Thursday 25th of April 2024 03:37:54 PM GMT

LANGUAGE - TAMIL
-
“சர்வாதிகாரத்துக்கு எதிரான போராட்டத்தில் அணி  திரள்க” - சம்பந்தன் அழைப்பு!

“சர்வாதிகாரத்துக்கு எதிரான போராட்டத்தில் அணி திரள்க” - சம்பந்தன் அழைப்பு!


"நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் ராஜபக்ச அரசின் சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிராகவும் நாளைமறுதினம் சனிக்கிழமையும் (26), எதிர்வரும் திங்கட்கிழமையும் (28) நடைபெறவுள்ள அறவழிப் போராட்டங்களில் தமிழ்பேசும் சமூகத்தினர் அனைவரும் கட்சி பேதமின்றி ஓரணியில் திரண்டு முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும்." - இவ்வாறு அறைகூவல் விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.

தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தி நாளைமறுதினம் சனிக்கிழமை (26) யாழ். வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டமும், எதிர்வரும் திங்கட்கிழமை (28) வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தால் போராட்டமும் நடத்தப்படும் என்று தமிழ்த் தேசியக் கட்சிகள் இன்று அறிவித்துள்ளன. இதையடுத்தே இரா.சம்பந்தன் மேற்படி அறைகூவலை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களிடம் இன்றிரவு மேலும் தெரிவித்ததாவது:-

"இறந்தவர்களை நினைவுகூர்வது ஜனநாயக உரிமை. அதை எவரும் தடுக்கவே முடியாது. ஒரு மனிதர் எந்த வழியில் உயிரிழந்தாலும் அவரை அவரது சமூகம் நினைவுகூர உரித்துண்டு. இதைத் தடுத்து நிறுத்துவது சர்வாதிகாரச் செயல்.

தற்போதைய ஆட்சியில் சர்வாதிகாரம் தலைவிரித்தாடுகின்றது. தமிழ்பேசும் சமூகத்தினரை இலக்குவைத்து அராஜகங்கள் அரங்கேறுகின்றன. அதில் ஒன்றுதான் தியாக தீபம் திலீபன் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையுத்தரவு. இதை ஒருபோதும் ஏற்கவே முடியாது. இதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

தமிழினத்தின் விடுதலைக்காக அறவழியில் போராடி உயிர்நீத்தவரே தியாக தீபம் திலீபன். 12 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டி இறுதியில் உயிர்நீத்த அவரின் தியாகத்தை எவரும் கொச்சைப்படுத்த முடியாது. அவரை நினைவுகூர தமிழ்பேசும் சமூகத்துக்கு முழுமையான உரிமையுண்டு. அந்த உரிமை கடந்த ஆட்சியில் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஆட்சியில் தட்டிப் பறிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் ராஜபக்ச அரசின் சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிராகவும் நாளைமறுதினம் சனிக்கிழமையும் (26), எதிர்வரும் திங்கட்கிழமையும் (28) நடைபெறவுள்ள அறவழிப் போராட்டங்களில் தமிழ்பேசும் சமூகத்தினர் அனைவரும் கட்சி பேதமின்றி ஓரணியில் திரண்டு முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும்" - என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: இரா சம்பந்தன், இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE