Friday 19th of April 2024 02:04:51 AM GMT

LANGUAGE - TAMIL
.
காணாமலாக்கப்பட்ட விடயத்துடன் மஹிந்த அரசுக்கும் நேரடித் தொடர்பு; நீதி கிடைக்கும்வரை போராட்டம் தொடர வேண்டும்!

காணாமலாக்கப்பட்ட விடயத்துடன் மஹிந்த அரசுக்கும் நேரடித் தொடர்பு; நீதி கிடைக்கும்வரை போராட்டம் தொடர வேண்டும்!


"தமிழர் தாயகத்தில் எமது உறவுகளை வலிந்து காணாமல் ஆக்கியோரில் சிலர் தற்போது ஆளுந்தரப்பில் எம்.பிக்களாக இருக்கின்றனர். அதேவேளை, முக்கிய பதவிகளிலும் உள்ளனர். மஹிந்த அரசுக்கும் இந்த விவகாரத்துடன் நேரடித் தொடர்பு உண்டு. எனவே, அரசு பொறுப்புக்கூறும் வரை - காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி கிடைக்கும் வரை சொந்தங்களின் ஜனநாயகப் போராட்டங்கள் தொடர வேண்டும். இதை எவரும் தடுத்து நிறுத்த முடியாது."

- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்கள் தினமான நேற்று திருகோணமலையிலும் அமைதியான முறையில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக தங்களது உறவுகளுக்கு நீதி வேண்டி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். இந்த அமைதிவழிப் போராட்ட இடத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் சென்றார். அவர் அங்கு போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அதன்பின்னர் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"எமது உறவுகள் காணாமல்போகவில்லை. அவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். இதுதான் உண்மை.

எமது உறவுகள், அரச படைகளிடம் சரணடைந்த பின்னர் அல்லது அரச படைகளினால் கைதுசெய்யப்பட்ட பின்னர் அல்லது அரசின் ஆதரவுடன் இயங்கிய ஆயுதக்குழுக்களினால் கடத்தப்பட்ட பின்னர்தான் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். இதை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள் என்றே நாம் கூற வேண்டும்.

இது அரசுடன் சம்பந்தப்பட்ட விடயம். தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜாபக்ச, ஜனாதிபதியாக இருந்த காலத்தில்தான் எமது உறவுகள் அதிகளவில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளின் சொந்தங்கள் நடத்தும் ஜனநாயகப் போராட்டங்கள் தொடர வேண்டும். அரசு பொறுப்புக்கூறும் வரை - நீதி கிடைக்கும்வரை இந்தப் போராட்டங்கள் தொடர வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சொந்தங்களுக்குப் பரிகாரம் வழங்குவதற்காக கடந்த ஆட்சியில் காணாமல்போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த அலுவலகத்துக்கு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அலுவகத்தின் ஊடாகப் பரிகாரம் வழங்குவதற்கு சட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவற்றை மஹிந்த அரசு இயங்கவைப்பது அத்தியாவசியம்.

உறவுகளைத் தேடிப் போராடும் சொந்தங்களின் துன்பங்கள், துயரங்களுக்குப் பரிகாரம் காணப்பட வேண்டும்" - என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: இரா சம்பந்தன், இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம், திருகோணமலை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE