Wednesday 24th of April 2024 07:57:45 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஈரான் மீதான ஐ.நா.வின் பொருளாதாரத் தடை  தொடரும் என அமெரிக்கா எதேச்சதிகார அறிவிப்பு!

ஈரான் மீதான ஐ.நா.வின் பொருளாதாரத் தடை தொடரும் என அமெரிக்கா எதேச்சதிகார அறிவிப்பு!


ஆயுதத் தடை உட்பட ஈரான் மீதான ஐநா.வின் அனைத்து பொருளாதார தடைகளும் தொடரும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

எனினும் ஐ.நா. பாதுகாப்பு பேரவை அதிகாரத்தையும் மீறி அமெரிக்கா இவ்வாறு அறிவித்துள்ளமை சட்ட விரோத நடவடிக்கை என பெரும்பாலான ஐ.நா. உறுப்பு நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

வெளிநாடுகளில் இருந்து ஆயுதம் கொள்முதல், அணு ஆயுதம் தயாரித்தல், அளவுக்கு அதிகமாக யூரேனியம் செறிவூட்டல் செய்வது, தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்வது, அவர்களை ஊக்குவிப்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஈரான் மீது ஐ.நா. பாதுகாப்புச் சபை 15 ஆண்டுகளுக்கு முன் பொருளாதார தடை விதித்தது.

பின்னர், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதை நிறுத்துவதாக ஈரான் அளித்த வாக்குறுதியை தொடர்ந்து, அதற்கு உதவும் வகையில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஈரானுடன் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகள் சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.

ஆனால், தீவிரவாதிகளுக்கு உதவுவது, இரகசியமாக அணு ஆயுதம் தயாரிப்பதில் ஈரான் தொடர்ந்து ஈடுபடுவதாக குற்றம்சாட்டிய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கடந்த 2018-ஆம் ஆண்டு சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

மேலும், அந்நாட்டின் மீது பொருளாதார மற்றும் ஆயுத தடைகளையும் அமெரிக்கா விதித்தது. இதற்கு, அணுசக்தி ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள மற்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், 2015-ஆம் ஆண்டுக்கு முன்பாக ஈரான் மீது விதிக்கப்பட்டு இருந்த அனைத்து பொருளாதார தடைகளையும் அந்நாட்டின் மீது மீண்டும் விதிக்கும்படி அமெரிக்கா வலியுறுத்தியது. இது தொடர்பாக, ஐநா பாதுகாப்பு பேரவையில் அது கொண்டு வந்த தீர்மானம் சில வாரங்களுக்கு முன் தோற்கடிக்கப்பட்டது.

அமெரிக்க ஆதரவு நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி போன்றவையும் இதை ஆதரிக்கவில்லை. இதனால், ஈரான் விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்புப் பேரவையில் அமெரிக்கா தனித்து விடப்பட்டது.

இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் ஈரான் மீது விதிக்கப்பட்டு இருந்த ஆயுத தடை, பொருளாதார தடை உள்ளிட்ட அனைத்து ஐ.நா. தடைகளும் அமுலுக்கு வருவதாக அமெரிக்கா நேற்று அதிரடியாக அறிவித்தது. ஐ.நா. பாதுகாப்பு பேரவை அதிகாரத்தையும் மீறி அமெரிக்கா வெளியிட்டுள்ள இந்த அறிவிப்புக் குறித்து உலகளவில் பெரும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

ஈரான் மீது அறிவிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையை அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா, இந்த தடையை மீறி ஈரானுக்கு உதவும் நாடுகள் மீதான நடவடிக்கையை பற்றி இன்று திங்கட்கிழமை அறிவிக்க இருப்பதாகக் கூறியுள்ளது.

அமெரிக்காவுக்கு இருக்கும் உரிமைகளின் அடிப்படையில், ஈரான் மீது ஐ.நா. பாதுகாப்பு பேரவையில் விதித்த அனைத்து பொருளாதார தடைகளும் மீண்டும் அமுல்படுத்தப்படுகிறது. இதனை செயல்படுத்த மறுக்கும் தனிநபர்கள், வர்த்தக நிறுவனங்கள், நாடுகள் மீது எந்த மாதிரியான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்பது குறித்த அறிக்கையை அமெரிக்க வெளியுறவு, நிதி அமைச்சகங்கள் தயாரித்து வருகின்றன. அந்த அறிக்கை திங்கட்கிழமை (இன்று) வெளியிடப்படும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ நேற்றுத் தெரிவித்தார்.

அமெரிக்காவின் தன்னிச்சையான இந்த அறிவிப்புக்கு பாதுகாப்பு பேரவையில் உறுப்புரிமை கொண்டுள்ள சீனா, ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜேர்மனி ஆகியவையும், இதர நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஈரானுடன் செய்திருந்த சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறி விட்ட நிலையில், உறுப்பினர் நாடுகளை நிர்பந்திக்கும் உரிமை அமெரிக்காவுக்கு கிடையாது. எனவே, ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தமும் அதனுடன் உள்ள பொருளாதார உறவுகளும் தொடரும் இந்நாடுகள் கூறியுள்ளன.

இதேவேளை, `அமெரிக்காவின் நடவடிக்கை முற்றிலும் தவறானது. ஈரானுக்குப் பொருளாதாரத் தடை விதிக்க அமெரிக்காவுக்கு எந்த விதமான சட்ட உரிமையும் இல்லை. எனவே, இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என இது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு பேரவைக்கு ஈரான் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE