Monday 17th of May 2021 01:01:15 PM GMT

LANGUAGE - TAMIL
-
“பொனப்பாட்டிச அரசமைப்பை நோக்கி நகரும் இலங்கை அரசியல்” -கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்

“பொனப்பாட்டிச அரசமைப்பை நோக்கி நகரும் இலங்கை அரசியல்” -கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்


இலங்கை அரசியலில் இருபதாவது திருத்த சட்டமூலத்தின் வர்த்தகமானி அறிவிப்பின் பிரகாரம் அதிகாரத்திற்கான போட்டியும் கட்சி அரசியலின் ஆதிக்கமும் தொடர் விடயமாக நிகழ்ந்து வருவதனை பதிவு செய்துள்ளது. சுதந்திரத்திற்கு பின்பு அத்தகைய அரசியல் செல்நெறி வடக்கு கிழக்கினை மட்டுமல்ல இலங்கைத் தீவு முழுவதையும் ஒர் ஆரோக்கியமான அரசியல் சமூகமாக அடையாளப்படுத்துவதில் தவறுவதற்கு மூலாதாரமாக அமைந்துள்ளது. கட்சிகளும் ஆட்சியாளரும் காலத்திற்கு காலம் அரசியலமைப்பினை திருத்துவதும் மாற்றுவதும் மரபாகக் கொண்டுள்ள போக்கினை அவதானிக்கின்ற போது அத்தகைய முடிபுக்கே வரவேண்டிய நிலை தவிர்க்க முடியாததாகும்.. இது ஒரு அரதிகாரப் போட்டிக்கான நியமங்களாகவே தெரிகிறது. இத்தகைய முரண்பாடுகளைக் கொண்டு இலங்கைத் தீவு செழுமையான அரசியல் பண்பாட்டினையோ அல்லது அரசியல் சமூகத்தினையோ உருவாக்குவது கடினமான இலக்காகவே எதிர்காலம் அமையும்.

1978 ஆம் ஆண்டு இலங்கை குடியரசின் இரண்டாவது யாப்பின் பாராளுமன்ற விவாதத்தின் போது கொல்வின் ஆர்.டி.சில்வா குறிப்பிடும் போது குடியரசின் இரண்டாவது யாப்பானது ஒரு நவீன முடியாட்சி என்று உரையாற்றினார் (Modern Monarchy) உண்மையும் அதுவாகவே உள்ளது. அதாவது பாரம்பரிய முடியாட்சியிலிருந்து விடுபட்ட இலங்கைத் தீவு நவீன முடியாட்சிக்குள் காலடி எடுத்துவைத்துள்ள மரபையே 1978 அரசியலமைப்பு வெளிப்படுத்தியது. காரணம் ஜனாதிபதி எனும் நிறைவேற்றதிகாரம் தனிமனிதனுக்கு வழங்கியிருந்த வரம்பற்ற அதிகாரத்தையும் அத்தகைய தனிமனிதனை மையப்படுத்திய ஆட்சித்துறையும் அடிப்படையானதாக அமைந்திருந்தது. இதே நேரம் இலங்கைத் தீவின் இனப்பிரச்சினையும் அதனால் எழுந்த ஆயுதப்போரையும் தென் இலங்கையில் எழுச்சியடைந்த ஆயுதக்கலாச்சாரத்திற்கும் மேற்குடனான பொருளாதார உறவை துரிதப்படுத்தவும் விரைவான தீர்மானங்களுக்கு செல்வதற்கும் நிறைவேற்றதிகார ஆட்சி முறை அவசியம் என்ற வாதம் எழுந்தது.

ஜே.ஆர் ஜெயவர்த்தனாவின் ஆட்சிக்காலம் முழுவதும் நிறைவேற்றதிகாரத்தின் மிதமான போக்கு தென் இலங்கையின் அரசியலில் அதிக குழப்பத்தினை தவிர்த்திருந்தது. அதிலும் பாராளுமன்ற உறுப்பினரிடம் திகதி இடப்படாத இராஜினாமாக கடிதங்களும் வடக்கு கிழக்கு மீதான போhப்பிரகடனங்களும் தென் இலங்கையை அதிகம் நெருக்கடிக்கு உள்ளாக்கவில்லை. ஆனால் ரணசிங்க பிறேமதாஸா ஜனாதிபதியானதும் தென் இலங்கையுஞம் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது. குறிப்பாக சாதியம் அல்லது வாழைத் தோட்டம் எதிர் கறுவாத் தோட்ட அரசியல் அதிக முக்கியத்துவம் பெற்றது.அதனுடன் ஜனாதிபதி ஆட்சி முறையானது குண்டர் அரசியல் அல்லது வன்முறை அரசியல் ஒன்றிணைத்துக் கொண்டது. ஜனாதிபதி அதிகாரத்திற்கான ஆளுமையானது வன்முறையை ஒரு பகுதி அரசியலாக கையாளத் தொடங்கியது. அது சந்திரிக்கா குமாரணதுங்காவிடம் குறைவாகவே காணப்பட்டது. அது மட்டுமன்றி வடக்கு கிழக்கு ஆயுதப் போராட்டம் அத்தகைய வன்முறையை தவர்க்க முடியாது ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தென் இலங்கை காணப்பட்டது. பச்சைப் புலிகள் முதல் (குளக்கொட்டியா) புலனாய்வு துறையின் அரசியல் வரை ஜனாதிபதி அதிகாரத்தின் ஓரங்கமாகவே காணப்பட்டது. இதனையே நிறைவேற்றதிகாரத்தின் ஒரு பகுதியாக இலங்கை ஆட்சியாளர்கள் மாற்றியிருந்தனர்.

இத்தகைய பொறிமுறை போருக்கு பின்பு தேவையற்றது என்பதை விட அதற்கான பிராந்திய உலக ஒழுங்கு முறையும் மாறியதுடன் ஜனநாயகம் முதல் அர்த்தத்தில் உச்சரிக்கப்பட வேண்டிய ஒரு சுலோகமாக மாறியது. அதுவே நல்லாட்சியின் வருகையானது. உள்நாட்டு போரில் நிகழ்ந்த மனித உரிமை மீறலும் அது தொடர்பில் உலகம் இலங்கை மீது பின்பற்றிய நடைமுறையும் பொருளாதார நெருக்கடியும் 19 வது திருத்தத்திற்கு வழிவகுத்தது. அதனுடன் ரணில்-மைத்திரி அரசாங்கம் வெதமுல்ல அரசியலுக்கு(ஹம்பாந்தோட்ட) எதிரான சில சரத்துகளையும் 19 இல் இணைத்துக் கொண்டது. இதுவே இருபதின் வரவுக்கான முக்கிய காரணமாகவும் கொள்ளப்படுகிறது.

இருபது மீளவும் 18 ஐ பதிவிட்டுள்ளதாகவும் இது ஒரு சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும் எனவும் ஏதோசதிகார முடிவுகளை உருவாக்கும் எனவும் சட்டத்துறை நிர்வாகத் துறை மற்றும் நீதித் துறை மீது அரசியல் தலையீடு அதிகரிக்க வழிவகுக்கும் என்றும் அதிக விமர்சனங்கள் எழுந்துள்ளது. இவை அனைத்தும் 19 வருவதற்கு முன்பு இலங்கைத் தீவில் நிலவியவையே. அப்போது வடக்கு கிழக்கு மீதான போரினால் அத்தகைய அம்சங்கள் அனைத்தும் மூடிமறைக்கப்பட்டது. தற்போது அத்தகைய அதிகார வேட்டைக்குள் தென் இலங்கை அரசியல் கட்சிகள் அகப்பட்டுள்ளன. அதுவே எழுந்துள்ள பிரச்சினையாகும். அதனாலேயே அவர்கள் சர்வாதிகாரம் என்கிறார்கள்.

இறைமை மக்களுக்கானது என முன்மொழியும் அரசியலமைப்பு அதற்கு முரணாக ஜனாபதியினது தெரிவையும் பாராளுமன்றத்தின் தெரிவையும் அதே மக்கள் தேர்ந்தெடுக்கின்ற முரண்பாட்டை கொண்டுள்ளது.இதனால் மக்களால் தெரிவு செய்யப்படும் பாராளுமன்றத்தை மக்களால் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி ஒருவருடத்தில் கலைக்கும் அதிகாரத்தை பெறுகின்றார். அவ்வாறே நீதித்துறையிலும் நிர்வாகத் துறையிலும் ஜனாதிபதி தனது விருப்புக்கும் எல்லைக்கும் உட்பட்ட விதத்தில் அதிகாரத்தை பிரயோகித்து பதவிகளையும் நியமனங்களையும் மாற்ற முடியும் என்ற நிலையை இருபது உருவாக்கியுள்ளது.

இனி விடயத்திற்கு வருவோம். முதலாவது இருபதாவது திருத்தம் நிறைவேற்றதிகாரத்தை மீளவும் நிறுத்துவதன் மூலம் வெதமுல்ல அரசியலை நீண்ட காலத்திற்கு நிலையானதாக மாற்ற முடியும் என்ற எண்ணத்தைக் கொண்டுள்ளது. தற்போதுள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டு குடும்ப ஆட்சிக்கு வழிவகுக்க முடியும் என்ற வாதம் நியாயமானதாகவே தெரிகிறது.ஜனாதிபதியின் பதவிக்கு போட்டியிடும் வயதெல்லையை வைத்துக் கொண்டு அத்தகைய வாதம் மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது. அவ்வாறே ஆணைக்குழுக்களது பதவி நிலைகளும் பாராளுமன்ற பேரவை மற்றும் ஆட்சித்துறை பதவிகளும் நியமனங்களும் வெதமுல்ல அரசியலுக்கானதாக அமைய வாய்ப்புள்ளது என்ற வாதத்தை புறந்தள்ளிவிட முடியாது.எனவே இருபது சட்டத்தின் ஆட்சியையும் ஜனநாயகத்தையும் அடிப்படைச் சுதந்திரத்தையும் பலவீனமாக்குகின்றது என்ற தகவல் நியாயமானதாகவே உள்ளது.இருபத்தியோராம் நூற்றாண்டு யுகத்தில் எழுந்துள்ள கொவிட்-19 பின்பான உலகத்தில் அதிகாரத்தைக் காட்டிலும் பொருளாதாரத்திற்கும் ஒருமைப்பாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய சூழலில் உலக அரங்கம் காணப்படுகிறது.

இரண்டாவது அதிகார ரீதியில் இலங்கைத் தீவின் இருப்பையும் எதிர்காலத்தையும் அத்தகைய நிறைவேற்றதிகாரத்தின் மூலம் பாதுகாக்க முடியும் என்ற எண்ணமும் வலுவானதாக அமைந்துள்ளது.குறிப்பாக வடக்கு கிழக்கில் மீள தமிழ் தேசிய எழுச்சி தொடர்பிலும் தென் இலங்கையில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் போன்றவை மீள உருவாகிவிடக் கூடாது என்பதும் இதன் நோக்கங்களில் ஒன்றாக அமைய வாய்ப்புள்ளது. அல்லது குறைந்த பட்சம் அவற்றை முன்னிறுத்திக் கொண்டு இலங்கைத் தீவினை அதிகாரப்பிடிக்குள் வைத்துக் கொள்ள முனையும் உத்தியைக் காட்டுவதாக உள்ளது.இனங்களுக்கிடையே இணக்கத்திற்கு பதில் முரண்பாடும் சந்தேகங்களையும் இது ஏற்படுத்த நிர்ப்பந்திக்க வாய்ப்புள்ளது.

மூன்றாவது பிராந்திய சர்வதேச அரசியலில் ஏற்பட்டுவரும் நெருக்கீடுகளை கையாளும் உத்தியும் இதற்குள் அடங்கியுள்ளது.தற்போது எழுந்துள்ள போக்கானது இந்திய சீன அமெரிக்க போட்டிக்குள் இலங்கைத் தீவு தவிர்க்க முடியாது அகப்பட்டுள்ளது. அத்தகைய வல்லரசுகளது அதிகாரப் போட்டிக்குள் இலங்கைத தீவு முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் வெதமுல்ல அரசியல் ஆட்சியிலும் அதிகாரத்திலும் அமர்ந்தவுடன் வல்லரசுகளது களமாகிவிட்டது இலங்கை தீவு என்பதை கடந்த மாதங்கள் முதல் நிகழ்ந்துவரும் நடவடிக்கைகள் தெரிவாக காட்டுகின்றன. எனவே இதனை எதிர் கொள்வதற்கான உத்திகளுடன் இருபது அரங்கேற்றப்பட்டுள்ளது.

எனவே தற்போதைய களத்தை அவதானிக்கும் போது பாகிஸ்தானில் பிறந்து பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் அரசியல் கோட்பாட்டுவாதியான ஹம்சா அலவியின் சிந்தனையே பொருத்தப்பாடுடையதாக தெரிகிறது. அதாவது காலனித்துவத்திற்கு பிந்திய அரசு பற்றிய அவரது வாதம் பொருளாதார அடித்தளத்திலிருந்து விலகி தனியான சுயத்துவத்தைக் கொண்ட இராணுவ அதிகாரவர்க்க குழுமத்தின் கையில் சேர்வதனைக் குறிக்கும் பொனப்பாட்டிச அரசு என்கிறார். இலங்கைத் தீவில் பொனப்பாட்டிசம் பிளஸ் (+) நெப்போடடிச அரசாகவே தெரிகிறது. இதன் போக்கு பிராந்திய சர்வதேச அரசியலில் தலையீட்டுக்கும் கையாளுகைக்கும் உட்பட வேண்டிய நிர்பந்தத்தை எதிர்நோக்க வேண்டிய நிலை தவிர்க்க முடியாததாக அமையும்.

அருவி இணையத்துக்காக கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, மகிந்த ராசபக்ச, இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE