Wednesday 24th of April 2024 02:25:59 AM GMT

LANGUAGE - TAMIL
-
யாழ்; வாக்கெண்ணும் நிலைய வன்முறை தொடர்பில் 03 முறைப்பாடுகள்!

யாழ்; வாக்கெண்ணும் நிலைய வன்முறை தொடர்பில் 03 முறைப்பாடுகள்!


பொதுத் தேர்தல் வாக்குகள் எண்ணும் பணியகம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கடந்த 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை இயங்கிய நிலையில் முடிவுகளுக்காகக் காத்திருந்த கட்சிகளின் ஆதரவாளர்களை பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் தாக்கியதாக மூன்று பேர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

அவர்களில் இருவர் சிறப்பு அதிரடிப் படையினருக்கு எதிராகவும் ஒருவர் பொலிஸாருக்கு எதிராகவும் முறைப்பாடு வழங்கினார் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் இணைப்பாளர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கடந்த 4, 5, 6 மற்றும் 7ஆம் திகதிகளில் பொதுத் தேர்தல் மத்திய நிலையம் இயங்கியது. இதில் 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை யாழ்ப்பாணம் மாவட்ட இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று கட்சிகளின் வேட்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் காத்திருந்தனர்.

அதிகாலை 1 மணியளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் அங்கு வருகை தந்ததையடுத்து குழப்பநிலை ஏற்பட்டது. அங்கு கூடியிருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஆதரவாளர்கள், சுமந்திரனுக்கு எதிராக சத்தம் எழுப்பியவாறு இருந்தனர். அதனால் அங்கு குழப்பநிலை ஏற்பட்டது.

அதனையடுத்து தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கட்டளைக்கு அமைய பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் அங்கிருந்தவர்களை வெளியேற்றும் வகையில் தாக்குதலை மேற்கொண்டனர். இதன்போது சிலர் மீது கண்மூடித்தனமான தாக்குதலை பொலிஸார் மேற்கொண்டனர். அதுதொடர்பில் காணொலிகளும் வெளியாகியிருந்தன.

இதில் பொலிஸாரின் தாக்குதலில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வலி. தெற்கு பிரதேச சபை உறுப்பினர் தவராசா துவாரகன், தனக்கு பொலிஸாரால் சித்திரவதை செய்யப்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக முறைப்பாட்டை வழங்கினார்.

தவராசா துவாரகன் பொலிஸாரால் தாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அவரை மருத்துவ பரிசோதனைக்கு உள்படுத்தி மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ நிபுணரிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகம் கோரியிருந்தது.

இந்த நிலையில் வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் ( இலங்கை தமிழ் அரசுக் கட்சி ) , முன்னாள் விடுதலைப்புலிகள் போராளி தனுபன் (இலங்கை தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர் ) ஆகியோர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அவர்கள் இருவரும் சிறப்பு அதிரடிப்படையினருக்கு எதிராக இந்த முறைப்பாட்டை முன்வைத்தனர் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் இணைப்பாளர் தெரிவித்தார்.

அவர்கள் இருவரதும் மருத்துவ பரிசோதனை அறிக்கை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ நிபுணரிடம் கோரப்பட்டுள்ளதாகவும் இணைப்பாளர் குறிப்பட்டார்.

இதேவேளை, பொதுத் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் மத்திய நிலையத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியவர்களை அப்புறப்படுத்தும் கடமையையே பொலிஸார் முன்னெடுத்தனர் என்று யாழ்ப்பாணம் பொலிஸ் அதிகாரியால், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE