Wednesday 24th of April 2024 04:11:22 PM GMT

LANGUAGE - TAMIL
-
நியாயமான தேர்தலை விரும்பிய ஹூலைத் தூற்றாதீர் - சபையில் சிறிதரன் எம்.பி!

நியாயமான தேர்தலை விரும்பிய ஹூலைத் தூற்றாதீர் - சபையில் சிறிதரன் எம்.பி!


"தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் இருவராக பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் நீதியானதும் நியாயமானதுமான பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் என்ற நோக்குடன் செயற்பட்டுள்ளார். அதனாலேயே அவர் மீது அவதூறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சபையில் தெரிவித்தார்.

இந்தச் சபையில் ஒரு தமிழன் தூற்றப்படும்போது அதனைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

2019ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் 2019ஆம் ஆண்டுக்கான மூன்றாவது காலாண்டு செயலாற்றுகை அறிக்கை ஆகியவற்றின் மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"தேர்தல்கள் ஆணைக்குழு பற்றி இந்தச் சபையில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. கடந்த பொதுத் தேர்தலில் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான தேர்தல்கள் ஆணைக்குழு சிறப்பாக செயற்பட்டுள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமல்ல பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் மீதான அவதூறு கருத்துக்கள் பல இன்று சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் மக்களுக்காக வந்த நிவாரண பொருட்களை தன்னுடைய தேர்தல் பிரசாரத்திற்காக யாழில் வழங்கியிருந்த நிலையில் அதனை ஆணைக்குழுவின் உறுப்பினரான ரத்னஜீவன் ஹூலே அதனை வெளிக்கொண்டு வந்திருந்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழு நீதியாகவும் நேர்மையாகவும் செயற்பட்டிருந்தமையை யாரும் மறுக்க முடியாது.

பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் இந்தத் தேர்தல் நீதியானதும் நியாயமானதுமான தேர்தல் நடத்த வேண்டும் என்றே செயற்பட்டுள்ளார். அவர் சரியாக செயற்பட்டமையினாலேயே பல்வேறுபட்ட விடயங்களை வெளியில் கொண்டு வந்தார். அவர் உயர்ந்த கல்விமான். அதுவும் தமிழர் ஒருவர் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இருந்தமை தொடர்பான வேதனையிலேயே சிலர் கதைக்கின்றனர். இந்த நாட்டில் பணம் இருந்தால் மட்டுமே தேர்தலில் வெற்றிப பெற முடியும் என்ற நிலைமை உருவாகியுள்ளது.

இந்த நாட்டில் ஒருபக்கம் ராஜபக்‌ஷ குடும்பம் ஆட்சியில் இருக்கும்போது யாழ்ப்பாணம் அபிவிருத்திக் குழுவின் தலைவர் என்ற போர்வையில் யாழ்ப்பாணம் அரச செயலகத்துக்குள்ளும் குடும்ப ஆட்சியொன்று நடக்கின்றது. அது அரசியல் கட்சியின் அலுவலகம் போன்று மாறியுள்ளது. இதனைக் கூறுவதற்கு முடியாதவர்கள் இதனைக் கூறிய ரத்னஜீவன் ஹூல் மீது கோபம் கொள்கின்றனர். எதனையும் நாங்கள் இனவாதப் பார்வையில் பார்க்கக் கூடாது.

அவர் மீது இந்தச் சபையில் பலர் வசை மாலைகளைப் பொழிந்தனர். இந்தச் சபையில் ஒரு தமிழன் தூற்றப்படும்போது அதனைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. நேர்மையின் பக்கம் கதைத்தவரை - அவர் கூறிய உண்மைகளை இந்த இடங்களில் கூறுவதற்குத் தயங்கக் கூடாது. அவர் மீது பிழை இருந்திருந்தால் மஹிந்த தேசப்பிரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத நிலையில் அவர் மீது குறைகளைக் கூறுவது உங்களின் இனத்தின் தன்மையை அது குறைத்துவிடும் என்று கூறுகின்றேன்" - என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE