Friday 19th of April 2024 01:22:17 PM GMT

LANGUAGE - TAMIL
-
பிரான்ஸில் இரட்டிப்பாகும் கொரோனா; தவறான பாதையில் செல்வதாக எச்சரிக்கை!

பிரான்ஸில் இரட்டிப்பாகும் கொரோனா; தவறான பாதையில் செல்வதாக எச்சரிக்கை!


பிரான்சில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ள நிலையில் பிரான்ஸ் தவறான பாதையை நோக்கிச் செல்வதாக பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் எச்சரித்துள்ளார்.

பிரான்ஸில் திங்கட்கிழமை முதல் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 1,397 என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் 14 புதிய கொரோனா இறப்புக்கள் பதிவாகியுள்ளன.

இவ்வாறான நிலையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடும் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை ஒக்டோபர் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டிய கட்டாய உத்தரவையும் நீடிக்குமாறு உள்ளூர் அதிகாரிகளிடம் பிரதமர் காஸ்டெக்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் பொது போக்குவரத்து வாகனங்கள், கடைகள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட உட்புற இடங்களில் மாஸ்க் அணிவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பிரான்ஸ் பெரும் நெருக்கடியைச் சந்தித்தது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் இங்கு கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.

புதிதாக திங்கட்கிழமை முதல் கூடுதலாக 14 பேர் இறந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவின் பிரகாரம் உலகில் கொரோனாவுக்கு அதிக உயிர்களைக் பலிகொடுத்த நாடுகளின் பட்டியலில் பிரான்ஸ் 7-ஆம் இடத்தில் உள்ளது.

தீவிர நெருக்கடியை அடுத்து மார்ச் முதல் பிரான்ஸில் சமூக முடக்கல் அறிவிக்கப்பட்டது. மே மற்றும் ஜூன் மாதங்களில் பிரான்சில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

அத்துடன், கோடை விடுமுறைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் பிரான்ஸ் அனுமதியளித்துள்ளது.

கடந்த வார இறுதியில் தெற்கு பிரான்சில் தொலைதூரத்தில் உள்ள மலைப்பகுதியான லோசெரில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்றமை பெரும் விமா்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

இந்நிலையில் மக்கள் உரிய பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றாமல் பொறுப்பற்ற வகையில் நடந்துகொண்டால் நாடு மீண்டும் தொற்று நோயால் பெரும் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும். அதன்பின் இதனைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கும் என பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் எச்சரித்துள்ளார்.

பிரான்ஸில் கடந்த வாரத்தில் 10,800 புதிய கொரோனா வைரஸ் தொற்று நோயாளா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு திங்களன்று தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), பிரான்சு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE