Friday 19th of April 2024 09:58:15 AM GMT

LANGUAGE - TAMIL
.
20 குறித்து மிச்செல் பச்லெட் எழுப்பிய கவலைகள் தேவையற்றவை என இலங்கை நிரகரிப்பு!

20 குறித்து மிச்செல் பச்லெட் எழுப்பிய கவலைகள் தேவையற்றவை என இலங்கை நிரகரிப்பு!


இலங்கையில் 20-ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட வரைபால் நாட்டின் சுயாதீனத்துக்கு ஆபத்து ஏற்படும் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் எழுப்பியுள்ள கவலைகள் அவசரப்பட்டு வெளியிடப்பட்ட தேவையற்ற கருத்து என இலங்கை பதிலளித்துள்ளது.

இலங்கையின் 20-ஆவது அரசியலமைப்புத் திருத்த வரைவு பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு அது குறித்து விவாதிக்கப்படும். அனைவரும் இது குறித்து விவாதிக்கச் சந்தர்ப்பம் அளிக்கப்படும். ஜனநாயக வழிமுறைகளைப் பின்பற்றியே அரசியலமைப்பு திருத்தம் குறித்த அனைத்துச் செயற்பாடுகளும் இடம்பெறும் என ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் பதில் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி தயானி மெண்டிஸ் பேரவையில் தெரிவித்துள்ளார்.

முன்மொழியப்பட்ட 20-ஆவது அரசியலமைப்புத் திருத்த வரைபு குறித்த ஆணையாளரின் கருத்துக்கள் தேவையற்றவை. அத்துடன் அவை அனுமானத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டவை என மெண்டிஸ் கூறினார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை 45 ஆவது அமர்வின் ஆரம்ப நாளான கடந்த திங்கட்கிழமை பேசிய ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் , இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள 20-ஆவது அரசியலமைப்புத் திருத்த வரைவு இலங்கையின் சுயாதீனத்தக்கு ஆபத்தானது எனக் கூறினார். இலங்கை மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் சுயாதீனத்தை இந்தத் திருத்தம் கேள்விக்குள்ளாக்கும் எனவும் அவா் கருத்து வெளியிட்டார்.

மேலும் யுத்தத்துடன் தொடர்புபடாத மக்களைக் படுகொலை செய்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு இலங்கை நீதிமன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ சார்ஜணுக்கு பொது மன்னிப்பளித்து ஜனாதிபதி விடுவித்தமை குறித்தும் மிச்செல் பச்லெட் கவலை வெளியிட்டார்.

போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முன்னாள் இராணுவ அதிகாரிகளை சிவில் அமைப்புக்களின் தலைமைப் பதவிகளின் நியமித்துள்ளதன் மூலம் அத்தகைய குற்றங்கள் தொடர்பான விசாரணைகளின்போது பொலிஸ் மற்றும் நீதித்துறைக்குள் அவா்கள் தலையீடு செய்யக்கூடும் எனவும் அவா் கரிசனை வெளியிட்டார்.

ஆனால் இதனை மறுத்துள்ள இலங்கை, அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் அரசிலமைப்பு விதிகளின் அடிப்படையிலேயே முன்னாள் இராணுவ சார்ஜண்டிற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

மூத்த இராணுவ அதிகாரிகள் நிறுவனங்களின் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்படுவதற்கு எதிராக பொய்யான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இவற்றை அரசாங்கம் நிராகரிக்கிறது எனவும் இலங்கை பிரதிநிதி குறிப்பிட்டார்.

இராணுவத்தினர் மீது முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை இலங்கை தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்த குற்றச்சாட்டுகளை ஆராய்ந்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (LLRC) மற்றும் பரணகம ஆணைக்குழு போன்ற விசாரணை அமைப்புக்கள், இறுதிக் கட்டப் போரில் எந்தவொரு மூத்த இராணுவ அதிகாரிகளும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இல்லை எனத் தெரிவித்துள்ளதைக் குறிப்பிட விரும்புறோம் எனவும் மெண்டிஸ் கூறினார்.

எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் இலங்கையில் இராணுவ அதிகாரிகள் போர்க்குற்றங்கள் அல்லது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாகத் தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் தன்னிச்சையான குற்றச்சாட்டுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இது இயற்கை நீதிக் கோட்பாடுகளை மீறுவதாக அமைவதாகவே இலங்கை கருதுகிறது என்றும் அவர் கூறினார்.

கண்காணிப்பு மற்றும் மிரட்டல் தொடர்ப்பில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை இலங்கை ஏற்கனவே பகிரங்கமாக மறுத்துள்ளது.

இலங்கையில் கருத்துச் சுதந்திரத்தைப் பேணவும் சிவில் சமூக அமைப்புக்களின் பங்கைப் பாதுகாப்பதற்கும் அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது.

ஊடகவியலாளர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோருக்கு எதிரான புகார்களின் அடிப்படையிலேயே அவர்கள் விசாரிக்கப்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன எனவும் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் பதில் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி தயானி மெண்டிஸ் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதுடன், சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்திலும் அரசாங்கத்தின் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது.

எந்தவொரு குடிமகனும் எந்தவித அச்சமும் இல்லாமல் சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.

மேற்கண்ட கொள்கை கட்டமைப்பிற்கு இணங்க, ஐ.நா.வின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு இலங்கை உறுதிபூண்டுள்ளது.

இலங்கைக் குடிமக்கள் அனைவரது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் அமைதி, நல்லிணக்கத்தை மேம்படுத்தவும் இலங்கை உறுதியுடன் உள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோயைக் சீரான வகையில், பல துறை சார்ந்தோரின் பங்களிப்புடன் இலங்கை வெற்றிகரமாகக் கையாண்டு வருகிறது. தொற்று நோய்க்கு மத்தியிலும் மக்களின் ஜனாநாயக உரிமையை நிலைநாட்டும் வகையில் நாட்டில் தோ்தல்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன என்றும் மெண்டிஸ் கூறினார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீா்மானத்தக்கு வழங்கிய இணை அனுசரணையிலிருந்து இலங்கை விலகியபோதும், நாட்டின் அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள் செயற்பட்டு நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை அடைவதற்கு உறுதியுடன் உள்ளது எனவும் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் பதில் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி தயானி மெண்டிஸ் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE