Saturday 20th of April 2024 05:40:10 AM GMT

LANGUAGE - TAMIL
.
தியாக தீபம் திலீபன் நினைவு கூரலுக்குத் தடையுத்தரவு: சாணக்கியனிடமும் கையளிப்பு!

தியாக தீபம் திலீபன் நினைவு கூரலுக்குத் தடையுத்தரவு: சாணக்கியனிடமும் கையளிப்பு!


தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடையுத்தரவு விதிக்கப்பட்டிருந்த நிலையில் அத்தடையுத்தரவு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிடம் நேரில் வழங்கப்பட்டுள்ளது.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடைவிதிக்கப்படுவதாக கூறி தடையுத்தரவு ஒன்று களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றத்தின் ஊடாக வெல்லாவெளி பொலிஸாரினால் தனக்கு வழங்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

நீதிமன்றத்தினை தவறான முறையில் வழிநடாத்தி இந்த தடையுத்தரவினை பொலிஸார் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

நேற்று இரவு வெல்லவெளி பொலிஸாரினால் நீதிமன்ற தடையுத்தரவு ஒன்று அவசரமாக என்னிடம் கையளிக்கப்பட்டது. தியாக தீபம் திலீபனின் நினைவுதினம் தொடர்பாக அந்த தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

உண்மையில் மிகவும் அவசரமான முறையில் எந்தவிதமான விபரங்களையும் அறியாமல் ஒரு நிகழ்வினை தடைசெய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஏதோ ஒரு காரணத்தை கூறி தடைசெய்ய வேண்டும் என்ற நோக்குடன் நீதிமன்றத்திற்கு கூட தவறான தகவல்களை வழங்கி நீதிமன்றத்தையே பிழையான வழியில் வழிநடத்திய பொலிஸ்பிரிவு இந்த தடையுத்தரவை எடுத்திருக்கின்றது.

இது தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற கட்சியின் பொறுப்பாளர் என்று நகுலன் என்பவரின் பெயரும் இடப்பட்டு இந்த தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான நபர் அப்பகுதியில் இல்லை. அதேபோன்று அந்த கட்சிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நீதிமன்றத்தினை தவறான பாதையில் வழிநடத்தி வெல்லாவெளி பொலிஸாரினால் இந்த தடையுத்தரவு பெறப்பட்டு என்னிடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளவர்களின் வரிசையில் முதல் இடத்தில் எனது பெயர் உள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. என்னை இலக்குவைத்தே நீதிமன்ற தடையுத்தரவினை பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.

சர்வதேச சமூகத்தின் மத்தியில் இந்த விடயங்களை நான் கொண்டுசெல்லலாம், அடக்குமுறைகளுக்கு எதிராக கூடுதலாக குரல்கொடுப்பதன் காரணமாக நீதிமன்ற உத்தரவுகள் எனக்கு வழங்கப்படுவதாக கருதலாம்.

தியாக தீபம் திலீபன் அவர்கள் இந்திய படையினருக்கு எதிராக அகிம்சை ரீதியாக போராடியவர். அவரை நினைவு கூரமுடியாத நிலையேற்பட்டுள்ளது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொலிஸார் விடுதலைப்புலிகள் என்ற பெயரை பயன்படுத்தி தடையுத்தரவுகளை பெறுவது என்பது வேடிக்கையான விடயமாகவுள்ளது.

அண்மையில் நடைபெற்ற வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்திலும் விடுதலைப்புலிகளை மீள கட்டியெழுப்பும் செயற்பாடு என்று தெரிவித்து தடையுத்தரவு அந்த போராட்டத்திற்கு பெறப்பட்டிருந்தது. 60வயது 70வயது தாய்மார்கள் செய்த போராட்டத்தினை விடுதலைப் புலிகளுடன் தொடர்புபடுத்தியது ஒரு வேடிக்கையான விடயம்.

அந்த வகையில் தியாக தீபம் திலீபன் அவர்களை விடுதலைப் புலிகளுடன் தொடர்புபடுத்தி அந்த காரணத்தினால்தான் இந்த நிகழ்வினை தடை செய்கின்றார்கள் என்று சொன்னால் இந்த நாட்டில் தமிழர்கள் மீதான ஜனநாயகம் குறைந்து செல்கின்றது என்பதை நாங்கள் உணரவேண்டும்.

இவ்வாறான விடயம் தொடர்பில் இந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுபவர்கள் இதுவரையில் எந்தவிதமான குரலும் வழங்கவில்லை. தங்களின் மக்கள் இந்த நிகழ்வினை நடாத்துவதை விரும்பவில்லையென அவர்கள் கருதுகின்றார்களா என்ற கேள்வியும் எழுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் பெயரளவில் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் கூட தமிழர் தரப்பில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களே களத்தில் இருப்பதை காணடிமுடியும்.

மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கூடிய பொறுப்பினை நாங்கள் கொண்டிருகின்றோம். வருங்காலத்தில் இவ்வாறான நிகழ்வுகள் அனுஸ்டிப்பதற்கு தடைகள் வருமானால் இந்த அரசாங்கத்தின் எதிரான செய்தியை விரைவில் தமிழ் மக்கள் தெரிவிப்பார்கள்.

தியாக தீபம் திலீபன் அவர்கள் அகிம்சை ரீதியாக போராடி உயிர் நீர்த்தவர் என்ற அடிப்படையில் அவரை நினைவுகூரும் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமை இந்த தடையுத்தரவினால் மீறப்படுவதன் காரணமாக இந்த தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ள ஏனையவர்களும் என்னுடன் தொடர்புகொள்ளுமிடத்து உயர்நீதிமன்றத்தில் இந்த தடையுத்தரவுக்கு எதிராக செல்லமுடியும்.

இன்று பொலிஸ் உயர் அதிகாரியொருவர் தன்னை அலுவலகத்திற்கு வந்து சந்திக்குமாறு அழைத்திருந்தார். அவர் பொலிஸ் உயர் அதிகாரியாக இருந்தாலும் கூட அவர் என்னை சந்திக்க விரும்பினால் அவர் வந்து என்னை என்காரியாலயத்தில் சந்திக்கலாம். நீதிமன்றினால் அழைப்பு விடுத்தால் நாங்கள் செல்லமுடியும்.ஆனால் பொலிஸ் அதிகாரி அழைக்கும்போது செல்லவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நீதிமன்ற தடையுத்தரவு கிடைக்கப்பெற்றவர்கள் தடையுத்தரவுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கவிரும்பினால் என்னை தொடர்புகொள்ளுங்கள்.

நாங்கள் எமது ஜனநாயகம் மீறப்படுவது தொடர்பில் 72வருடமாக பாராளுமன்றத்தில் கதைத்துதான் வருகின்றோம் ஆனால் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. பாராளுமன்றத்தில் உள்ளவர்களுக்கு தெரியப்படுத்தும் முறையாகமட்டுமே இது இருக்கும்.

இன்று தெற்கு அரசியல் எஜமானார்களுக்கு கீழ் வேலைசெய்யும் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் இவ்வாறான நிகழ்வுகளை அனுஸ்டிப்பதில் தமிழ் மக்களுக்கு விரும்பம் இல்லை, தமிழ் தேசிய கூட்டமைப்பினரே இவ்வாறானவற்றை செய்கின்றனர் என்கின்ற கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். தமிழ் மக்கள் மத்தியில் இவ்வாறான அனுஸ்டிப்புகளை செய்வதில் உள்ள ஆர்வத்தினையே நாங்கள் சொல்லி வருகின்றோம். இது தமிழ் மக்களின் உணர்வான விடயம் அவர்களின் உரிமை தொடர்பான விடயம் என்பது மக்கள் மத்தியில் இருந்து எழுவேண்டும் என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE