;

Tuesday 29th of September 2020 06:10:31 PM GMT

LANGUAGE - TAMIL
-
எங்கே தொடங்கியது இன மோதல் - 16 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 16 (வரலாற்றுத் தொடர்)


“எங்கள் மாட்சிமை தங்கிய அரசருக்கு என்ன நடந்துவிட்டது? இந்த சட்டசபைக்கு என்ன நடந்துவிட்டது? எங்களைக் காப்பாற்ற உலகில் எவருமில்லையா? இதுவரை சட்டசபைக்கு 350 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த முறைப்பாடுகள் கண்டு மிகவும் மனவேதனையடைகிறேன். செய்யாத குற்றத்துக்காகத் தண்டனை அனுபவிக்குமிவர்களுக்கான ஏதாவது பரிகாரம் காணவேண்டுமென உணர்ந்து கொண்டேன். இராணுவச் சட்டத்தை பயன்படுத்திச் சொல்லமுடியாத அளவு நடந்த சட்டவிரோத அநியாயங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்” 1915ம் ஆண்டு இடம்பெற்ற முஸ்லீம்களுக்கு எதிரான இனவொடுக்குமுறை வன்முறைகளின் போது ஏற்படுத்தப்பட்ட பேரழிவுகள் உயிர்க்கொலைகள் தொடர்பாகப் பல சிங்களத் தலைவர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்ட போதும் பல சிங்களவர்கள் மரண தண்டனை உட்பட பல்வேறு தண்டனைகளுக்குட்படுத்தப்பட்ட போதும் அன்றைய சட்டசபையில் முழு இலங்கையர்களினதும் பிரதிநிதியாகப் பதவி வகித்த சேர் பொன் இராமநாதன் இலங்கைச் சட்ட சபையில் ஆற்றிய உரையின் ஒரு பகுதியாகுமிது.

1915ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் முஸ்லீம்களுக்கு எதிரான இனவன்முறைகள் இடம்பெற்று பேரழிவுகள் ஏற்பட்ட போது, இராணுவச்சட்டத்தின் கீழ் சிங்களவர்கள் மீது கைதுகள் தண்டனைகள் உட்பட பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது சேர். பொன் இராமநாதன் உடல் நலமின்மை காரணமாக இந்தியாவின் கோடைக்கானலிலுள்ள அவரது இல்லத்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். அப்படியான நிலையில் அவரது சிங்கள நண்பர்கள் இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை இராமநாதனுக்கு விளக்கி அவரை உடனடியாக இலங்கைக்கு வரும்படி தந்தி அனுப்பினர். அவர் அவசர அவசரமாக இலங்கை வந்து பார்த்தபோது இங்கு நிலவிய சூழல் அவரை அதிர்ச்சி அடைய வைத்துவிட்டது. இராணுவச் சட்டத்தின் கீழான துப்பாக்கிச் சூடுகள், கைதுகள் என்பன மத்தியில் வீதிகள் உட்பட நகரமே வெறிச்சோடிப் போயிருந்தது. சிங்களத் தலைவர்கள் பலர் சிறைசெய்யப்பட்டிருந்தனர். எங்கும் ஒரு அச்சம் கலந்த பயங்கர சூழல் நிலவியது.

இராமநாதன் உடனடியாவே சிறையிலுள்ள சிங்களத் தலைவர்களை சந்தித்ததுடன் தேசாதிபதி, சம்பபந்தப்பட்ட அரச அதிகாரிகள், பொலீஸ் தலைமை அதிகாரி ஆகியோரை சந்தித்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டார். இம்முயற்சிகளின் போது இவர் துப்பாக்கி காட்டப்பட்டு மிரட்டப்பட்ட போதிலும் இவர் அச்சமின்றி தீவிரமாகச் செயற்பட்டார்.

அன்றைய சட்டசபையில் முழு இலங்கையரையும் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரே உறுப்பினராக பொன் இராமநாதன் பதவி வகித்ததால் அவர் தான் ஒரு தமிழர் என்பதை விட இலங்கையர் என்ற வகையில் செயற்படுவதில் பொறுப்புடன் நடந்துகொண்டார்.

1879ம் ஆண்டு அவர் தனது 28ம் வயதில் சட்டசபையின் உத்தியோகப் பற்றற்ற உறுப்பினராக ஆங்கில ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்டார். 1911ம் ஆண்டு இடம்பெற்ற சட்டசபைத் தேர்தலில் இவர் முழு இலங்கையர்களுக்குமான ஒரே பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மார்க்ஸ் பெர்னான்டோ என்பவர் மீன்பிடி சமூகத்தைச் சேர்ந்த சிங்களவர் ஆவார். சிங்கள ‘கொவிகம’ சமூகத்தைச் சேர்ந்த மேட்டுக்குடியினர் ‘கரவ’ சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைத் தமது பிரதிநிதியாக ஏற்கத் தயாராக இல்லை. அதைவிட உயர் சாதி வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த பொன். இராமநாதனுக்கே தங்கள் ஆதரவை வழங்குவது பொருத்தமானதென முடிவுசெய்திருந்தனர்.

அதுமட்டுமின்றி பொன். இராமநாதன் பல சந்தர்ப்பங்களில் தனது அதிகாரங்களை உயர்ந்த பட்சமாகப் பாவித்து சிங்கள மொழிக்கும் பௌத்த மதத்துக்கும் பலவிதமான சேவைகளை ஏற்கனவே செய்து வந்திருந்தார். 1883ல் இடம்பெற்ற கத்தோலிக்கர்களுக்கெதிரான கலவரத்தை அடுத்து 1885ல் வெசாக் தினத்தை அரசாங்க விடுமுறையாக்க வேண்டுமென்று சட்ட சபையில் பிரேரணையை கொண்டு வந்ததுடன் அதை நிறைவேற்றுவதில் தீவிரமான பங்கு வகித்தார். 1886ல் ஒல்கொட்டுடன் இணைந்து பௌத்த அறக்கட்டளையை நிறுவியதுடன் அதற்கு அன்பளிப்பாக 15,000 ரூபா வழங்கியதுடன் அதன் இணைப் பொருளாலர்களில் ஒருவராக செயற்பட்டார். இந்த அறக்கட்டளை பௌத்த ஆங்கிலப்பாடசாலைகளான நாளந்த, ஆனந்தா, விசாக, மகிந்த உட்பட பல கல்லூரிகளை நிறுவுவதிலும் நாடெங்கும் 400 இற்குமேற்பட்ட பௌத்த பாடசாலைகளை நிறுவுவதிலும் அக்கறையுடன் செயற்பட்டது. மேலும் பௌத்த சிங்கள மறுமலர்ச்சியில் காத்திரமான பங்கை வகித்த பிரம்மஞான சங்கத்தை உருவாக்குவதில் இராமநாதன் ஒல்கொட்டுடன் இணைந்து தீவிரமாகப் பணியாற்றினார். பிரம்ம ஞானசங்கத்தின் பிரச்சாரக் கூட்டங்களின் போது சிங்களவர் சிங்களத்தில் பேசுவதை பெருமையாகக் கொள்ள வேண்டுமென வலியுறுத்திவந்தார். இன்னொருபுறம் அவர் சைவ வேளாள உயர் குடியைச் சேர்ந்தவர் என்ற வகையிலும் ஆறுமுக நாவலரின் கொள்கைகளை பினபற்றியவர் என்ற வகையிலும் அநகாரிக தர்மபாலவின் மது ஒழிப்பு, மாட்டிறைச்சி எதிர்ப்பு போன்ற பிரசாரங்களுக்கு வலுவான ஆதரவுகளை வழங்கிவந்தார். இவ் வெதிர்ப்பு நடவடிக்கைகள் முஸ்லீம்களுக்கும் கிறீஸ்தவர்களுக்கும் எதிரான இனவாத நோக்கம் கொண்டது என்பதை அப்போது இராமநாதன் புரிந்து கொள்ளவில்லை போல் தோன்றுகிறது. அவர் தமிழ் மொழி வளர்ச்சி தமிழ் மக்களின் கல்வி இந்து சமயப் பாதுகாப்பு என்பன தொடர்பாக ஆறுமுக நாவலரின் பாதையில் அக்கறை காட்டிய போதிலும் அரசியல் ரீதியாக அவர் தானொரு இலங்கையர் என்பதையே முதன்மைப்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்கையிலே 1815ல் இராணுவச் சட்டம் காரணமாக சிறை செய்யப்பட்ட சிங்களத் தலைவர்களை விடுவிப்பதை தனது பொறுப்பாக ஏற்றுக்கொண்டு கடுமையாக உழைக்க ஆரம்பித்தார்;. ஆனால் இக்கலவரம் காரணமாக பாதிக்கப்பட்ட முஸ்லீம்கள் தொடர்பாக கவனம் செலுத்தத் தவறிவிட்டார் என்ற குற்றச்சாட்டும் உண்டு.

இராணுவச் சட்டத்தின் கீழ் எவ்.ஆர்.சேனாநாயக்க, டீ.எஸ். சேனாநாயக்க, டீ.பி.ஜெயத்திலக்க, டபிள்யு.டீ.இ.சில்வா, டீ.ஆர்.விஜயவர்த்தன, டாக்டர் கேசியஸ் பெரேரா, ஈ.டி.டி.சில்வா, எச்.அமர சூரிய, எ.எச்.மொலமூரே, மார்ட்டின் பெரேரா, பத்தரமுல்ல தேரர் அநகாரிக தர்ம பாலவின் சகோதரர்களான எட்மன் ஹேவவிதாரன, சி.ஏ.ஹேவவிதாரன உட்பட பல சிங்களப் பிரமுகர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கு மரண தண்டனை அல்லது நீண்ட கால சிறைத் தண்டனை வழங்கப்படலாம் என்ற நிலையே அப்போது நிலவியது.

இலங்கையின் தேசாதிபதியிடமோ ஏனைய உயர்மட்ட அதிகாரிகளிடமோ கைது செய்யப்பட்டவர்களின் விடுதலை தொடர்பான முயற்சிகள் வெற்றி பெற முடியாதென்பதை புரிந்து கொண்ட இராமநாதன் லண்டன் சென்று பிரித்தானிய உயர் மட்ட அதிகாரிகளுடன் பேசுவதென முடிவெடுத்தார்.

1915ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10ம் நாள் கொழும்பிலிருந்து கடற்கப்பல் மூலம் லண்டன் நோக்கிய பயணத்தை ஆரம்பித்தார் அது முதலாவது உலக யுத்தம் நடந்த காலப்பகுதியாதலால் ஜேர்மனிய நீர்மூழ்கிகளால் கப்பல் தாக்கப்படும் ஆபத்தான நிலை நிலவிய போதும் உடல் நலம் குன்றிய நிலையையும் பொருட்படுத்தாது சிறைசெய்யப்பட்டவர்களை மீட்பதற்காக அவர் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டார்.

இராமநாதன் இங்கிலாந்தில் குடியேற்றச்செயலாளர், முக்கிய அமைச்சர்கள் ஆகியோரை நேரடியாகச் சந்தித்து பல ஆதாரங்களை முன்வைத்து விவாதிட்டார். இராமநாதனின் ஆதாரங்களுடன் கூடிய ஆணித்தரமான விவாதம் லண்டன் அதிகாரிகள் மத்தியில் இலங்கையில் கவர்னர் உட்பட உயர்மட்ட அதிகாரிகள் நீதி தவறி நடந்துள்ளனர் என நம்பவைத்தது.

தனது நோக்கத்தை நிறைவேற்றிவிட்ட பெருமையுடன் பொன். இராமநாதன் 17.02.1916 அன்று அதாவது நான்கு மாதங்களின் பின்பு கொழும்பை வந்தடைந்தார். அவருக்கு சிங்களத் தலைவர்களால் பெரும் வரவேற்பளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததோடு அவரை வரவேற்க பல்லாயிரக்கணக்கான மக்கள் துறைமுகத்தில் கூடியிருந்தனர். அவரைத் துறைமுகத்திலிருந்து வீடு வரை கொண்டு செல்ல தேர் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். எனினும் சில சிங்கள இளைஞர்கள் உற்சாக மிகுதியால் மாட்டுவண்டியில் கொண்டு செல்லப்பட வேண்டிய தேரை தங்கள் தோளில் சுமந்து கௌரவித்தனர்.

இராமநாதனின் இங்கிலாந்து விஜயம் காரணமாகவும் அங்கு அவர் மேற்கொண்ட தீவிரமான முயற்சிகள் காரணமாகவும் கலவரம் தொடர்பான ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. அது மேற்கொண்ட விசாரணைகள் மூலம் பல சிங்களத்தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர். அது மட்டுமின்றி அக்காலத்தில் பதவி வகித்த தேசாதிபதி இராணுவத் தளபதியாகியோர். லண்டனுக்குத் திருப்பியழைக்கப்பட்டனர். இலங்கையின் வரலாற்றில் ஒரு தேசாதிபதியை குற்றச்சாட்டின் பேரில் திருப்பியழைக்கபட்ட சாதனையை நிலைநாட்டியவர் பொன். இராமநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.

பொன். இராமநாதன் சிங்களத் தலைவர்களுக்காக வாதாடி அவர்களை விடுவித்தாரே ஒழிய இனவன்முறைகள் காரணமாக பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்கவோ கொலை கொள்ளை போன்ற கொடிய குற்றங்களிலீடுபட்ட சிங்களவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கவோ முயற்சிக்கவில்லை என்பது அவர் மீது சுமத்தப்படும் ஒரு முக்கிய குற்றச்சாட்டாகும். அவர் இலங்கையர்களை காப்பாற்றுவது என்ற நோக்கத்தில் சிங்களவர்கள் பக்கம் நின்று பாதிக்கப்பட்ட முஸ்லீம்களை அலட்சியம் செய்துவிட்டார் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

ஆனால் 1915 இனக்கலவரத்தின் தத்ததுவார்த்த தலைவராகவும் வழிகாட்டடியாகவும் விளங்கிய அநகாரிக தர்மபால முஸ்லீம்களைப் போலவே தமிழர்களையும் இலக்குவைத்து தனது இனக் குரோதப் பிரசாரங்களை மேற்கொண்டு சிங்களவரை தூண்டிவிட்டார் என்பதை இராமநாதன் கணக்கிலெடுக்கத் தவறிவட்டார்.

“சிங்கள பௌத்தர்களே இந்த மண்ணின் மைந்தர்கள்; மற்றையவர்களெல்லாம் அந்நியர்கள்; வந்தேறு குடிகள்; அரசியல் பண்பாட்டு ஆக்கிரமிப்பாளர்கள். அவர்கள் அனைவரும் சிங்கள பௌத்தர்களாக மாற்றப்பட வேண்டும். துட்டகைமுனு காலத்தில் சிங்கள இனம் தமிழர்களால் மட்டுமே துன்புறுத்தப்பட்டு வந்தது. இப்போது ஐரோப்பியர்களாலும், ஹம்பயாக்களாலும், போராக்களாலும், மரக்கலக் காரர்களாலும் சிங்களவர் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். இந்த அந்நியர்கள் சிங்களவர்கள் மூடர்கள் என்பதை உணர்ந்துள்ளனர். தமிழர்களுக்குத் தென்னிந்தியா உண்டு, முஸ்லீம்களுக்கு தென்னிந்தியா கொச்சி, ஹைதராபாத் போன்ற இடங்கள் உண்டு, சிங்களவர் இத்தீவை விட்டால் வேறெங்கு போக முடியும்”

இவ்வாறு முஸ்லீம்களுக்கு எதிராக மட்டுமின்றி தமிழர்களுக்கு எதிராகவும் சிங்கள மக்கள் மத்தியில் அநகாரிக தர்மபால குழுவினரால் இனக்குரோத வெறி வளர்க்கப்பட்ட போதிலும் கூட இராமநாதன் பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து ஆங்கில அதிகாரிகளின் வெறுப்பை சம்பாதித்துக் கூட சிங்களத் தலைவர்களை காப்பாற்றியுள்ளார் என்பதை கவனத்திலெடுக்காமல் விடமுடியாது. அதற்காக அன்று அவரைத் தேரில் வைத்து தூக்கிய சிங்களவர்கள் பின்பு அவருக்குத் துரோகமிழைத்து அவரைக் கொழும்பு அரசியலிலிருந்து ஓரங்கட்டினர் என்பது சிங்களத் தலைவர்களின் அடிமனதில் உறைந்திருக்கும் இனமேலாதிக்க சிந்தனையை தெட்டத்தெளிவாகவே வெளிப்படுத்தியுள்ளது.

1919ல் இலங்கைத் தேசிய காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டபோது இராமநாதனின் தமையனார் ஆகிய பொன் அருணாச்சலம் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார். அப்போது 1921ல் நடைபெற இருந்த தேர்தலில் கொழும்பில் தமிழர்களுக்கு ஒரு ஆசனம் வழங்கப்படுமென உடன்பாடு எட்டப்பட்டு அதில் ஜேம்ஸ் பீரிஸ், ஈ.ஜே.சமரவிக்கிரம ஆகியோர் சிங்களத் தலைவர்கள் சார்பில் கையொப்பமிட்டனர். ஆனால் தேர்தலின் போது அந்த உடன்பாடு மீறப்பட்ட நிலையில் பொன்னம்பலம் சகோதரர்கள் இலங்கைத் தேசிய காங்கிரசை விட்டு வெளியேறி தமிழர்களுக்கென தமிழர் மகாஜன சபை என்ற அமைப்பை உருவாக்கினர். அது வரை தானொரு இலங்கையராக பொன் இராமநாதன் வகித்து வந்த பாத்திரத்தை களைந்து விட்டு தமிழராக நிலைபெறும் வகையில் சிங்களத் தலைவர்கள் நிலைமைகளை உருவாக்கினர். எந்தச் சிங்களத் தலைவர்களுக்காக ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு லண்டன் சென்று வாதாடி சிங்களத் தலைவர்களை காப்பாற்றினாரோ அவர்களே இராமநாதனைத் தூக்கியெறிந்ததன் மூலம் தங்கள் இனவாத நிலைப்பாட்டை தெளிவாகவே வெளிப்படுத்தினர்.

அன்று தமிழ் முஸ்லீம் மக்களுக்கெதிராக அநகாரிக தர்மபாலவால் ஊட்டப்பட்ட இனவாத சிந்தனையின் வடிவமே இந்த துரோக நடவடிக்கையாகும். அது இன்று வரை சிங்கள அரசியலில் மேலாதிக்கம் வகித்து வருவதையும் சகல இன ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கும் மூல வேராக அதுவே நிலை பெற்றுள்ளதையும் வரலாறு தொடர்ந்து உணர்த்திவருகிறது.

தொடரும்

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கைபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE