Monday 30th of November 2020 08:32:58 AM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இன மோதல் - 18 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 18 (வரலாற்றுத் தொடர்)


'தமிழர் மகாஜன சபையும் தாயகக் கோட்பாடும்'

'அரசியல் தேவையினால் தான் இந்த அமைப்பு உருவானது. ஆனால் அரசியல் மட்டும்தான் அதன் இருப்புக்கான காரணமல்ல. என்னைப் பொறுத்தவரை அதனுடைய இலட்சியங்கள் பன்மடங்கு உயர்வானவை. காலம் காலமாகத் தமிழரைத் தமிழராக்கிய அத் தமிழ் இலட்சியங்களை வாழவைத்து வளர்க்க வேண்டுமென்பதும் அந்த இலட்சியங்களை 'தமிழகம்' என்னும் தமிழ்த் தேசத்தின் ஒருமைப்பாட்டையும், ஒற்றுமையையும் பலப்படுத்துவதற்காக இலங்கை, தென்னிந்தியா உட்பட தமிழர் குடியேறியுள்ள நாடுகள் முழுவதிலும் வாழவைத்து வளர்ப்பதும் முக்கியமாகும். ஆனால் எல்லா இனங்களையும், சமூகங்களையும் சேர்ந்த சகோதரர்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பையும், பெருமைமிகு கடமையையும் தமிழர் கைவிடப் போவதில்லை. ஆனால் நாம் எவராலும் மிரட்டபடுவதையோ, அச்சுறுத்தப்படுவதையோ வன்மையாகக் கண்டிக்கிறோம். அடிமையாக இருப்பதை நாம் அடியோடு வெறுக்கிறோம். எம்மை நாமே பாதுகாக்க எம்மை நாமே பலப்படுத்துவதே எமது நோக்கம்'.

இது 1923ம் ஆண்டு தமிழ் லீக் நிறுவப்பட்ட பின்பு இடம்பெற்ற முதலாவது கூட்டத்தில் சேர்.பொன்.அருணாசலம் அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி. சிங்களத் தலைவர்கள் இலங்கைத் தேசிய காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட போது எழுத்து மூலம் வழங்கிய வாக்குறுதியையும் மீறி மேல் மாகாணத்தின் தமிழர் ஒருவருக்குச் சட்ட சபைப் பிரதிநிதித்துவம் வழங்க மறுத்த போது அதன் தலைவராகச் செயற்பட்ட பொன்.அருணாசலம் அதை விட்டு வெளியேறி தமிழர் மகாஜன சபையை அமைத்தார். அவர் அதன்பின்பு இலங்கைத் தமிழ் லீக்கின் கூட்டத்தில் உரையாற்றிய போதே 1923ம் ஆண்டிலேயே தாயகக் கோட்பாடு தமிழர் தரப்பால் முன் வைக்கப்பட்டு விட்டது. தமிழ் மக்களின் பாரம்பரியமான வாழிடமாகவும், தமிழர் தாயகமாகவும், வடக்குக் கிழக்கு வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொடக்கம் திகழ்ந்து வந்த போதும் அது முதல் முதலில் கோட்பாட்டு ரீதியாக சேர்.பொன்.அருணாசலம் அவர்களாலேயே 1923ல் பிரகடனம் செய்யப்பட்டது.

சேர்.பொன்.அருணாசலம் அவர்கள் பிரித்தானிய ஆட்சியின் நிர்வாக சேவையில் உயர் பதவிகளை வகித்து வந்த அதே வேளையில் 1908ல் சட்ட நிரூபன சேவையில் உத்தியோகப் பற்றற்ற உறுப்பினராகவும், நிறைவேற்றுச் சபை மேலாளராகவும் தேசாதிபதியால் நியமிக்கப்பட்டார். 1918ல் இவருக்கு பிரித்தானிய அரசால் சேர் பட்டம் வழங்கப்பட்டது. இவர் எவ்வளவு உயர் பதவிகளை வகித்த போதும் அக்காலப்பகுதியிலேயே இலங்கை தொழிலாளர் லீக் என்ற அமைப்பை உருவாக்கி அதன் தலைவராகத் தொழிலாளர்களுக்காகப்பாடுபட்டார்.

அது மட்டுமின்றி ஜேம்ஸ் பீரிசுடன் இணைந்து இலங்கை சமூக சேவை லீக் என்ற அமைப்பை உருவாக்கி வறிய மக்களின் கல்வி, மருத்துவம், வீட்டு வசதி போன்ற துறைகளில் அக்கறை காட்டிப் பொதுச் சேவைகளில் ஈடுபட்டார். இலங்கைக்கு ஒரு பல்கலைக்கழகம் வழங்கப்பட வேண்டுமெனவும் பாடுபட்டார். இந்த நிலையிலேயே இவர் இலங்கை தேசிய காங்கிரசை உருவாக்கியதில் ஒருவராக விளங்கியதுடன் அதன் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு ஆகிய தமிழ் பிரதேசங்கள் பிரித்தானிய ஆட்சியில் சிங்கள மயப்பட்டுக் கொண்டிருந்த நிலையிலேயே அவர் அதைத் தடுத்து நிறுத்த மேல்மாகாணத்துக்கு ஒரு தமிழ்ப் பிரதிநிதித்துவம் கோரிக் கடுமையாக வலியுறுத்தினார்.

முதலில் ஏற்றுக் கொண்டு எழுத்து மூலம் வாக்குறுதி வழங்கிவிட்டு பின்பு டொனமூர் ஆணைக்குழு விசாரணையின் போது மறுத்து சிங்களத் தலைவர்களால் ஏமாற்றப்பட்ட நிலையிலே அவர் தேசிய காங்கிரசை விட்டு வெளியேறி தமிழர் மகாஜன சபையை அமைத்து அதை வலுப்படுத்தினார்.

1911ம் ஆண்டு இடம்பெற்ற இலங்கை முழுவதற்குமான ஒரே ஒரு பிரதிநிதியைத் தெரிவு செய்யும் சட்டசபைத் தேர்தலில் சேர்.பொன். இராமநாதனுக்கு எதிராக மீன்பிடி சமூகத்தைச் சேர்ந்த மார்க்ஸ் பெர்னான்டோ போட்டியிட்டார். ஆனால் சிங்களத் தலைவர்கள் அவருக்கு ஆதரவு வழங்காமல் இந்து வேளாள உயர் குடியைச் சேர்ந்த பொன். இராமநாதனுக்கே ஆதரவு வழங்கினார்கள்.

அப்போது அருணாசலம் அவர்கள் 'சிங்களவர்கள் அமர்வதற்குக் கதிரையைத் தந்து விட்டு அமரும்போது அதைப் பின்னால் இழுத்து உன்னை விழுத்திவிடுவார்கள்', என இராமநாதனை எச்சரிந்திருந்தார் அருணாசலம் அவர்கள், ஆனால் சிங்களத் தலைவர்கள் அவருக்கே 1918ல் தேசிய காங்கிரசின் தலைமைப் பதவியை வழங்கிவிட்டு 1921ல் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற மறுத்து கழுத்தறுத்ததன் மூலம் அவரைத் தூக்கியெறிந்தனர். தனது சகோதரனை எச்சரித்த அருணாசலம் தன்னளவில் அவரின் நண்பர்களான சிங்களத் தலைவர்களிடம் ஏமாந்து போனதுதான் ஆச்சரியமான விடயமாகும்.

எப்படியிருந்த போதிலும் சிங்களத் தலைவர்களின் துரோகம் அவருக்கு தாயகக் கோட்பாட்டின் தவிர்க்க முடியாத தேவையை ஆழமாக உணர்த்திவிட்டது. எனவே இலங்கைத் தேசிய காங்கிரசை விட்டு வெளியேறிய பொன். அருணாசலம் தமிழ் மக்களின் அபிலாசைகளை அடைவதற்காக தமிழ் மக்கள் மத்தியிலுள்ள சகல மட்டங்களிலுள்ள தமிழர்களையும் ஒரே அணியில் கொண்டு வரும் முகமாக தமிழர் மகா சபை என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார்.

1921 ஆவணி 15ல் இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பிரதிநிதிகளைக் கூட்டி ஒரு மகாநாடு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எதிர்பார்த்ததை விட அதிகமாக மக்கள் கூடி விட்டதால் மாநாடு திறந்த வெளியில் இடம்பெற்றது. கூட்டம் ஆரம்பமாகும் போது சேர். பொன். அருணாசலம், சேர்.ஏ. கனகசபை ஆகியோர் வருகை தந்த போது மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்து தமது ஆதரவை வெளிப்படுத்தினர். சேர்.கனகசபை அவர்கள் ஏகமனதாகத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டு உணர்வு பூர்வமான தலைமை உரையை ஆற்றினார். அதையடுத்து கௌரவ டபிள்யூ. துரைசாமி அவர்கள் முதலாவது தீர்மானத்தை முன்மொழிந்தார்.

'தமிழர் அரசியல் சமூகம் கல்வி பொருளாதாரம் பொதுநலன் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு தமிழர் மகாசபை இலங்கையின் எல்லாப் பாகங்களிலும் அதன் கிளைகளுடன் உருவாக்கப்பட வேண்டுமென இலங்கையின் பல பாகங்களிலிருந்து வந்து கலந்து கொண்ட தமிழர்களின் பிரதிநிதிகளின் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது'.

அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் பலத்த கரகோசம் மூலம் மேற்படி தீர்மானத்தை அங்கீகரித்தனர். இம்மாநாடு வடக்கில் மட்டுமின்றி இலங்கையின் நாலா பக்கங்களிலும் வாழுகின்ற தமிழர்கள் மத்தியிலும் ஒரு பேரெழுச்சியை ஏற்படுத்தியது.

பொன்னம்பலம் சகோதரர்கள் தங்கள் அரசியலின் ஆரம்ப காலம் தொட்டு பெரும்பாலான காலப்பகுதிகளில் முழு இலங்கைக்குமான அரசியலேயே முன்னெடுத்தனர். அந்த சிந்தனையின் அடிப்படையிலேயே இலங்கைத் தேசிய காங்கிரசை உருவாக்குவதிலும் அதற்குத் தலைமை வகிப்பதிலும் தீவிரமாகப் பங்குகொண்டார்கள். ஆனால் இலங்கைத் தேசிய காங்கிரஸ் அமைப்பதற்கு இவர்களைப் பயன்படுத்திய சிங்களத் தலைவர்கள் இலங்கைக்கான அரசியல் என்ற பெயரில் சிங்களவர்களுக்கான அரசியலையே முன்னெடுத்தனர்.

அவ்வடிப்படையிலேயே சிங்களத் தலைவர்கள் இன விகிதாசார அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தை மாற்றி பிரதேச ரீதியான பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தினர். அது ஏற்கனவே தமிழர்களுக்கு சட்டசபையிலிருந்த பிரதிநிதித்துவத்தை படுமோசமாகக் குறைத்து தமிழர்களைப் பலவீனப்படுத்தும் வகையிலானதாக அமைந்திருந்தது. மேலும் புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு போன்ற தமிழ்ப் பகுதியில் சிங்கள மயமாக்கப்படுவதை தடுக்கும் முகமாக மேன்மாகாணத்தில் தமிழருக்கு ஒரு பிரதிநிதித்துவம் வழங்கப்படுமென சிங்களத் தலைவர்களால் வழங்கப்பட்ட வாக்குறுதியும் அவர்களால் மீறப்பட்டுவிட்டது.

அவர்களால் தமிழர் நிலையை தாழ்த்துவதற்கு முன்வைக்கப்பட்ட இரு நோக்கங்களும், கொண்டிருந்த நயவஞ்சகத் தன்மையை உணர்ந்து கொண்ட பின்பே தமிழர்களை பாதுகாப்பதற்கான ஒரு நிறுவனமாக பொன் அருணாசலம் அவர்கள் தலைமையில் தமிழர் மகா சபை உருவாக்கப்பட்டது. திட்டமிட்ட உள்நோக்கம் கொண்ட ஏமாற்று நடவடிக்கைகள் காரணமாக தமிழர்கள் இலங்கையில் சிறுபான்மையினர் எனவும் அவர்களின் பிரச்சினை இனப்பிரச்சினை அல்ல அது ஒரு தேசிய பிரச்சினை எனவும் அருணாசலம் உணர ஆரம்பித்தார். இந்த உணர்வலைகள் தமிழ் மக்கள் மத்தியிலும் தமிழ் மகாஜன சபை அமைப்பினர் மத்தியிலும் ஆழமாக வேரூன்றி தமிழத் தேசிய எழுச்சிக்கான கருக்கட்டலாக முண்டது.

தமிழர் மகா சபையின் தலைமையில் அனைத்து தமிழர்களையும் ஒன்று திரட்டி தமிழர்களின் பிரச்சினையை ஒரு தேசியப் பிரச்சினையாக முன்னெடுத்துச் செல்லும் சேர். பொன் அருணாசலம் கடுமையாக உழைக்க ஆரம்பித்தார். அவர் சரியான திசைமார்க்கத்தில் கால்பதித்து தீவிரமாக முன்செல்ல ஆரம்பித்த அந்தக் காலகட்டத்தில்தான் துரதிஸ்ட வசமாக அவர் காலமாகிவிடுகிறார். ஆனால் அருணாசலத்தின் இறப்புடன் தமிழர் மகாசபையின் வீச்சு சற்றுக் குறைவடைந்தது என்றே கூற வேண்டும் சேர். பொன். இராமநாதன் உடல் நலம் குன்றியிருந்த நிலையில் சேர். பொன். அருணாசலமும் காலமாகி விட்டநிலையிலும் தமிழ்த் தேசியத்தின் வீச்சை அடுத்த தலைமை தீவிரமாக முன்னெடுக்கத் தவறிவிட்டது.

ஏற்கனவே 1920ம் ஆண்டு முன்வைக்கப்பட்ட மனிங் சீர்திருத்தத்தின் அடிப்படையில்; இனவாரியாகவும் பிரதேசவாரியாகவும் 1929ல் இடம்பெற்ற தேர்தலில் 16 சிங்களவரும் ஏழு தமிழர்களும் பிரதிநிதித்துவம் வகித்தனர் இச்சீர்திருத்தம் இரு தரப்பினரையுமே திருப்பதிப்படுத்தவில்லை.

அதன் பின்பு 1924ம் ஆண்டு டொனமூர் ஆணைக்குழு அரசியல் சீர்திருத்தம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டது. அது நாட்டின் பலபாகங்கள் மேற்கொண்ட அமர்வுகளின் அடிப்படையில் 02.06.1927ல் ஒரு பிரேரணை தேசாதிபதியால் இலங்கையின் குடியேற்ற நாட்டு செயலாளருக்கு அனுப்பி வைக்கபட்டது. அதன்படி பிரதேச அடிப்படையிலான தேர்தலில் சட்டசபைக்கு 50 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட வேண்டுமெனவும் அதில் 38 சிங்களவர், 7 தமிழர், 3 பிரித்தானியர், 2 இந்திய வர்த்தக சமூகத்தினர், 1 முஸ்லீம் தெரிவு செய்யப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து தமிழ் லீக் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், 'இனரீதியான பிரநிதித்துவம் ஒழிக்கப்பட்டு சர்வஜன வாக்குரிமையும், பிரதேச ரீதியான பிரதிநிதித்துவமும் அமுலுக்கு வருமானால் அது சிறுபான்மையினரின் அழிவுக்கே வலிகோலும் காரணமாக அமைந்து விடும்' எனக் கடும் கண்டனம் வெளியிடப்பட்டிருந்தது.

எனவே தமிழர் லீக்கால் சர்வ ஜன வாக்குரிமை வழங்கப்படுவதை எதிர்த்தும் பிரதேச வாரியான தேர்தலை நிறுத்தக் கோரியும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தது.

இக்கோரிக்கைகளின் அடிப்படையில் இங்கிலாந்து சென்று சேர். பொன். இராமநாதன் பிரித்தானியாவின் வெளிநாட்டு குடியேற்ற செயலாளருடன் நடத்திய பேச்சுகளும் வெவ்வேறு மட்டங்களில் அவர் மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வியிலேயே முடிவடைந்து.

அவ்வகையில் 1931ல் டொனமூர் சீர்திருத்தத்துக்கு அமைய தேர்தல் இடம்பெற்றது. இத் தேர்தலை யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் கடுமையாக எதிர்த்ததுடன் தேர்தலை பகிஸ்கரிக்கும் படியும் தமிழ் மக்களிடம் கோரிக்கை முன்வைத்தது. 1920ல் இவ்வமைப்பு ஆரம்பிக்கப்பட்ட போதிலும் தமிழர் மகா சபையுடன் இணைந்தே செயற்பட்டு வந்தது.

ஆனால் தமிழர் லீக் முன்வைத்த கோரிக்கைகளில் சர்வ ஜன வாக்கெடுப்புக்கு விரோதமான ஒரு பிற்போக்கான கோரிக்கையும் உள்ளடங்கியிருந்ததால் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் சுயமாக இயங்க ஆரம்பித்து விட்டது.

அது இலங்கைக்கு பூரண சுதந்திரத்தைக் கோரி தேர்தல் பகிஸ்கரிப்புக்கு விடுத்த அழைப்பை தமிழ் மக்களும் ஏற்றுக்கொண்டனர். அதன் காரணமாக சட்ட விரோத சபைக்கு 38 சிங்களப் பிரநிதிகளும், 3 தமிழ் பிரநிதிகளும், 3 ஐரோப்பியரும், 2 இந்தியத் தமிழரும், தெரிவு செய்யப்பட்டனர். இத்தகைய ஒரு நிலைமையைக் காணாமலேயே 1930ல் சேர்.பொன். இராமநாதன் காலமாகிவிட்டார்.

அத்துடன் தமிழ் மக்களின் அரசியலில் பொன்னம்பலம் சகோதரர்களின் சகாப்தம் முடிவடைந்து யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசின் ஆதிக்கம் மேலெழ ஆரம்பித்தது.

தொடரும்

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE