Wednesday 2nd of December 2020 02:53:54 PM GMT

LANGUAGE - TAMIL
.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி சென்னை இலங்கைத் துணைத்தூதரக முற்றுகை போராட்டம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி சென்னை இலங்கைத் துணைத்தூதரக முற்றுகை போராட்டம்!


வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழத்தமிழ் உறவுகளுக்கு நீதி கோரி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட இப் போராட்டத்த்தில்

காணாமல் ஆக்கப்பட்ட பத்தாயிரக்கணக்கான தமிழர்கள் எங்கே?

நீதிமறுக்கும் இலங்கைக்கு இங்கே தூதரகமா?

கொலைகார இராசபக்சேக்களுடன் கும்மாளமா?

என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டிருந்தது.

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் ஈழத்தில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு நீதி கோரியும் முன்னெடுக்கப்பட்டிருந்த இப் போராட்டமானது தமிழ்நாடு சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இலயோலா கல்லூரி அருகில் நேற்று மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் முன்னெடுக்கப்பட்டிருந்த போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம், தந்தைப் பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த்தேச மக்கள் முன்னணி, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம், புரட்சிகர இளைஞர் முன்னணி, தமிழ்த்தேசியப் பேரியக்கம், இளந்தமிழகம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்குபெற்றனர்.

இப்போராட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் இரா.உமாபதி தலைமையில் நடைபெற்றது. முதலில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர் குமரன், தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த தோழர் குமரன், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் தோழர் மகிழன், மக்கள் குடியரசு இயக்கத்தைச் சேர்ந்த தோழர் ஜான் மண்டேலா, திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த தோழர் உமாபதி, தமிழ்த்தேச மக்கள் முன்னணியைச் சேர்ந்த தோழர் செந்தில் ஆகியோர் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்து உரையாற்றினர்.

பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு அருகில் இருந்த மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். மாலை சுமார் 6 மணி அளவில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந் நீதி கோரிய போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் வருமாறு,

ஐக்கிய நாடுகள் அமைப்பின் அழைப்பின் பேரில் ஆண்டுதோறும் ஆகஸ்டு 30ஆம் நாளைப் பன்னாட்டுக் காணாமற்போனோர் நாளாகக் கொண்டு, உலகெங்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கும், அவர்களைப் பிரிந்து துயருற்றவர்களுக்கும் நீதிகோரி வருகிறோம்.

வலிந்து காணாமலாக்குதல் என்பது அரசுக்குத் தீராத் தொல்லை கொடுக்கும் ஒருசில தனிமனிதர்களை ஒழித்துக்கட்டுவது என்பதை விடவும், பரந்துபட்ட சமூகத்தில் அச்சம் விதைக்கும் உத்தியாகவே கையாளப்படுகிறது. இலங்கைத் தீவில் அரசப் பயங்கரவாதத்தின் வடிவமாக மட்டுமல்லாமல், தமிழினவழிப்பின் கொலைக் கருவியாகவும் சிங்களப் பேரினவாத அரசு காணாமலாக்குதலைப் பயன்படுத்திய உண்மையை உலகறியும்.

அண்மைக் கால வரலாற்றில் பெருந்தொகையானவர்களைக் காணாமலாக்கிய கொடுஞ்சாதனையில் ஈராக் முதலிடத்திலும் சிறிலங்கா இரண்டாமிடத்திலும் உள்ளன என்பது ஐநா ஆய்வில் வெளிப்பட்டுள்ளது, இலங்கையில் உள்நாட்டுப் போர்க் காலத்தில் மட்டும் காணாமற்போனவர்கள் பற்றி 20,000 முறைப்பாடுகள் வந்ததாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்தது.

2010 ஆம் ஆண்டு ஐநாவில் பன்னாட்டுக் காணாமலாக்குதல்கள் உடன்படிக்கை (International Disappearances Convention) கையெழுத்தாகிப் பன்னாட்டுச் சட்டமாயிற்று. இந்த உடன்படிக்கையை சிறிலங்காவும் ஏற்றுக்கொண்ட போதிலும், குறிப்பாக உறுப்பு 31க்கு மட்டும், அதாவது இந்த ஒப்பந்தத்தைத் தங்கள் நாடு மீறியது குறித்து பாதிப்புற்றவர்கள் தாமே காணாமலாக்குதல் பற்றிய குழுவிடம் பேச வாய்ப்பளிக்கும் வழிவகைக்கு மட்டும் ஆதரவளிக்காமல் ஒதுங்கிக் கொண்டது.

இலங்கையில் போர் முடிந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் காணாமலாக்கப்பட்டோர் பற்றிய வினாக்களுக்கு விடை இல்லை. இன்றளவும் “என் கணவர் எழிலன் எங்கே?” என்று அனந்தி சசிதரன் கேட்கிறார். சரணடைந்தவர்களை இராணுவத்திடம் ஒப்படைத்த அருள்தந்தை பிரான்சிஸ் எங்கே? என்று மக்கள் கேட்கின்றார்கள். “என் மகன் எங்கே?” என்று பாலேந்திரன் ஜெயக்குமாரி கேட்கிறார். “என் கணவர் பிரகீத் எக்னலிகோடா எங்கே?” என்று சந்தியா கேட்கிறார்.

எங்கள் தலைவர்களும் தளபதிகளும் அரசியல் அறிஞர்களும் கலைஞர்களும் வீரர்களும் எங்கே.. எங்கே.. என்று ஈழத் தமிழ் மக்கள் கேட்கிறார்கள். இளங்குமரன் எங்கே? போர் முடிந்த பிறகும் உயிரோடு காணப்பட்ட பாலகுமாரனும் அவர் மகன் சூரியதீபனும் எங்கே? பாவலர் புதுவை இரத்தினதுரை எங்கே? யோகி எங்கே? திலகர் எங்கே? இந்தக் கேள்விகளுக்கு முடிவே இல்லை போலும். இவற்றில் ஒரே ஒரு கேள்விக்குக்கூட “ஓ, அவரா, இதோ இங்கே இருக்கிறார்” என்று விடை கிடைக்கவில்லை.

போர்க் காலத்தில் தமிழர்களை ஒடுக்க ‘வெள்ளை வேன் கடத்தல்’ விரிவாகப் பயன்படுத்தப்பட்டது. வெள்ளை வேனில் கடத்திச் செல்லப்பட்ட யாரும் உயிரோடு மீண்டதில்லை. இராணுவத்திடம் சரணடைந்து, காணாமல்போன தன் மகனைத் தேடி பாலேந்திரன் ஜெயகுமாரி என்ற தாய் நடத்திவரும் போராட்டம் உலகறிந்த ஒன்று. ஜெயகுமாரியும் அவர் மகள் 13 வயதுச் சிறுமி விபுசிகாவும் மூன்று பிள்ளைகளின் படங்களோடு ஒவ்வொரு போராட்டத்திலும் காணப்பட்டார்கள். முன்னாள் பிரித்தானியப் பிரதமர் கேமரூன், மனித உரிமை உயர் ஆணையர் நவிப்பிள்ளை என்று உலகப் பிரமுகர் யார் வந்தாலும், நேரில் போய் முறையிட்டார்கள். விளைவு: ஒருநாள் அவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

2016 பொங்கலுக்கு யாழ்ப்பாணத்தில் தைத்திருநாள் கொண்டாடப் போயிருந்த சிறிலங்காவின் தலைமையமைச்சர் இரணில் விக்கிரமசிங்கே, “காணாமல் போனவர்களில் யாரும் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை” என்றார்.

இப்போது சிறிலங்கா அதிபராக இருக்கும் கோட்டாபயா இராசபட்சே பதவிப் பொறுப்பேற்ற சூட்டோடு செய்த அறிவிப்பு காணாமல் போனவர்கள் யாரும் உயிருடன் இல்லை என்பதே.

அப்படியானால், அனைவரும் இறந்துவிட்டார்கள். அதாவது கொலை செய்யப்பட்டுவிட்டார்கள். கொலை செய்யப்பட்டார்கள் என்றால், கொலை செய்தவர்கள் யார்? அவர்கள் கொலை வழக்கில் கூண்டிலேற்றப்பட்டார்களா? சிறையில் அடைக்கப்பட்டார்களா? இதுவரை இல்லை என்றால், இனி எப்போது சட்டம் விழித்துக் கொள்ளப் போகிறது? இதற்கு இரணிலிடமிருந்தோ கோட்டாபயாவிடமிருந்தோ விடையில்லை.

இலங்கையில் வலிந்து காணமலாக்குதல் குற்றங்கள் நிகழ்ந்திருப்பதை சிங்கள அரசு அமைத்த பரணகாமா ஆணையமே உறுதிசெய்துள்ளது. ஐ.நா. சபை அறிக்கைகள் உறுதி செய்துள்ளன. இலங்கை அரசும் ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், பாதிப்புற்றவர்களுக்கு நீதி என்பது இன்னமும் எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது.

இராணுவத்திடம் சரணடைந்த போராளிகளின் பட்டியலை வெளியிடுவதாக மைத்திரிபால சிறிசேனா அதிபராக இருந்த போது அறிவித்ததோடு சரி.

“காணாமல் போனவர்களைப் பற்றிய ஒரு தரவுத்தளத்தைப் பதிவேற்றுவதற்கென்று சொல்லி காணாமற்போனோர் அலுவலகம் ஒன்றை சிறிலங்கா நிறுவிய போதிலும், ஆயுத மோதலின் போது சரணடைந்தவர்கள், கைது செய்யப்பட்டவர்களின் பட்டியலை வெளியிடவே இல்லை.

ஆட்சியாளர்களின் இந்த அலட்சியப் போக்கும் பொறுப்புக்கூறாமையும் ஆண்டுக்கணக்கில் தொடர்வதை எதிர்த்து ஆயிரக்கணக்கான தாய்மார்கள் தமிழீழத் தாயகத்தில் போராடி வருகின்றார்கள். அவர்களில் பலர் தங்கள் குழந்தைகளுக்கு என்ன நேரிட்டது என்று தெரியாமலே கல்லறைக்குச் செல்லும் கொடுமையான சூழலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள்!

ஐநாவில் தானே பிற நாடுகளுடன் சேர்ந்து முன்மொழிந்து இயற்றிய தீர்மானங்களிலிருந்து சிறிலங்கா விலகிக் கொண்டு விட்டது. அண்மையில் நடந்த பொதுத்தேர்தல் இனக்கொலைகார இராசபட்சே குடும்பத்தின் கையில் முழு அதிகாரத்தையும் ஒப்படைத்துள்ளது. தமிழ் மக்களுக்கு சிங்கள அரசிடமிருந்து நீதி கிடைக்கும் வாய்ப்பே இல்லை என்றாகி விட்டது. இந்தச் சூழலில் பன்னாட்டுச் சமுதாயம்தான் இனவழிப்புக் குற்றத்துக்கு நீதி கிடைக்க ஆவன செய்ய வேண்டும். வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கச் செய்வதும் பன்னாட்டுச் சமுதாயத்தின் பொறுப்பே ஆகும்.

இந்தப் பின்னணியில் இனவழிப்புக் குற்றவாளிகளோடு இந்திய ஆட்சியாளர்கள் கூடிக் கும்மாளமிடுவதை வன்மையாக்க் கண்டிக்கிறோம்.

பன்னாட்டுச் சட்டங்களை மீறி சிறிலங்கா புரிந்துள்ள குற்றங்களால் துயருற்ற தமிழர்களுக்கு நீதி கிடைக்கச் செய்யப் பன்னாட்டுக் களத்தில் இந்திய அரசு முயற்சிகள் செய்ய வேண்டும் என்பது தமிழ்நாட்டு மக்களின் விருப்பம். இது தமிழக சட்டப்பேரவையில் தீரமானமாகவும் இயற்றப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தீர்மானத்திற்கு இணங்க சிறிலங்கா மீது பொருளியல் தடை விதிப்பதோடு அரசியல் பண்பாட்டு உறவுகளையும் இந்திய அரசு துண்டித்துக் கொள்ள வேண்டும். அதற்கொரு தொடக்கமாக சிறிலங்காவுடனான அரசுறவுகளை முறித்துக் கொள்ளக் கோருகிறோம். இலங்கை தூரதரகத்தை இந்தியாவில் இருந்து வெளியேற்றக் கோருகிறோம்.


Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா, இலங்கை, தமிழ்நாடு, சென்னைபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE