Friday 19th of April 2024 12:30:40 AM GMT

LANGUAGE - TAMIL
-
கொத்துக்-கொத்தாக ஆயிரக்கணக்கில்  செத்து விழும் பறவைகளால் பரபரப்பு!

கொத்துக்-கொத்தாக ஆயிரக்கணக்கில் செத்து விழும் பறவைகளால் பரபரப்பு!


அமெரிக்காவின் - நியூ மெக்ஸிகோவில் பல வகை இனப் பறவைகள் சமீபத்திய வாரங்களில் கொத்துக்-கொத்தாக பல ஆயிரக்கணக்கில் செத்து விழும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

பறவைகள் செத்து விழும் சம்பவங்கள் குறித்து நியூ மெக்ஸிகோ மாகாண பல்கலைக்கழகத்தின் மீன், வனவிலங்கு மற்றும் சூழலியல் பாதுகாப்பு துறையின் ஆராய்ச்சியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இது மிகவும் கொடூரமானது என நியூ மெக்ஸிகோ மாகாண பல்கலைக்கழகத்தின் உயிரியலாளர் மார்தா டெஸ்மண்ட் தெரிவித்துள்ளார்.

இது மிகப் பெரிய துயரம். நூறாயிரக்கணக்கான மற்றும் மில்லியன் கணக்கான பறவைகள் இறந்துள்ளன என அவர் கூறியுள்ளார்.

நியூ மெக்ஸிகோவின் தென்-மத்திய பகுதியில் உள்ள துலரோசா பேசின் பகுதிகளில் கடந்த மாதம் இறந்து விழுந்து சுமார் 300 பறவைகளை நாங்கள் அவதானித்தோம். இவை அனைத்தும் பருவ காலத்தில் புலம்பெயர்ந்து வரும் பறவைகள் என டெஸ்மண்ட் கூறினார்.

இறந்து விழும் பறவைகள் குறித்து ஆராய்வதற்காக நியூ மெக்ஸிகோ மாகாண பல்கலைக்கழகத்தின் சில மாணவர்களை கடந்த திங்களன்று அனுப்பிவைத்தோம். சில மணி நேரங்களில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த உயிரிழந்தை பறவைகளை அவா்கள் சேகரித்தனர் எனவும் அவா் குறிப்பிட்டார்.

இறந்த பறவைகளில் குருவிகள், கருப்பட்டிகள் (blackbirds), கதிர்க்குருவிகள் (warblers), நீலப் பறவைகள் (bluebirds) உள்ளிட்ட பல வகையினங்கள் அடங்கியுள்ளன.

என் வாழ்க்கையில் இவ்வளவு கொடூரமான எதையும் நான் பார்த்ததில்லை என டெஸ்மண்ட் கூறினார்.

இந்த வகைப் பறவை இனங்கள் ஏற்கனவே சிக்கலில் உள்ளன. அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில் இவ்வாறான இனங்கள் ஆயிரக்கணக்கில் செத்து விழுவது பெரும் துயரம் எனவும் அவா் கருத்து வெளியிட்டார்.

பறவைகள் இறப்பதற்கு முன்பு விசித்திரமாகச் செயல்படுவதை அவதானித்ததாக நியூ மெக்ஸிகோ மாகாண பல்கலைக்கழக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக மரங்கள் அல்லது புதர்களுக்கிடையே காணப்படும் இவ்வகையான பறவைகள் இறப்பதற்கு முன் தரையில் விழுந்து துடித்துள்ளன. அவை பெரும்பாலும் அதிர்ச்சிக்குள்ளாகியவையாகத் தோன்றின. பல பறவைகள் நிலத்தில் விழுந்து வாகனங்கள் மோதி இறந்துள்ளன எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

கொலராடோ, அரிசோனா மற்றும் டெக்சாஸ் பகுதிகளிலும் இதேபோன்று பறவைகள் செத்து விழுந்துள்ளதை அப்பகுதி மக்கள் அவதானித்துள்ளனர் என உயிரியலாளர் டெஸ்மாண்ட் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பறவைகள் ஆயிரக்கணக்கில் செத்து விழுவதற்கான காரணம் என்ன? என இதுவரை உறுதியாகத் தெரியவில்லை என டெஸ்மாண்ட் மற்றும் அவரது குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மாநிலத்தின் மிகவும் வறண்ட காலநிலை அல்லது கலிபோர்னியா, ஓரிகான் மற்றும் வொஷிங்டனில் பற்றியெரியும் காட்டுத்தீ பறவைகளின் இறப்புக்குக் காரணமாக இருக்கலாம் என அவா்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இது குறித்து தொடர்ந்து ஆராய்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.

பறவைகளின் இறப்புக்குக் காலநிலை மாற்றமும் ஒரு காரணியாக இருக்கலாம் என டெஸ்மண்ட் தெரிவித்துள்ளார்.

1970 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் நாங்கள் மூன்று பில்லியன் பறவைகளை இழந்துள்ளோம். மேலும் பூச்சி இனங்களும் மிகப்பெரிய அளவில் அழிந்துவிட்டன எனவும் அவர் கூறினார்.

இந்நிலையில் பறவைகள் ஆயிரக்கணக்கில் செத்து விழுவதை முக்கிய பிரச்சினையாகக் கருதி அது குறித்து ஆராய்ந்து வருவதாக ஒரேகான் மீன் மற்றும் வனவிலங்குத் துறை தெரிவித்துள்ளது.

பறவைகளின் இறப்புக்குக் காட்டுத் தீ, அதனால் ஏற்பட்டுள்ள புகை மண்டலம் காரணமா? என்பது குறித்துச் சரியாகத் தெரியவில்லை. இது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என ஒரேகான் மீன் மற்றும் வனவிலங்கு துறையின் உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வருடந்தோரும் குளிர்காலத்தில் தென்மேற்று அமெரிக்கப் பகுதிகளை நோக்கிப் பல ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் படையெடுப்பது வழங்கம். ஆனால் இம்முறை பெரும்பாலும் பறவைகளின் வருகை இருக்காது எனவும் உயிரியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Category: உலகம், புதிது
Tags: அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE