Tuesday 23rd of April 2024 08:04:03 PM GMT

LANGUAGE - TAMIL
-
பிரான்ஸில் நேற்று 10,000 பேருக்குக் கொரோனா;  நிலைமை கைமீறுவது குறித்து அவசரமாக ஆராய்வு!

பிரான்ஸில் நேற்று 10,000 பேருக்குக் கொரோனா; நிலைமை கைமீறுவது குறித்து அவசரமாக ஆராய்வு!


பிரான்ஸில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நேற்று வியாழக்கிழமை ஒரே நாளில் கிட்டத்தட்ட 10,000 புதிய கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று 9,843 புதிய கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் பரிசோதனைகளில் கண்டறியப்பட்டதாக பிரெஞ்சு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

71 புதிய கொத்துத் தொற்று மையங்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் பிரான்ஸ் தனது சோதனைகளை அதிகரித்துள்ளது.

கடந்த வாரத்தில், மேற்கொள்ளப்பட்ட 1 மில்லியனுக்கும் அதிகமான சோதனைகளின்போது 48 ஆயிரத்து 542 புதிய தொற்று நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 19 பேர் நேற்று உயிரிழந்தனர். இவா்களுடன் பிரான்ஸின் கொரோனா மரணங்கள் 30 ஆயிரத்து 813 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தலைமையில் அமைச்சர்கள், சுகாதார வல்லுநர்கள் இன்று வெள்ளிக்கிழமை அவசரமாகக் கூடி ஆராயவுள்ளனர்.

இந்தக் கலந்துரையாடலில் பின்னரே தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் பிரான்ஸில் அடுத்த கட்டமாக எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படும் ?என்பது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உயர்மட்ட ஆலோசனையில் அடுத்த வாரம் முதல் பிரான்ஸில் கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கமாக்கும் அறிவிப்புக்கள் வரலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மக்கள் மத்தியில் பீதியை அதிகரிக்காமல் நாங்கள் முடிந்தவரை வெளிப்படையாகவும் தெளிவாகவும் கட்டுப்பாட்டுடனும் இருக்க வேண்டும். என நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஜனாதிபதி மக்ரோன் குறிப்பிட்டார்.

அத்துடன், தொற்று நோயைக் கட்டுப்படுத்த மீண்டும் சில கடுமையான முடிவுகளை அரசாங்கம் விரைவில் எடுக்க வேண்டியிருக்கும் என தொற்றுநோய் குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் சுகாதார வல்லுநர் குழுவின் தலைவர் ஜீன்-பிரான்சுவா டெல்ஃப்ரைஸி புதன்கிழமை கூறினார்.

சில இடங்களில் தொற்று நோய் அதிவேகமாக உயரும் ஏற்படும் அபாயம் உள்ளது எனவும் அவா் எச்சரித்தார்.

இதேவேளை, தொற்றுக்குள்ளான ஒருவருடன் இணைந்து காரில் பயணம் செய்த நிலையில் பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் தற்போது ஏழு நாள் சுய-தனிமைப்படுத்தலில் உள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்டப் பரிசோதனையில் கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), பிரான்சு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE