Wednesday 2nd of December 2020 03:56:29 AM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இன மோதல் - 17 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 17 (வரலாற்றுத் தொடர்)


'1915ம் ஆண்டுக் கலவரத்தின் போது பௌத்தர்களான சிங்களவர்கள் கைது செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்படுவதற்கு முன்னர் கடும் அபராதங்கள் விதிக்கப்பட்டன. அவர்கள் விடுவிக்கப்படாமலுமிருந்தார்கள். அவர்களில் பேதிரிஸ் உட்பட சிலர் நீதிமன்ற விசாரணையின்றிச் சுட்டுக்கொல்லப்பட்டனர். இலங்கையில் முதலாவது பிரதமராகப் பின்பு பதவியேற்ற டி.எஸ்.செனநாயக்கா கூடக் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டபோது அவர் இயற்கைக் கடன்களை கழிக்கவோ, ஆடைகள் மாற்றவோ அனுமதிக்கப்படவில்லை. எந்த ஒரு வெளிநாட்டுத் தலைவரோ, நாடோ எமக்கு உதவிக்கு வரவில்லை. பத்திரிகைகள் மௌனித்திருந்தன. எமக்காகச் சட்டசபையிலும் அதற்கு வெளியேயும் ஒலித்த ஒரே குரல் சேர்.பொன்.இராமநாதனுடையது. அவரது இரண்டாவது கட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஒரு சட்ட சபை உறுப்பினர் என்ற வகையில் சுக்கோனியர்கள், நோர்மன்கள், கிரேக்கர்கள், றோமானியர்கள் ஆகியோருக்கு என்ன நடந்ததோ அவற்றையே மேற்கோள் காட்டி சிங்கள இனத்தை தனியொருவராக நின்று இராமநாதன் காப்பாற்றினார். சூரியன் அஸ்தமிக்கும் வேளையிலும் காலையின் உதயத்திலும் நாம் அவரை நினைவு கூர்ந்து போற்ற வேண்டும்'.

இது முன்னாள் ஜனாதிபதியும் ஆசியாவின் ஒப்பற்ற இராஜதந்திரி எனப் போற்றப்படுபவருமான ஜே.ஆர்.ஜெயவர்த்தன 1991 நவம்பர் 30ம் நாள் 'இராமநாதனின் வாழ்வும் பணியும்' என்ற தலைப்பில் வெள்ளவத்தை விவேகானந்தா மண்டபத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதியாகும்.

தற்போது காலையிலும் மாலையிலும் இராமநாதன் மக்களைக் காப்பாற்றிய மகோன்னதத்தை நினைவு கூர்வதில்லை என்பது மட்டுமல்ல 1958, 1977, 1983, 1988 ஆகிய காலப்பகுதிகளில் காலையிலும் மாலையிலும் மட்டுமின்றி இரவு பகல் பாராது சிங்களவர் தமிழர்களைக் கொன்றுகுவித்ததும் சொத்துகளைக் கொள்ளையடித்ததும் குடியிருப்புகளையும், வர்த்தக நிலையங்களையும் எரியூட்டியதும் தமிழ்ப் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதும் எனப் பல வழிகளிலும் தங்கள் விசித்திரமான நன்றியுணர்வை வெளிப்படுத்தினர். சிங்களவர்களைக் காப்பாற்றியமைக்காக காலையிலும் மாலையிலும் நன்றியுணர்வுடன் இராமநாதனை நினைவு கூர வேண்டுமென கூறிய அதே ஜே.ஆர்.ஜெயவர்த்தன, போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் எனச் சவால் விட்டு தமிழினத்தின் மீதான இனவழிப்புக்கு ஆணைவழங்கினார். 1983 இல் அவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்த போது அவரது தலைமையில் அரசாங்கத்தின் அமைச்சர்களாக இருந்த சிலரின் அனுசரணையுடன் நாடு பரந்த இனவழிப்புக் கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. சிறைக்குள்ளேயே தமிழ்க் கைதிகள் அரச பாதுகாப்பில் வைத்தே கொல்லப்பட்டதும் நாம் காலையிலும் மாலையிலும் மட்டுமல்ல ஒவ்வொரு விநாடியும் நினைவு கூரவேண்டிய துரோகங்களாகும். காப்பாற்றிய கரங்களையே வெட்டியெறியும் வீரம் சிங்களத் தலைவர்களுக்கு பேரினவாதம், தவமெதுவும் செய்யாமலே உவந்தளித்த அற்புதமான வரமாகும்.

இராமநாதன் அவர்கள் தானொரு இந்து தமிழன் என்ற உணர்வை எப்போதுமே தானொரு இலங்கையன் என்ற உணர்வுக்கு கீழப்படுத்தியே பார்த்து வந்துள்ளார். தான் தமிழராய் மட்டுமின்றி சிங்களவரையும் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு இலங்கையராகவே விளங்கினார். ஆனால் சிங்களத் தலைவர்களோ சிங்கள பௌத்தர்கள் மட்டுமே இலங்கையர்கள் எனவும் ஏனையோர் தங்களுக்கு கீழ்ப்பட்டவர்கள் என்ற உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர். முஸ்லீம்களுக்கு ஏற்பட்ட பேரிழப்புகளை கவனத்திலெடுக்காமல் சிங்களவர்களை 1915ல் காப்பாற்றிய இராமநாதனுக்கு தங்கள் நன்றியுணர்வை 1921ல் அவரைப் புறமொதுக்கியதன் மூலம் வெளிக்காட்டினர்.

சிங்களத் தலைவர்களை விடுவிக்க லண்டன் சென்று வாதாடி அதில் வெற்றி பெற்று வந்தபோது துறைமுகத்திலிருந்து அவரைத் வீடு வரை தேரிலேற்றி சுமந்தவர்கள் 1921ல் கொழும்பில் ஒரு பிரதிநிதித்துவம் தமிழர்களுக்கு வழங்கப்படுமென மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை உதறிவிட்டு இராமநாதனை இலங்கை அரசியலிலிருந்து தூக்கி யாழ்ப்பாண அரசியலுக்குள் வீசியெறிந்தார்கள். அந்த நடவடிக்கையின் மூலம் இராமநாதன் இலங்கையின் பிரதிநிதி அல்ல அவர் தமிழர்களுக்கு மட்டுமே பிரதிநிதி என்பதைத் திட்டவட்டமாகப் பிரகடனம் செய்துவிட்டனர்.

அநகாரிக தர்மபாலாவின் மதுவிலக்கு மாட்டிறைச்சி உண்பதற்கான எதிர்ப்பு ஆகிய நோக்கங்களைக் கொண்ட நடவடிக்கைகளில் பல சிங்களத் தலைவர்கள் தீவிரமாகப் பங்குகொண்டனர். இப்போராட்டமானது ஆங்கில ஆட்சிக்கு எதிரான ஒரு கலவரமாகவே ஆங்கில அரச தரப்பினரால் பார்க்கப்பட்டது. எனவே முஸ்லீம்களை இலக்கு வைத்து அவர்களின் வர்த்தக ஆதிக்கத்தை கைப்பற்றும் நோக்குடன் இந்த இனவழிப்புக் கலவரம் கொடூரமான முறையில் கட்டவிழ்த்து விடப்பட்டபோதிலும் இதனால் ஏற்றபட்ட இரத்தக்களரியும் அமைதியின்மையும் காரணமாக இது ஆங்கில ஆட்சிக்கு எதிரான கலவரமாகவே பார்க்கப்பட்டது. அதன் காரணமாக கைது செய்யப்பட்ட சிங்களத் தலைவர்கள் மீது தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்டது. அநகாரிக தர்மபால உடனடியாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு பின் கைது செய்யப்பட்டு பின் ஆறு ஆண்டுகள் கல்கத்தாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அப்படியான நிலையிலேயே மரண தண்டனை அல்லது நீண்ட கால சிறை போன்ற கடும் தண்டனைகளுக்கு உட்படுத்தப்படவிருந்த சிங்களத் தலைவர்களை இங்குள்ள சட்டசபையில் மட்டுமின்றி இங்கிலாந்து வரை சென்று உரிய அதிகாரிகளுடன் வாதாடி விடுவித்தார்.

அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் முகமாக நியமிக்கப்பட்ட டொனமூர் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாணைகளின் போது இராமநாதனின் தமையனார் ஆகிய சேர்.பொன்.அருணாசலம் அமைச்சரவையில் சிறுபான்மையினர் உத்தியோக பூர்வமாக நியமிக்கப்பட வேண்டுமென ஆணித்தரமாக வாதிட்டார்.

இக்காலப்பகுதியில் 1919ம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கைத் தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டு அதன் தலைவராக சேர்.பொன்னம்பலம் அருணாசலம் தெரிவுசெய்யப்பட்டார். இலங்கைத் தேசிய காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட போது தமிழர்கள் தரப்புக்கும் சிங்களத் தலைவர்களுக்குமிடையே மேல் மகாணத்தில் தமிழர் ஒருவருக்கு பிரதிநிதித்துவம் ஒதுக்கப்பட வேண்டுமென உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில் சிங்களத் தலைவர்கள் சார்பில் ஜேம்ஸ் பீரிஸ், எஸ்.ஜே.சமரவிக்கிரம ஆகியோர் கையொப்பமிட்டனர்.

எனவே இவ்வுடன்படிக்கையை அடுத்து டொனமூர் ஆணைக்குழுவினர் சிறுபான்மையினருக்கு அமைச்சரவையில் கட்டாயப் பிரதிநிதித்துவம் என்ற கோரிக்கை அவசியமற்றதெனக் கூறி நிராகரித்துவிட்டனர்.

ஆனால் 1921ல் சட்டசபைத் தேர்தல் இடம்பெற்றபோது சிங்களத் தலைவர்கள் இந்த உடன்படிக்கையைத் தூக்கியெறிந்து விட்டு தமிழர் ஒருவருக்கு மேல் மாகாணத்தில் பிரதிநிதித்துவம் வழங்க மறுத்துவிட்டனர். இத்தேர்தலுக்கு முன்னைய காலப்பகுதியில் சட்டசபையில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கு சரிசமனான ஆசனங்களே இருந்தன. ஆனால் புதிய அரசியல் சீர் திருத்தத்துக்கு அமைய இடம்பெற்ற தேர்தலில் சிங்களவர்களுக்கு 13 ஆசனங்களும் தமிழர்களுக்கு 3 ஆசனங்களும் கிடைத்தன. மேல் மகாணத்தில் தமிழர்களுக்கு வழங்கப்படவிருந்ததாக வாக்குறுதியளிக்கப்பட்ட ஒரு ஆசனமும் மறுக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் சேர்.பொன்.அருணாசலம் இலங்கைத் தேசிய காங்கிரஸ் அமைப்பிலிருந்தும் தான் வகித்த தலைமைப் பதவியிலிருந்தும் வெளியேறி 1921ல் தமிழர் மகாசபை என்ற ஒரு அமைப்பை உருவாக்கினர்.

தென்னிலங்கையில் சேர்.பொன்.இராமநாதன் ஏமாற்றப்பட்டது இதுதான் முதற் தடவையல்ல. ஏற்கனவே ஒல்கொட், புல்ஜென்ஸ் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட பௌத்த ஆங்கிலக் கல்லூரிகளை நிறுவுவதற்கான நிதியத்துக்கு இராமநாதன் 15,000 ரூபா அன்பளிப்பாக வழங்கியதுடன் அந்த நிதியத்தின் இணைப்பொருளாளராகவும் செயற்பட்டார். அத்துடன் பௌத்த மத மறுமலர்ச்சிக்கு பங்காற்றவென அமைக்கப்பட்ட பிரம்மஞான சங்கத்தில் தானும் பங்கு கொண்டு ஒல்கொட்டுடன் இணைந்து தீவிரமாகப் பணியாற்றினார். அதே வேளையில் இந்நிதியத்தின் மூலம் கொழும்பு, காலி, குருணாகல் ஆகிய பகுதிகள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பௌத்த ஆங்கிலக் கல்லூரிகளும், பாடசாலைகளும் நிறுவப்பட்டனவே ஒழிய இந்து ஆங்கிலப்பாடசாலைகள் நிறுவுவதில் ஆர்வம் காட்டப்படவில்லை. எனவே இராமநாதன் தான் வழங்கிய நிதியில் ரூபா ஐயாயிரத்தை மீளப் பெற்று கொழும்பு இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம் பரமேஸ்வராக் கல்லூரி மருதனார்மடம் இராமநாதன் மகளிர் கல்லூரி ஆகிய இந்து ஆங்கிலப் பாடசாலைகளை நிறுவினார். ஏற்கனவே யாழ்ப்பாண இந்துக் கல்லூரி உட்பட வட பகுதி முழுவதுமே இந்து ஆங்கிலப் பாடசாலைகள் நிறுவப்பட்டு அவை சிறப்பான முறையில் ஆறுமுக நாவலரால் மிசனரிகள் நடத்திய கல்லூரிகளுக்கு நிகராக இந்துப்பாடசாலைகளாக நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இப்படியாக அவர் 1885ம் ஆண்டு காலப்பகுதியில் சிங்களத்தரப்பினரால் ஏமாற்றப்பட்ட போதிலும் 1915ல் முஸ்லீம்கள் மீதான இனவழிப்புக் கலவரத்தில் கைது செய்யப்பட்ட சிங்களத் தலைவர்களை விடுவிக்க கடுமையாகப் பாடுபட்டார். அதே வேளையில் அவர்களுடன் இணைந்து மது ஒழிப்பு மாட்டிறைச்சி உண்பதற்கு எதிர்ப்பு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட அநகாரிக தர்மபாலவின் இயக்கத்துக்கும் ஆதரவு வழங்கினார்.

யாழ்ப்பாண மேட்டுக்குடி இந்து வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த இராமநாதன் மாட்டிறைச்சி உண்பதையும் மது அருந்துவதையும் பாவமாகவே கருதும் ஒருவராக விளங்கினார். நாவலரின் போதனைகளும் இக்கொள்கைகளை வலியுறுத்தின என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அநகாரிக தர்மபாலவின் இயக்கத்துக்கு இராமநாதன் ஆதரவு வழங்கியதில் ஆச்சரியப்பட எதுவுமே இல்லை. ஆனால் அநகாரிக தர்மபால இந்த இயக்கம் முஸ்லீம்களையும் கத்தோலிக்கர்களையும். இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்டது என்பதை இராமநாதன் உணர்ந்து கொள்ளவில்லை போலுள்ளது.

ஏற்கனவே நகர்ப்புற கரையோர வர்த்தகத்தில் மேலாதிக்கம் வகித்து வந்த முஸ்லீம்களின் பலத்தை முறியடித்து அதை சிங்கள வர்த்தகர்கள் கைப்பற்றுவதற்கான ஒரு புறச் சூழலை உருவாக்குவதற்கு முஸ்லீம்கள் மீது வெறுப்பை உண்டாக்குவதற்கு சிங்கள பௌத்த மேலாதிக்க இனவெறி சித்தாந்தத்தை மூலமாக் கொண்டு இவ்வியக்கம் முன்னெடுக்கப்பட்டது என்பதை அவர் புரிந்து கொண்டிருக்கவில்லை.

1921ல் அநகாரிக தர்மபால கல்கத்தாவில் தடுப்பிலிருந்து விடுபட்டு பௌத்த துறவியாக மாறி அங்கேயே பௌத்த காயாவில் தங்கிவிட்டபோதிலும் அவரின் சிங்கள பௌத்த மேலாதிக்கவெறி சிங்களத் தலைவர்களிடம் அழுத்தமாகப் பதிந்து விட்டது. அது மேலும் மேலும் மெருகேற்றப்பட்டு இன்று மிக உயர்ந்த பட்சமாகக் கூர்மைப்படுத்தப்பட்ட வடிவத்தில் ஏனைய இனங்கள் மீதான ஒடுக்குமுறையாக இன்றும் கூட நிலைபெற்றிருப்பதைக் காணமுடியும். எனவே தேரிலேற்றி தாங்கள் தோளில் சுமந்த இராமநாதனையே சிங்களத் தலைவர்கள் இலங்கை அரசியலிலிருந்து அகற்றி யாழ்;ப்பாண அரசியலுக்குள் வீசிய காரணத்தினால் சேர்.பொன். அருணாசலத்தால் கொழும்பு மைய அரசியலை விட்டு நீங்கி யாழ்ப்பாண மகாஜன சபையை ஆரம்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மகாவம்சம் எழுதப்பட்ட காலத்திலிருந்து தமிழர்கள் முஸ்லீம்கள் மீது ஊட்டி வளர்க்கப்பட்ட இனக்குரோத உணர்வு காலத்துக்கு காலம் வலுப்படுத்தப்பட்டு அநகாரிக தர்மபாலவால் சிங்கள பௌத்த இனமேலாதிக்க சித்தாந்தமாக உருவாக்கப்பட்டது. அதன்படி இலங்கை சிங்களவர்களுக்கே மட்டும் சொந்தமான நாடு எனவும் ஏனைய இனங்கள் அவர்களுக்கு கீழ்ப்பட்டே இங்கு வாழவேண்டுமென்ற எண்ணம் சிங்கள மக்கள் நெஞ்சில் ஆழமாக பதிக்கப்பட்டுவிட்டது. இன்று வரை தொடரும் இனமோதல்களின் அடிப்படையில் இங்குதான் கருக்கொண்டது.

தொடரும்

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கைபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE