Saturday 20th of April 2024 09:16:59 AM GMT

LANGUAGE - TAMIL
-
எல்லையில் சீனா தொடர்ந்து படைகளை  குவித்து வருவதாக இந்தியா  தெரிவிப்பு!

எல்லையில் சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருவதாக இந்தியா தெரிவிப்பு!


இந்திய – சீன எல்லையில் கிழக்கு லடாக் பகுதியில் சீனா பெருமளவில் படைகளை குவித்து வருவதாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

கிழக்கு லடாக்கில் கோக்ரா, கோங்கா லா, பாங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்குக்கரை பகுதிகளில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லை பதற்றம் தொடர்வதாகவும் அவர் கூறினார்.

இந்திய நாடாளுமன்றத்தில் நேற்று இந்தியா – சீனா இடையே தொடரும் பதற்ற நிலை குறித்து விளக்கமளிக்கும்போதே ராஜ்நாத் சிங் இவ்வாறு குறிப்பிட்டார்.

கிழக்கு லடாக்கை கடந்த எல்லை பகுதியில் சீனாவின் படைகள் குவிப்பு செயல்பாடு, 1993 மற்றும் 1996ஆம் ஆண்டில் இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களுக்கு முரணாக உள்ளதாக நாடாளுமன்ற மக்களவையில் விளக்கிய ராஜ்நாத் சிங், கடந்த ஜூன் மாதம் சீன படையினர் தாக்குதலில் ஈடுபட்டபோது, இந்திய படையினர் உரிய வகையில் பதிலடி கொடுத்ததாகவும், இந்திய பாதுகாப்பு நலன்கள் முழுமையாக பாதுகாக்கப்பட்டதாகவும் கூறினார்.

மேலும், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பதற்றம் தொடருவதால் இரு தரப்பு இராணுவ கட்டளை அதிகாரிகள் நிலையிலான கூட்டம், கடந்த ஜூன் 6ஆம் திகதி நடந்தபோது எல்லைக் கோட்டுப் பகுதியில் பரஸ்பரம் முன்னேறாமல் பின்வாங்கிக் கொண்டு கண்காணிப்பை தொடர ஒப்புக் கொள்ளப்பட்டதாக ராஜ்நாத் சிங் விளக்கினார்.

ஆனால், அதன் பிறகும் ஜூன் 15-ஆம் திகதி கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் வன்முறை மோதலைத் தூண்டிய சீன படையினருடனான மோதலில் இந்திய வீரர்கள் உயிர்த்தியாகம் செய்ய நேர்ந்தது என்றும் அந்த சம்பவத்தில் இந்திய எல்லையை பாதுகாக்க முற்பட்ட அதே சமயம், சீன தரப்புக்கு பலத்த சேதம் ஏற்பட்டது என்றும் ராஜ்நாத் சிங் விவரித்தார்.

தற்போதைய எல்லை பதற்ற சூழ்நிலைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண இந்தியா விரும்புகிறது. இது தொடர்பாக ராஜதந்திர மற்றும் இராணுவ நிலையிலான தொடர்புகளை சீனாவுடன் வைத்துள்ளோம்.

சீனாவுடனான பேச்சுக்களின்போது மூன்று முக்கிய அம்சங்கள் வலியுறுத்தப்பட்டன.

முதலாவதாக எல்லைக் கட்டுப்பாடுகளை மதிப்பது, இரண்டாவதாக, இரு தரப்பும் தற்போது நிலைகொண்டிருக்கும் பகுதியை மீறி முன்னேறிச் செல்லக்கூடாது, மூன்றாவதாக இரு தரப்பிலும் எல்லை கண்காணிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து உடன்பாடுகளையும் மீறாமல் அவற்றை மதித்துச் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது என்று ராஜ்நாத் சிங் விளக்கினார்.

பேச்சுவார்த்தை முயற்சிகள் தொடர்ந்த வேளையில், கடந்த ஆகஸ்ட் 29 முதல் 30ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் சீன இராணுவத்தினர், ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு பாங்கோங் ஏரியின் தென் பகுதியில் அவர்கள் நிலைகொண்டிருந்த பகுதியை மீறி முன்னேறி வர முயன்றார்கள் என்று ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டினார்.

ஒருபுறம் இந்திய எல்லையை பாதுகாக்க உறுதிபூண்டிருந்த வீரர்கள், மறுபுறம் அண்டை நாடுகளுடன் நட்புறவை வளர்க்கவும் பரஸ்பரம் நுட்பமான இந்த விவகாரத்தில் அமைதி பேணப்பட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொண்டு செயல்பட்டதாக ராஜ்நாத் சிங் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 4ஆம் திகதி மொஸ்கோவுக்கு சென்றபோது அங்கு வந்திருந்த சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் எல்லை விவகாரத்தில் சீன வீரர்களின் நடவடிக்கை, இரு தரப்பு பரஸ்பர நல்லுறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெளிவுபடுத்தியதாக ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து சீனாவும் இந்தியாவும் பரஸ்பரம் எல்லையில் அமைதியை நிலைநாட்ட ஒப்புக்கொண்டதாகவும், சிக்கலான எல்லை விவகாரத்தில் அமைதி வழியில் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமே தீர்வு எட்டப்பட வேண்டும் என்றும் சீனாவிடம் இந்தியா வலியுறுத்தியதாக ராஜ்நாத் சிங் கூறினார்.

இந்த விவகாரத்தில் இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் சவாலான இந்த கட்டத்தை களத்தில் நமது படையினர் வெற்றிகரமாக எதிர்கொள்வார்கள் என்பதால் அவர்களை நினைத்து நாடாளுமன்றம் பெருமிதப்பட வேண்டும் என்றும் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டார்.

எல்லை பதற்றம் தொடர்பாக மேற்கொண்டு தகவல் வெளியிடுவது களப்பணியில் உள்ளவர்களின் கண்காணிப்பு நடவடிக்கைகளை சிக்கலாக்கும் என்று கூறி மேற்கொண்டு தகவல்களை வெளியிட தன்னால் இயலவில்லை என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

எல்லை விவகாரத்தில் இந்தியாவின் இறையாண்மை மற்றும் எல்லையை பாதுகாக்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளில், யாரும் சந்தேகம் கொள்ளக்கூடாது என்றும் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டார்.


Category: உலகம், புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE