Monday 17th of May 2021 01:00:31 PM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கையின் புதிய வெளியுறவுக் கொள்கை;  சீனாவை சார தயாராகிறதா? - கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்

இலங்கையின் புதிய வெளியுறவுக் கொள்கை; சீனாவை சார தயாராகிறதா? - கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்


இலங்கையின் வெளியுறவுக கொள்கை தனித்துவமான பக்கத்தினை நோக்கி செயல்பட ஆரம்பித்துள்ளது என்பதை கடந்த வாரங்களில் இதே பகுதியில் தேடியுள்ளோம். இவ்வாரம் அதன் இன்னோர் பக்கத்தினையும் அதனால் ஏற்படவுள்ள அரசியல் களத்தையும் நோக்குவது பொருத்தமானதாக அமையும் என எதிர்பார்த்து இக்கட்டுரை தயார்செய்யப்பட்டுள்ளது.

கொழும்புத் துறைமுகத்திற்கு பதிலாக வங்காளவிரிகுடாவிலுள்ள நிக்கேபார் தீவிலுள்ள (Great Nicobar Island) துறைமுகத்தை பயன்படுத்துவதற்கு இந்திய மத்தியரசு தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இப்புதிய இடமாற்றத் துறைமுகத்தை (Transit Point) அமைப்பதற்கான மூலோபாய முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த பிரதமர் நரேந்தி மோடி தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. இந்தியப் பெருங்கடலுக்கும் பசுபிக் பெருங்கடலுக்கும் இடையிலான முக்கிய கப்பல் போக்குவரத்து தடமாக விளங்கும் மலாக்கா ஜலசந்தியின் வாயிலில் அமைந்துள்ள இந்தியாவின் நிக்கோபார் தீவுகளின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மிகப் பெரிய தீவுப்பகுதியிலேயே முன்மொழியப்பட்ட இடமாற்றத் துறைமுகம் அமையவுள்ளது.இது தற்போது பிராந்தியத்தின் இடமாற்ற மையங்களாக அமைந்துள்ள கொழும்புத் துறைமுகத்திற்கும் சிங்கப்பூர் துறைமுகத்திற்கும் மற்றும் மலேசியாவின் அமைந்துள்ள போர்ட் கிளாங் இடமாற்றுத் துறைமுகங்களுக்கு மாற்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் உரிமையை சீனா கையகப்படுத்திய பின்னர் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை ஒரு இடமாற்று துறைமுகமாக பாதுகாப்பத்தில் இந்திய ஆர்வமாக இருந்தது. ஆனால் இவ்விடயத்தில் கொழும்புத் துறைமுகத்தின் தொழில் சங்கங்களால் கடும் எதிர்பினை அடுத்து இந்தியாவின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.- எவ்வாறாயினும் கடந்த காலங்களில் அடிக்கடி நிலநடுக்கம் பதிவாகியுள்ள பிரதேசமாக உள்ளதாகவும் இதில் இடமாற்றுத் துறைமுகம் அமைப்பது பொருத்தப்பாடு இல்லை என்றும் இடவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அந்தமான் - நிக்கோபாரில் அமைந்துள்ள 572 தீவுகளை உள்ளடக்கிய இப்பகுதி இரு பிரிவுகளைக் கொண்டது.இதில் நிக்கோபர் தீவிலுள்ள பெரிய தீவிலேயே இந்தியாவின் புதிய இடமாற்றுத் துறைமுகம் அமைக்க திட்டமிட்டு;ள்ளது அதனை Great நிக்கோபார் தீவு என அழைக்கப்படுவதுண்டு. இது சுமாத்திராத் தீவின் வடக்கே அமைந்துள்ள முக்கியமான பகுதியாகும். இத்தீவிலே உயிர்கோளக்காப்பகமும் இந்திரா முனையும் அமைந்துள்ளது. இந்திரா முனை இந்தியாவின் தென் முனையாக உள்ளது. இப்பகுதியில் இந்தியாவின் கடற்படை விமான நிலையமும் வானூர்தி தளமும் காணப்படுகிறது. இதில் சுனாமியின் தாக்கம் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியிருந்ததுடன் இதன் வடபகுதியல் அடிக்கடி புவி நடுக்கம் ஏற்படும் பகுதியாகவும் அமைந்துள்ளது.

இனி விடயத்திற்கு வருவோம். இந்தியா இப்பகுதியை புதிய இடமாற்ற மையமாக ஆக்குவதென்பது இந்தோ-பசுபிக் தந்திரோபாயத்திற்கு அடிப்படையானதாகவும் ஆதாரமாகவும் மாறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தோ-பசுபிக் கட்டமைப்பானது சீன எதிர்ப்புவாதத்தை உருவாக்குவதுடன் சீன சார்பு இலங்கைக்கு நெருக்கடி தரும் விடயமாக அமையவாய்ப்புள்ளது. அத்துடன் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்கு மாற்றாக இந்தியா கொழும்பின் கிழக்கு முனையத்தை கோரிய போது இலங்கை மறுத்ததென்பது அதன் பாதுகாப்புத் தளத்திலுதம் இந்தோ-பசுபிக் உபாயத்திற்கான ஒத்துழைப்பிலும் நெருக்கடியை கொடுப்பதற்கான உத்தியாகவே தெரிகிறது. இதனை இன்னோர் கட்டத்திற்கூடாக சமன் செய்ய இலங்கை அரசாங்கம் முயலுகிறது. அதனை நோக்குவோம்.

இந்தியா அமெரிக்கா ஜப்பான போன்ற நாடுகளின் தேவைகளுக்கு அமைய இந்தியா முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்க கடமைப்பட்டுள்ளோம்.அத்துடன் புதிய அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கையின் முதலிடம் இந்தியாவுக்கு என இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கும் போது அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கையானது அணிசோராக் கொள்கையென அடையாளப்படுத்த முடியும் எனக் சுட்டிக்காட்டினார்.

எனவே இங்கு இலங்கை அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை புதிய தளத்தில் பயணிக்கின்றதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.காரணம் அணிசேராமை என்ற பழைய சிந்தனையை முதன்மைப் படுத்துகிறது. அது காலவதியாகி பல தசாப்தங்கள் நிறைவடைந்து விட்டது. அது மட்டுமன்றி புதிய உலக தரிசனம் கொவிட்-19 பின்பு ஏற்பட்டுவரும் இரு துருவம் கூட முழுமையை அடையாத போது கொலம்பகே அணிசேராமை எனத் தெரிவிப்பது குழப்பமாக உள்ளது. இதனையே ஜனாதிபதி கேட்டபாய ராஜபக்சவும் தனது பதவியேற்பில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தார். அப்படியாயின் அணிசேராமை என்ற சிந்தனைக்கான அணிகள் எவை என்பதுவும் அத்தகைய அணிகளை இனங்காணவும் முடிகிறதா என்பதுவும் பிரதான கேள்வியாகும். அணிசேராமை எனும் சிந்தனையை முன்மொழிந்த இந்தியாவே அமெரிக்கா பக்கம் இருக்கும் போது அணிசேராமை என்ற சிந்தனைக்குள் இயங்குவதென்பது புரிந்து கொள்ளப்பட முடியாத வெளிநாட்டுக் கொள்கையாக தெரிகிறது. உண்மையாகவே இலங்கை பேசும் அணிசேராமை என்பது சீனா பக்கமும் சாயாது இந்தியா பக்கமும் சாயாது செயல்படுவதனை அழைப்பதாகக் கொள்ள எவரும் முயற்சிக்க முடியும். அதனை அணிசேராமை என அழைப்பது பொருத்தமானதாக அமையாது. அணிசேராமை என்பது இரு துருவ உலக ஒழுங்கு நிலவிய போது ஆசிய ஆபிரிக்க இலத்தீனமெரிக்க கண்டத்து நாடுகள் இரு துருவங்களிலிருந்தும் விலகியிருப்பதுடன் எந்த அணியோடு தமது பிரச்சினைகளை தீர்க்க முடியுமோ அந்த அணியுடன் சேர்ந்து செயல்படுவதனையும் நடைமுறை கொள்கையாகப் பின்பற்றி வந்தன. இது அதன் சிந்தனையில் உயிர் வாழ்ந்ததே அன்றி செயலில் அனேக அரசுகள் அணிசேர்ந்து செயல்பட்டதை காணமுடிந்தது.அத்தகைய ஒரு வறுமையான சிந்தனையை இருபத்தியோராம் நூற்றாண்டு அரசொன்று பின்பற்றுவதாக கூறுவது அதன் கொள்கையின் வங்ரோத்தினையே காட்டுகிறது. அல்லது உலக நாடுகளை ஏமாற்றவும் கையாளவும் தயாராகின்ற உத்தியைக் காட்டுகிறதாகவே தெரிகிறது.

இந்தியாவுக்கு வெளியுறவுக் கொள்கையில் முதலிடம் எனக்கூறும் வெளிவிவகாரச் செயலாளர் மறுபக்கத்தில் கொழும்பு கிழக்கு முனை கொள்கலன் இறங்கு துறையை வழங்க மறுகிறது.இத்தகைய முரணியம் இந்தியாவுக்கு மட்டுமானதா அல்லது ஆசிய நாடுகளுக்கானதா என்ற குழப்பம் ஏற்படுகிறது. அல்லது அமெரிக்க நட்பு நாடுகளுக்கானதா என்ற சந்தேகத்தினை தருகிறது. இலங்கையின் பொருளாதாரத்திலும் சமாதான உரையாடலிலும் ஜப்பானின் பங்களிப்பு மிக வலுவானதாக அமைந்திருந்தருது. ஆனால் தற்போதைய அரசாங்கம் ஆசிய நோக்கிய வெளியுறவுக் கொள்கையை வகுக்கப் போவதாகக் கூறிக் கொண்டு ஜப்பானையும் விலக்கிக் கொள்ள முனைகிறது.ஜப்பானை மட்டுமல்ல இந்தியாவை மட்டுமல்ல மேற்குக்கு ஆதரவான நாடுகளை விலக்கிக் கொள்ள இலங்கை முனைகிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. அவ்வாறே அமெரிக்கா உட்பட்ட மேற்குலகத்திற்கு மாறான ஒரு வெளியுறவுக் கொள்கையை உருவாக்கப்போவதாக கெலம்பகே தெரிவித்திருந்தது நினைவு கொள்ளத் தக்கது. இத்தகைய நிலையினைப் பார்க்கும் போது இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் மூன்று விடயங்கள் அவதானிக்க முடிகிறது.

ஒன்று இலங்கை கொவிட்-19 பின்பான உலகத்தினை சரிவர கண்டறிந்து தெளிவான வெளியுறவுக் கொள்கையினை வகுக்க முடியாது திண்டாடுகிறது. அதனால் தான் முன் பின்னான முரண்பாடுகளை தருவிக்கு எண்ணங்களை பிரதிபலிக்கும் விதத்தில் வெளியுறவுச் செயலாளரது கருத்துக்கள் அமைகின்றன. வெளிப்படையாக சீனாவை நோக்கிய வெளியுறவை வகுக்கிறதா அல்லது மேற்குலகத்திற்கு எதிரானதாக அமைகிறதா அல்லது ஆசியாவை மட்டும் முதன்மைப்படுத்தப் போகிறதா அல்லது இந்தியாவுக்கு முதலிடம் எனக் கூறுவது சாதகமானதாக அமையுமா அது அமெரிக்க உறவை எப்படி இந்தியா பொறுத்து சாத்தியப்படுத்தும் என்ற கேள்விகள் எழுகின்றன.

இரண்டாவது இந்தியாவை இலங்கை வெளியுறவுக் கொள்கை கையாள ஆரம்பித்துள்ளது என்பதைக் காட்டும் அணுகுமுறைகளை கொண்டிருகிறது என்பது தெளிவாக புலப்படுகிறது. அதாவது இந்தியாவுக்கு வெளியுறவில் முதலிடம் என்று கூறும் வெளியுறவு அமைச்சு கொழும்பின் கிழக்கு கொள்கலன் இடமாற்று துறைமுகத்தை வழங்க மறுக்கிறது. அதற்கு இலங்கை கூறும் காரணம் தொழில் சங்க நடவடிக்கைகள். ஆனால் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தினையும் மாத்தள விமான நிலையத்தையும் சீனாவுக்கு வழங்க முயன்ற போது தொழில் சங்க நடவடிக்கை நிகழ்ந்தது. அவ்வாறே நுரைச் சோலை மின் நிலையம் தொடர்பிலும் தொழில் சங்க நடைமுறை நிகழ்ந்தது. எனவே இது இந்தியாவை கையாளும் உத்தியாகவே தெரிகிறது.

மூன்றாவது ஆசியாவை நோக்கிய வெளியுறவுக் கொள்கை என்பது கடந்த 2005-2015 வரையான காலத்தை நினைவு கொள்வதாக தெரிகிறது. அதாவது சீனாவை நோக்கிய வெளியுறவுக் கொள்கைக்கான அணுகுமுறைகளை புதிய அரசாங்கம் மீண்டும் ஆரம்பித்துள்ளதாகவே தற்போதுவரையும் தெரிகிறது. அதனை வெளிப்படையாக இல்லாது விட்டாலும் உள்ளார்ந்த ரீதியில் அரசாங்கம் அதனை நோக்கியே நகர்கிறது.

இதில் இந்தியாவின் அணுகுமுறையே காலம்தாழ்த்திய அல்லது பிந்திய கருத்தாடலாக அமைந்துள்ளது. அதாவது இந்தியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ள(21.08.2020) கருத்துக்களும் அண்மையில் இந்து பத்திரிகை(22.08.2020) வரைந்த ஆசிரிய தலைப்பும் காலம்தாழ்த்தியதும் வலிமையற்றதுமாகவே தெரிகிறது. குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெரும் தோல்விக்கு பின்பு இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்தமை எப்படி காலவதியான அணுகுமுறையோ அவ்வாறே இந்தியாவின்; அணுகுமுறையும் காணப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் இந்தியாவின் 13 பாதுகாப்பதோ 19 ஐ பேணுவதற்கான விண்ணப்பம் இலங்கை அரசாங்கத்தினால் அனுசரிக்கப்படுமா என்பது சந்தேகமானதே.அது தனித்து இந்தியாவுக்கு மட்டுமுரிய நெருக்கடியல்ல ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்குமான நெருக்கடியாகவே அமைய வாய்ப்புள்ளது. இலங்கை ஜனநாயகத்தினயும் அதிகாரப் பரவலையும் முதன்மைப்படுத்தும் நிலையைக் கடந்து பயணிக்க ஆரம்பித்துவிட்டது.

எனவே இந்தியாவை கையாளும் உபாயத்தை இலங்கை பின்பற்ற ஆரம்பித்துள்ளதையே வெளியுறவுச் செயலாளரது வெளிப்படுத்துகைகள் தெரிவிக்கின்றன. அதே நேரம் சீன சார்ப்பு வெளியுறவுச் கொள்கையை நோக்கி செயல்படப் போவதாகவே தெரிகிறது.

அருவி இணையத்துக்காக கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கைபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE