Friday 19th of April 2024 01:43:16 AM GMT

LANGUAGE - TAMIL
-
நடந்து முடிந்த தேர்தலில் நடந்த முறைகேடுகளுக்கு நீதி வேண்டும்; சிவாஜிலிங்கம்!

நடந்து முடிந்த தேர்தலில் நடந்த முறைகேடுகளுக்கு நீதி வேண்டும்; சிவாஜிலிங்கம்!


எதிர்காலத்திலாவது நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல் நடக்க வேண்டுமாக இருந்தால், நடந்து முடிந்த தேர்தலில் நடந்த முறைகேடுகளுக்கு நீதி வேண்டும் என எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

நடந்து முடிந்த தேர்தலில் மிக இலட்சக்கணக்கான வாக்காளர்களை கொண்ட பல மாவட்டங்களின் இறுதி முடிவுகள் கூட மிக விரைவாக வெளியிடப்பட்டிருந்தது.

இருப்பினும் 5 இலட்சத்தில் 71 ஆயிரம் வாக்காளர்களை கொண்ட யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்திலே 4 இலட்சத்திற்கு குறைவான வாக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையிலே, பிற்பகல் பொழுதிற்குள் அனைத்து வாக்கெண்ணும் நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும் கூட முடிவுகளை அறிவிப்பதில் தொடர்ந்தும் கால இழுத்தடிப்பு நடந்துள்ளது.

இது தெரிவத்தாட்சி அலுவலகர் உட்பட பலருக்கும், அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் இருந்து ஏதோ ஒரு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுக்கொண்டிருந்ததை எங்களால் உணரக்கூடியதாக இருந்தது.

இதற்கு எங்களிடம் பல சாட்சிகள் உள்ளன. அந்த சாட்சிகளை தகுந்த நேரத்தில் வெளியிடுவோம்.

விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டபின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட சிறிதரன், சித்தார்தன், சசிகலா போன்றவர்கள் முன்னணியில் இருந்தார்கள்.

இதன் பின்னர் சசிகலா ரவிராஜ் பதவி விலக வேண்டும், அல்லது இராஜினாமா செய்ய வேண்டும் என்று அந்த கட்சியினரே அழுத்தங்களை கொடுத்திருந்தார்கள். இதனை ஏற்றுக் கொள்ளாத சசிகலா வாக்கெண்ணும் நிலையத்தில் நின்றே தனது கைத்தொலைபேசியை எறிந்திருந்தை தொடர்ந்து அங்கு பிரச்சினைகள் எழுந்திருந்தன.

தொடர்ந்தும் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் இழுத்தடிப்பு செய்யப்பட்ட காரணத்தினால், நாங்கள் தேர்தல்கள் திணைக்களத்தின் தலைவரிடம் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்திருந்தோம்.

இந்த முறைப்பாடு தொடர்பிலும் உரிய பதில் வழங்காத நிலையில், இரவு 10 மணியளவில் யாழ்.தெரிவத்தாட்சி அலுவலகர் மகேசனை சந்தித்து ஏன் தாமதிக்கின்றீர்கள் என்று கேட்டேன்.

இதன் போது 11 வாக்கென்னும் அறைகளில் இருந்து விருப்பு வாக்கு விபரங்கள் கிடைக்கவில்லை என்றும், பளை உட்பட 5 நிலையங்களில் சிறு சிறு பிரச்சினைகள் உள்ளன அதனை தீர்த்துவிட்டு ஒரு மணிநேரத்தில் வெளியிடுவேன் என்றார்.

இருப்பினும் ஏறத்தாழ அதிகாலை 3.30 மணிவரைக்கும் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படாத சூழ்நிலைதான் இருந்தது.

இதன் பின்னர் மீண்டும் எமது கட்சி தலைவரும், சட்டத்தரணியுமான சிறிகாந்தவுடன் சென்று தெரிவத்தாட்சி அலுவலகரை சந்தித்தோம். இதன் போது ஜனநாயகத்திற்கு எதிரான தவறான முடிவு எடுப்பதை நாங்கள் விரும்பவில்லை. மக்களுடைய தீர்ப்பு தேர்தல் முடிவுகளில் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று கோரியிருந்தோம். அதற்கும் எந்த பதிலோ அல்லது முடிவுகளை வெளியிடும் நோக்கம் அவர்களிடம் இல்லை.

இந்த தேர்தல் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலாக நடக்கவில்லை. மாறாக மோசடியும், அரசியல் மற்றும் ஆயுதப் பலத்துடன் பலாத்காரமாக நடத்தப்பட்ட தேர்தலாகவே பார்க்க முடியும்.

நேற்று விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு, அவர்கள் அங்கு எவ்வாறு நடந்து கொண்டார் என்று அனைவருக்கும் தெரியும். யானைவரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பதைப் போல விசேட அதிரடிப்படை அங்கு வந்த பின்னர்தான் தெரிந்தது அங்கு சுமந்திரன் வரப்போகின்றார் என்று.

வாக்கெண்ணும் நிலையமாக செயற்பட்ட யாழ்.மத்திய கல்லூரியில் அமைதியான நிலை இருந்திருக்கவில்லை. தேர்தல் கண்காணிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

சுமந்திரனின் உதவியாளர்கள் என்று சொல்லப்படுபவர்கள் கைகாட்டி மாவை சேனாதிராஜாவின் மகன் கலையமுதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சசிகலாவின் புதல்வி, மருமகள் உட்பட குடும்பத்தினர் தாக்கப்பட்டார்கள்.

சுமந்திரன் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளின் உதவியோடு, விசேட அதிரடி படையினர் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு வன்முறையை பயன்படுத்தி சுமந்திரனை மீட்டு செல்லும் அளவிற்கு அரச மற்றும் படைபலம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவை அப்பட்டமான ஜனநாய மீறல்களாகும். சர்வாதிகார ஆட்சிக்கான முன்னோடிகளே இவை. இந்த அராஜகங்களுக்கு எதிராக சகலரும் கட்சி பேதங்களை மறந்து மிகப்பெரிய அளவில் எதிர்ப்பினை அரசாங்கத்திற்கு காண்பிக்க வேண்டும்.

சம்மந்தப்பட்டவர் தானாக இதில் இருந்து விலகும்வரைக்கும் நாங்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

மாமனிதர் ரவிராஜ் சசிகலா விரும்பினால் தேர்தல் ஆட்சேபனை மனுவிற்கான தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் இலவசமாக செய்து கொடுக்க முடியும்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE