்போது வாள், வில்லு அன்றி வாள், கதாயுதம் ஆகிய ஆயுதங்களை ஏந்தியே கூத்தர்கள் ஆடுவர். அவர் ஆட்டம் முடிந்து களரியே விட்டு வெளியே வந்ததும் அவரின் ஆயுதங்களை அவரின் உறவினர்கள் கையேற்க வேண்டும். இல்லையேல் அவர் தன்னை அவமதித்ததாய்க் கருதிக் கோபித்துக் கொண்டு வீட்டுக்குப் போய்விடுவார். பின் உறவினர்கள் வீடு தேடிச்சென்று சமதானப்படுத்தி அழைத்துவர வேண்டு;ம். அக்காலத்தில் ஒரு கூத்து ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து ஐம்பத்திரண்டு வாரங்கள் ஆடப்பட்டு ஐம்பத்திமூன்றாம் வாரம் கரப்புடுப்பு போட்டு கூத்தை நிறைவு செய்வார்கள் எனவும் அடுத்த வாரம் தொடக்கம் அடுத்த புதிய கூத்தை பழக ஆரம்பிப்பார்கள் எனவும் அறியமுடிகிறது. ஆனால் அவ்வழமை தற்சமயம் இல்லாமல் போய்விட்டது.

1945ம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் இக்கூத்துக்கள் இருமுறைகளில் ஆடப்பட்டதாக கூறப்படுகிறது. ஒன்று வாராவாரம் ஆடப்படும் கூத்து இது சாதாரண வெள்ளுடுப்புகள் அணிந்தே ஆடப்படும். அடுத்தது அம்மன் சந்நிதியில் விசேட வைபவங்களின்போது ஆடப்படும் கூத்தாகும். இதில் ஆடும் கூத்தர்கள் மிகவும் பாரம் கூடிய கரப்புடுப்பு என்றழைக்கப்படும் மரத்தினாலான ஆடைகளையே அணிவர்.

இந்தக்கரப்புடுப்பு என்பது கூட மரச்சிற்பத்தொழில் செய்யும் ஆசாரியார்களால் வெகு அழகாகவும், நுணுக்கமாகவும், வடிவமைக்கப்பட்டு ஆக்கப்படுவதாகும்.

இவை மெல்லிய மரச்சட்டங்களால் ஒன்றுடன் ஒன்று மிக நுணுக்கமாகப் பொருத்தப்பட்டு மேல் ஆடை, கீழ் ஆடை என்பன உருவாக்கப்படும். இச்சட்டங்களில் வண்ணக்கண்ணாடித்துண்டுகள் பதிக்கப்படும். இடுப்பில் அணியப்படும் கீழாடை கோழிக்கரப்பு வடிவத்தில் அமைந்திருப்பதால் இதைக்கரப்புடுப்பு என அழைப்பார்கள். முடியும் மரத்தால் அமைக்கப்பட்டு கிளி போன்ற பறவைகளின் உருவம் பொருத்தப்பட்டிருக்கும். இவற்றை விட கழுத்துப்பட்டி, நெஞ்சுப்பட்டி, புயகொண்டிகைகள் எனப் பல அலங்காரங்களும் மரத்தால் செய்யப்பட்டவையாக அமைந்திருக்கும். அந்நாட்களில் வசதி படைத்த குடும்பங்களைச் சேர்ந்த கூத்தர்கள் தமக்கான கரப்புடுப்புகளை தமது செலவிலேயே தயாரித்தனர். ஏனையோர் வாடகைக்கு பெற்று இவற்றை அணிந்து கூத்தாடினார்கள். இவ்வுடுப்புகள் பலசாலிகள் மட்டுமே அணிந்து கூத்தாடக் கூடியவையாக மிகுந்த பாரம் கொண்டவையாக விளங்கின.

வடமோடிக்கூத்தில் எப்போதுமே பாட்டும், ஆட்டமும் முக்கியமானவை. எனவே கூத்தர்கள் தமது ஆட்டத்திறமையை காட்டும் முகமாக பாரம் கூடிய கரப்புடுப்புகளை மெல்ல மெல்ல கைவிட்டு பாரம் குறைந்த வில்லுடுப்பு அல்லது இராசமணி உடுப்பு போன்றவற்றைக் கட்டிக் கூத்தாட ஆரம்பித்தனர். இவை இரவின் செயற்கை ஒளியில் வில்லுடுப்பு போல் தோற்றமளித்தாலும் இவை தடித்த துணிகளில் தைக்கப்பட்டு மணிகள் ஒரே அளவில் வெட்டப்பட்ட சிறுசிறு சதுரக் கண்ணாடித்துண்டுகள் என்பன பதிக்கப்பட்டவையாகும்.

இக்கூத்துகளில் ஒப்பனைபோன்றே சலங்கைகள் அணிவதும் பிரதான விடயமாகும். 1961ம் ஆண்டுக்கு முன்பு ஒரு காலுக்கு முப்பது சலங்கைகளாக எருமைத்தோலில் பதிக்கப்பட்டுக் கட்டப்படும். மத்தளம், சல்லாரி ஆகியவற்றுடன் நடிகர்கள் ஆடும்போது சலங்கைகளும் இணைந்து ஒலித்து அற்புதமான இரசனையை ஏற்படுத்தும். 1961 இற்குப் பின்பு சலங்கைகளின் தொகை குறைந்துவிட்டது.

இக்கூத்துகளில் வரும் பாடல்களிலும், இடையிடையே வரும் சிறு உரையாடல்களிலும் கிராமிய மணம் இழையோடுவதைக் காணலாம். இவற்றில் வரும் மெட்டுகள் கிராமிய நடை, தலாட்டு, ஒப்பாரி, கும்மி, சிந்து, கண்ணி, வேட்டைப்பாட்டு, ஒயிலாட்டம் என்பவற்றைக் கொண்டே அமைந்திருக்கும். இவை ஒழுங்கமைக்கப்பட்ட ராகம் தாளம் என்பவற்றுக்கு உட்பட்டு ஆடல்களுக்கான தாளங்களையும், பாடல்களையும் கொண்டமைந்திருக்கும்.

வட்டுக்கோட்டைக்குப் பெருமை சேர்க்கும் தருமபுத்திரன் கூத்து, சுவாமிநாத முதலியாரால் எழுதப்பட்டாலும் அவர் முத்தமிழ் புலவர் மு.நல்லதம்பி, சேதுபேரன் முருகுபிள்ளை, நாவன்னா ஐயர், அனந்த சிவசுப்பிரமணியர் ஆகியோரின் பாடல்களையும் இணைத்து இதை மேலும் மெருகுபடுத்தியுள்ளார்.

அதேவேளையில் மகாபாரதத்தின் பகுதிக் கதைகளான விராடன் கூத்து, குருகேந்திரன் கூத்து ஆகியனவும் வட்டுக்கோட்டைக்கு பெருமைசேர்த்து வருகின்றன.

வட்டுக்கோட்டையில் ஆடப்படும் கூத்துகளில் வடமோடிக்கூத்துகளுக்குரிய அமசங்கள் காணப்பட்டபோதிலும் வட்டுமோடி என்றழைக்கப்படுமளவுக்கு அவற்றுக்கு ஒரு தனித்துவம் உள்ளது முக்கியமானதாகும் எனவே வட்டுமோடி என்பது வட்டுக்கோட்டைக்கே உரிய தனித்துவமான கூத்து வடிவமாகும்.

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், கலை
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE