Tuesday 23rd of April 2024 05:28:15 AM GMT

LANGUAGE - TAMIL
.
கோட்டாவின் கையில் அதிகாரங்கள் மோசமான அழிவுக்கே வழிவகுக்கும்! - சமூக நீதிக்கான தேசிய இயக்கம் எச்சரிக்கை!

கோட்டாவின் கையில் அதிகாரங்கள் மோசமான அழிவுக்கே வழிவகுக்கும்! - சமூக நீதிக்கான தேசிய இயக்கம் எச்சரிக்கை!


"அரசால் முன்மொழியப்பட்டிருக்கின்ற அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் கடந்தகால வரலாற்றுக்கு எவ்வித முன்னுரிமையையும் வழங்காமல், ஜனாதிபதியைச் சுற்றியுள்ள அதிகாரங்களை மாத்திரம் மையப்படுத்தியதாக அமைந்திருக்கின்றது. இவ்வாறான கட்டுமீறிய அதிகாரங்களைத் தனியொரு நபரின் கைகளில் வழங்குவதென்பது மீளத் திருத்திக்கொள்ள முடியாத மிக மோசமான அழிவுகளுக்கு வழிவகுப்பதாக அமையும்."

- இவ்வாறு வணக்கத்திற்குரிய மாதுலுவாவே சோபித தேரரினால் ஆரம்பிக்கப்பட்ட சமூக நீதிக்கான தேசிய இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசமைப்பு என்பது குறித்த நாட்டுக்குப் பொருத்தமானதாக இருக்கவேண்டுமே தவிர தனிநபர்களுக்குப் பொருத்தமானதாக இருக்கத் தேவையில்லை என்று சுட்டிக்காட்டியிருக்கும் அந்த இயக்கம், 'ஒரே நாடு - ஒரே சட்டம்' என்ற கொள்கையின் கீழ் நாட்டின் ஜனாதிபதி உள்ளடங்கலாக எவரும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவராக இருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

அரசமைப்பின் 20ஆவது திருத்த யோசனையின் உள்ளடக்கங்கள் தொடர்பில் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் மேலும் கூறியுள்ளதாவது:-

"அரசு அண்மையில் நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலின் ஊடாக நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொண்டிருக்கின்றது. நாட்டு மக்களால் வழங்கப்பட்ட ஆணைக்கு மதிப்பளிக்கின்றோம்.

அதேவேளை, நாடு என்ற வகையில் அனைத்து இலங்கையர்களும் பயனடைய வேண்டுமென்றால் எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளப் படவிருக்கின்ற மறுசீரமைப்புக்கள் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாக விரிவான கலந்தாராய்வுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

அரசமைப்பாக இருந்தாலும் அது அனைவருக்குமானதாக இருக்கவேண்டுமே தவிர, வெற்றி பெற்றவர்களுக்கானதாக மாத்திரம் இருக்கக்கூடாது.

தற்போது முன்மொழியப் பட்டிருக்கின்ற அரசமைப்பின் 20ஆவது திருத்தம் கடந்தகால வரலாற்றுக்கு எவ்வித முன்னுரிமையையும் வழங்காமல், ஜனாதிபதியைச் சுற்றியுள்ள அதிகாரங்களை மாத்திரம் மையப்படுத்தியதாக அமைந்திருக்கின்றது.

இந்த மறுசீரமைப்புக்கள் ஜனாதிபதியால் நன்நோக்கத்துடனேயே முன்மொழியப்பட்டிருக்கும் என்று நம்புவதற்கே நாங்கள் விரும்புகின்றோம். ஆனாலும், இவ்வாறான கட்டுமீறிய அதிகாரங்கள் தனியொரு நபரின் கைகளில் வழங்கப்படுவதென்பது மீளத்திருத்திக்கொள்ள முடியாத மிகமோசமான அழிவுகளுக்கு வழிவகுப்பதாக அமையும் என்பதை மனதிலிருத்திக்கொள்வது மிகவும் அவசியமாகும்.

அரசமைப்பின் 17ஆவது மற்றும் 19 ஆவது திருத்தங்கள் ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் மேலும் வலுப்படுத்துவதாக அமைந்திருந்தன என்பதுடன் அத்தகைய முற்போக்கான திருத்தங்கள் முன்மொழியப் பட்டதிலிருந்தே சமூக நீதிக்கான தேசிய இயக்கம் அவற்றுக்கு ஆதரவளித்தது. அந்தவகையில் எதிர்காலத்தில் அரசமைப்பில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் 19ஆவது திருத்தத்தின் மூலமான ஜனநாயக நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்துவதாக அமைய வேண்டுமே தவிர, அவற்றைப் பின்நோக்கித் திருப்புவதாக அமையக்கூடாது.

நாடொன்றின் நிர்வாகம் என்பது ஜனநாயகக் கட்டமைப்புக்களாலேயே முன்னெடுக்கப்பட வேண்டும். எனினும், முன்மொழியப்பட்டுள்ள 20ஆவது திருத்தச் சட்டமூலம் தனியொரு நபரின் கைகளில் அதிகாரங்களை வழங்குவதில் கவனத்தைக் குவித்திருக்கின்றது.

இந்த மறுசீரமைப்புக்கள் நாட்டில் சர்வாதிகார ஆட்சியொன்றுக்கு வழிவகுக்கக்கூடியவையாக இருப்பதுடன் இது பொருளாதார, சமூக, கலாசார ரீதியில் நாட்டை சிதைவடையச்செய்யும்.

'ஒரே நாடு - ஒரே சட்டம்' என்ற கொள்கையின் கீழ் எந்தவொரு நபரும் சட்டத்திலிருந்து விலக்களிக்கப்பட முடியாது. இது தற்போதைய மற்றும் எதிர்காலத்தில் வரவிருக்கின்ற அனைத்து ஜனாதிபதிகளுக்கும் பொருந்தும். ஆனால், கவலைக்குரிய விதமாக 20 ஆவது திருத்தம் ஜனாதிபதியைச் சட்டத்துக்கு அப்பாற்பட்டவராக நிறுத்துகின்றது.

நாடாளுமன்றமும் நீதித்துறையும் ஜனாதிபதிக்கு அடிபணியும் நிலையேற்படுகின்றது. அதுமாத்திரமன்றி 20ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதி நாட்டின் அரசமைப்புக்கும் அப்பால் நிறுத்தப்படுகின்றார்.

அரசமைப்பென்பது குறித்த நாடுக்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டுமே தவிர, தனிநபர்களுக்குப் பொருத்தமானதாக இருக்கத் தேவையில்லை. ஆனால், முன்மொழியப்பட்டிருக்கும் திருத்தத்தின் ஊடாக முக்கிய பதவிகளுக்கான நியமனங்களைச் செய்வதற்கும் நீக்குவதற்கும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கின்ற அதிகாரங்கள் ஜனநாயகத்தையும் இயல்பு வாழ்க்கை ஒன்றை வாழ்வதற்கான மக்களின் சுதந்திரத்தையும் பாதிப்பதாக அமையும்.

மேலும் 20ஆவது திருத்தத்தின் கீழ் சுயாதீனமான கட்டமைப்புக்கள் எவையும் இல்லை. அரசமைப்புப் பேரவையை நாடாளுமன்றப் பேரவையின் மூலம் பதிலீடு செய்வதற்கான முன்மொழிவொன்று செய்யப்பட்டிருக்கிறது. எனவே, எதிர்காலத்தில் சுயாதீனமானதும் நேர்மையானதுமான தேர்தல்களையோ அல்லது பொலிஸ் சேவையையோ எதிர்பார்க்க முடியாது. அத்தோடு நீதிபதிகளையும் நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்களையும் நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

நீதித்துறையில் சுயாதீனத்துவம் இவ்வாறான வெட்கக்கேடான முறையில் பறிக்கப்படக்கூடாது. இரட்டைக்குடியுரிமையைக் கொண்டவர்கள் நாட்டின் நிர்வாகத்தில் உயர்பதவிகளை வகிப்பதற்கு அனுமதிக்கப்படக்கூடாது. கணக்காய்வு ஆணைக்குழுவின் நீக்கம் ஊழல், மோசடிகள் மேலும் அதிகரிப்பதற்கே வழிவகுக்கும்.

எனவே, தற்போது முன்மொழியப்பட்டிருக்கின்ற 20ஆவது திருத்தம் ஒரு வெள்ளைக் காகிதமாகக் கருதப்பட்டு நாட்டு மக்கள் மத்தியில் மிகவும் விரிவானதொரு கலந்தாராய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்" - என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE