Tuesday 19th of March 2024 04:25:40 AM GMT

LANGUAGE - TAMIL
-
காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் இணைப்பாளர் விசாரணைக்கு அழைப்பு!

காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் இணைப்பாளர் விசாரணைக்கு அழைப்பு!


முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க இணைப்பாளர் மரியசுரேஷ் ஈஸ்வரிக்குப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியாக கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதியிலிருந்து தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், குறித்த போராட்டத்தை வழிநடத்திச் செல்கின்ற முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் இணைப்பாளர் மரியசுரேஷ் ஈஸ்வரி அண்மையில் யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியபோது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே குறித்த செய்தியை சேகரித்த ஊடகவியலாளர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு அழைத்து விசாரணை செய்யப்பட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக குறித்த ஊடக சந்திப்பை நடத்திய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் மரியசுரேஷ் ஈஸ்வரியைக் கொழும்பு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் மரியசுரேஷ் ஈஸ்வரியைத் தொலைபேசி மூலமாகத் தொடர்புகொண்டு கொழும்புக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தபோது அவர் தன்னுடைய குடும்ப நிலைமை காரணமாக கொழும்பு வர முடியாது என மறுப்புத் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு சம்மதம் தெரிவித்ததன் அடிப்படையில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் ஊடாக அவருக்கு விசாரணைக்கு அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் நாளை (17) பிற்பகல் 2 மணிக்கு முல்லைத்தீவு தலைமைப் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்குச் சமூகமளிக்குமாறு அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டங்கள் மற்றும் அதனோடு சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் பல்வேறு தரப்பினரிடமும் இவ்வாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவு உள்ளிட்ட அரச புலனாய்வாளர்களின் தொடர்ச்சியான அச்சுறுத்தல் செயற்பாடுகள் மற்றும் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் இப்போது இந்த விசாரணை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE