;

Thursday 29th of October 2020 04:11:00 AM GMT

LANGUAGE - TAMIL
.
எங்கே தொடங்கியது இன மோதல் - 21 (வரலாற்றுத் தொடர்)

எங்கே தொடங்கியது இன மோதல் - 21 (வரலாற்றுத் தொடர்)


'இளைஞர் பேரவையின் எழுச்சியும் தேர்தல் பகிஷ்கரிப்பின் வெற்றியும்'

'இனரீதியான பிரதிநிதித்துவமுறை ஒழிக்கப்படுதலுடன் இணைந்ததான சர்வசன வாக்குரிமை ஆலோசனைகளால் சிங்களவர்களுக்கு 50 வீதத்துக்கு கூடிய ஆசனங்கள் கிடைக்குமென்பதால் அதுவே சிறுபான்மையினங்களின் அழிவுக்குக் காரணமாகிவிடுமாதலால் முதலில் அதையெதிர்த்த அகில இலங்கை தமிழ் லீக் பின்னர் அத்திட்டத்துக்குச் சாதகமாகத் தன் திட்டத்தை மாற்றியது. ஆனால் டொனமூர் திட்டம் சுய ஆட்சியைவிட மிகவும் குறைந்ததாகையால் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் வடமாகாணத்திலிடம்பெற்ற தேர்தலைப் பகிஷ்கரிப்பதில் பெரும் வெற்றி கண்டது.'

இது பிரபல வரலாற்று ஆய்வாளரும் இலங்கை விவகாரங்களின் ஆழ்ந்த பரீட்சயம் கொண்டவருமான ஜேன் ரஸ்ஸல்ஸ் அவர்கள் தனது, 'டொனமூர் அரசியலமைப்பில் இனவாத அரசியல்', என்ற நூலில் குறிப்பிட்ட விடயமாகும்.

1921ம் ஆண்டு இலங்கைத் தேசிய காங்கிரஸ் அமைப்பிலிருந்து சேர். பொன் அருணாசலம் வெளியேறி தமிழர் மகாசபையை ஆரம்பித்த போது தமிழர் தாயகக் கொட்பாட்டை முன்வைத்த நிலையில் 1924 இல் கண்டித் தேசிய சங்கம், இலங்கைத் தேசிய காங்கிரசை விட்டு வெளியேறியது. எவ்வாறு சேர். பொன்னம்பலம் அருணாசலம் அவர்களுக்கு மேல் மாகாணத்தில் ஓர் அங்கத்துவம் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுப் பின் அது சிங்களத் தலைமைகளால் மீறப்பட்டதோ அவ்வாறே கண்டியைச் சேர்ந்த ஏழு தேர்தல் தொகுதிகளிலும் கண்டியர்களே போட்டியிட இடம் வழங்கப்படும் என வழங்கப்பட்ட வாக்குறுதியும் மீறப்பட்டது.

ஏழு தொகுதிகளிலில் நான்கு தொகுதிகளிலிலும் கரையோரச் சிங்களவரே தேசிய காங்கிரசில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றனர். எனவே சேர். பொன் அருணாசலம் போன்றே கண்டி தேசிய சங்கத்தினரும் ஏமாற்றப்பட்ட நிலையில் அவர்களும் இலங்கைத் தேசிய காங்கிரஸை விட்டு வெளியேறினர். அதுமட்டுமின்றி டொனமூர் ஆணைக்குழுவின் முன் அரசியல் சீர்திருத்தத்தில் கண்டியர்களுக்கு சமஷ்டி முறை மூலம் அவர்களின் தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.

தமிழர் தரப்பு, கண்டிச் சிங்களவர் தரப்பு ஆகிய இரு தரப்பினரும் வெளியேறிவிட்ட நிலையில் இலங்கைத் தேசிய காங்கிரஸ் கரையோரச் சிங்களவர்களை மட்டும் கொண்ட ஒரு அமைப்பாக மாற்றம் பெற்றது. அதன் காரணமாக டொனமூர் ஆணைக்குழுவின் முன்பும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் இலங்கைத் தேசிய காங்கிரஸ் முழு இலங்கையர்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் தகைமை இல்லாமல் போகக்கூடிய ஓர் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் இந்தியாவுக்கு யாத்திரை சென்ற சேர். பொன் அருணாசலம் 09.01.1924 இல் எதிர்பாராதவிதமாக அங்கேயே மரணமடைந்தார். அந்த நிலையில் அவரால் தமிழர் மகா சபையில் முன்வைக்கப்பட்ட தமிழர் தாயகக் கொட்பாடு வலுவிழக்க ஆரம்பித்தது.

இன்னொருபுறம் இலங்கைத் தேசிய காங்கிரஸ் தலைவர்கள் தாம் முழு இலங்கையர்களுக்குமான தலைமை என்ற தோற்றப்பாட்டைத் தக்க வைக்கும் முகமாக மீண்டும் தமிழர் மகா சபையை தம்முடன் இணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டனர். அதேவேளையில் அவர்கள் கண்டி தேசிய சங்கத்தைத் தம்முடன் இணைக்க 09.12.1924 இல் மேற்கொண்ட பேச்சுகள் தோல்வியில் முடிந்தன.

அதேவேளையில் யாழ்ப்பாணத்திலுள்ள சேர். வைத்திலிங்கம் துரைசாமி அவர்களின் இல்லத்தில் இலங்கைத் தேசிய காங்கிரஸிற்கும், தமிழர் மகாஜன சபைக்குமிடையே 28.06.1925 இல் ஒரு வட்டமேசை மகாநாடு இடம்பெற்றது. அம்மாநாடு மூலம் மகேந்திர ஒப்பந்தம் என அழைக்கப்படும் ஒரு உடன்பாடு இரு தரப்பினருக்கமிடையே எட்டப்பட்டது.

அதன்படி மூன்று நிபந்தனைகள் இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இலங்கைத் தேசிய காங்கிரஸ் சார்பில் கொரோவாவும், தமிழர் மகாஜன சார்பில் சேர் வைத்திலிங்கம் துரைசாமியும் கையொப்பமிட்டனர். முதலாவது வடக்கு கிழக்கு ஒரே பிரதேசமாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமெனவும் இரண்டாவது வடக்கு கிழக்கு பிரதேசத்திலும் மேல்மாகாணத்திலும் தமிழர்களுக்கு மூன்றில் இரண்டு பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டுமெனவும் மூன்றாவது தேசிய காங்கிரஸ் முன்வைக்கும் யோசனைகளைப் பரிசீலனை செய்ய ஒரு கூட்டுக்குழு அமைக்க வேண்டும் எனவும் மூன்று தீர்மானங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தன.

அவ்வொப்பந்தம் 1925 இல் இலங்கைத் தேசிய காங்கிரஸ் மகாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுமென வாக்குறுதி வழங்கப்பட்ட போதிலும் அது 1926ஆம் ஆண்டு மகாநாட்டிற்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் 1926 இல் இடம்பெற்ற மகாநாட்டில் அது நிகழ்ச்சிநிரலில் கூட சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

தமிழர்கள் இரண்டாவது தடவையாக சிங்களத் தலைமைகளால் ஏமாற்றப்பட்ட நிலையில் தமிழர்களின் அரசியல் இலங்கைத் தேசிய அரசியலிலிருந்து விலக ஆரம்பித்தது.

இலங்கையின் பிரதேசவாரியான தேர்தல் முறைக்கும் சர்வஜன வாக்குரிமை வழங்கப்படலுக்கும் தமிழர் மகாசபையின் ஆதரவைத் திரட்ட சிங்களத் தலைவர்களால் மேற்கொள்ளப்பட்ட மகேந்திரா ஒப்பந்தம் ஒரு ஏமாற்று நடவடிக்கையாக முன்வைக்கப்பட்ட நிலையில் அதைப் புரிந்து கொண்ட தமிழர் தரப்பு மீண்டும் இனவாரியன பிரதிநிதித்துவத்தை டொனமூர் ஆணைக்குழுவின் முன் முன்வைத்தது. ஆனாலும் அவர்களால் அதில் வெற்றிபெற முடியவில்லை.

இந்த நிலையில்தான் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ், டொனமூர் அரசியல் சீர்திருத்தம் சுயாட்சிக்கான அடிப்படைகளைக் கொண்டிராhத நிலையில் அதை எதிர்த்து 1931ம் ஆண்டு இடம்பெறவிருந்த தேர்தலை பகிஷ்கரிக்க முடிவெடுத்தது.

அதேவேளையில் கண்டித் தேசிய சங்கம் 1926 இல் சமஷ்டிக் கோரிக்கையை டொனமூர் ஆணைக்குழுவில் முன்வைத்தது. அதாவது இலங்கை வடக்கு கிழக்கு, மத்திய மலைநாடு, கரையோரப் பிரதேசங்கள் மூன்றும் தனித்தனி அலகுகளாக ஒரு கூட்டாட்சி அமைப்பாக ஒன்றிணைக்கப்படவேண்டுமென்ற கோரிக்கை அவர்களால் முன்வைக்கப்பட்டது.

எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா, அரசியல் வரலாற்று புலமையாளரும் சிறந்த கல்விமானுமான ஜேம்ஸ். டி. இரத்தினம் ஆகியோரைத் தலைமையாகக் கொண்ட முற்போக்கு தேசிய முன்னணி சமஷ்டிக் கோரிக்கைக்கு தமது ஆதரவைப் பிரகடனஞ் செய்தது. பண்டார நாயக்கா அவர்கள் யாழ்ப்பாணத்தில் நடத்திய உரையின் மூலமும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த, 'மோர்ணிங் ஸ்டார்' பத்திரிகையில் எழுதிய தொடர் கட்டுரை மூலமும் தமிழ் மக்கள் மத்தியில் சமஷ்டிக் கோரிக்கைக்கான ஆதரவைத் திரட்ட பெரும் முயற்சிகளை மேற்கொண்டார்.

ஆனால் அவர் எதிர்பார்த்த ஆதரவு கிட்டவில்லை. அவரின் தோழரும் முற்போக்குத் தேசிய முன்னணி ஸ்தாபகர்களில் ஒருவருமான ஜேம்ஸ். டி. இரத்தினமும் சமஷ்டிக் கோரிக்கையை கடுமையாக எதிர்த்தார். தமிழர் மகாஜன சபையினரும் மகேந்திர ஒப்பந்தம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில் சமஷ்டிக் கோரிக்கைக்கு ஆதரவு தர மறுத்துவிட்டனர். டொனமூர் சீர்திருத்தத்தை எதிர்த்த யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசும் சமஷ்டிக் கோரிக்கையைப் பொருட்படுத்தவேவில்லை.

ஒட்டுமொத்தமாக தமிழர் தரப்பின் எதிர்ப்புக் காரணமாக இலங்கையின் அரசியலமைப்பில் சமஷ்டி முறை உத்தியோகபூர்வமாக இடம்பெற வைக்கக்கூடிய வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. அது தமிழ்த் தேசிய காங்கிரஸின் சிங்கள மேலாதிக்கத்தை பின்னாட்களில் நிலைநிறுத்துவதற்கு கதவுகளைத் திறந்துவிட்டது என்று சொன்னால் மிகையாகாது.

இது தமிழத் தலைவர்கள் மத்தியில் நிலவிய தாயகக் கோட்பாடு பற்றிய தெளிவான பார்வை இல்லாமையும் மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் சிந்தனையும் பிரித்தானிய சார்பு நிலப்பிரபுத்துவ மேல் மட்ட வர்க்க சிந்தனையுமே காரணமாய் அமைந்தன என்று கூற முடியும். அதுவே ஒரு பெரும் வரலாற்றுத் தவறாக விளைந்து விட்டது.

இப்படியான நிலையில் தான் முழு இலங்கைக்குமான சுதந்திரத்தைக் கோரி யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் தனது போராட்டங்களை முன்னெடுத்தது. பிரித்தானிய தேசியக் கொடியான யூனியன் ஜாக் கொடியை எரித்தல், ஆங்கில அதிகாரியின் வருகையைப் பகிஷ்கரித்தல் போன்ற தீவிரம் கலந்த அகிம்சை நடவடிக்கைகள் மூலமும் சமூதாய சீர்திருத்த நடவடிக்கையின் மூலம் அது தமிழ் மக்களின் பேராதரவைப் பெற்றிருந்தது.

யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் முழு இலங்கைக்குமான சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்த போதிலும் சிங்களத் தலைமைகளின் ஆதரவோ பங்களிப்போ கிடைக்கவில்லை. அவர்கள் டொனமூர் அரசியல் சீர்திருத்தத்தின் கிழேயே ஒரு தனிச்சிங்கள அரசாங்கத்தை உருவாக்குவதை இலக்காக வைத்துத் திட்மிட்ட வகையில் தங்கள் நடவடிக்கைகளை தந்திரமாக முன்னெடுத்தனர்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இந்தியாவின் பெரும்பான்மையினரான இந்துத்துவவாதிகளே தலைமை தாங்கினர். அவர்களுடன் சிறுபான்மையினரான முஸ்லீம்களும் சமாந்திர அளவில் இணைந்து போரிட்ட போதும் சுதந்திரம் அடையும் நாட்கள் நெருங்கிய போது முஸ்லீம்களுக்கான தனிநாட்டை வலியுறுத்த ஆரம்பித்தனர். அவர்கள் இந்துத்துவ வாதிகளின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்ளமறுத்து பாகிஸ்தான் என்ற முஸ்லீம் தனி அரசை உருவாக்குவதில் வெற்றி பெற்று தங்கள் தனித்துவத்தைப் பாதுகாத்துக் கொண்டனர். அவர்கள் ஜின்னா அவர்களின் தலைமையில் முஸ்லீம் லீக் என்ற அமைப்பை உருவாக்கி மகாத்மா காந்தியின் தலைமையிலான இந்திய காங்கிரசுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டிருந்தனர்.

ஆனால் இலங்கையிலோ சுதந்திரப் போராட்டம் சிறுபான்மையினராகிய தமிழர்களைக் கொண்ட யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசாலேயே முன்னெடுக்கப்பட்டது. அப்போராட்டத்தின் ஒரு பகுதியாக யாழ் குடாநாட்டு மக்கள் மேற்கொண்ட முழுமையான தேர்தல் பகிஷ்கரிப்பில் பெரும்பான்மையினராகிய சிங்களவர்கள் இணைந்து கொள்ள மறுத்துவிட்டனர். அதன் காரணமாக தேர்தல் பகிஷ்கரிப்பு இலங்கையின் சுதந்திரத்துக்கோ தமிழ் மக்களின் விமோசனத்துக்கோ எவ்விதத்திலும் பயன்படாதது மட்டுமின்றி தமிழர்களுக்கு எதிர்விளைவையே ஏற்படுத்தியது. அதாவது அரசாங்க சபையில் யாழ்குடா நாட்டுக்கான நான்கு பிரதிநிதித்துவங்களும் வெற்றிடமாகிவிட்டன.

அதே நேரத்தில் சமஷ்டிக் கோரிக்கையை வலியுறுத்திய கண்டியத் தலைமைகளுடன் இணைந்து இளைஞர் பேரவையும் அதை வலியுறுத்தியிருந்தால். இந்தியாவில் முஸ்லீம்கள் அடைந்ததைப் போன்ற ஆக்கபூர்வமான பலாபலன்களை எட்டியிருக்கமுடியும் அதுமட்டுமின்றி இலங்கையின் சுதந்திரப் போராட்டத்தில் கண்டிய சிங்களத் தலைமைகளை இணைத்திருக்க முடியும். ஆனால் தேர்தல் பகிஷ்கரிப்பின் காரணமாக ஏற்பட்;ட பாதகமான விளைவுகள் தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்த இளைஞர் பேரவையின் ஆதரவுத் தளத்தை வெகு வேகமாக சரிவடைய வைத்தன.

எனவே இளைஙர் தேசிய காங்கிரஸ் தலைவர்கள் வடமாகாண தேசிய சங்கம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கினர். இது இலங்கைத் தேசிய காங்கிரசுக்கு மாற்றீடான ஒரு முற்போக்கான தமிழ் அமைப்பு என்று கூறப்பட்டது. அவர்கள் பெரும் வீழ்ச்சியின் பின்பும் கூட தங்கள் அனுபவங்களிலிருந்து கற்றுக் கொள்ள மறுத்து முழு இலங்கைக்குமான அரசியலைப் பற்றிநின்றதால் காலப்போக்கில் வடமாகாண தேசிய சங்கமும் காணாமல் போய்விட்டது.

1931 தேர்தலின் போது முழுக் குடாநாடும் தேர்தலைப் பகிஷ்கரித்த போது அப்பபோதுதான் அரசியலில் இறங்கிய ஜீ.ஜீ. பொன்னம்பலம் மன்னாரில் போட்டியிட்டார். தனது 'சபைகுழப்பி', நடவடிக்கைக்கு அவர் மன்னார் குடாநாட்டுக்கு வெளியே இருப்பதாகக் காரணம் கற்பித்தார். ஆனாலும் அவர் அத்தேர்தலில் தோல்வியடைந்தார்.

எனினும் யாழ் குடாநாட்டை பிரதிநிதித்துவம் செய்யும் நான்கு ஆசனங்களும் வெற்றிடமாக இருந்த நிலையில் தமிழர் தரப்பினால் மீண்டும் உப தேர்தலை நடத்தும்படி கோரிக்கைகள் வைக்கப்பட்ட போதிலும் அவை ஆளுனரால் நிராகரிக்கப்பட்டன. இந்த நிலையில் மீண்டும் தேர்தலை நடத்தும்படிக் கோரி 14.07.1932 இலும் 13.03.1933 இலும் 4,500 இற்கு மேற்பட்ட கையெழுத்துகளுடன் அனுப்பப்பட்ட மகஜர்கள் காரணமாக 1934 இல் ஒரு தேர்தலை நடத்துவதற்கு ஆளுனரால் ஒப்புதல் வழங்கப்பட்டது.

பொன்னம்பலம் சகோரதரர்களின் சகாப்தத்தை அடுத்து உருவான யாழ் இளைஞர் காங்கிரசஸின் சகாப்தத்தில் மக்கள் மயப்பட்ட அரசியல் முன்னெடுக்கப்பட்டமையால் அது ஒரு பேரெழுச்சியாக வளர்ச்சிபெற்றது. எனினும் தெளிவற்ற அரசியல் போக்கு, கண்மூடித்தனமான இந்தியத் தேசிய காங்கிரஸைப் பின்பற்றியமை, தாங்கள் சிறுபான்மையினர் என்பதையும், குடாநாட்டுக்குள்ளேயே இயங்கும் ஒரு அமைப்பு என்பதையும் சரியாகக் கணக்கெடுக்காமல் முழுநாட்டுக்குமான சுதந்திரத்தை வலியுறுத்தியமை போன்ற தந்திரோபாயத் தவறுகள் காரணமாக இளைஞர் காங்கிரஸ் தன்னைத் தானே அழித்துக் கொண்டது.

அத்துடன் தமிழ் மக்கள் மத்தியில் பொன்னம்பலம் சகோதரர்களின் சகாப்தத்திற்கு அடுத்ததாக எழுச்சி பெற்ற யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசின் சகாப்தம் முடிவுக்கு வந்தது.

தொடரும்

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம், யாழ்ப்பாணம், மன்னார்பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE