Tuesday 19th of March 2024 01:14:32 AM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கையின் வெளியுறவில் இந்தியா முதலிடம் என்பது இராஜதந்திரமா? - கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்

இலங்கையின் வெளியுறவில் இந்தியா முதலிடம் என்பது இராஜதந்திரமா? - கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்


இலங்கை இந்திய உறவு பற்றிய உரையாடல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறதை காணமுடிகிறது. அதிலும் இலங்கையின் வெளியுறவுச் செயலாளர் ஜனநத் கொலம்பகே இந்தியா தொடர்பில் அதிக கரிசனையுடன் பொது வெளியில் உரையாடிவருகிறார். குறிப்பாக உள்ளார்ந்த ரீதியில் உரையாடி முடிபுகளை மேற்கொண்டு அமுல்படுத்த வேண்டிய வெளியுறவு தொடர்பிலான நகர்வுகளை வெளிப்படையாக அவர் உரையாடிவருகிறார். வெளியுறவின் மையமே இராஜதந்திரமேயாகும். அத்தகைய இராஜதந்திரம் அமைதியாக நகர்வுகளை மேற்கொள்வதனைக் குறிப்பதாகும். அதிலும் சீனாவின் நட்புக்குள்ளும் இந்தியாவின் அயலுக்குள்ளும் இருக்கும் இலங்கை வெளிப்பமைடயாக இல்லாத போக்கினை அல்லவா கடைப்பிடிக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் புதிய அரசாங்கம் பதவியேற்றது முதல் இலங்கையின் வெளியுறவில் இந்தியா முதன்மை என்றே கூறிவருகிறது.நடைமுறையில் இந்தியாவுக்கு முதன்மை கொடுக்காத போக்கினைப் பின்பற்றுவது போல் நகர்கிறது. குறிப்பாக 13 வது திருத்தச்சட்ட நீக்கம் பற்றிய உரையாடல், கொழும்பின் கிழக்கு முனையம் இந்தியாவுக்கு மறுக்கப்பட்டமை என்பன இந்திய எதிர்ப்புவாதத்தை காட்டுவதாக அமைகிறது. அதே நேரம் இந்தியாவுடனான உறவே முதன்மையானது என்ற வாதத்தை தொடர்ச்சியாக இலங்கைத் தரப்பு வெளிப்படுத்தி வருகிறது. இலங்கையின் வெளிப்படைத் தன்மை என்பது இந்தியாவைக் கையாளும் ஒருவகை இராஜதந்திரமா என்பது பிரதான கேள்வியாகும்.

அத்தகைய கேள்விக்கான பதிலினை இலங்கையின் வெளியுறவுச் செயலாளர் கொலபகேயின் வார்த்தையிலிருந்து விளங்கிக் கொள்வது பொருத்தமானதாக அமையும். அவர் South Asian Monitor எனும் ஊடகத்திற்கு வழங்கிய உரையாடலில் தெரிவித்த விடயங்களை அடிப்படையாகக் கொண்ட அதனை நோக்குவது அவசியமானது.

இந்தியாவின் மூலோபாய கரிசனைக்குரிய நாடாக இலங்கைவிளங்கக்கூடாது என்பதை நாங்கள் கண்டிப்பாக எண்ணத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் ஜனாதிபதி மீண்டும் மீண்டும் இதனை வலியுறுத்துகிறார். இலங்கையின் அமைவிடத்தின் முக்கியத்துவம் காரணமாக இந்து சமத்திரத்திலும் ஏனைய பகுதிகளிலும் உள்ள முக்கிய நாடுகளான அமெரிக்கா, சீனா, ஜப்பான், ரஷ்சியா, இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா என்பன இலங்கையின் அமைவிடம் சார்ந்து கவரும் நிலையில் உள்ளன. ஆனால் இந்த அமைவிடம் சார்ந்து பல சவால்களும் உருவாகின்றன. இலங்கை இத்தகைய சவால்களையும் சாதகத் தன்மையையும் வாய்ப்புக்களாக மாற்றிக் கொள்ள வேண்டும். இலங்கை மக்களுக்கு அரசியல், பொருளாதார இராஜதந்திர ரீதியில் நன்மையளிக்கும் வகையில் இந்த வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இத்தகைய மூலோபாய நலன்கள் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்பது தெரியாது. உலகில் அனைத்து விடயங்களும் மாற்றம் அடையலாம். இலங்கை ஒரு நடுநிலை நாடு. இலங்கை அணிசேரா நாடு மட்டும் கிடையாது அனைத்து நாடுகளுடனும் நட்புறவை விரும்பும் ஒரு நாடாகும். இதே வேளை நாங்கள் ஒரு நாட்டுக்கு எதிராக இன்னெரு நாடு இலங்கை மண்ணை பயன்படுத்துவது குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்துவது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் நாங்கள் இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகளை புரிந்து கொள்ள வேண்டும். இலங்கை இந்தியாவின் கடல்சார் வான்வெளி பாதுகாப்பு கட்டமைப்புக்குள் காணப்படுகிறது. சிவ்சங்கர் மேனனந் தனது நூலில் குறிப்பிட்டது போல பாக்குநீரிணையில் 40 கடல் மையிலுக்குள் காணப்படும் விமானம் தாங்கிக் கப்பலாக இருக்கக் கூடாது. இந்தியாவின் மூலோபாய பாதுகாப்புத் தேவைகள் அபிலாசைகள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும். இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதத்திலான நடவடிக்கைகளுக்கு அனுமதிக்கக்கூடாது. பாதுகாப்பு விடயத்தில் இந்தியாவுடன் சிறந்த உறவைக் கொண்டுள்ள வேளை பலநாடுகள் இலங்கையுடன் இராணுவ உறவை ஏற்படுத்திக் கொள்வதில் விருப்மாக உள்ளதை நாங்கள் அவதானிக்கிறோம். பொருளாதார தொடர்புகளிலிருந்து வேறுபட்ட பாதுகாப்பு தொடர்புகள் எங்களுக்கு தேவையில்லை. இந்தியாவும் இதே கொள்கையைக் கொண்டுள்ளது. அதாவது Multi-Alignment policy based on issues உதாரணமாக இலங்கைக்கு கடற்கொள்ளையினால் ஏற்படும் பிரச்சினையை தீர்க்க அனைத்து நாடுகளின் கடற்படையையும் இலங்கை வரவேற்கிறது. ஆனால் குறித்த விடயத்தில் மட்டும் உறவைப் பேணவிரும்புகிறது எனக் குறிப்பிட்டார் இலங்கையின் வெளிவிவாரச் செயலாளர்.

எனவே இலங்கை அரசாங்கம் மிக நிதானமான வெளியுறவுக் கொள்கையை கடைப்பிடிக்க முனைகிறதை அவதானிக்க முடிகிறது. இந்தியாவை அனுசரித்தே செயல்பட அனைத்து திட்டமிடலையும் கொண்டுள்ளதை பார்க்கும் போது இது ஒரு இந்திய சார்பு அரசாங்கமாக தொழில்பட விரும்புவதை காண முடிகிறது. இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையையும் விரும்பாத அரசாங்கமாக இலங்கை அரசாங்கம் செயல்படுவதை வெளிப்படையாக தெரிகிறது. இதனையே அதிகம் எதிர்பாத்த இந்தியத் தரப்பு திருப்தியான நட்புறவை இலங்கையுடன் பேண ஆர்வமாக தொழிபடுவதனை எதிர்காலத்தில் காணலாம். ஏற்கனவே செயட்பட்டதை விட மிக நெருக்கமான கரிசனையுடன் இலங்கை இந்திய நட்புறவு காணப்படும். இதனால் இலங்கை அரசாங்கம் உள்நாட்டில் மேற்கொள்ளும் அனைத்து விடயங்களையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரிக்கும் நாடாக இந்தியா மாறும். இலங்கை மண்ணிலிருந்து கொண்டு இந்தியாவை அச்சுறுத்தும் நடவடிக்கையை தடுப்பதே இந்தியாவின் முதல் தர நோக்கமாக அமைந்திருந்தது. அதனை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும் போது இந்தியாவின் தென்பகுதியின் பாதுகாப்பு எத்தகைய அச்சுறுத்தலுக்குள்ளும் உள்ளாக வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. அப்படியாயின் இந்தியாவின் கட்டுக்குள் இலங்கை இயங்க முனைகிறதா என்ற கேள்வி இயல்பானது. அது சாத்தியமானதா என்பதும் நோக்கப்பட வேண்டிய விடயமாகும்.

நடைமுறையில் இலங்கை இந்தியாவின் புவிசார் அரசியல் பரப்புக்குள் இருப்பதனால் பாதுகாப்பு பொறுத்து அதிக கட்டுப்பாட்டுக்குள் உள்ளாகிறது. அதனால் இந்தியாவின் பாதுகாப்புக் கொள்கைகள் அனைத்தையும் ஏற்க முனையும் போது இயங்குதளத்தில் ஒரே மாதிரி செயல்பட வேண்டிய நிலை ஏற்படும். இலங்கை தனித்துவம் எதனையும் கொண்டு இயங்க முடியாத நிலை ஏற்படும். அப்படியாயின் இலங்கையின் இறைமை கேள்விக்குரியதாக மாறும். தனித்துவம் எதனையும் கொண்டியங்க முடியாது. குறிப்பாக பொருளாதார தொடர்புகளிலிருந்து வேறுபட்ட பாதுகாப்புக் கொள்கை தேவையில்லை என கொலம்பக்கே கூறுவதை கருத்தில் கொள்ளும் போது இந்தியாவின் பொருளாதார ஒத்துழைப்பு எந்தளவுக்கு இலங்கைக்கு வாய்ப்பானது என்ற விடயம் எழும். அவ்வாறே நோக்கும் போது இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான போன்ற நாடுகளை விட சீனாவே அதிக ஒத்துழைப்பும் உதவியும் பொருளாதார தளத்தில் இலங்கைக்கு ஏற்படுத்திக் கொடுகிறது. பாரிய கொடை நாடாக சீனாவே காணப்படுகிறது. அப்படியாயின் செயலாளர் கூறுவதன் படி சீனாவுடன் தான் நெருக்கமான உறவை இலங்கை பேணப் போகிறதா? அப்படியாயின் இந்தியா முதலிடம் என்பதெல்லாம் தந்திரமான உரையாடலாக அமையுமா என்ற கேள்விகள் தவிர்க்க முடியாதது.

இரண்டாவது 99 வருட குத்தகையை சீனா விலக்கிக்கு கொள்ளுமா என்பது முக்கியமான கேள்வியாகும். நிச்சயமாக இலங்கை கைவிட்டாலும் சீனா அதனை தனது வரிவாக்கத்திற்கான விடயமாக கருதாவிட்டாலும் ஒரே சுற்று ஓரே பாதை எனும் திட்டத்திற்கான தளமாக பயன்படுத்துவதில் அக்கறை செலுத்தும். அது மட்டுமன்றி இந்தோ-பசுபிக் உபாயத்திற்குள் இயங்கும் இந்திய அமெரிக்க கூட்டினை எதிர்கும் சீனா நிச்சயமாக அத்தகைய வாய்ப்பினை தவறவிடாது என்றே தோன்றுகிறது. அப்படியாயின் இலங்கை இந்தியாவுடன் பாதுகாப்பினை பகிர்ந்து கொண்டு சீனாவுடன் பொருளாதார உறவைப் பேணுதல் சாத்தியமானதாக அமையாது.

மூன்றாவது கொலம்பகே குறிப்பிடுவது போல் இலங்கை இந்தியாவின் மூலோபாய கரிசனைக்குரிய நாடாக அமையக்கூடாது என்பது பொருத்தமானதாக அமையுமா என்பது பிரதான கேள்வியாகும். காரணம் மூலோபாயத்தினை வைத்துக் கொண்டே ஒரு நாட்டின் பொருளாதார மற்றும் விஞ்ஞான தொழில்நுட்ப வாய்ப்புக்களை அரசுகள் ஏற்படுத்துகின்றன. குறிப்பாக கிழக்காசிய நாடுகளது பொருளாதார எழுச்சிக்கு அதுவே முக்கிய காரணமாகும் சிங்கப்பூர் உலகளாவிய ரீதியில் முதன்மை அடைவதற்கு காரணமே அதன் மூலோபாயமே. அத்துடன் அமைவிடம் மூலோபாயத்தை தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாகும். அது இலங்கைக்கு கிடைத்துள்ள வாய்ப்பாகும்.

எனவே இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் இந்தியா என்பது பற்றிய உரையாடல் தந்திரோபாயமானதாகவே தெரிகிறது. அத்தகைய போக்குக்குள் இந்தியாவை ஈர்த்துக் கொள்ளலாம் என இலங்கை ஆட்சியாளர்ர்கள் கருதி தந்திரமாக நகர்கின்றனர். ஆனால் அதன் நடைமுறை பற்றிய கேள்வியே பிரதானமானது.

அருவி இணையத்துக்காக கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இந்தியா, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE