Friday 29th of March 2024 06:01:56 AM GMT

LANGUAGE - TAMIL
-
13வது திருத்தம் நீக்கப்படுவது தொடர்பில் கோவிந்தம் கருணாகரம் விமர்சனம்!

13வது திருத்தம் நீக்கப்படுவது தொடர்பில் கோவிந்தம் கருணாகரம் விமர்சனம்!


பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் இரு நாடுகளினால் உருவாக்கப்பட்ட 13வது திருத்த சட்டத்தினை நீக்குவதை இந்தியா பார்த்துக்கொண்டிருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லையென மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ள கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ள கோவிந்தன் கருணாகரம் அவர்களை கௌரவப்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மகிழூர், குருமண்வெளி, எருவில் ஆகிய பகுதி மக்களினால் இன்று அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

கிராம மக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினருக்கு வரவேற்பளிக்கப்பட்டதுடன் கௌரவிக்கப்பட்டதுடன் வாக்களித்த மக்களுக்கு நன்றியும் தெரிவித்துக்கொண்டார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இந்த தேர்தல் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் சவால்மிக்க தேர்தலாகும்.தமிழ் மக்கள் மத்தியில் ஒரு அமைதியான மனப்போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளதை இந்த தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றது.யாரும் எதிர்பார்க்காத வகையிலான வாக்கு சரிவு ஏற்பட்டுள்ளது.2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 50ஆயிரம் வாக்குகள் குறைவாக கிடைக்கப்பெற்றுள்ளது.

எனினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைக்கப்பெற்றுள்ளனர்.இது ஒரு சந்தோசமான விடயம்.இந்த மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் அனைவரும் இணைந்து பயணிக்கவேண்டியுள்ளது.ஒரு மூத்த அரசியல்வாதியென்ற அடிப்படையில் அனைவரையும் ஒன்றிணைத்து பணியாற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொள்வேன்.

அமைதியான முறையில் தமிழ் மக்களில் ஏற்பட்ட போராட்டமானது பேரினவாதத்தின் சதியாக கூட இருக்கலாம் என நாங்கள் கருதுகின்றோம்.வாக்கெடுப்புக்கு சில தினங்களுக்கு முன்னர் தமிழ் மக்கள் மத்தியில் நியாயமான சலுகைகள் வழங்கப்பட்டு,வாக்குகள் விலைக்கு வாங்கப்பட்டதாக அறியமுடிகின்றது.அதனையொத்த கருத்துகள் புதிய அரசாங்கத்தில் அமைச்சு பொறுப்புகளை ஏற்றவர்களினால் தெரிவிக்கப்பட்டது.

இனப்பிரச்சினை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசாமல் வேறுயாருடன் இவர்களினால்பேசமுடியும். தங்களுக்கு சார்பானவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக கூறும் இவர்களுக்கு தமிழ் மக்களின் நிலைப்பாடுகள் உள்ளது என்பதை சிந்தித்துபார்க்கவேண்டும்.

முன்னாள் இராணுவ அதிகாரியாக இருந்த சரத் வீரசேகர அவர்கள் 13வது திருத்த சட்டத்தினை நீக்கவேண்டும்,19வது திருத்த சட்டத்தினை நீக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.இவர் மடத்தனமான அரசியல் கருத்துகளை கூறியுள்ளார்.13வது திருத்த சட்டம் பல தியாகங்களுக்கு பின்னர் இரு நாடுகளுக்கு இடையில் செய்துகொள்ளப்பட்ட அந்த ஒப்பந்தம் அதிகாரங்கள் பகிரப்படும்போது மாகாணங்களுக்கு முறைமையில்லாமல் பிரதேசசபைகளுக்கா அதிகாரங்களை வழங்குவது என்பது தொடர்பில் இவர்கள் சிந்திக்கவேண்டும்.

அதற்குமேலாகஇந்திய பிரதமர் ராஜிவ் காந்தியும் ஜேஆர் ஜெயவர்த்தனவும் ஆகியோரிடையே இந்திய இலங்கை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டபோது ராஜிவ்காந்தி அவர்கள் கடற்படை உத்தியோகத்தரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையும் வாங்கிக்கொண்டு இந்த ஒப்பந்ததில் கைச்சாத்திட்டுள்ளார்.13வது திருத்த சட்டம் நீக்கப்படும்போது அதனை இந்தியா பார்த்துக்கொண்டிருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. 13வது திருத்தச்சட்டம் நீக்கப்படும்போது நிச்சயமாக இந்தியாவின் தலையீடு இருக்கும்.

13வது திருத்த சட்டத்தின் ஊடாக இந்த நாட்டில் அதிகாரங்களை பரவலாக்கம் செய்து, புரையோடிப்போயுள்ள தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான நியாயமான,தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்திசெய்யக்கூடிய ஒரு தீர்வினைக்கொண்டுவரமுடியும்.

தமிழ் மக்களும் இந்த ராஜபக்ஸவுக்கு சார்பாக போட்டியிட்ட அரசியல்வாதிகளும் ஒன்றை நினைவில்கொள்ளவேண்டும் இந்த அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைப்பெற்றிருக்கின்றது.அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைப்பெற்றவுடன் அவர்களின் கோரமுகத்தினைக்காட்டியுள்ளனர்.அமைச்சரவை பதவியேற்பின்போது இலங்கைக்கான தேசியக்கொடியினை பறக்கவிடால் கண்டி இராஜதானிய கொடியென்ற ரீதியில் சிறுபான்மை மக்களின் அடையாளங்களை அழித்திருக்கின்றார்கள்.ஆரம்பத்தில் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பவர்கள் காலம்செல்லசெல்ல இந்த நாட்டினை அதளபாதாளத்திற்கு தள்ளிவிடும் நிலைமைக்கு கொண்டுசெல்வார்கள் என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் தமிழ் தேசியத்திற்கும் எதிராக வாக்களித்த மக்கள்,அதற்கு எதிராக குரல் எழுப்பியவர்களும் புரிந்துகொள்ளவேண்டும்.

இவர்கள் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும்.கடந்த காலங்களில் தமிழ் மக்கள் அடக்கிஒடுக்கப்பட்டபோது அகிம்சை ரீதியிலும் ஆயுத ரீதியிலும்போராடி மிகப்பெரும் அழிவுகளை சந்தித்துள்ளார்கள். நிர்க்கதியாகவுள்ள இந்த மக்கள் மீண்டுமொருமுறை யுத்தம் ஏற்படாத வகையில் அரசியல் தீர்வொன்றினை தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டிநிற்கின்றது.ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு கிடைக்காதபட்சத்தில் எதிர்காலத்தில் போராட்டம் ஒன்றுவெடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகளவில் இருக்கின்றது.

1956ஆம் ஆண்டு பண்டாரநாயக்காவின் ஆட்சியில் சிங்கள மட்டும் சட்டம் கொண்டுவரப்பட்டபோது இனப்பிரச்சினை துளிவிட்டது.1957ஆம் ஆண்டு பண்டா-செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது ஜேர்.ஆர்.தலைமையில் புத்த பிக்குகள் கண்டிக்கு யாத்திரைசென்றார்கள்.தான் தேர்தலில் தோற்றிடுவேன் என்பதற்காக அந்த ஒப்பந்தத்தினை கிழித்தெறிந்த வரலாறுகள் உண்டு.ஆனால் அடுத்த தேர்தல் வரும்வரைக்கு அவர் உயிருடன் இருக்கவில்லை.

ராஜபகஸ அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைப்பெற்றுள்ளார்கள்.இவர்கள் இந்தநேரத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வினைக்காணாவிட்டால் எதிர்காலத்தில் அவர்களின் பேரப்பிள்ளைகளும் நமது பேரப்பிள்ளைகளும் போராடவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இந்த நாட்டில் மூவின மக்களும் அழியும் சந்தர்ப்பம் ஏற்படும்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக்கொண்ட இந்த அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசி தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினைக்காணவேண்டும் என்பதே எமது அவா.இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை தவிர்ந்து தமிழ் மக்கள் மத்தியில் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஏனைய கட்சிகளும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஒத்துழைக்கவேண்டும்.அனைவரும் இணைந்து இந்த அரசாங்கத்திற்கு ஒரு அழுத்ததினைக்கொடுத்து புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வினைக்காணவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்புமாகும்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE