Wednesday 24th of April 2024 01:39:45 AM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இன மோதல் - 19 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 19 (வரலாற்றுத் தொடர்)


'மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியலும் மேட்டுக்குடி மேலாதிக்க அரசியலும்'

தமிழ் அரசியலில் அடுத்த சகாப்தம் 'வெள்ளையனே வெளியேறு என இந்திய மக்களை இந்திய தேசிய காங்கிரசின் தலைமையில் அணிதிரட்டி போராட்டம் நடத்தினார் பாரதத்தின் தந்தை என அழைக்கப்படும் மகாத்மா காந்தி அவர்கள். ஆனால் வெள்ளையனே வெளியேறாதே என பிரித்தானிய மகாராணிக்கு தந்தியடித்தார் ஈழத்து காந்தி என அழைக்கப்படும் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்கள்'

இது 1956ம் ஆண்டு எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்கா இலங்கைப் பிரதமராக ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பின்பு அவர் மேற்கொண்ட ஏகாதிபத்திய நடவடிக்கைகளில் ஒன்றாக பிரித்தானிய கடற்படை வசமிருந்த திருகோணமலைத் துறைமுகம் தேசிய மயமாக்கப்பட்டதுடன் அங்கு நிலைகொண்டிருந்த பிரித்தானிய றோயல் கடற்படை முகாமும் வெளியேற்றப்பட்டது. அப்போது தமிழ் அரசுக்கட்சி தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்கள் பிரித்தானியப் படையினரை இலங்கையை விட்டு வெளியேற வேண்டாமென வலியுறுத்தி பிரிட்டிஸ் மகாராணி இரண்டாவது எலிசெபெத் அம்மையார் அவர்களுக்க தந்தி ஒன்றை அனுப்பி வைத்தார். நாட்டின் இறைமையை நிலைநிறுத்தும் விதமாக அந்நியப்படை முகாமொன்று அகற்றப்பட்டமை தொடர்பாக ஈழத்துக் காந்தி என அழைக்கப்பட்ட எஸ.ஜே.வி. செல்வநாயகம் அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தமையை அப்போது வெளிவந்த 'தீப்பொறி' என்ற பத்திரிக்கையில் அதன் ஆசிரியர் எம்.கே. அன்ரனிஸ் அவர்கள் வெளியிட்ட கண்டனமே மேற்படி கூற்றாகும்.

உலகம் முழுவதுமே ஒடுக்கப்படும் மக்கள் ஏகாதிபத்தி நாடுகளின் அதிகாரத்துக்கு எதிராகப் போராடி வரும் காலத்தில் ஒடுக்கப்படும் இனமான தமிழ் மக்களின் தலைவராக விளங்கிய தந்தை செல்வா பிரித்தானியப் படையினரை நாட்டை விட்டு வெளியேற வேண்டாமென வலியுறுத்தினார். தமிழ் அரசுக்கட்சியினர் அந்த நடவடிக்கையை திருமலைத் துறைமுகம் தேசிய மயமாக்கப்பட்டு பிரிட்டிஷ் படையினர் வெளியேற்றப்பட்டால் திருமலை சிங்கள மயமாக்கப்பட்டுவிடும் என்பதாலேயே தந்தை செல்வா அவ்வாறு செயற்பட்டார் என அவரின் செயலை நியாயப்படுத்தினர்.

இது ஒரு கேலிக்குரிய சமாளிப்பாகும். திருமலை சிங்கள மயப்படுவதை தடுப்பதற்கு ஏற்ற வழிகளை கண்டறிந்து அதைத் தடுத்து நிறுத்தும் வகையில் செயற்பட்டிருக்க வேண்டும். மாறாக பிரிட்டிஷ் படைகள் இங்கு நிலைகொண்டிருப்பதால் மண் பாதுகாக்கப்படும் என்பது அப்பட்டமான உண்மைக்கு மாறான கருத்தாகும். பிரிட்டிஷ் 'கினிமினி' படைகளால் பயிற்சியளிக்கப்பட்ட இலங்கை விசேட அதிரடிப்படையினரே கிழக்கு மாகாணத்தில் சுற்றி வளைப்புகளை மேற்கொண்டு தொகை தொகையாக தமிழ் மக்களைக் கொன்று குவித்தார்கள் என்பதை மறந்துவிட முடியாது.

இப்படியான நிலையில் தமிழ் அரசுக்கட்சித் தலைமையின் ஏகாதிபத்திய விசுவாசம் காரணமாகவும் எஸ்.டபிள்யூ.ஆர். பண்டாரநாயக்காவின் தேசிய எழுச்சியையும் ஏற்காமை காரணமாகவும் உருவான மேட்டுக்குடி அரசியலை அடிப்படையாகக் கொண்டிருந்தமையே இவ்வெதிர்ப்புக்குக் காரணமாகும்.

இந்த ஏகாதிபத்திய சார்பு மக்கள் மயப்படும் சுயாதிபத்திய அரசியலை ஏற்காத மனப்பான்மை என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட மேட்டுக்குடி அரசியல் சேர்.பொன். இராமநாதன் காலத்திலிருந்து நிலைபெற்று வருவதை நாம் அவதானிக்க முடியும். தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் சகல விதமான பின்னடைவுகளுக்கும் எமது தலைமைகளின் இத்தகைய போக்கே ஒவ்வொரு முக்கிய சந்தர்ப்பங்களிலும் காரணமாய் அமைந்துள்ளது. 1924ம் ஆண்டு டொனமூர் ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் சர்வ சன வாக்குரிமை வழங்கப்பட வேண்டுமெனவும், இனவாரியான தேர்தல் முறை அகற்றப்பட்டு பிரதேச வாரியான தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனவும் பரிந்துரை செய்யப்பட்டது.

இனரீதியான பிரதிநிதித்துவம் நீக்கப்பட்டு சர்வ சன வாக்குரிமை வழங்கப்பட்டால் பிரதேச வாரியான பிரதிநிதித்துவம் அமுலுக்கு வரும் போது அது சிறுபான்மை மக்களின் அழிவுக்கே வழிவகுக்குமென தமிழ் லீக் பகிரங்கமாகவே தனது கண்டனத்தை வெளியிட்டது. அது மட்டுமின்றி பொன். அருணாசலத்தின் இறப்பின் பின் தமிழர் மகாசபையை வழிநடத்திய பொன். இராமநாதன், லண்டன் சென்று குடியேற்ற செயலரை சந்தித்து சர்வ சன வாக்குரிமையையும் பிரதேச வாரியான தேர்தல் முறையையும் இரத்துச் செய்யுமாறு வலியுறுத்தினார். ஆனால் அதில் அவர் வெற்றி பெற முடியவில்லை.

இந்நாட்டின் மூன்றில் இரண்டு பகுதியில் சிஙகளவர் வாழ்வதால் பிரதேச வாரியான தேர்தலில் சர்வ சன வாக்குரிமை அமுலாகும் போது அரசாங்க சபையில் சிங்களவர் பெரும்பான்மையான அங்கத்துவத்தை பெறமுடியுமென்பதாலேயே அத்திட்டத்தை எதிர்ப்பதாகக் கூறப்பட்டது. அதில் ஒரு உண்மையிருப்பதை மறுத்துவிட முடியாது.

அப்படியான நிலையில் அரசாங்க சபையில் சிங்களவர் மேலாதிக்கம் பெறாமல் தடுத்து நிறுத்தும் வகையில் இன்னொரு மார்க்கத்தை முன்வைத்து அதை நிறைவேற்றப் போராடியிருக்க வேண்டும். அப்படிச் செய்யாது சர்வ சன வாக்குரிமை எதிர்த்தமையானது மேட்டுக்குடியினரின் கைக்குள் இருந்த அரசியல் சாதாரண மக்கள் மத்தியிலும் செல்வதை அதாவது மக்கள் மயப்படுவதை விரும்பாமையாலேயே இவ் எதிர்ப்பு முன்வைக்கப்பட்டது. உண்மையிலேயே சர்வ சன வாக்குரிமை என்பது சமூகத்தை முன்கொண்டு செல்லும் ஒரு முற்போக்கான நடவடிக்கையாகும். அதைத் தடுத்து நிறுத்தும் முயற்சியானது மேட்டுக் குடியினரின் மேலாதிக்க அரசியலை மேலோங்க வைக்கும் பிற்போக்கான நோக்கம் கொண்டவையாகும்.

அன்று சேர்.பொன். இராமநாதன் சர்வ சன வாக்குரிமையை எதிர்த்தமை, பண்டாரநாயக்கா ஆட்சிக்காலத்தில் தந்தை செல்வநாயகம் பிரிட்டிஷ் படைகள் வெளியெறுவதை எதிர்த்தமை போன்ற விடயங்கள் அன்று தொட்டு இன்று வரை அந்நிய ஏகாதிபத்திய சக்திகளின் விசுவாசிகளாகவே இருந்து வருவதை மக்கள் மயப்படுத்த மக்களின் அடிப்படை அபிலாசைகளையும் உணர்வுகளையும் உதாசீனம் செய்வதும் மக்கள் மயப்படும் அரசியலை நிராகரிப்பதுமாக தமிழ் அரசியல் தொடர்ந்து வருகிறது.

அதாவது இலங்கையின் தமிழ் அரசியல் மேல் தட்டு வர்க்கத்தினரின் தேவைகளுக்கும் அபிலாசைகளுக்கும் அமையவே வகுக்கப்படுகின்றன. இன ஒடுக்குமுறை இனவழிப்பு போன்ற அநீதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் கூட தமிழ்த் தலைமைகளால் இந்த வரையறைக்கு அப்பால் கொண்டு செல்லப்படுவதில்லை. ஆனால் விடுதலைப் போராட்டம் முனைப்பு பெற்றிருந்த காலத்தில் மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியல் மேலோங்கியிருந்த போதிலும் அது திட்டமிட்ட சதி மூலம் முறியடிக்கபட்ட பின்பு மீண்டும் தமிழ் அரசியல் மேட்டுக்குடியினரின் 'அப்புக்காத்து' அரசியலுக்குள் முடங்கிவிட்டது. இன்று தமிழ் மக்கள் தமது விமோசனத்துக்கான வழிகள் தொடர்பாக ஏமாற்றமடையும் நிலை இத்தகைய மேட்டுக்குடி அரசியலின் காரணமாகவே உருவாகியது என்பது முக்கியமானதாகும்.

ஆனால் 20ம் நூற்றாண்டின் முதல் காலாண்டுப்பகுதியில் இலங்கை அரசியலில் பொன்னம்பலம் சகோதரர்களின் பங்களிப்பு உச்ச அளவில் இருந்ததை சிங்களவர்கள் உட்பட எவருமே மறுத்து விட முடியாது. ஆனால் இவர்கள் அரசியல் களத்தில் முதலில் இலங்கையர்களாகவும் அடுத்தே தமிழர்களாகவும் பங்காற்றினர் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். கொழும்பை மையமாகக் கொண்ட ஒட்டுமொத்த இலங்கை அரசியலில் இவர்கள் உயர்வாக மதிக்கப்படும் அளவிற்கு இவர்களின் ஆற்றல், உழைப்பு என்பன அமைந்திருந்தன.

இலங்கைத் தேசிய காங்கிரசுக்கு பொன். அருணாசலம் அவர்கள் தலைமையேற்று அதை வழிநடத்தியமையும் 1915ம் ஆண்டு முஸ்லீம்களுக்கு எதிராக இடம்பெற்ற இன வன்முறைகள் காரணமாக கைது செய்யப்பட்ட சிங்களத் தலைவர்களை பொன். இராமநாதன் லண்டன் சென்று வாதாடி காப்பாற்றியமையும் இவர்களை சிங்கள மக்கள் மத்தியில் நாயகர்களாக ஒரு தோற்றப்பாட்டை உருவாக்கின.

ஆனால் 1919ம் ஆண்டு ஏற்கனவே இலங்கைத் தேசிய காங்கிரஸ் அமைக்கப்பட்ட பொது மேல் மாகாணத்தில் தமிழருக்குப் பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என சிங்கள தலைமைகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வாக்குறுதி மீறப்பட்ட போது சேர். பொன். அருணாசலம் சிங்களத் தலைவர்களிக் துரோகத்தை எதிர்த்து தேசிய காங்கிரஸை விட்டு வெளியேறினார். 1921ல் தமிழர் மகா சபையை உருவாக்கி அதன் முதலாவது மகாநாட்டில் தமிழர் தாயகக் கோட்பாட்டை முன்வைத்தார். அது மட்டுமின்றி தமிழர் மகா சபை மேட்டுக் குடி அரசியலுக்கு வெளியே கால் பதித்து அனைத்து மட்ட தமிழர்களையும் அரவணைத்து செல்லும் ஒரு அரசியல் போக்கை கையெடுத்துக் கொண்டது. ஆனாலும் தமிழர் மகா சபை கொழும்பு மைய அரசியலிலிருந்து வெளியேறிவிடவில்லை. அதன் செயற்பாடுகளில் கொழும்பு அரசியலில் தமிழர்களின் இடத்தை வலிமைப்படுத்துவதிலேயே கூடுதல் அக்கறை காட்டப்பட்டது.

எனினும் 1924ல் சேர்.பொன். அருணாசலத்தின் இறப்புடன் தமிழர் மகா பையின் வீச்சு மழுங்க ஆரம்பித்தது. 1927ல் சேர். பொன். இராமநாதன் சர்வ சன வாக்குரிமை வழங்கப்படுவதை தடுத்து நிறுத்த எடுத்த முயற்சிகள் காரணமாக தமிழ் லீக் மேலும் பின்னடைவுக்கு தள்ளப்பட்டது. 1928ல் பொன். இராமநாதன் அவர்கள் இறப்புடன் தமிழ் மக்களின் அரசியல் வேகமாக யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் கைகளுக்கு நகர ஆரம்பித்தது.

1920ல் கல்விமானான ஹன்டி பேரின்பநாயகம் அவர்கள் தலைமையில் யாழ்ப்பாண மாணவர் காங்கிரஸ் என்ற பெயரில் அமைப்பு உருவாக்கப்பட்ட போதிலிலும் 1921ல் இடம்பெற்ற மகாஜன சபையின் எழுச்சிக்கு முன் அதனால் மக்கள் மத்தியில் பிரபலம் அடையமுடியவில்லை.

ஆனால் 1924ல் இந்திய தேசிய காங்கிரஸை அடியொட்டி யாழ்ப்பாண இளைஞர் பேரவையாக ஹன்டி பேரின்பநாயகத்தால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு முன் வைத்த கொள்கைகள் காரணமாக தமிழ் மக்கள் மத்தியில் மிக வேகமாக செல்வாக்குப் பெற ஆரம்பித்தது. முழு இலங்கைக்குமான சுதந்திரத்தைக் கோரிய அதே வேளையில் அவ்வமைப்பு சாதி ஒழிப்பு, சம பந்தி போசனம், ஆலயப் பிரவேசம், சீதன ஒழிப்பு முதலிய முற்போக்கு கொள்கைகளை கொண்டு செயற்பட்டமை காரணமாக அது ஒரு மக்கள் இயக்கமாக வளர்ச்சியடைந்தது.

20ம் நூற்றாண்டில் 2வது காலாண்டுபட பகுதியில் பொன்னம்பலம் சகோதரர்களின் சகாப்தம் தமிழர் அரசியலில் முடிவுக்கு வர யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசின் அரசியல் சகாப்தம் ஆரம்பமாகியது.

எனினும் பொன்னம்லம் சகோதரர்கள் இலங்கை அரசியலிலும் பின்பு தமிழ் அரசியலிலும் தமிழ் மக்களின் மொழி, கல்வி வளர்ச்சி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் வழங்கிய பங்களிப்பு என்பன அவர்களை வரலாற்றின் தலை சிறந்த நாயகர்களாக அடையாளப்படுத்தி வைத்துள்ளன.

சேர். பொன். இராமநாதன் அவர்கள் தமிழ் மொழி இலக்கணம் உட்பட சில முக்கிய நூல்களை எழுதியும், சில பழந்தமிழ் இலக்கிய நூல்களை அச்சிட்டு வெளியிட்டும் ஆறுமுக நாவலர் பாதையில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு பங்காற்றியிருந்தார். இன்னொருபுறம் கொழும்பில் இந்து ஆலயங்களையும், ஆங்கில இந்துக் கல்லூரிகளையும் நிறுவியதுடன் யாழ்ப்பாளத்தில் பரமேஸ்வராக் கல்லூரி, இராமநாதன் மகளீர் கல்லூரி என்பவற்றை உருவாக்கினார்.

இக்கல்லூரிகளின் வளாகங்களே தற்போது யாழ் பல்கலைக்கழகமாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கல்லூரிகள் சிறப்பாக இயங்க இராமநாதன் நிதியத்தை உருவாக்கி அதற்கு சொந்தமாக ஆயிரம் ஏக்கர் நெற்செய்கைக் காணியையும் வழங்கினார். மேலும் வடக்கின் சுயதேவைப் பொருளாதாரத்தை நிறைவு செய்யும் வகையில் கொழும்பிலுள்ள தமிழ் உயர் அதிகாரிகளையும், செல்வந்தர்களையும் கிளிநொச்சிக்கு அழைத்து வந்து இரணைமடு குளத்தின் கீழ் பல நூறு ஏக்கர் காணிகளில் நெல் உற்பத்தியை மேற்கொள்ள வழிகாட்டியதுடன் அதற்கான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.

இவ்வாறு தமிழ் மக்களின் மொழி, கல்வி வளர்ச்சி சுயதேவைப் பொருளாதாரம் என்பவற்றில் மனப்பூர்வமான அக்கறையுடன் செயற்பட்டு வந்த போதிலும் அரசியலைப் பொறுத்த வரையில் கொழும்பு மைய அரசியலில் தமிழர்களின் பலத்தை நிலைப்படுத்தும் வகையில் செயற்பட்டனரே ஒழிய தமிழர் தாயகப் பகுதியில் சுயமான அரசியல் அதிகாரத்தை நிறுவும் தூரநோக்கு கொண்ட ஒரு அடித்தளத்தை நிறுவுவதில் அக்கறை காட்டவில்லை. சேர். பொன். அருணாசலம் கொள்கையளவில் தமிழ்த் தேசியக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்ட போதிலும் 1927ல் எஸ.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்கா அவர்களாலும், மத்திய மலைநாட்டு சிங்களத் தலைமைகளாலும் சமஷ்டிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டபோது அதற்கு ஆதரவு வழங்கத் தவறிவிட்டார். அக்காலப்பகுதியில் பிரதேச ரீதியான பிரதிநிதித்துவத்தை நீக்குவது தொடர்பாகவும் சர்வ சன வாக்குரிமையை இல்லாமல் செய்யவது தொடர்பானதுமான முயற்சிகளை மேற்கொண்டார்.

இந்நிலையிலேயே இலங்கைக்கான முழுச் சுதந்திரத்தைக் கோரியும், ஏனைய பல முற்போக்கான சமூக மாற்ற கருத்துகளை முன்வைத்து மக்கள் அரசியலை யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் முன்னெடுத்த காரணத்தால் வேகமாக வளர்ச்சியடைய ஆரம்பித்தது.

அத்துடன் இலங்கைத் தமிழ் அரசியலில் பொன். அருணாசலம், பொன். இராமநாதன் ஆகியோரின் சகாப்தம் முடிவடைந்து 20ம் நூற்றாண்டின் 2வது காலாண்டுப்பகுதியில் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசின் சகாப்தம் ஆரம்பித்தது.

கிறீஸ்துக்கு பின் 5ம் நூற்றாண்டில் மகாவம்சம் எழுதப்பட்ட காலத்தில் எல்லாளன் ஒரு ஆக்கிரமிப்பாளன் எனவும் துட்டகாமினி ஒரு விடுதலை வீரன் எனவும் சிங்கள மக்கள் மத்தயில் ஊட்டப்பட்ட கருத்து 1815ல் கண்டியை ஆட்சி செய்த தமிழ் நாயக்க வம்ச அரசனான கீர்த்தி விக்கிரம ராஜ சிங்கனின் ஆட்சியை ஆங்கிலேயர் உதவியுடன் வீழ்த்துமளவிற்கு வலுப்பெற்றிருந்தது. அதன் பின்பு அநகாரிக தர்மபாலாவால் ஊட்டப்பட்ட நிறுவனமயப்படுத்தப்பட்ட சிங்கள மேலாதிக்க சிந்தனைப் போக்குகள் முதலில் கத்தோலிக்கர்களுக்கு எதிராகவும் பின்பு முஸ்லீம்களுக்கு எதிராகவும் இலங்கையில் பௌத்த சிங்கள மேலாதிக்கம் பெரும் இரத்தக்களரியை கட்டவிழ்த்து விட்டது.

அநகாரிக தர்மபாலவை ஞான தந்தையாகக் கொண்ட சிங்களத் தலைவர்கள் சேர்.பொன்னம்பலம் சகோதரர்களை தங்கள் தேவைகளுக்காக பயன்படுத்தி பொறுத்த சந்தர்ப்பத்தில் தூக்கியெறிவதே வரலாறாக விளங்கி வந்துள்ளது. இந்த சிங்களத் தலைவர்களின் இன மத மேலாதிக்கத்தை சரியாகக் கணக்கெடுக்கத் தவறிய காரணத்தால் பொன்னம்பலம் சகோதரர்கள் எவ்வளவு ஆற்றல் உள்ளவர்களாக இருந்தபோதிலும் சிங்களத் தலைமைகள் தமிழர்களை இரண்டாந்தரப் பிரஜைகளாகளாகக் கணிக்கவும் ஒடுக்குமுறைகளை மேற்கொள்ளவும் வாய்ப்பான ஒரு அடித்தளத்தை விட்டுச்சென்றுள்ளார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

ஏற்கனவே மகாவம்சம் எழுதப்பட்ட காலத்தில் கருவுற்ற சிங்கள பௌத்த மேலாதிக்கவாதம் பல்வேறு சந்தர்ப்பங்களில் வளர்ச்சி பெற்று இனவழிப்பு நடவடிக்கைகளாகவும் தொடர்ச்சியான இனமோதல்களாகவும் விரிவடைவதற்கு பொன்னம்பலம் சகோதரர்கள் காலத்தில் கையெடுக்கப்பட்ட அரசியலும் ஒரு விதத்தில் காரணமாக இருந்ததை நிராகரித்துவிட முடியாது.

தொடரும்

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE