Tuesday 23rd of April 2024 12:31:04 PM GMT

LANGUAGE - TAMIL
-
யாழிலும் திருமலையிலும் வாக்கெண்ணும் நிலையங்களில் குழப்பத்தால் பதற்றம்!

யாழிலும் திருமலையிலும் வாக்கெண்ணும் நிலையங்களில் குழப்பத்தால் பதற்றம்!


நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியிடுவதில் திருகோணமலையிலும் யாழ்ப்பாணத்திலும் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக இரண்டு பிரதான வாக்கெண்ணும் நிலையங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருகோணமலை விபுலானந்தா கல்லூரி வாக்கெண்ணும் நிலையத்தில் வாக்கு எண்ணிமுடிந்த பின்னரும் வெளியில் ஊழியர்கள் எவரும் வராத நிலையிலும் அங்கிருந்து தகவல்கள் எவையும் பகிராத நிலையிலும் கட்சிகளின் ஆதரவாளர்கள் திரண்டு வெளியில் குரல் எழுப்பி வருவதால் பதற்றமான சூழல் காணப்படுவதாக அங்கிருந்து அருவியின் பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

தேர்தல் முடிவுகள் தொடர்பில் கேட்டால் அது தொடர்பிலான தொலை நகல் கொழும்புக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் அது கிடைத்தவுடன் பதில் தருவதாகவும் பல மணி நேரமாக பதில் வழங்கப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

குறித்த வாக்கெண்ணும் நிலையத்திலேயே கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் போட்டியிட்ட தேர்தல் தொகுதியின் வாக்குகள் எண்ணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை யாழ்ப்பாணம் மத்தியகல்லூரியின் வாக்கெண்ணும் நிலையத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் ஒன்றாகிய புளொட் கட்சியின் ஆதவாளர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளமையால் பதற்ற நிலை ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக வெளியாகியிருந்த தகவல்கள் அடிப்படையில் சிவஞானம் சிறீதரன், சசிகலா ரவிராஜ் ஆகியோருடன் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவு செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் சசிகலா ரவிராஜை தன்னுடைய உறுப்புரிமையை சுமந்திரனுக்கு விட்டுத்தருமாறு பல சுற்றுப் பேச்சுக்கள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இருந்தபோதிலும் சசிகலா அதற்கு உடன்பட மறுத்தாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் திடீரென சித்தார்த்தன் தெரிவில் இடம்பெற்றிருக்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக சுமந்திரனின் பெயரே இடம்பெற்றதாகவும் அங்கிருந்தவர்களுக்கு தகவல் வழங்கப்பட்டிருந்ததாகவும் இதனை அடுத்து மீள வாக்கினை எண்ணுமாறு புளொட் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியிருப்பதாகவும் அதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுவதாகவும் தெரியவருகிறது.

திருமலை மற்றும் யாழ்.மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள் இன்னமும் உத்தியோகபூர்வமாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE