Monday 17th of May 2021 01:22:47 PM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இன மோதல் - 20 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 20 (வரலாற்றுத் தொடர்)


'தமிழ் மக்களின் அரசியலில் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ்'

'எனது உரை எல்லாம் உள்ளவர்களாக இருந்து ஒன்றும் இல்லாதவர்களாக நலிவடைந்துவிட்ட 20 ஆம் நூற்றாண்டின் தமிழ் அரசியல் என்ற எடுகோளுடனேயே ஆற்றப்படுகிறது. எமது கடந்த காலம் என்று வந்துவிட்டால் துதி பாடுதல் அல்லது புகழ்ந்து தள்ளுதல் என்பது தமிழ் கலாச்சாரத்தின் ஒரு மூலக்கூறாகும். அதன் காரணமாகவோ என்னவோ விமர்சனபூர்வமான ஆக்கங்களைப் பொதுவாகத் தமிழில் காணக்கிடைப்பதில்லை. இப்பொதுவான மரபிலிருந்து விலகிவிடாமல் எமது கடந்தகால அரசியலைப் புகழ் பாடி பாராட்ட வேண்டுமென்ற உந்துதல் எனக்கு இருந்ததில்லை. அதே சமயம் எமது புத்திசாலித்தனம் இன்மையாலும் மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் சிந்தனைகள் காரணமாகவும் எல்லாவற்றையும் இழந்துவிட்டு இருப்பதை எவ்வாறு காப்பாற்றிக் கொள்வது என்ற ஒரு நிலையில் நின்று கொண்டு எமது கடந்த கால அரசியலை பாராட்டுவது என்பது அவ்வளவு சுலபமாக இருந்துவிடுவதில்லை.'

இது 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சேர்.பொன்.இராமநாதன் நினைவுப்பேருரையில் கொழும்புப் பல்கலைக்கழக பேராசிரியரும் அரசியல் ஆய்வாளருமான திரு.கீத பொன்கலன் சுட்டிக்காட்டிய ஒரு முக்கியமான விடயமாகும். 1835 ஆம் ஆண்டு தொட்டு 1919 வரை சைமன் காசிச்செட்டி என்பவர் சட்டவாக்க சபையில் உத்தியோகப்பற்றற்ற உறுப்பினராக இருந்த காலப்பகுதியைத் தவிர ஏனைய காலம் முழுவதுமே பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழிருந்த கொழும்பு அரசியல் பொன்னம்பலம் சகோதரர்களின் குடும்பத்தின் செல்வாக்குக்கு உட்பட்டதாகவே இருந்தது.

அக்காலப்பகுதி முழுவதுமே சிங்கள, தமிழ், முஸ்லீம், பறங்கியர் என இலங்கைவாழ் சகல இனத்தினருக்கும் அரசியல் தலைமை கொடுக்கும் சக்தியாக அக்குடும்பத்தினர் தோற்றம்பெற்றிருந்தனர். அப்படியாக எல்லாம் உள்ளவர்களாக ஒரு கட்டத்தில் காணப்பட்ட அவர்கள் 1921 இல் எதுவும் இல்லாதவர்களாக கொழும்பு அரசியலிலிருந்து தூக்கிவீசப்பட்டனர்.

யாழ்ப்பாணத்திலருந்து கொழும்புக்கு இடம்பெயர்ந்த பொன்னம்பலம் சகோதரர்களின் பேரனாகிய குமாரசாமி அவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியில் உயர் பதவிகளை வகித்து வந்தார். இவரின் கல்வி மேம்பாடு காரணமாகவும், நிர்வாக ஆற்றல் காரணமாகவும் சட்டவாக்க சபையின் முதலாவது உத்தியோகப்பற்றற்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இவரது காலப்பகுதியிலே ஒன்றாக இருந்த வடக்கு கிழக்கு கோல்புறூக் ஆணைக்குழுவின் சிபாரிசுக்கு அமைய 1833இல் தனித்தனி மகாணங்களாக்கப்பட்டு கொழும்பு மத்திய ஆட்சியின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. தமிழரின் பாரம்பரிய வாழிடமான வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டபோது குமாரசாமி அதிகாரத்தில் இருந்த போதிலும் அதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவோ தடுத்து நிறுத்தவோ முயலவில்லை.

குமாரசாமியின் பதவிக்காலம் நிறைவு பெற்றதையடுத்து சைமன் காசிச்செட்டி என்பவர் நியமிக்கப்பட்டார். அவரையடுத்து குமாரசாமியின் மருமகனான முத்துக்குமாரசாமி நியமிக்கப்பட்டார். அவர் யாழ்ப்பாணத்தில் பல அபிவிருத்தி வேலைகளை மேற்கொண்ட போதிலும்கூட எமது மண்ணின் தனித்துவத்தை பேணுவது தொடர்பான பார்வையைக் கொண்டிருக்கவில்லை. அவரும் முழுநாட்டுக்குமான மக்களின் பிரதிநிதியாகவே செயற்பட்டார். 1879 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் ஆறுமுகநாவலரின் அனுசரணையுடன் தேர்தலில் வெற்றிபெற்ற பொன் இராமநாதன் 13 ஆண்டுகள் சட்டவாக்க சபையில் உத்தியோகப்பற்றற்ற உறுப்பினராகச் செயற்பட்டார். அவரின் பணிக்காலம் முடிந்த பின்பு 1893 தொடக்கம் 1897 வரை அவரின் சகோதரரான பொ.குமாரசாமி அவர்கள் சட்டவாக்க சபை உறுப்பினராக பணியாற்றினார்.

மீண்டும் 1910 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் சிங்கள கரவ சமூகத்தைச் சேர்ந்த மார்க்கஸ் பெர்னான்டோ என்பவருடன் போட்டியிட்டு சேர். பொன் இராமநாதன் இலங்கை முழுவதற்குமான உத்தியோகப்பற்றற்ற சட்டவாக்கசபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். கொவிகம சமூகத்தைச் சேராத ஒரு சிங்களவரை தலைவராக ஏற்றுக்கொள்ள விரும்பாத சிங்களத் தலைவர்கள் தமது பூரண ஆதரவை சேர். பொன் இராமநாதனுக்கே வழங்கினர்.

1915 ஆம் ஆண்டு இடம்பெற்ற முஸ்லீம்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்பாக கைது செய்து சிறையிடப்பட்ட சிங்களத் தலைவர்களை காப்பாற்றுவதில் சேர். பொன் இராமநாதன் முனைப்புடன் செயற்பட்டு அதில் வெற்றியும் பெற்றார். அதையடுத்து சமூக சீர்திருத்த லீக் என்ற அமைப்பை உருவாக்கி சிங்கள தமிழ் முஸ்லீம் மக்களின் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்த சேர். பொன் அருணாசலம் அவர்களை தலைவராகக் கொண்டு சிங்கள தமிழ் முஸ்லீம் தலைவர்களை உள்ளடக்கிய இலங்கைத் தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது.

இதில் சிங்களத் தலைவர்களை விட சேர். பொன் அருணாசலம் இலங்கையின் சுதந்திரம் பற்றிய விடயங்களில் இந்தியத் தேசிய காங்கிரஸின் தாக்கம் காரணமாக கூடுதல் அக்கறை காட்டினார். இலங்கைச் சமூக சீர்திருத்த லீக்கை தேசிய காங்கிரசுடன் இணைப்பதற்கு நிபந்தனையாக மேல் மாகாணத்தில் தழிழருக்கு ஒரு பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டுமென்ற உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால் 1921 ஆம் ஆண்டு அவ்வுடன்பாடு மீறப்பட்டதால் சேர். பொன் அருணாசலம் இலங்கைத் தேசிய காங்கிரசை விட்டு வெளியேறினார்.

கொழும்பு அரசியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட பொன் அருணாசலம் தமிழர் தாயகக் கோட்பாட்டை அடிப்படையாக வைத்து தமிழர் மகாஜன சபையை உருவாக்கினார். 1924 இல் பொன்.அருணாசலம் அவர்கள் மரணமடைந்ததைத் தொடர்ந்து தமிழர் மகாஜன சபை தாயகக் கோட்பாடு பற்றிய இலக்கில் பலவீனமடைந்ததுடன் மீண்டும் கொழும்பு அரசியலில் தமிழர் தரப்பில் பலத்தை மேம்படுத்தும் வகையிலான நகர்வுகளை ஆரம்பித்தது. அவ்வகையில் டொனமூர் ஆணைக்குழுவால் முன்வைக்கப்பட்ட பிரதேசவாரியான பிரதிநிதித்துவம், சர்வஜன வாக்குரிமை என்பவற்றுக்கு எதிராக சேர். பொன் இராமநாதன் அவர்களால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் அவையும் தோல்வியிலே முடிவடைந்தன.

1930 இல் சேர் பொன். இராமநாதன் மரணமடைகிறார். ஏறக்குறைய 90 ஆண்டுகள் கொழும்பு அரசியலில் செல்வாக்குச் செலுத்திய பொன்னம்பலம் குடும்பத்தினரின் செல்வாக்கு 30 ஆண்டுகளாக மேல்நிலையில் இருந்த பொன்னம்பலம் சகோதரர்களின் இலங்கை அரசியலில் வகித்த பாத்திரம் என்பன முடிவுக்கு வந்தன.

அதாவது அவர்கள் எல்லாம் உள்ளவர்களாக விளங்கியும் இறுதியில் எதுவுமில்லாதவர்களாகக் கொழும்பு அரசியலிலிருந்து ஓரங்கட்டப்பட்டனர். அவ்வாறே அவர்களின் தலைமை தமிழ் மக்கள் மத்தியில் மேலோங்கியிருந்த காலப்பகுதியில் காணப்பட்ட முக்கியத்துவமும், அரசியல் பலமும் இழக்கப்பட்டு எதுவுமே இல்லாத நிலைக்கு தமிழ் மக்களும் தள்ளப்பட்டனர்.

1833 இல் கோல்புறுக் சீர்திருத்தத்தின்படி சட்டவாக்க சபையில் தமிழருக்கும் சிங்களவருக்கும் சம பிரதிநிதித்துவம் அமைந்திருந்தது. 1910 இல் மக்கலம் சீர்திருத்தத்தின்படி 3 சிங்களவர்களுக்கும், 2 தமிழருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. 1920இல் முன்வைக்கப்பட்ட மனிங் சீர்திருத்தத்தின் அடிப்படையில் சட்டவாக்க சபையில் பதினாறு சிங்களவர்களும் ஏழு தமிழர்களும் பிரதிநிதித்துவம் வகிக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டது. 1927 இல் முன்வைக்கப்பட்ட டொனமூர் சீர்திருத்தத்தின் மூலம் பிரதேச ரீதியான தேர்தலின் அடிப்படையில் சிங்களவரின் பிரதிநிதித்துவம் 38 ஆகவும் உயர தமிழர் பிரதிநிதித்துவம் ஏழாகவும் குறைக்கப்பட்டது.

அவ்வகையில் 1930 இல் இலங்கை அரசியலில் மட்டுமின்றி தமிழ் அரசியலிலும் பொன்னம்பலம் சகோதரர்களின் சகாப்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோது அவர்கள் எல்லாம் உள்ளவர்களாக இருந்தும் எதுவுமில்லாத நிலைக்குத் தள்ளப்பட்டதைப் போன்றே சட்டவாக்க சபையிலான தமிழ் பிரதிநிதித்துவமும் சிங்களவருடன் சம அளவினதாக இருந்து இறுதியில் ஐந்தில் ஒரு பங்காக வீழ்ச்சியடைந்தது.

பொன்னம்பலம் சகோதரர்கள் தாங்கள் தமிழர் என்பதைவிட இலங்கையராகவே தமது அரசியலை முன்னெடுத்தனர். ஆனால் சிங்களத் தலைவர்களோ இலங்கையரென்றால் சிங்களவர் மட்டுமே என்ற வகையிலயே தமது அரசியலில் ஒவ்வொரு நகர்வுகளையும் திட்டமிட்டு முன்னெடுத்தனர். இதைப் பொன்னம்பலம் சகோதரர்கள் சரியாகக் கணக்கெடுத்து அரசியலைக் கையாளாத காரணத்தினாலேயே சிங்களவர்கள் தமது மேலாதிக்கத்தை தந்திரமாக நிலைநிறுத்திக் கொள்ள முடிந்தது. இது எமது புத்திசாலித்தனமின்மையாலும் மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் சிந்தனை காரணமாகவும் ஏற்பட்ட பெரும் பின்னடைவு என்பது முக்கியமாகும்.

பொன்னம்பலம் சகோதரர்களின் சகாப்தம் முடிவுக்கு வந்து கொண்டிருந்த காலப்பகுதியில் 1924ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் தமிழ் மக்கள் மத்தியில் மிக வேகமாக வளர்ச்சி பெற ஆரம்பித்தது. அதற்கான சில அடிப்படைக் காரணங்கள் அமைந்திருந்தன. அதன் கொள்கைகள் முழு இலங்கைக்குமான சுதந்திரத்தை இலக்காகக் கொண்டிருந்தது. முன்னைய தமிழரசியல் தலைவர்கள் ஆங்கில ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டும் சீர்திருத்தம் மூலம் தேசத்தின் இறைமையை நிலைநாட்ட முயன்றனரே ஒழிய பூரண சுதந்திரம் என்ற இலட்சியத்தை முன்னெடுக்கவில்லை. எனவே இளைஞர் காங்கிரசின் கொள்கைகள் இளைஞர் மத்தியில் புதிய உத்வேகத்தை ஊட்டின. அது மட்டுமின்றி மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு போன்றவர்களை இங்கு வரவழைத்து உரையாற்ற வைக்கும் அளவுக்கு அவர்கள் இந்திய தேசிய காங்கிரசுடனும் அதன் சுதந்திரப் போராட்டத்ததுடனும் தொடர்புகளைப் பேணி வந்தனர். மேலும் காந்தியின் வழியில் சாதிப்பாகுப்பாட்டிற்கு எதிர்ப்பு, சீதன ஒழிப்பு, சமபந்தி போசனம் பொன்ற முக்கிய முற்போக்கான நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டனர்.

அவ்வகையில் கனவான்கள் அரசியலாக மேட்டுக்குடியினரின் கைகளில் இருந்த தமிழ் அரசியல் இளைஞர் காங்கிரசால் மக்கள் மயப்படுத்தப்பட்டது ஒரு பாரிய மாற்றமாகும். பின் நாட்களில் இடது சாரி சிந்தனைகளால் ஆட்கொள்ளப்பட்ட ஹன்டிப் பேரின்பநாயகம் அவர்களின் தலைமை இப்படியான முற்போக்கு நடவடிக்கைகளுக்கு வழிகாட்டலாக அமைந்திருக்கக் கூடும்.

ஆனால் 1927இல் கண்டிய சிங்களத் தலைமைகளாலும் 1928இல் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க அவர்களாலும் முன்வைக்கப்பட்ட சமஷ்டிக் கோரிக்கையை பொன்னம்பலம் சகோதரர்களைப் போன்றே இளைஞர் காங்கிரசும் பொருட்படுத்தவில்லை. கண்டிய சிங்களத் தலைமைகளுடன் தமிழர் தரப்புகளும் இணைந்து டொனமூர் ஆணைக்குழுவின் முன் சமஷ்டிக் கோரிக்கைக்கு அழுத்தம் கொடுத்திருந்தால் தமிழர்கள் எதுவுமில்லாதவர்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு அவலப்படும் நிலை ஏற்பட்டிருக்காதெனவே நம்பப்படுகிறது. ஆனால் இளைஞர் பேரவையும் முழு நாட்டினதும் சுதந்திரத்தைப் பற்றிச் சிந்தித்தனரே ஒழிய தமிழர்களின் அரசியல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதில் அக்கறை காட்டவில்லை.

இளைஞர் பேரவை இந்திய தேசிய காங்கிரஸ் அங்கு எவ்வாறு முழு இந்தியாவின் சுதந்திரத்தைக் கோரியதோ அவ்வாறே இலங்கையில் நாட்டின் முழு சுதந்திரத்தையும் முன்வைத்தது. ஆரம்பத்தில் சில முற்போக்கு எண்ணம் கொண்ட சிங்களத் தலைவர்கள் இளைஞர் காங்கிரசுக்கு ஆதரவை வழங்கினாலும் அது சில நாட்களிலேயே காணாமல் போய்விட்டது.

இலங்கையில் மகாநாடுகள், ஊர்வலங்கள் ஆயிரக்கணக்கான கையெழுத்துகளுடன் ஆட்சியாளர்களுக்கு மகஜர்களை அனுப்புதல் போன்ற நடவடிக்கைகளில் இளைஞர் காங்கிரஸ் ஈடுபட்டதுடன் ஆங்கில அரசின் அதிகாரிகளின் வரவுகளையும், நிகழ்வுகளையும் பகிஸ்கரித்தனர். இன்னொருபுறம் தீண்டாமை ஒழிப்பு, சீதன ஒழிப்பு, போன்ற சமூகச் சீர்திருத்த நடவடிக்கைகளில் தீவிரமாக அவர்கள் ஈடுபட்டனர். காங்கேசந்துறையில் அவர்களால் சமபந்தி போசனத்துக்கென அமைக்கப்பட்ட பந்தலை முதல் நாள் இரவில் சாதி வெறியர்கள் தீயிட்டு எரித்தனர். இப்படியான எதிர்ப்பு நடவடிக்கைகளும் இளைஞர் காங்கிரசை மக்கள் மத்தியில் மேலும் பிரபலமடைய வைத்தன.

1930இல் தமிழ் அரசியலில் பொன்னம்பலம் சகோதரர்களின் சகாப்தம் முடிவடைய யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசின் சகாப்தம் மக்கள் மயப்பட்ட ஒரு அரசியலாக முழு இலங்கைக்குமான சுதந்திரத்தை முன்வைத்து உருவானது.

இதை தமிழ் அரசியலின் இரண்டாவது சகாப்தம் எனக் கொள்ளமுடியும்.

தொடரும்

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம், யாழ்ப்பாணம்பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE