Thursday 25th of April 2024 10:24:54 AM GMT

LANGUAGE - TAMIL
.
கொலைக் குற்றச்சாட்டு: இளம் மல்யுத்த வீரருக்கு ஈரானில் மரண தண்டனை!

கொலைக் குற்றச்சாட்டு: இளம் மல்யுத்த வீரருக்கு ஈரானில் மரண தண்டனை!


கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இளம் மல்யுத்த வீரர் ஒருவரை விடுவிக்க வேண்டுமென்ற சர்வதேச நாடுகளின் கோரிக்கையை நிராகரித்த ஈரான் அவருக்குநேற்று மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.

2018இல் அரசாங்கத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது பாதுகாப்புக் காவலர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 27 வயதான நவீத் அஃப்காரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க வைப்பதற்காக தான் சித்திரவதை செய்யப்பட்டதாக அவர் கூறி வந்தார்.

இந்த நிலையில், அஃப்காரிக்கு நிறைவேற்றப்பட்டுள்ள மரண தண்டனையை நீதியின் பரிதாப நிலை என்று சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னஸ்டி இன்டர்நஷனல் குறிப்பிட்டுள்ளது.

மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பு அஃப்காரி பேசிய பதிவு ஒன்று கசிந்துள்ளது. அதில், "ஒருவேளை நான் தூக்கிலிடப்பட்டால், நான் ஓர் அப்பாவி என்பதையும், இதற்கு எதிராக முழு பலத்தோடு போராடிய போதிலும், தூக்கிலிடப்பட்டேன் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமென விரும்புகிறேன் என்று அஃப்காரி கூறியுள்ளார்.

ஈரானின் தெற்குப்பகுதியிலுள்ள நகரமான ஷிராஸில் அஃப்காரி நேற்று தூக்கிலிடப்பட்டார் என்று அந்த நாட்டின் அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தூக்கிலிடப்படுவதற்கு முன்னர் தனது குடும்பத்தினரை சந்திக்க ஈரானின் சட்டம் அனுமதியளித்துள்ள போதிலும், அஃப்காரிக்கு அந்த உரிமை மறுக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

"நவீத் அஃப்காரி தனது குடும்பத்தினரை கடைசியாக ஒருமுறை சந்திக்க கூட அனுமதிக்காமல் இவ்வளவு அவசரமாக அவரை தூக்கிலிட்டது ஏன்?" என்று அவரது வழக்கறிஞரான ஹசன் யூனெசி ட்விட்டரில் கேள்வியெழுப்பியுள்ளார்.

முன்னதாக, உலகெங்கிலும் 85,000 விளையாட்டு வீரர்களை உறுப்பினர்களாக கொண்ட தொழிற்சங்கம் உட்பட, நவீத் அஃப்காரிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்த பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தன.

போராட்டங்களில் பங்கேற்றதற்காக அவர் அநியாயமாக குறிவைக்கப்பட்டார் என்றும் மரண தண்டனையை நிறைவேற்றினால் ஈரான் உலக விளையாட்டிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றும் உலக வீரர்கள் சங்கம் கருத்துத் தெரிவித்திருந்தது.

"அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் மட்டுமே மல்யுத்த வீரர் பங்கேற்றார்" என்று கூறிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இவருக்கு கருணை கோரியிருந்தார்.

இதே வழக்கில் அஃப்காரியின் சகோதரர்களான வாஹித் மற்றும் ஹபீப் ஆகியோருக்கு முறையே 54 மற்றும் 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஈரானை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈரானில் தேசிய அளவிலான எண்ணற்ற மல்யுத்த போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றவரான அஃப்காரி, அந்த நாடு முழுவதும் மிகவும் நன்றாக அறியப்பட்ட விளையாட்டு வீரராக விளங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE