Wednesday 24th of April 2024 06:24:38 PM GMT

LANGUAGE - TAMIL
-
அரசியல் தீர்வுக்கும் அபிவிருத்திக்கும் புதிய அரசமைப்பே மிகவும் அவசியம்; சபாநாயகர் யாப்பா!

அரசியல் தீர்வுக்கும் அபிவிருத்திக்கும் புதிய அரசமைப்பே மிகவும் அவசியம்; சபாநாயகர் யாப்பா!


"இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மட்டுமல்லாது நாட்டின் அபிவிருத்திக்கும் புதிய அரசமைப்பு அவசியமாகும். எனவே, புதிய அரசமைப்பை விரைவில் உருவாக்கி ஐக்கியமாக நாட்டைக் கட்டியெழுப்ப நாடாளுமன்றத்தில் சகலரும் நடவடிக்கை எடுப்பார்கள் என்றால் அதனை வரவேற்பேன். அவ்வாறான செயற்பாடுகளை மக்களும் ஆதரிப்பார்கள்."

- இவ்வாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

புதிய அரசமைப்பு உருவாக்கம் குறித்தும், அரசமைப்பில் திருத்தங்கள் கொண்டுவருவது குறித்தும் ஆளும், எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் விவாதித்து வருகின்ற நிலையில் புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் சபாநாயகரின் நிலைப்பாடு என்னவென வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"நாட்டுக்குப் புதிய வேலைத்திட்டங்கள், புதிய தலைமைகள், புதிய கொள்கைகள் வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். இம்முறை தேர்தலில் மக்கள் மாற்றம் ஒன்றை விரும்பிய காரணத்தால் புதிய அரசு உருவாகியுள்ளது. அதேபோல் நாட்டில் ஆரோக்கியமான விதத்தில் மாற்றங்களை முன்னெடுக்க வேண்டுமென்றால் புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பது என்னுடைய நிலைப்பாடாக உள்ளது.

இப்போது நடைமுறையில் இருக்கும் அரசமைப்பானது 19 தடவைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. மாற்றங்கள் பல செய்யப்பட்டுள்ளன. பல இணைப்புகள், சட்டங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன. ஆனாலும், நாடாக நாம் இன்னமும் முன்னேற்றம் காணவில்லை. எனவே, புதிய அரசமைப்பொன்று உருவாக்கப்படுமாயின் - அதில் நாட்டை ஐக்கியப்படுத்தும் வேலைத்திட்டங்கள் உருவாக்கப்படுமாயின் அதனை நாம் வரவேற்க வேண்டும்.

நாட்டில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு பெற்றுக்கொடுத்து, சகல மக்களும் ஒரே நாட்டுக்குள் ஐக்கியமாகவும், சமாதானமாகும், புரிந்துணர்வுடனும் வாழக்கூடிய சூழலை உருவாகிக்கொடுத்தால் அதனூடாக நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும்.

அதனைச் சகலரும் உணர்ந்து நாடாளுமன்றத்தில் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதை நான் வலியுறுத்துகின்றேன். இந்த விடயத்தில் இன, மத, மொழி பாகுபாடுகளைக் கடந்து இலங்கையர் என்ற உணர்வுடன் சகல மக்களின் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அரசியல் சுயநலங்களை கடந்ததே மக்கள் நலன். அதனைச் சகலரும் பாதுகாக்க வேண்டும் எனக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்" - என்றார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE