Monday 17th of May 2021 01:41:16 PM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கையின் இனப்பிரச்சினையும் இடதுசாரிகளின் அரசியலும்! - நா.யோகேந்திரநாதன்!

இலங்கையின் இனப்பிரச்சினையும் இடதுசாரிகளின் அரசியலும்! - நா.யோகேந்திரநாதன்!


இலங்கையின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவரும் சீனசார்பு கொம்யூனிஸ்ட் கட்சியினதும் இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தினதும் பொதுச்செயலாளராக அவற்றைத் தலைமை தாங்கி வழிநடத்தியவருமான அமரர் நா.சண்முனதாசன் அவர்களின் நூறாவது ஆண்டு நினைவை ஒட்டி அவர் தொடர்பான நினைவுகூரல்கள் பல தரப்பினராலும் முன்னெடுக்கப்பட்டன.

இலங்கையின் இடதுசாரி அரசியலில் பிலிப் குணவர்த்தன, எஸ்.ஏ.விக்கிரமசிங்க, பீட்டர் கெனமன், என்.எம்.பெரேரா தொடக்கம் டி.யூ.குணசேகர, திஸ்;ஸவிதாரண, வாசுதேவ நாணயக்கார, விக்கிரம கருணரட்ன வரை பல தலைவர்கள் இடதுசாரி அரசியலில் காலத்துக்குக் காலம் செல்வாக்குச் செலுத்தி வந்த போதிலும் சண்முகதாசன் வகித்த பாத்திரம் புரட்சிகரமானதும் தனித்துவமானதும் ஆகும்.

ஆயுதப் போராட்டத்தின் மூலம் முதலாளித்துவ அரசு இயந்திரத்தை உடைத்து நொருக்குவதன் மூலமே உழைக்கும் மக்களின் அரசியல் அதிகாரத்தை நிறுவ முடியுமென்ற மார்க்சிச லெனிசிச சித்தாந்தத்தில் எவ்வித தளர்ச்சியுமின்றி தனது கட்சியைத் தலைமை தாங்கி வழி நடத்தினார் என்பது அவரின் சிறப்பம்சமாகும். அது மட்டுமின்றி தேசிய இனப்பிரச்சினைக்கு சுயநிர்ணய உரிமையுடன் கூடிய பிரதேச சுயாட்சியே தீர்வாக அமையமுடியும் என்ற கொம்யூனிஸ்ட் கட்சியின் வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற தேசிய மாநாட்டின் தீர்மானத்தில் அவர் எவ்வித தளர்ச்சியும் இன்றி மிக உறுதியுடன் நின்றார்.

ஏனைய பல இடதுசாரி தலைவர்கள் தேசிய பிரச்சினை தொடர்பாக குழப்பமான நிலைப்பாட்டை எடுத்தபோதிலும் திரு.நா.சண்முகதாசன் அவர்கள் இறப்பதற்கு சில காலம் முன்பு 1990 ஆம் ஆண்டில் கூட தேசிய இன விடுதலைப் போராட்டம் என்பது பாட்டாளி வர்க்கப் புரட்சியின் ஒரு பகுதி என்பதை தெளிவாக தனது கட்டுரைகள் மூலம் வலியுறுத்தியிருந்தார்.

காலங்காலமாக தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வந்த நிலையில் தமிழ் மக்கள் நடத்திய சாத்வீக போராட்டங்களுக்கு முதலில் சிங்களக் காடையர் மூலமும், பின்பு ஆயுதப்படையினர் மூலமும், வன்முறைகளாலும், இரத்தக்களரியாலும் பதில் கொடுக்கப்பட்டது. அது மட்டுமின்றி சிங்களத் தலைமைகள் தமிழர் தரப்புடன் செய்து கொண்ட சகல ஒப்பந்தங்களும் கிழித்தெறியப்பட்டன. அந்த நிலையில் ஆயுதப் போராட்டத்தின் மூலம் சுயாட்சியை அடைவதே ஒரே வழியென்ற முடிவுக்கு தமிழ் இளைஞர்கள் வரவேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டனர். அதுவே தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டமாக வெடித்தது.

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கும் ஆயுதப் போராட்டமே ஒரே மார்க்கமாக கொள்கையளவில் ஏற்றுக் கொண்டு அதில் கடைசிவரையும் உறுதியாக நின்ற சண்முகதாசன் அவர்களின் நூறாண்டு நினைவு காலப்பகுதியில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பான இடதுசாரிகளின் கடந்த கால வரலாற்றை ஒரு முறை மீட்டிப்பார்ப்பது பொருத்தமானது என நினைக்கிறோம்.

இலங்கையில் இடதுசாரிகளின் வரலாற்றில் 1953 ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுச் சாதனையை நிலைநாட்டிய ஆண்டாகும். அப்போது ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் 25 சதமாக இருந்த ஒரு கொத்து அரிசியின் விலையை 70 சதமாக உயர்த்தியும் ஏனைய அத்தியாவசியப் பாவனைப் பொருட்களின் விலைகளை உயர்த்தியும் போக்குவரத்துக் கட்டணங்கள், தபால் கட்டணங்கள் என்பவற்றை அதிகரித்தும் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவை நிறுத்தியும் பல மக்கள் விரோத நடவடிக்கையை மேற்கொண்டது.

இவை காரணமாக மக்கள் மத்தியில் ஒரு பெருங் கொந்தளிப்பு ஏற்பட்ட நிலையில் திரு.நா.சண்முகதாசன் தலைமையிலான இலங்கைத் தொழிற்சங்க சம்மேளனம், கொம்யூனிஸ்ட் கட்சி, சமஜமாஜக் கட்சி, புரட்சிகர சமஜமாஜக் கட்சி ஆகியவற்றின் தொழிற் சங்கங்களை ஒன்றினைத்து ஒரு மாபெரும் ஹர்த்தால் போராட்டத்தை நடத்த ஏற்பாடுகளை மேற்கொண்டது. ஆரம்பத்தில் இந்திய தூதரகத்தின் அழுத்தம் காரணமாக அப்போராட்டத்தில் இணைந்து கொள்ள மறுத்த மலையகத் தொழிலாளர் காங்கிரசும், எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவும் போராட்டம் ஆரம்பித்தபோது அதில் இணைந்து கொண்டனர்.

ஹர்த்தால் ஆரம்பித்த போது போக்குவரத்து முற்றாகவே ஸ்தம்பித்தது. கடைகள் நிறுவனங்கள் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. கவர்னர் மாளிகை, பிரதமரின் அலரி மாளிகை தொலைத் தொடர்பு மத்திய நிலையம் என்பன மக்களால் சுத்திவளைக்கப்பட்டன.

எனவே கொழும்பில் மந்திரிசபைக் கூட்டத்தை நடத்த அஞ்சி அதை துறைமுகத்தில் தரித்திருந்த பிரித்தானிய போர்க்கப்பலில் நடத்தினர். அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டு கண்டவுடன் சுடும் 'மார்சல் லோ' அமுலுக்குவந்தது. இதில் 21 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த நிலையில் பீட்ட கெனமன், என்.எம். பெரேரா ஆகியொர் விடுத்த ஒரு கூட்டறிக்கை மூலம் ஹர்த்தால் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

எனினும் கூட்டப்பட்ட அரிசி விலையுட்பட பாவனைப் பொருட்களின் விலைகள், பொக்குவரத்துக் கட்டணங்கள் என்பன குறைக்கப்பட்டன. அப்போதைய பிரதமர் டட்லி சேனாநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்தார். நிதி அமைச்சராக இருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தன, சேர். ஒலிவர் குணவர்த்தனவால் பதவி விலக்கப்பட்டார்.

1953 ஹர்த்தால் ஒரு உழைக்கும் மக்களின் போராட்டமாக எழுச்சி பெற்றதுடன், இடதுசாரிகள் ஆட்சியில் இல்லாத போதும் இலங்கை அரசியலைத் தீர்மானிக்கும் அளவுக்கு வலிமையான சக்தி கொண்டவர்கள் என்பதை வெளிப்படுத்தியது. இதில் அமரர் நா.சண்முகதாசன் அவர்கள் ஒரு புரட்சிகர தொழிற்சங்கவாதியாக வகித்த பாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

1956ம் ஆண்டு எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க 24 மணிநேரத்தில் சிங்களத்தை இலங்கையில் ஆட்சி மொழியாக்காப் போவதாக சூளுரைத்து ஆட்சியைக் கைப்பற்றினார். தனிச்சிங்களச் சட்டம் முன்வைக்கப்பட்ட நிலையில் அதை எதிர்த்து தந்தை செல்வா தலைமையில் கோல்பேஸ் திடலில் சத்தியாக்கிரகப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. அப்போராட்டத்தின் மீது ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னணியில் சிங்களக் காடையர்கள் நடத்திய தாக்குதலில் பலர் படுகாயமடைந்தனர். தந்தை தூக்கிக் கடலில் வீசப்பட்டார். அமிர்தலிங்கம் இரத்தம் வடிந்த நிலையில் நாடாளுமன்றத்தில் சென்று தனது கண்டன உரையை நிகழ்த்தினார்.

தனிச்சிங்களச் சட்டத்தை எதிர்த்து சமஜமாஜக் கட்சியைச் சேர்ந்த என்.எம்.பெரேரா, கொல்வின் ஆர்.டி சில்வா, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பீட்டர் கெனமன், எஸ்.ஏ. விக்கிரமசிங்க, பொன் கந்தையா ஆகியோர் உட்பட இடது சாரிகள் கண்டன உரைகளை நிகழ்த்தினர். அப்படி உரையாற்றியவர்களில் ஒருவரான புலத்சிங்கள தொகுதியிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட எட்மன் சமரக்கொடியை 'வெத்திலைத் தமிழன்' என்று இனவாதிகள் கிண்டல் செய்தனர். பொன் கந்தையா ஆற்றிய உரை தேசிய இனப்பிரச்சினை தொடர்பான ஆழமான தத்துவார்த்த விளக்கங்களைக் கொண்டதாக பலராலும் பாராட்டப்பட்டது. எல்லாவற்றையும் விட தனிச்சிங்களத்தை எதிர்த்து இடது சாரிகளால் கொழும்பு புதியநகர மண்டபத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் என்.எம்.பெரேரா உரையாற்றிக் கொண்டிருக்கும்போது அவர் மீது இனந்தெரியாத ஒருவரால் கைக்குண்டு வீசப்பட்டது. அதில் ஒரு துறைமுகத் தொழிலாளி தனது ஒரு கையை இழந்தார்.

எப்படியிருந்த போதிலும் தனிச்சிங்களச் சட்டத்துக்கு எதிராக இடது சாரிகள் தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டபோதிலும் அதை மக்கள் மயப்படுத்தத் தவறிவிட்டனர். வேலை நிறுத்தங்கள் ஆர்ப்பாட்டப் பேரணிகள் என சிங்கள தமிழ் முஸ்லீம் தொழிலாளர்களைக் கொண்ட தொழிற்சங்கங்களால் இவ் எதிர்ப்பு நடவடிக்கையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றிருந்தால் அதிகூடிய பலன்களைப் பெற்றுக் கொண்டிருக்க முடியும். அந்நாட்களில் அதற்கான வலிமை இடதுசாரிகளிடம் இருந்தது. அதுமட்டுமின்றி தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு எதிரான மனப்பான்மையை சிங்கள இனவாத பிற்போக்கு சக்திகள் உருவாக்குவதையும் முறியடித்திருக்கமுடியும்.

எனினும் தமிழரசுக்கட்சியினர் நடத்திய மாநாடு, பாதயாத்திரிகைகள், பேரணிகள் காரணமாகவும் இடது சாரிகள் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் மேற்கொண்ட எதிர்ப்பு காரணமாகவும் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா தனது நிலையிலிருந்து இறங்கி வந்து, பண்டா-செல்வா ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டிய ஒரு நிலை ஏற்படுத்தப்பட்டது என்பதை எவறும் மறுத்துவிட முடியாது.

இந்நிலையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையில் பண்டா-செல்வா ஒப்பந்தத்துக்கு எதிராக நாடு பிளவுபடப் போகிறது எனக் கூறப்பட்டு ஐக்கிய தேசியக் கட்சியினரால் கண்டி யாத்திரை நடத்தப்பட்டது. அது பின்னாட்களில் தீவிர இடதுசாரியாக விளங்கிய எஸ்.டி.பண்டாரநாயக்கா அவர்களால் ஹம்பஹா இம்புலுகொட சந்தியில் வைத்து அடித்து விரட்டப்பட்டது. இந்த நிலையில் வடபகுதிக்கு சிங்கள் ஸ்ரீ பஸ்கள் அனுப்பப்பட்டன. இப்பிரச்சினையை பண்டாரநாயக்கவுடன் பேசித்தீர்க்கத்தக்க வாய்ப்புகள் இருந்தும் தமிழ் அரசுக்கட்சியினர் ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தினர். அதேவேளையில் தென்னிலங்கையில் தமிழ் எழுத்துகளுக்கு தார் பூசியழிக்கும் இயக்கம் ஜே.ஆரின் வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் தமிழ் மக்களுக்கு எதிரான இனவன்முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டன.

இப்படியான நிலையில் பிரதமரின் இல்லத்துக்கு முன்பு பிக்குகள் மேற்கொண்ட சத்தியாக்கிரகம் காரணமாகவும், இனவன்முறைகள் காரணமாகவும் பிரதமரால் பண்டா-செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது. இதில் ஒரு புறம் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் இன்னொருபுறம் தமிழ் அரசுக்கட்சியினரும் விரும்பியோ விரும்பாமலோ இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வை கொண்டிருந்த பண்டா-செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்படுவதற்கு காரணமாய் இருந்தனர் என்பதை மறுத்துவிடமுடியாது.

1960ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் தமிழ் அரசுக்கட்சியால் வடக்கில் அரச நிர்வாகத்தை முடக்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகம் ஒரு வெகுஜனப் போராட்டமாக எழுச்சி பெற்றது. தமிழுக்கும் சிங்களத்துக்கும் சம அந்தஸ்த்து என்ற தெளிவற்ற கொள்கைகளை கொண்டிருந்த தமிழ் காங்கிரஸ், சமஜமாஜக் கட்சி என்பன சத்தியாக்கிரக போராட்டத்தில் பங்குகொண்டு ஆதரவளித்தனர். ஆனால் தமிழ் அரசுக்கட்சியின் சமஷ்டிக் கோரிக்கை கொம்யூனிஸ்ட் கட்சியின் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய பிரதேச சுயாட்சி என்ற கொள்கையுடன் ஒத்ததாக இருந்த போதிலும் கொம்யூனிஸ்டுகள் சத்தியாக்கிரகத்துக்கு ஆதரவு வழங்கவில்லை.

அதற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி அரசு பிரித்தானிய கடற்படைத்தளத்தை திருமலையிலிருந்து வெளியேற்றிய போது தமிழ் அரசுக்கட்சி அதை எதிர்த்து பிரிட்டிஷ் படைகளை வெளியேற வேண்டாமென்று கோரி பிரிட்டிஷ் மகாராணிக்கு தந்தியனுப்பியது. அந்நிய எண்ணெய் நிறுவனங்கள் தேசிய மயமாக்கப்பட்டபோது அதற்கும் தமிழ் அரசுக்கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து கடுமையான எதிர்ப்பை வெளியிட்டது. இவை தமிழ் அரசுக்கட்சியின் தலைமை பின்பற்றிய ஏகாதிபத்திய சார்பு, பிற்போக்கு கொள்கைகள் காரணமாக மேற்கொள்ளப்பட்டவையாகும். எனவே இலங்கையின் இறைமைக்கு எதிரான தமிழ் அரசுக்கட்சியின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு உடன்பாடான போக்கை இடது சாரிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதேவேளையில் ரஷ்ய, சீன தத்துவார்த்த மோதல் காரணமாக கொம்யூனிஸ்ட் கட்சி எஸ்.ஏ.விக்கிரசிங்க, பீட்டர் கெனமன் தலைமையிலான மாஸ்கோ சார்பு அணியாகவும் சண்முகதாசன் தலைமையிலான பீக்கிங் சார்பு அணியாகவும் பிளவுபட்டது.

1960 இற்கு பிற்பட்ட காலப்பகுதியில் மாஸ்கோ சார்பு கொம்யூனிஸ்டுகளும், என்.எம்.பெரேரா தலைமையிலான சமஜமாஜிகளும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியுடன் தேர்தலில் போட்டி தவிர்ப்பு ஒப்பந்தம் என ஆரம்பித்து பின்பு ஐக்கிய முன்னணியாக ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் கூட்டிணைந்து பின்பு மெல்ல மெல்ல ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்குள் தம்மைக் கரைத்துக் கொண்டுவிட்டனர். தற்சமயம் இக்கட்சிகளின் பெயர்ப்பலகைகளும் தனிநபர்களும் மட்டுமே எஞ்சியுள்ளனர்.

1966 காலப்பகுதியில் சண்முகதாசன் தலைமையிலான பீக்கிங் சார்பு கொம்யூனிஸ்ட் கட்சியினர் தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தை நடத்தியதன்மூலம் வடக்கில் தமக்கு ஸ்திரமான நிலையை உறுதிப்படுத்தினர். ஆரம்பத்தில் இது ஒரு வெகுஜனப் போராட்டமாக எழுச்சி பெற்றிருந்தபோதிலும் அதன் வடபகுதித் தலைவர்களின் குழப்பமான பார்;வை காரணமாக அது வெறும் சாதிச்சண்டையாகக் குறுக்கப்பட்டுவிட்டது. இன்னொருபுறம் 1971இல் இடம்பெற்ற ஜே.வி.பி கிளர்ச்சியையடுத்து அக்கட்சியும் பல துண்டுகளாகச் சிதறிப்போனது.

1971 இல் தரப்படுத்தலுக்கு எதிரான தமிழ் மாணவர் பேரவை நடத்திய போராட்டங்களுடன் பீக்கிங் சார்பு கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்த ஒரு அணியினரும் இணைந்து செயற்பட்டனர். ஆனால் மாணவர் பேரவை பல்வேறு ஆயுதப் போராட்ட அமைப்புகளாக பரிணாமம் பெற்று தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் வகையில் சிறுசிறு குழுக்களாக செயற்பட்ட காலத்தில் அந்த கொம்யூனிஸ்டுகள் அவர்களிடமிருந்து ஒதுங்கிக் கொண்டனர். ஆயுதப் போராட்டத்தின் மூலம் பாட்டாளி வர்க்க அரசியல் அதிகாரத்தை நிறுவுவதை கொள்கையெனக் கொண்ட கம்யூனிஸ்டுகள் தமிழ் குழுக்கள் ஆயுதப் போராட்டத்தில் இறங்கிய போது பின்வாங்கி விட்டனர். இவர்களின் தலைமறைவு வாழ்க்கை, சிறை செல்லல், ஆயுதப் போராட்டத்தின் துன்ப துயரங்கள் என்பனவற்றை ஏற்கத் தயாரற்ற கனவான் அரசியல் அவர்களை இக்குழுக்களிலிருந்து ஒதுங்க வைத்துவிட்டன.

1983 ஆம் ஆண்டையடுத்த காலப்பகுதியில் பல துண்டுகளாகச் சிதறுண்டுபோயிருந்த வாய்ச்சொல் வீர கம்யூனிஸ்டுகளின் ஒரு பகுதினர் ஈ.பி.ஆர்.எல்.எவ் உடனும் இன்னும் சிலர் புளட்டின் அரசியல் ஆலோசகராகவும் இன்னுமொரு அணியினர் என்.எல்.எவ்.ரி எனும் அமைப்பின் தத்துவார்த்த வழிகாட்டிகளாகவும் செயற்பட்டனர். இப்படியாகத் திசை தெரியாமல் சிதறுண்டவர்களில் பலர் தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம், விடுதலைப் புலிகளின் தலைமையில் முனைப்புப் பெற்று விடுதலைப் பிரதேசங்களை ஏற்படுத்தி முப்படைகளை உருவாக்கி தமிழீழ விடுதலையை நோக்கி முன்சென்ற வேளையில் காணாமல் போய்விட்டனர்.

எனினும் விடுதலைப் போராட்டம் முனைப்புப் பெற்ற வேளையிலும் பின்பு மௌனிக்கப்பட்ட பின்பும் இன்னும் தங்களைக் கம்யூனிஸ்டுகள் என்று கூறிக்கொள்ளும் சிலர் பொதுவுடைமைத் தத்துவங்களைத் திரிபுபடுத்தி தவறான வியாக்கியானங்களைக் கொடுத்து விடுதலைப் பேராட்டத்தை கொழும்பில் இருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் இழிவுபடுத்திவருகின்றனர். விடுதலைப் போராளிகளை பாசிஸ்டுகள் என வர்ணிக்கப்டுமளவுக்கு ஒரு சில போலிப் பொதுவுடைமைவாதிகள், ஒடுக்குமுறையாளர்களை திருப்திப்படுத்தும் வகையில் செயற்பட்டுவருகின்றனர்.

எப்படியிருந்த போதிலும் இடது சாரிகள் சிங்கள தமிழ் முஸ்லீம் மக்கள் மத்தியில் வலிமைபெற்றிருந்த காலத்தில் தேசிய இனப்பிரச்சினையை கையில் எடுத்து பாட்டாளி வர்க்கத் தலைமையில் முன்னெடுத்துச் சென்றிருக்க வேண்டும். அதன்மூலம் தமிழ் மக்களின் நியாயபூர்வமான உரிமைகளை ஏற்றுக்கொள்ளும் சிங்கள முற்போக்கு சக்திகளை ஒன்றிணைத்திருக்கமுடியும் என்பதுடன் சாதாரண சிங்கள மக்களையும் அதற்கு ஆதரவாக அணிதிரட்டியிருக்க முடியும்.

அந்த விடயத்தில் இடதுசாரிகள் சரியான திசையில் பயணிக்காத காரணத்தால் சாதாரண சிங்கள் மக்கள் இனவாதிகளால் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் வகையில் வழிநடத்தும் நிலையை ஏற்படுத்தியுள்ளது என்பதை உண்மையான பொதுவுடைமைவாதிகளும், தமிழ்த் தேசியவாதிகளும் எவ்வித குழப்பத்துக்கும் இடமின்றி ஏற்றுக்கொள்வார்கள் என்பது திண்ணம்.

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்.

15.09.2020


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கைபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE