Thursday 25th of April 2024 12:55:00 AM GMT

LANGUAGE - TAMIL
.
புதிய அரசின் முதலாவது சவாலாக மாறிய மின் துண்டிப்பு! - அருவியின் சிறப்பு பார்வை!

புதிய அரசின் முதலாவது சவாலாக மாறிய மின் துண்டிப்பு! - அருவியின் சிறப்பு பார்வை!


இலங்கையின் 9வது பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற்று அதனடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் நிலையில் புதிய அரசு பிரதமர் மகிந்த ராஜபக்சே தலைமையில் பொறுப்பேற்க முன்னர் சந்தித்துள்ள சவாலாக நேற்றைய தினம் நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் துண்டிப்பு அமைந்துள்ளது.

இலங்கை முழுவதும் நேற்று நண்பகல் 12.35 மணியளவில் திடீரென மினசார தடை ஏற்பட்டது. இத்தடையானது வழக்கமாக குறித்த குறித்த பிராந்தியங்களில் இயல்பாக நடைபெற்று வரும் மின் தடையாகவே மக்கள் தம்மளவில் கருதிக் கொண்டனர்.

சிறிது நேரத்திலேயே வழக்கமான மின் தடையாக இல்லாது நாடு முழுமைக்கும் மின் துண்டிப்பு இடம்பெற்றிருப்பது காட்டுத் தீயாக இலங்கை வாழ் மக்களிடம் பரவியது.

நாடாளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள திடீர் மின் துண்டிப்பு விரைவில் சரி செய்யப்பட்டு 2 மணி நேரத்திற்குள் வழமைக்கு திரும்பும் என புதிய அரசின் மின்வலு அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்திருந்தார்.

அமைச்சர் அவ்வாறு கூறியிருந்த போதிலும் உண்மையில் ஏற்பட்ட மின் கோளாறை சரிசெய்வது அவ்வளவு சுலபமானதாக இருந்திருக்கவில்லை. புதிய அரசு பொறுப்பேற்று பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு நடைபெற 3 நாட்கள் இருக்கும் போது இவ் அனர்த்தம் ஏற்பட்டிருந்தமை ராஜபக்சேக்களுக்கு பெரும் நெருக்கடியாக மாறியது.

இந்நெருக்கடியை சீர் செய்து நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவர வைப்பதற்கான முனைப்புகள் சகல பக்கத்திலும் முடுக்கிவிடப்பட்டன. கட்டம் கட்டமாக ஒவ்வொரு பிராந்தியமாக மின்சார வழங்கல் வழமைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் இரவு 10.00 மணிக்கு நாட்டின் அனைத்து பகுதியிலும் மின்சார விநியோகம் வழமைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

நாட்டு மக்கள் அப்பாடா என்று ஆறுதல் பெருமூச்சு விட்டங்குவதற்குள் இன்று முதல் வரும் 4 நாட்களுக்கு பகல் வேளையில் ஒன்றே முக்கால் மணித்தியாலங்களும் இரவு வேளையில் ஒரு மணித்தியாலமும் மின் தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு வலயங்களாக பிரிக்கப்பட்டு இந்த மின்தடையானது சுழற்சி முறையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவத்துள்ளது.

அதற்கமைவாக,

பகல் நேரத்தில்....

வலயம் A - முற்பகல் 10.00 - முற்பகல் 11.45 வரை

வலயம் B - முற்பகல் 11.45 - மதியம் 1.30 வரை

வலயம் C - மதியம் 1.30 - பி.பகல் 3.15 வரை

வலயம் D - பி.பகல் 3.15 - பி.பகல் 5.00 வரை

இரவு நேரத்தில்...

வலயம் A - மாலை 6.00 - இரவு 7.00 வரை

வலயம் B - இரவு 7.00 - இரவு 8.00 வரை

வலயம் C - இரவு 8.00 - இரவு 9.00 வரை

வலயம் D - இரவு 9.00 - இரவு 10.00 வரை

என்ற அடிப்படையில் மின் தடை நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அந்த நான்கு வலயங்களுக்கு பிரத்தொதுக்கப்பட்ட இடங்கள் குறித்த தகவல் வெளிப்படையாக அறிவிக்கப்படாமை மக்களிடையே குழப்ப நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இவை ஒருபுறமிருக்க, நேற்றைய திடீர் மின் தடை நாடு முழுமைக்கும் ஏற்பட்டுள்ளதன் பின்னணியில் இயல்புநிலைக்கு திரும்புவது குறித்து முனனுக்கு பின் முரணாக வெளிவந்த தகவல்களும், வதந்திகளும் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியது.

இதனால் பொதுமக்கள் போர்க்கால அடிப்படையில் மெழுவர்த்தி, சார்ஜர் மின்விளக்கு உள்ளிட்டவற்றை வாங்குவதற்கு முண்டியடித்ததை காணக்கூடியதாக இருந்தது. குறித்த பொருட்கள் பெரும்பாலான வர்த்தக நிலையங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருப்பு வைக்கப்பட்டு இருந்தமையால் திடீர் நெருக்கடி ஏற்பட்டிருந்தது.

திடீர் மின் தடைக்கு உண்மையில் என்ன காரணம்?

மின்சார தடை ஏற்பட்மைக்கு முக்கிய காரணம் மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு என கூறப்படுகின்றது. எனினும் அதற்கு மேலதிகமாகவும் சில பிரச்சினைகள் இருக்கலாம் என மின்சார சபையின் பொறியிலாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். பத்தரமுல்ல பெல்வத்தையிலுள்ள மின்சார கட்டமைப்பு செயற்பட்டமை தொடர்பிலும் தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி மற்றும் மார்ச் மாதம் 13ஆம் திகதி நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டது. இதனையடுத்து 2018ஆம் ஆண்டு 3 பில்லியன் ரூபாய் செலவில் பெல்வத்தையிலுள்ள மின்சார கட்டமைப்பு மறுசீரமைப்பு செய்யப்பட்டது. இந்த கட்டமைப்பிலும் சில மோசடிகள் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் மின்சாரம் தடைப்படுவது குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக துறைசார் அமைச்சர் டளஸ் அழகப்பெரும நேற்று அறிவித்திருந்தார்.

இது தொடர்பில் இலங்கை மினசார சபையின் தலைவர் விஜித்த ஹேரத் கருத்து தெரிவிக்கும் போது,

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் உள்ள விசையாழிகள் செயலிழந்தது. அதன் தொடர்ச்சியாக கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் விசையாழிகளும் செயலிழந்தது. அவை இரண்டும் செயலிழந்தமையே இதற்கு காரணம் ஏன அவர் கூறினார்.

இந்நிலையில் கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் செயற்டபாடுகள் தற்போது வழமைப்போன்று இடம்பெறுவதாக மின்சார சபையின் முகாமையாளர் கிசிறி ஏகொடவத்த தெரிவித்தார்.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை மீட்டெடுக்க மூன்று நாட்கள் தேவைப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அங்குள்ள விசையாழிகள் குளிச்சயடையும் வரை மின் நிலையத்தை மீண்டும் இயக்க முடியாது என மின்சார சபை தலைவர் மேலும் கூறியிருந்தார்.

மேற்குறித்த மின் துண்டிப்பு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள அமைக்கப்பட்ட விசாரணைக் குழு இன்று காலை முதல் விசாரணையை தொடங்கியிருந்தது. இவ் விசாரணைக் குழு இன்றைய தினம் கூடி ஆராய்ந்துள்ளது.

எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் சம்பவம் தொடர்பான அறிக்கையை முன்வைப்பதற்கு எதிர்பார்ப்பதாக மின்சக்தி துறை அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷண ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவத்திற்கான காரணம் தொடர்பை உரிய முறையில் கண்டறிவதுடன், இதற்கு முன்னர் ஏற்பட்ட இதுபோன்ற நிலைமைகளில் கையாளப்பட்ட நடவடிக்கை என்பன தொடர்பில் ஆராய்வது இந்தக் குழுவின் பணியாக உள்ளது.

அதேநேரம், எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமைகள் ஏற்படாமல் இருப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பிலும், இந்தக் குழு ஆராய உள்ளது.

இந்த நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பில் ஆரயப்படுகின்ற நிலையில், அது குறித்த தற்போது கருத்து தெரிவிக்க முடியாது என்று மின்சக்தி துறை அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷண ஜயவர்தன தெரிவித்துள்ளார்

இந்தப் பின்னணியில்தான் இன்று தொடக்கம் சனிக்கிழமை வரை சுழற்சி முறையில் தினமும் மின் தடை இருவேளைகளில் நடைமுறைப்படுத்தப்பட தீர்மானிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தொடர்ச்சியாக குறிப்பிட்ட காலம் தடையற்ற மின் பாவனையில் மூழ்கியிருந்த நிலையில் இவ்வாறு திடீரென மின் துண்டிப்பு ஏற்பட்டிருந்தமை நாட்டில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் தமது வழமையான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாமல் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

இது தவிர முக்கிய நகரங்களில் உள்ள வீதி சமிக்ஞை விளக்குகள் செயலிழந்து போனமையால் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டிருந்ததுடன் பொதுமக்களின் அன்றாட வாழ்வில் பெரும் இன்னல்களையும் இந்த திடீர் மின் துண்டிப்பு ஏற்படுத்திச் சென்றுள்ளதென்பதே உண்மையாகும்.

இலங்கை அரசியல் வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் அதிகப்படியான ஆசனங்களை கைப்பற்றியதுடன் தனது பங்காளிக் கட்சிகளின் ஆதரவுடன் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையை பெற்று புதிய அட்சியை அமைத்துள்ள மகிந்த ராஜபக்சே தலைமையிலான அரசு பராளுமன்ற கன்னி அமர்வை நோக்கி உற்சாகமாக பயணித்துக் கொண்டிருந்தது.

யாரும் எதிர்பாராத வகையில் ஏற்பட்ட இந்த மின் துண்டிப்பானது எதிர்வரும் இரண்டு தசாப்தங்களுக்கு தம்மை அசைக்க முடியாது என்ற இறுமாப்போடு இலங்கையின் ஆட்சி-அதிகாரத்தை கொண்டு நகர்த்த முற்பட்ட ராஜபக்சே'களுக்கு ஆரம்பமே நெருக்கடியுடன் அமைந்துள்ளது.

மேற்குறித்தான கோளாறுகள் ஏற்படுவது இயல்பான விடயமாக இருப்பினும் ராஜபக்சே'களின் புதிய ஆட்சி-அதிகார பயணத்திற்கு எதிராக காட்டப்பட்டிருக்கும் குறியீடாகவே திடீர் மின் துண்டிப்பு சம்பவம் நோக்கப்படுவதாக அவதானிகள் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் குழு

அருவி இணையம்.

18.08.2020


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, மகிந்த ராசபக்ச, இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE