Thursday 28th of March 2024 06:37:00 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள் மக்களிடம் சம்பந்தன் வேண்டுகோள்!

ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள் மக்களிடம் சம்பந்தன் வேண்டுகோள்!


"தமிழர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகின்ற தேர்தலாக எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் அமைகின்றது. எனவே, அன்றைய தினம் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு வாக்களிக்க வேண்டும்.

வாக்குச் சீட்டில் உங்கள் தெரிவு இலங்கைத் தமிழரசுக் கட்சியாக (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) இருக்க வேண்டும். உங்கள் சின்னம் 'வீடு' சின்னமாக இருக்கவேண்டும். இந்த வரலாற்றுக் கடமையை நீங்கள் அனைவரும் தவறாது செய்ய வேண்டும்."

- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்தார்.

"எம்மை நாமே ஆளுகின்ற வகையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இதை அரசுக்கும் சர்வதேசத்துக்கும் ஆணித்தரமாக எடுத்துரைக்க நாம் ஓரணியில் பலமாக இருக்க வேண்டும். இதை நிரூபிப்பதற்கான ஆணையை எதிர்வரும் 5ஆம் திகதி உங்கள் பொன்னான வாக்குகளினால் 'வீடு' சின்னத்துக்கு வழங்குங்கள்" எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

பெருந்திரளான மக்களின் பங்களிப்புடன் திருகோணமலை முத்துக்குமாரசுவாமி கோயில் முன்றலில் நேற்று மாலை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-

"தமிழர்களை எவரும் அச்சுறுத்த முடியாது. மிரட்ட முடியாது. சர்வதேச சமூகமும் தமிழர்களின் பின்னால்தான் நிற்கின்றது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் எங்கள் பின்னால்தான் நிற்கின்றார்.

புதுடில்லி சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரிடம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நீதியான, சமத்துவமான, கௌரவத்துடன் கூடிய தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் வலியுறுத்தியுள்ளார்.

ஒற்றையாட்சி முறையானது பல இனங்கள் இணைந்து வாழ்கின்ற நாட்டுக்கு உகந்த முறை அல்ல. இந்த முறை மாற்றி அமைக்கப்பட்டு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு அந்தந்த பிரதேசங்களில் வாழ்கின்ற மக்கள் தமது இறைமையின் அடிப்படையில் தம்மை தாமே ஆளுகின்ற வண்ணம் சட்ட திட்டங்கள் அமைய வேண்டும்.

தமிழ் மக்கள் அநீதியாக ஒன்றும் கேட்கவில்லை. ஒருமித்த நாட்டுக்குள் ஜனநாயகத்தின் அடிப்படையில் எமது தீர்வையே வலியுறுத்தி வருகின்றோம். நாங்கள் நாட்டைப் பிரிக்க வேண்டும் என்று கேட்கவில்லை.

அன்றும் பெரும்பான்மை இனத்தோடு ஒற்றுமையாக வாழ வேண்டும் எனறே எமது மக்கள் விரும்பினார்கள். ஆனால்,எல்லா விடயங்களிலும் நாம் திட்டமிட்டு பலவீனப்படுத்தப்பட்டோம்.

பொலிஸ், காணி, அபிவிருத்தி, கல்வி, தொழில் வாய்ப்பு போன்ற துறைகளில் அநீதி இழைக்கப்பட்டது. எனவேதான் எமது அதிகாரத்தை எமது இறைமையின் அடிப்படையில் வழங்குமாறு வலியுறுத்தி வருகின்றோம்.

எம்மில் எந்த ஒரு தளர்வும் இல்லை என்பதை இலங்கை அரசுக்கும் சர்தேச சமூகத்துக்கும் உணர்த்த வேண்டும். எனவே, எதிர்வரும் 5ஆம் திகதி தமிழர்கள் அனைவரும் ஒருமித்து ஒற்றுமையாக ஒரே அணியில் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு நாம் வாக்களிப்போமானால் திருகோணமலையில் இரண்டு நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை நாம் பெற முடியும். இரண்டு தடவைகள் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2 ஆசனங்களைப் பெற்றிருக்கின்றது. எனவே, சிந்தித்து வாக்களியுங்கள்" - என்றார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இரா சம்பந்தன், இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE