Thursday 25th of April 2024 04:12:24 PM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கை சிங்கள மக்களுக்கு மட்டுமே உரித்தானது என்ற நிலைப்பாடே இனப்பிரச்சினைக்கான ஆணிவேர்: சுரேஷ்!

இலங்கை சிங்கள மக்களுக்கு மட்டுமே உரித்தானது என்ற நிலைப்பாடே இனப்பிரச்சினைக்கான ஆணிவேர்: சுரேஷ்!


நாட்டின் உண்மையான வரலாற்றை மறைத்து, இந்த நாடு சிங்கள மக்களுக்கு மட்டுமே உரித்தானது என்று நிறுவ முற்படுவது தான் இனப் பிரச்சினைக்கான ஆணி வேர் என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

9 வது பாராளுமன்றத்தில் சபாநாயகரை வாழ்த்திப் பேசுகையில், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க.வி. விக்னேஸ்வரனின் உரையை ஹன்சாட்டில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறுபவர்கள் உண்மையான வரலாற்றை நாட்டு மக்களுக்குச் சொல்லத் தயாரா என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு,

பாராளுமன்றத்தில் விக்னேஸ்வரன் முதன் முதலாக ஆற்றிய கன்னி உரை பாராளுமன்றத்திலும் தென் பகுதியிலும் பலத்த சலசலப்புக்களை ஏற்படுத்தி இருக்கின்றது. தமிழ் மிகவும் தொன்மையானமொழி என்றும் இலங்கையில் மூத்த குடிமக்களாக தமிழர்களே இருந்தார்கள் என்றும் அவ்வாறான மக்களுக்கு இறையாண்மை இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் சொல்லிய கருத்தினை பாராளுமன்ற உறுப்பினர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

இதன் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார, விக்னேஸ்வரனினுடைய உரை சிங்கள மக்களுக்கு எதிரானது என்ற தொனியில் அதனை விமர்சித்ததுடன், அவரது உரையை ஹன்சாட்டில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இலங்கையினுடைய வரலாறு என்று கூறப்படும் மகாவம்சத்தில் விஜயன் இந்தியாவில் இருந்து தனது 700 நண்பர்களுடன் இலங்கைக்கு வந்ததாகக் கூறப்படுகின்றது. இவ்வாறு அவன் இலங்கைக்கு வந்து குவேனி என்ற பெண்ணை மணந்ததாகவும் கூறப்படுகின்றது. விஜயன் இலங்கைக்கு வந்த பொழுது இலங்கையில் திருகோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம், நகுலேஸ்வரம், தொண்டீஸ்வரம் ஆகிய ஐந்து ஈஸ்வரங்கள் இலங்கையைச் சுற்றிலும் இருந்ததாகவும் இங்கிருந்தோர் சிவனை வழிபட்டு வந்ததாகவும் அவர்கள் பேசியது தொன்மையான தமிழ் மொழி எனவும் சிங்கள, தமிழ் மற்றும் சர்வதேச வரலாற்று ஆய்வாளர்கள் கூறியிருக்கின்றார்கள்.

இதனையே தான் பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் தனது கன்னி உரையில் குறிப்பிட்டு, அவ்வாறான தொன்மையான ஓர் மக்கள் இனத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இருந்தார். இது எந்த விதத்தில் ஒரு இனவாதக் கருத்தாக அமையும் என்பதை கற்றறிந்த சிங்கள மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனுடைய கருத்துக்களை பாரிய இனவாத கருத்துக்களாகவும் இவை அடக்கப்பட வேண்டும் எனவும் இந்தக் கருத்துக்கள் தமிழீழக் கோரிக்கைக்கு ஒப்பானது என்றும் பிரதமர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசுவதானது அவர்களின் உள்நோக்கத்தையே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.

போர்த்துக்கேயர் இலங்கையைக் கைப்பற்றிய போது இலங்கை முழுவதிலும் தமிழே நீதிமன்ற மொழியாக இருந்தது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

தமிழ் மக்களினுடைய மொழி அதனுடைய தொன்மை அவர்களது கலாசாரம், பண்பாடு, அவர்களுக்கு உரித்தான அதிகாரங்கள் அவர்களுடைய பாதுகாப்பு இவை எதனைப் பற்றிப் பேசினாலும் ஒட்டுமொத்த சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இவை இனவாதக் கருத்துக்களாகவே தோன்றுகின்றது. இன்னும் சொல்லப்போனால் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது மொழி தொடர்பாகவோ, தமது பிறப்புரிமைகள் தொடர்பாகவோ, அவர்களது பாதுகாப்பு தொடர்பாகவோ பேசக்கூடாது என எதிர்பார்க்கின்றார்கள்.

அரசாங்கத்தின் காணி அபகரிப்பு, எமது புராதன சின்னங்களை அழித்து ஒழித்தல், தமிழ் மக்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள மறுத்தல் போன்ற அனைத்தையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள். தமிழ் இனத்துக்கு எதிரான இனப் படுகொலைகள், யுத்தக் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக பாராளுமன்றத்திலோ, வெளியிலோ தமிழர் தரப்புக்கள் பேசக் கூடாது என்று எதிர்பார்க்கின்றார்கள்.

இவ்வாறு பேசுவது எல்லாம் இனவாதக் கருத்துக்கள் என முத்திரைகுத்த முயற்சிக்கின்றார்கள். பாராளுமன்றத்தில் இருக்கக் கூடிய சிங்கள பௌத்த இனவாத சக்திகளும் அரசும் இவ்வாறான முயற்சிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்றார்கள். இவ்வாறான கருத்துக்களை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதனை தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

விக்னேஸ்வரன் அவர்கள் கூறிய கருத்துக்கள் தவறான கருத்துக்கள் என்று கருதினால் அதில் எந்தவிதமான உண்மையும் இல்லை அவை பாராதூரமான கருத்துக்கள் என்று கருதினால் சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உண்மையான கருத்துக்களைக் கூறி தங்கள் கருத்து சரி என வாதிட வேண்டுமே தவிர அவை எதனையும் கூறாமல் அதனை பாராளுமன்ற குறிப்பேட்டில் இருந்து எடுக்கும்படி வற்புறுத்துவதானது அவர்களது இயலாத் தன்மையை வெளிப்படுத்துகிறது.

விக்னேஸ்வரன் அவர்களுடைய கருத்துக்களை சவாலுக்கு உட்படுத்துவதற்கோ அல்லது அது பொய்யானது என்றோ நிரூபிக்கமுடியாத சூழ்நிலையில் சபாநாயகரைப் பயன்படுத்தி அவரது கருத்தை ஹன்சாட்டில் இருந்து அகற்ற முற்சிப்பது சரியான ஓர் செயற்பாடாகத் தோன்றவில்லை.

பாராளுமன்றம் என்பது மக்கள் பிரதிநிதிகள் தங்களது மக்களின் குறைநிறைகளை அது தொடர்பான சட்டங்களை பேசுவதற்கும் உருவாக்குவதற்குமான சபையாகவே உள்ளது. அதாவது மக்கள் தமது இறையாண்மையை தமது பிரதிநிதிகள் ஊடாக பாராளுமன்றத்தில் செயற்படுத்துகின்றார்கள் என்பதே அதன் அர்த்தம் ஆகும்.

ஆகவே, அந்த வகையில் சிறுபான்மை தேசிய இனம் ஒன்றின் பிரதிநிதிகள் அத் தேசிய இனத்தினுடைய உரிமைகள் தொடர்பாகவும், அவர்களுடைய இருப்புக்கள் தொடர்பாகவும், அவர்களுடைய பாதுகாப்பு தொடர்பாகவும் பாராளுமன்றத்தில் எடுத்துரைப்பதற்கு உரித்துடையவர்கள். அதற்கான உரித்துக்கள் அனைத்தும் வரலாற்றுபூர்வமாக அவர்களுக்கு இருக்கிறது என்பதையும் பெரும்பான்மை இனத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பெரும்பான்மை இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசும் புரிந்து கொள்ள வேண்டும்.

புதிய பாராளுமன்றத்தில் வந்திருக்கக் கூடிய அரச தரப்பினரும் எதிர் தரப்பில் இருக்கக் கூடிய சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களும் தம்மை சிங்கள பௌத்த பெரும் தேசியவாதிகள் எனக் கருதிக் கொள்வதும் ஏனைய தேசிய இனங்கள் தங்களுக்கு அடிமையாக சேவை செய்ய வேண்டும் என்று கருதுவதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு நிலைப்பாடாகும்.

உண்மையான வரலாற்றைத் திரிபுபடுத்தி, அதனை மறைத்து உண்மைக்கு எந்த விதத்திலும் தொடர்பற்ற கற்பனையில் தோற்றுவிக்கப்பட்ட வரலாற்றை பாடப் புத்தகங்களில் நுழைத்து மக்களை திசை திருப்பி விட்டவர்கள் இந்நாட்டில் தொடர்ந்தும் மாறிமாறி ஆட்சி செய்துவரும் சிங்கள பௌத்த மேலாதிக்கவாத சக்திகளே அன்றி, தமிழ் மக்கள் அல்லர் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

நாட்டின் உண்மையான வரலாற்றை மறைத்து, இந்த நாடு சிங்கள மக்களுக்கு மட்டுமே உரித்தானது என்று நிறுவ முற்படுவது தான் இனப் பிரச்சினைக்கான ஆணி வேர். இதனைப் புரிந்து கொண்டு இனியாவது உண்மையான வரலாற்றை மக்களிடம் எடுத்துச் சென்று இதுவரை காலமும் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படுகின்ற அரச வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அனைவரும் அவரவர் உரிமைகளுடன் வாழ வழிவகுக்க வேண்டும்.

எனவே, பலமொழிகள், பலமதங்கள், பல இனங்கள் இருக்கக் கூடிய ஒரு நாட்டில் சிங்கள பௌத்தர்கள் மாத்திரம் தான் தீர்மானிக்கும் சக்திகள் என கருதி ஏனையோரை அடக்கி ஒடுக்கும் கருத்துக்களை கைவிட்டு இனங்களுக்கு இடையில் புரிந்துணர்வை உருவாக்கக் கூடிய வகையில் அரசும் சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்வரவேண்டும் எனகேட்டுக் கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: க.வி.விக்னேஸ்வரன், இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE