Friday 29th of March 2024 07:02:48 AM GMT

LANGUAGE - TAMIL
-
அம்பாறையில் வீரமுனைப் படுகொலை நினைவேந்தல்!

அம்பாறையில் வீரமுனைப் படுகொலை நினைவேந்தல்!


அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தில் 97 அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட படுகொலையின் 30வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

படுகொலை நடைபெற்ற வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள படுகொலைசெய்யப்பட்டவர்கள் ஞாபகார்த்த தூபியருகே இந்த நிகழ்வு நடைபெற்றது.

வீரமுனை கிராம மக்களின் ஏற்பாட்டில் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இந்த நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது படுகொலைசெய்யப்பட்டவர்கள் ஞாபகார்த்த தூபியில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து ஆலய வளாகத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

12.08.1990 வீரமுனை அகதி முகாமில் புகுந்த முஸ்லீம் குழு வாள்களால் வெட்டி தாக்குதல் நடத்தியது. இதில் ஆலய பரிபாலனசபை தலைவர் தம்பிமுத்து சின்னத்துரை உட்பட 97 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். வீரமுனையில் 600வீடுகளும், சம்மாந்துறை, மல்லிகைத்தீவு, வளத்தாப்பிட்டி கணபதிபுரம், மல்வத்தை ஆகிய கிராமங்களில் இருந்த 1352 தமிழர்களின் வீடுகள் முஸ்லீம்களால் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டது. 20.06.1990க்கும் 15.08.1990க்கும் இடைப்பட்ட காலத்தில் வீரமுனையில் மட்டும் 232 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 1600க்கு மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டது.

வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலய படுகொலை என்பது இன்றைய தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

1990ஆண் ஆண்டு காலப்பகுதியில் வளத்தாப்பிட்டி, மல்வத்தை, மல்லிகைத்தீவு, வீரச்சோலை உட்பட எட்டு கிராமங்களின் மக்கள் வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயம், வீரமுனை இராமகிருஸ்ண மிசன் ஆகிய பாடசாலைகளில் தஞ்சமடைந்திருந்தனர்.

அவர்கள் தொடர்ச்சியாக சுற்றிவளைக்கப்பட்டு ஆண்கள் கைதுசெய்யப்படுவதும் காணாமல்ஆக்கப்படுவதுமான செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டன.

இறுதியாக 12.08.1990 இராணுவத்தினர் பாதுகாப்புடன் சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயம், வீரமுனை இராமகிருஸ்ண மிசன் ஆகியவற்றுக்குள் புகுந்த முஸ்லிம் ஊர்காவல் படையினர் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என 97பேரை படுகொலைசெய்தனர்.

இந்த படுகொலையின்போது வீரமுனையின் முதல் பெண் பட்டதாரியான பரமா ஆசிரியர் என்பவர் முஸ்லிம் ஆயுததாரிகளிடம் இருந்து மக்களை காப்பதற்காக போராடி இறுதியில் தனது உயிரையும் பறிகொடுத்தார்.

இந்த கொலை வெறித்தாக்குதலின்போது பாடசாலையில் இருந்த சிறுவர்கள் சுவரில் தூக்கிஅ டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

இவ்வாறு படுகொலை நடந்து அதில் படுகாயமடைந்தவர்கள் அம்பாறை உட்பட பல வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டபோதும் அவர்களும் அங்கிருந்து கொண்டுசெல்லப்பட்டு படுகொலைசெய்யப்பட்டனர்.

1990ஆம் ஆண்டு வீரமுனை மக்கள் முற்றாக அங்கிருந்து துரத்தப்பட்டு அக்கிராமத்தினை அபகரிக்க மேற்கொண்ட முயற்சி அன்றைய பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கோவிந்தன் கருணாகரமின் முயற்சியினால் தடுத்து நிறுத்தப்பட்டு வீரமுனை மக்கள் மீள குடியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE