Wednesday 24th of April 2024 05:30:38 PM GMT

LANGUAGE - TAMIL
.
கண்ணிவெடிகளில் இருந்து பல உயிர்களைக் காப்பற்றிய எலி: தங்கப் பதக்கம் வழங்கிக் கௌரவிப்பு!

கண்ணிவெடிகளில் இருந்து பல உயிர்களைக் காப்பற்றிய எலி: தங்கப் பதக்கம் வழங்கிக் கௌரவிப்பு!


கம்போடியாவில் கண்ணிவெடிகளைக் கண்டறியும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுவரும் பயிற்றப்பட்ட ஒரு எலி பல கண்ணிவெடிகளைக் கண்டறிய உதவியதன் மூலம் பல உயிர்களை காப்பாற்றியதற்காகத் தங்கப் பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த பி.டி.எஸ்.ஏ. என்ற விலங்குகள் நல தொண்டு நிறுவனம் இந்த விருதை வழங்கியுள்ளது.

2002 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு இதுவரை நாய்களுக்கு மட்டுமே இந்த விருதை வழங்கியுள்ள நிலையில் இவ்வாண்டு முதன்முறையாக எலிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதைப் பெற்றுக்கொண்ட ஆப்பிரிக்க பாச்சட் வகையைச் சேர்ந்த எலிக்கு இப்போது 8 வயதாகிறது.

பல தசாப்த கால மோதல்களால் பாதிக்கப்பட்ட தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில் மில்லியன் கணக்கான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. அங்கு கைவிடப்பட்ட வெடிக்காத வெடிபொருட்களால் ஒவ்வொரு வருடமும் டசின் கணக்கானவர்கள் உயிரிழக்கின்றனர்.

வெளிநாடுகளில் உதவியுடன் யுத்தத்தின்போது புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள் மற்றும் கைவிடப்பட்ட வெடிபொருட்களை அகற்றும் பணியில் பல ஆண்டுகளாக கம்போடியா ஈடுபட்டு வருகிறது. எனினும் இது கடினமான மற்றும் ஆபத்தான பணியாக இருப்பதால் தாமதங்கள் நிலவி வருகின்றன.

இந்நிலையில் அங்கு புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளைக் கண்டறிய மாகவா என்ற பயிற்றப்பட்ட எலி வெடிபொருட்களை அகற்றும் பணியாளர்களுக்கு உதவி வருகிறது.

அரசு சார்பற்ற அமைப்பான APOPO என்ற தொண்டு நிறுவனம் இந்த எலிக்குப் பயிற்சி அளித்து கண்ணிவெடிகளைக் கண்டறியும் பணியில் அதனை ஈடுபடுத்தி வருகிறது.

தற்போது கம்போடியாவில் வெடிபொருட்களைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ள மாகவா எலி, இதுவரை 39-க்கும் மேற்பட்ட கண்ணிவெடிகளை கண்டுபிடித்து அடையாளம் காட்டியுள்ளது. அத்துடன் 28 வெடிக்காத வெடிபொருட்களையும் அடையாளம் காண்பித்துள்ளது.

சுமார் 1,41,000 சதுர மீட்டர் பரப்பளவில் வெடிபொருட்களை அகற்றும் பணிக்கு இந்த எலி உதவியுள்ளது.

இந்நிலையில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தொண்டு நிறுவனங்கள் மத்தியில் இந்த எலி வெற்றிகரமான கதாநாயகனாக போற்றப்படுகிறது.

APOPO என்ற டச்சு தொண்டு நிறுவனம் 1990 களில் இருந்து தான்சானியாவில் கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்க எலிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த அமைப்பு பெல்ஜியத்தில் நிறுவப்பட்டது. இதன் தலைமையகம் தான்சானியாவில் உள்ளது.

கண்ணிவெடிகள் உள்ளிட்ட வெடிபொருட்களுக்குக் பயன்படுத்தப்படும் இராசயனப் பொருட்களை அவற்றின் வாசனையைக் கொண்டு நுகர்ந்து கண்டுபிடிக்கும் வகையில் இங்கு எலிகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

அத்துடன் மாகாவா போன்ற எலிகள் சாதாரண எலிகளை விடச் சற்றுப் பெரியவை என்றாலும் அதன் எடை கண்ணிவெடிகள் வெடிக்கத் தேவையான அளவுக்கு அழுத்தம் கொடுக்க வல்லதாக இல்லாததால் இவை பாதுகாப்பாக கண்ணிவெடிகளை அகற்ற உதவுகின்றன.

பாச்சட் வகை எலிகள் பொதுவாக ஏனைய வகை எலிகளை விட புத்திசாலித்தனமானவை என்பதால் இவற்றைப் பயிற்றுவிப்பதும், வெடிபொருட்களை கண்டறியும் பணியில் ஈடுபடுத்துவதும் எளிதானது என பயிற்றுவிப்பாளர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறு பயிற்றுவிக்கப்படும் எலிகள் தமது மோப்ப சக்தி மூலம் வெடிபொருள் உள்ள ஒரு பகுதியைக் கண்டறித்து அதனை அகற்றுபவர்களுக்கு எச்சரிக்கை செய்கிறது.

தங்கப் பதக்கம் வென்றுள்ள மாகவா எலி மிகச் சிறிய வயதிலேயே பயிற்சி பெற்றதுடன், அனைத்து சோதனைகளிலும் தேர்ச்சி பெற்றது. இதன் பின்னர் அது கம்போடியாவுக்கு அனுப்பப்பட்டது.


Category: உலகம், புதிது
Tags: இங்கிலாந்து, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE